Monday, April 22, 2024

ரஹ்மான் - ராம்கோபால் வர்மா.




ஏ.ஆர். ரஹ்மான் தனது இசைப் பயணத்தில் சாதித்தவை ஏராளம். இளையராஜா கோலாச்சியிருந்த தொண்ணூறுகளில் தனது புதுமையான இசைக் கோர்வையாலும் தொழில் நுட்ப ஒலித் தரத்தாலும் தனி அடையாளத்தைக் காட்டியவர். 


மெல்லிசையாக இருந்த தமிழ் மற்றும் இந்திய இசையைத் துள்ளலிசையாகவும் புயலாகவும் நிலை பெறச் செய்தவர் ரஹ்மான். 


அவர் தனது இசைக் குழுவில் இடம்பெற்ற அனைத்து இசைக் கலைஞர்களையும் வெளிப்படையாக தனிப் பெயர்களாகவும் சேர்ந்திசைக் கலைஞர்களாகவும் உலகிற்கு அறிவித்தவர்.


தவில் கலைஞர் சுந்தர், ஒரு பேட்டியில் ரஹ்மான் தன்னை 'காதலன்' பாட்டிற்கு வாசிக்க அழைத்ததாகவும் அப்போது எல்லா மேற்கத்திய இசைக் கருவிகளும் மேற்கத்திய இசையை இசைத்துக் கொண்டிருக்கும்போது தவிலுக்கு இங்கே என்ன இடம் இருக்கும் என்று யோசித்ததாகவும் கூறியிருப்பார். 


'காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினால்' பாடலுக்கு "சுந்தரண்ணா வாசிங்க" என்று ரஹ்மான் சொல்லியிருக்கிறார். 


அவ்வளவு நேரமும் அந்த மேற்கத்திய இசையைக் கேட்டுக் கொண்டிருந்த சுந்தரின் இசை மனசு, தானாகவே, ரஹ்மான் எதையும் சொல்லித்தராமலே, அப்படி நேரடியாகச் சொல்லித்தராமல், அந்த வாசிப்பு மனநிலையை அவருக்கு வழங்கிய ரஹ்மான் எதிர்ப்பார்த்தபடியே ஒரு தவில் துண்டை வாசித்திருக்கிறார். 


'அவ்வளவுதான் போதும் அண்ணே' என்று ரஹ்மான் பாராட்டி நல்ல சம்பளத்தையும் கொடுத்தனுப்பியிருக்கிறார்.


இப்படித்தான் எல்லாவற்றையும் தேடித்தேடி அந்த மனநிலையை எட்ட வைத்துத் தனக்கான இசையை எல்லோரிடமும் பெற்றிருக்கிறார், ரஹ்மானின் இசை ஞானமே குறிப்பாக உலக இசை செயல்பாடுகளை மனதில் கொண்டிருந்ததால், மரபார்ந்த இசையமைப்பிலிருந்து முற்றிலும் வேறுபட்ட புதிய தேடல் முறையிலான இசையமைப்பு முறையை ரஹ்மான் கண்டடைந்திருந்தார். அவரின் பரந்துபட்ட இசை ஞானமே பல்வேறு வடிவங்களையும் இசைச் சேர்கையையும் காணச் செய்தது.


ஹாரிஸ் ஜெயராஜ், ரஞ்சித் பரோட் என்று தன்னுடன் பணியாற்றியவர்களின் தனித் திறமையை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டவர், ரஹ்மான். 


'ரட்சகன்' படத்தில் ரஹ்மானின் இசைக் குறிப்புகளை வைத்துக் கொண்டு ரஞ்சித் பரோட்தான் முழு பின்னணி இசையையும் ஒழுங்கமைத்து முடித்தவர்.


அதுவுமில்லாமல் ரஹ்மான் இசை உலகில் கொட்டிக் கிடக்கும் அத்தனை Open Source music தரவுகளையும் தயங்காமல் தனது இசையில் தனித்தத் தன்வயத்துடன் பயன்படுத்திக் கொண்டவர் என்பதுதான் இங்கே நாம் முக்கியமாக கருத வேண்டிய ஒன்று.


அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு 'வந்தே மாதரம்' இசை ஆல்பம். வழி வழியாக வந்த ஒரு இசைக் கோர்வையை தனது மேம்பட்ட இசையனுபவத்தால் புதுமையாக்கினார். இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால், வந்தே மாதரம்-2 ரஞ்சித் பரோட் இசையமைத்தது.

சில பாடல்கள், ரஹ்மானின் வந்தே மாதரத்தைவிட சிறப்பாக, மரபிசையை ஃப்யூசனாக மாற்றியிருப்பார் ரஞ்சித் பரோட். அந்த காலக் கட்டம் ஒரு வகையான Resource utilization காலம். இப்போது அனிரூத் செய்யும் விஷயமல்ல அது.  


இசையமைப்பாளர் விஜி மேனுவல் ஒரு பேட்டியில், 'ஹேராம்' படத்தில் வரும் 'நீ பார்த்த பார்வைக்கு நன்றி' பாடலுக்கான அடிப்படை குறிப்புகளை இளையராஜா தன்னிடம் கொடுத்துவிட்டு, அதை அரேண்ஜ் செய்யுமாறு கூறிவிட்டு வெளியே சொன்றுவிட்டதாகவும், சிறிது நேரத்தில் அந்த வேலையை முடித்துவிட்டு வெளியில் நின்று பேசிக் கொண்டிருந்ததாகக் கூறியிருப்பார். 


திரும்பி வந்த இளையராஜா, ஏன் இன்னும் முடிக்கவில்லையா என்றதற்கு, அப்போதே முடித்துவிட்டதாகவும் அதை அரேண்ஜ்மெண்டோடு வாசித்துக் காட்டியதாகவும் கூறியிருப்பார். கூர்ந்து கவனித்தால் அதில் விஜி மேனுவலின் ஆன்மா பியானோவில் கலந்திருப்பதையும் இன்றும் கேட்கலாம். அவரது மறைவை ஒட்டி அவருக்கான Tributeஆகக் கூட நிறைய இசைக் கலைஞர்கள் அந்தப் பாடலை அவரே இசையமைத்ததுபோல வாசித்திருப்பதையும் இணையத்தில் காணலாம்.


இசை போன்ற கூட்டு செயல்பாட்டு பணியில் தனிப்பட்ட திறமை என்பது பொதுமைப்படுத்தப்பட்ட ஒன்றாகத்தான் இருக்கும். இதற்குத் தனிப்பட்ட செயலுரிமை என்பது கிடையாது. எல்லாத் துறைகளிலும் இப்படித்தான் ஒரு செயல்பாட்டு ஒழுங்கு கட்டியெழுப்பப்படுகிறது.


ரஹ்மானின் ஆஸ்கார் பாடலான 'ஜெய் ஹோ'(2009) அவரது 'எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே'(2007) என்ற பாடலின் துள்ளல் வடிவம். அது அவரது பாடலேதான். 'வந்தே மாதரம்' ஆல்பத்தில்கூட கருத்தம்மாவின் ஒரு பாடல் மெட்டு ஊடுருவியிருப்பதைக் காணலாம். 


ரஹ்மான் இரண்டு ஆஸ்கார் விருதுகளை வாங்கினார். ஒன்று 'ஜெய் ஹோ' பாடலுக்கு. மற்றொன்று படத்தின் பின்னணி இசைக்கு. இரண்டுமே அவருடைய உழைப்புதான்.


ராம்கோபால் வர்மா அப்போது விட்டுவிட்டு இப்போது பேட்டி கொடுப்பது உள்நோக்கம் கொண்டது. 


ரஹ்மானின் அரசியல் நிலைப்பட்டிற்குப் பிறகு பாலிவுட் அவரைத் தவிர்க்கப் பார்த்ததின் மற்றொரு வடிவம்தான் இந்தக் குற்றச்சாட்டு. 


ஆஸ்கார் வாங்கியபோதே சுக்வீந்தர் சிங் அது தனது பாடல்தான் என்று எந்த புகாரையும் வைக்கவில்லை. அதில்லாமல் சுபாஷ் கய்யிடம் அப்படி பேசுபவரல்ல ரஹ்மான். அந்த தொனி ஆணவத்தொனி. அது நிச்சயமாக ரஹ்மானுடைய பண்பல்ல.


ரஹ்மான், 'நீங்கள் சம்பளம் கொடுப்பது எனது பெயருக்கு..எனது இசைக்காக அல்ல. நான் எது என் இசை என்று சொல்கிறேனோ அது தான் என் இசை. அதை யார் கம்போஸ் செய்தார்களோ என்கிற உண்மை யாருக்கும் தெரியாது என்று சொல்ல, அதோட சுபாஷ்கய் ரஹ்மானிடம் பணிபுரிவதை விட்டுவிட்டார் என்று ராம்கோபால் கூறுகிறார்.


ஆனால் 2016 டிசம்பரில் குல்சாரிடம், ஜெய் ஹோ பாடலை எழுதிய பாடலாசிரியரிடம் 'ஜெய் ஹோ எப்படி உருவானது மற்றும் உருவாக்கப்பட்டது என்பதை அறிய விரும்புகிறோம்' என்று கேட்கப்பட்டதற்கு,


'மற்ற பாடலைப் போலவே ஜெய் ஹோ பாடலையும் உருவாக்கினோம். ரஹ்மான் வழக்கமாக ஒவ்வொரு சூழ்நிலைக்கும் ஒன்று அல்லது இரண்டு பாடல்களை வழங்குவார், சூழ்நிலையின் கோணங்களில் யோசனைகள் மற்றும் பரிந்துரைகளுக்குத் தக்கபடி. இது ஒரு போராட்டத்திற்குப் பிறகு வெற்றியின் பாடல் - காதல் மற்றும் காதல் போராட்டம். எனவே வழக்கம் போல், வெளிப்படையாக, ஜெய் ஹோ தொடங்கி வார்த்தைகளையும் சொற்றொடர்களையும் எழுதினேன். அப்போது அங்கு வந்திருந்த சுக்விந்தர் சிங், நான் எழுதிய வரியைப் பாடினார், உண்மையில் அந்த மந்திரத்தை உருவாக்கியது அவரும் அவரது நேர்த்தியான குரலும்தான். ரஹ்மானும் நானும் ஆஸ்கார் விருதை வென்றுள்ளோம், ஆனால் சுக்விந்தர் உண்மையிலேயே பாடலைக் குறிப்பிடத் தகுதியானவர் என்கிறார். அது சுக்வீந்தர் சிங்கின் பாடல் என்று எங்கும் அவர் சொல்லவில்லை.


எந்தக் கலைஞனும் மற்றொருவருடைய பாடலை அப்படமாகத் தனது என்று பீற்றிக் கொள்ளமாட்டான். அப்படி தகுதியற்ற ஒரு இசைக் கலைஞனும் இல்லை ரஹ்மான்.


ஆஸ்கார் வாங்கவும், Trend Setterஆகவும் இருக்கும் ரஹ்மானும் இளையராஜாவும் எம் எஸ் வியும் ஜாம்பவான்கள்தான்.


வடக்கு நம்மை எப்படியெல்லாம் கீழிறக்க முயற்சித்தாலும் தெற்கும் தமிழும் உயர்ந்தோங்கும் தன்மையை எப்போதும் தன்னுள் கொண்டுள்ளதை யாரும் களங்கப்படுத்தவிடக்கூடாது. அது நமது பொறுப்பும்கூட.


                           - சாகிப்கிரான்.