Monday, May 3, 2010

கவிதையும் மக்களின் கடவு சொற்களும்

கவிதைக்கு அப்பால், பிரபஞ்சத்திற்கு உள்ளே . . .


        ஏப்ரல் பதினைந்து 2010 சென்னை சென்ரலில் இறங்கினேன். மாலை 4 மணி. மழைத் தூறல் இருந்தது. செனரலிலேயே விசாரித்தேன். எழும்பூர் அருங்காட்சியகத்திற்கு 17C ஏற வேண்டும் என்றனர். ஏறினேன். அங்கிருந்து 17D அல்லது 17E ஏறியாக வேண்டுமென்று சொன்னாகள். ஒருமணி நேரம் நின்றேன். குறிப்பிட்ட பஸ் வரவே இல்லை. சரியென்று ஒரு வாழைப்பழ வண்டிக்காரரின் அறிவுரைப் படி நடக்க ஆரம்பித்தேன்.  

       அருங்காட்சியகத்திற்கு எதிரில் ICSA அரங்கம் இல்லை. யாருக்கும் தெரியவில்லை. நடையாக நடந்து ஒரு வழியாகக் கண்டடைந்தேன்.


லீனா மணிமேகலை மீதான எழுத்து, கருத்து அடக்குமுறைக்கு
எதிரான கண்டனக் கூட்டம்.

           அரங்கு மிகுந்த வெளிச்சமாகவும், கூட்டமாகவும் இருந்தது. நண்பர்களும் சிவப்பாடை தோழர்களும் நிறைந்திருந்தனர். எனக்கு தலைவலி அதிகமாக இருந்தது. ஒரு ஓரமாக சென்று அமர்ந்து கொண்டேன். விளக்கு வெளிச்சம் கண்களைக் கூச வைத்தபடி இருந்தது.

           அ. மார்க்ஸ் பேச ஆரம்பித்தவுடன் செவ்வாடை தோழர்கள் சில கேள்விகளை எழுப்பினர். அதற்கு அவர் கேள்வி நேரம் தனியாக ஒதுக்கப்பட்டிருக்கிறது. அப்போது அதை வைத்துக் கொள்ளலாம் என்றார். ஆனால் அவர்கள் அதை ஒத்துக் கொள்ளவில்லை. மிகப்பெரிய வாக்குவாத்ததின் இறுதியில் செவ்வாடை தோழர்கள் அரங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

           பிறகு கூட்டம் அமைதியாக நடந்தது. அ. மார்க்ஸ் ஒரு விஷயம் சொன்னார். இந்தக்கூட்டம் லீனாவின் கவிதையை விமர்சிப்பதோ அல்லது அதற்கு அர்த்தங்களைச் சொல்வதற்கோ இல்லை. ஒரு படைப்பாளியின் மீதான இத்தகைய எழுத்து, கருத்து அடக்குமுறைக்கு எதிரான ஒரு கண்டனக் கூட்டமே இது என்றார். எனக்கு அதில் உடன்பாடில்லாமலிருந்தது. பிரச்சனையே அவரது கவிதை பேசும் அல்லது அவர்கள் அவ்வாறு கற்பித்துக் கொள்ளும் பொருள் குறித்துத்தான். ஆனால் அதைப் பேசாமல் எப்படி கண்டனத்தை ஆழமாக நிலைநாட்டமுடியும்? அதில்லாமல் நான் வாசிப்பதற்கு ஒரு கட்டுரையையும் எடுத்து வந்திருந்தேன் அது லீனாவின் கவிதைகள் குறித்த ஒரு சிறு கட்டுரை.

           எல்லோருமே பேசினார்கள்.
         
          வராதவர்கள் அனுப்பிய கட்டுரைகளையும் வாசித்தனர்.

          மீனா என்ற தோழி லீனாவின் கவிதைகள் வாசித்தப்பின் தனக்குண்டான அனுபவத்தைக் கூறினார். தனதுடல் பற்றிய கூச்சம் விலகியதாகக் கூறினார். அது மிக முக்கியமான பதிவாக இருந்தது. ஆணைப் போலில்லாமல் ஒரு பெண் எப்போதும் தனதுடல் சார்ந்த தயக்கத்துடன் கூச்ச உணர்வை அனுபவித்தபடியே இருக்கிறாள். இதுவே லீனாவின் கவிதைகளில் பொதிந்துள்ள ஆழ்மன ஒழுங்கென்றும் கொள்ளலாம்.

            யூமா வாசுகி போசும்போது, இத்தகைய அடிப்படை விஷயங்களுக்கெல்லாம் போராட வேண்டியிருக்கிறது என்றார். இது போன்ற அடிப்படைகளை நாம் தக்கவைத்துக் கொள்ள வேண்டும். அதற்காக ஒன்றுபட வேண்டும் என்றார்.

            மணல் வீடு அரிகிருஷ்ணன் பேசும்போது, கிராமங்களில் வாய்ச் சண்டைகளின் உச்சமாக ஆடை தூக்கி காண்பிப்பது போன்ற ஒரு எழுத்து செயல்தான் லீனாவின் கவிதைகள் என்றார். தான் அத்தகைய கவிதைகளைத் தொடர்ந்து இனியும் வெளியிடப் போவதாகவும் கூறினார். பிரச்சனைக்குரிய லீனாவின் கவிதைகள் அவரது மணல் வீடு சிற்றிதழில்தான் வெளிவந்தன.

              இப்போது நான் எடுத்து வந்தக் கட்டுரையை வாசிக்கலாமா வேண்டாமா என்று யோசித்தேன். தலைவலி அதிகமாகிவிட்ட நிலையில் வேண்டாமென்று முடிவெடுத்து அமைதியாக இருந்தேன்.

             கண்டனக் கூட்டம் நடந்து முடிந்தது.


               நான் உடனே ஆட்டோ பிடித்து கோயம்பேடு வந்து பஸ்லில் உட்காந்தேன்.

              ஏன் நம்மால் சில உடன்பாடுகளை செய்துகொள்ள முடியவில்லை என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன். இலக்கிய உலகம் ஒருவிதத்தில் மேடைப் பேச்சைப் போலவே ஆகிவிட்டது. கூட்டத்திற்கு அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்த நிறையபேர் வரவில்லை. என் பெயர் அதில் குறிப்பிடப்படவில்லை. இருந்தாலும் நான் கிளம்பிவிட்டேன். இப்போது ஒரு மனநிறைவு என் மனதில் தோன்றியது.

             ஆனால் அந்தக் கட்டுரையை கூட்டத்தில் வசிக்கவில்லையே என்ற குறை எனக்குள் இருந்தது. எனவே அதை எனது வலைப்பூவில் போடலாமென்று முடிவெடுத்தேன். கூடவே சில பின் இணைப்புகளையும் இணைத்துள்ளேன் அது மிகுந்த பொருள் பொதிந்ததாக இருக்கும்.

கவிதைக்கு அப்பால், பிரபஞ்சத்திற்கு உள்ளே . . .
(கண்டன கூட்ட்த்திற்கு வாசிக்க எடுத்து வந்த கட்டுரை)

              கவிதை பற்றிய விமர்சனம் தற்போது இலக்கியத்திற்கு வெளியிலிருந்து வரத் துவங்கியிருக்கிறது. கவிதை விமர்சனம் என்பதைவிட எது கவிதையை விமர்சிக்கிறது என்பதே இங்கே பிரச்சனையை சிக்கலுக்கு உள்ளாக்குகிறது. கவிதைப் பிரதியானது மொழியின் அர்த்த அடுக்குகளின் இருண்ட சிக்கலான இடுக்குகளில் பயணிப்பது. அதற்கு நேரடியான பொருள் கொள்ளும் அபத்தமே முதல் பிழையாக கவிதை விமர்சனத்தில் வழக்கமாக நடக்கிறது.

             லீனா மணிமேகைலையின் உலகின் அழகிய முதல் பெண் கவிதை தொகுப்பும் அதைத் தொடர்ந்து வந்த சில கவிதைகளும் மிகுந்த பரபரப்பிற்குள்ளானது. லீனாவின் முதல் கவிதை தொகுப்பான ஒற்றை இலையென வழக்கம்போல பெண் கவிஞர்களின் கவிதை உலகை பிரதிபலிப்பதாகவே இருந்தது.

            அது கவிதை அப்போது சாத்தியப்படுத்தியிருந்த ஒடுக்கப்பட்ட உணர்வுகளும் ஒதுக்கப்பட்ட சொற்களையும் கையாள்வதாக இருந்தது. அந்த நிலையே எல்லா பெண் கவிஞர்களும் தங்கள் நிலைப்பாடாகக் கைக்கொண்டனர். அது ஒரு கட்டத்திற்குமேல் மிகுந்த இலக்கியச் சோர்வை ஏற்படுத்தத் துவங்கியது. வார்த்தைகளை நிறமிழக்கச் செய்யுமளவுக்கு பயன்படுத்தப்பட்ட அவை அழகியலையும் படிமங்களையும் அந்தரங்களையும் பேசின. ஒரு விதத்தில் அவை பெண்ணியத்திற்குள் இயங்கினாலும் அவை தனது பாடுபொருளை அத்தகைய பெண்ணிய சித்தாந்தங்களின் மிக பெலகீனமான தளத்திலிருந்தே எதிர்கொண்டன. அல்லது அது ஒரு தொடக்க நிலையாகக்கூட அர்த்தப்படுத்திக் கொள்ளலாம்.

            ஆனால் லீனாவின் இரண்டாவது தொகுப்பான உலகின் அழகிய முதல் பெண் கவிதைத் தொகுப்பு முற்றிலும் மாறுபட்ட ஒரு தொனியைக் கொண்டிருக்கிறது. அத்தகைய சொற்களைத் தாண்டி, அவை கொண்டிருந்த அந்தரங்கங்களையும் சுகிப்புகளையும் ஒரு செயலை, அதற்கு எதிரான கதியில் இயக்கும் மற்றொரு தொனியில் கையாண்டுள்ளார். அது தாய்வழிச் சமூகத்தின் நேரடி மன ஒழுங்காக அமைகிறது. அது எத்தகைய மனத்தடையையும் தன்னில் கொண்டிருக்காமல் அந்தரங்கங்களை பேசுவதில் மட்டுமே திருப்த்தி கொள்ளாமல் அவற்றின் உள் பொருளை பேசுகின்றன. அவை எந்தக் கருத்தையும் அல்லது உணர்ச்சியையும் அல்லது ஒரு சித்தாந்தத்தையும் அடைவதாக இல்லாமல் வேறு ஒரு நிலைமாற்றத்தை அடைவதாக இருக்கின்றன. அது ஒரு நிலையை அதாவது state – யை கைக்கொண்டிருக்கின்றன. இதை பொருட்கள் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாறும் நிலைமாறும் புள்ளியாகக் கருதலாம். அதாவது திடப்பொருளொன்று திரவமாக மாற்றமடையும் அந்த வெப்பநிலை புள்ளியில் அந்த திடப்பொருள் அடையும் ஒரு நிலைப்பாட்டை ஒத்த state of consciousness – ஆக, ஒரு அரூப நிலையடைவதையும், மனதின் மிக ஆதி உணர்வு நிலையின் தொக்கிய வடிவமாக ஆழ்மனம் செயல்படுத்தும் ஒரு செயல்பாடாகவும் நிற்கின்றன.

             அந்த நிலையானது பல வடிவங்களுக்கு சாத்தியமாகின்றது. அதில் ஒன்றே அதன் அரசியல் நிலைப்பாடு. லீனாவின் கவிதைகள் வெகு நேரிடையான சொல்லல் முறையால் இத்தகைய அரசியலை கவிதையில் ஓர் ஒற்றைத் தன்மையுடனே வாசகனைப் பார்க்க வைத்திருந்தாலும் அது கவிதையில் பேசப்படும் உத்தி வடிவிலான பெலகீனங்களை கொண்டிருக்கவே செய்கிறது. இது நவீன கவிதை வடிவ அமைப்பில் அவரது பின்னடைவுதான் என்றாலும் அத்தகைய ஒரு பதட்டமானது தனக்குள் ஒரு எளிமையை வைத்திருப்பது கிராமங்களில் நடக்கும் கைகளப்பற்ற ஒரு வாய்ச் சண்டையின் உச்சபட்சமான ஆடை தூக்கி அந்தரங்கங்களை பகிரங்கப்படுத்தும் ஒரு உச்ச செயலாகக் கூட கருதினாலும் அது ஒரு கணம் மட்டுமே நிகழும் அரூபமாகவே இருக்க வேண்டும். அதுவே வலுவான ஒரு செயலாக மாற்றமடைகிறது. அல்லது இதை கொரிய பெண்ணியக் கவிஞர் கிம் ஹை – சன் தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அளித்த பதில்போல லீனா தனக்காக வடிவமைத்துக் கொண்ட ஒரு மொழியமைப்பாகக்கூட கருதிக்கொள்ளலாம்.

              அது பெண்ணரசியலை பிரதானமாகக் கொண்டிருந்தாலும் மிக அந்தரங்கத்தில் ஒடுக்குமுறையின் குறியீடாக மாறிவிட்ட பாலியல் நடைமுறையானது இயல்பில் மிக அந்தரங்கமாக எதிர்த்தரப்பினால் வலுவற்ற செயல்பாடாகவே இருக்கிறது. அது தோல்வியின் சாத்தியமற்ற ஒரு பாதுகாப்பான அணுகுமுறையால் மறுக்கப்படுகிறது. இது விவாதப் பொருளாக்கப்படும்போது செயலின் குறைபாட்டு வடிவம் தனது அந்தரங்கம் வெளிப்படுவதை அனுமதிப்பதில்லை. அதற்கான செயல்வடிவம் பண்பாட்டு வடிவிலான ஒரு தடையைக் கைக்கொள்ளக் கற்றுக் கொள்கிறது.

                லீனா மணிமேகலை தனக்காக அறம் ஒன்றை அல்லது தனது படைப்பிற்கான அத்தகைய அறம் ஒன்றை கொண்டிருப்பதில்லை. மிக நுண்ணிய பொருளில் சொல்வதானால் எந்தப் படைப்பும் தனக்கான அறம் ஒன்றை கொண்டிருப்பதில்லை. படைப்பு, இயற்கையிலும் சரி இலக்கியத்திலும் சரி மிக இயல்பாக, எத்தகைய முன் முடிவுடைய தீர்க்கங்களையும் வைத்திருப்பதில்லை. இடையறாத ஒரு இயக்கம் மட்டுமே சாத்தியமாகியபடி இருக்கிறது. அதை எதிர்கொள்ளும் சமூகமே அதற்கான அறத்தை தான் கட்டமைத்த ஒரு வடிவத்தில் பிரதிபலிக்கிறது. இந்த வடிவம் எப்போதுமே ஆரோக்கியமாக இருப்பதில்லை. ஆதியிலிருந்து அது தனது கைகளில் விஷத்தையும் சிலுவையையும் வைத்துக்கொண்டுதானிருக்கிறது. ஆனால் அதன் வன்மம் மிக இயல்பானதும் கிட்டத்தட்ட எல்லா சமூக அமைப்புகளும் ஏற்று கொண்ட ஒன்றாகவே அமைகிறது.

            தனது கவிதைகள் பற்றி லீனாவே இப்படி குறிப்பிடுகிறார் தனது உலகின் அழகிய முதல் பெண் கவிதைத் தொகுப்பின் முன்னுரையில் . . .
ஒழுங்குகளை மீறும் களிப்பை நான் ஆற்றலாக்கும்போது கவிதை என்னை எழுதச் சொல்லிக் கேட்கிறது. ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு இடைவிடாமல் மாறிக் கொண்டிருக்கும் என் முடிவற்ற இயக்கமாக கவிதை வினையாற்றுகிறது. ஏற்கனவே உள்ள அர்த்தங்களை மறுதலிப்பதும், சிதைப்பதும், புலன் கடந்த அணுகுமுறைக்கு மாற்றுவதுமான கலகமாக என் கவிதை விளைகிறது. சமூக மதிப்பீடுகளை மீட்டுருவாக்கம் செய்து, மாற்று அழகியலுக்கான களமாக என் கவிதை முயற்சிக்கிறது.

             தொகுப்பில் ஒரு கவிதை. தவளையின் பாடல். கவிஞர் இரவுகளில் தொடர்ந்து தனது இணையை அழைப்பதற்கான தவளையின் கத்தல்களை கேட்கிறார். அது ஒரு பாடலாகக் அவருக்கு தோன்றுகிறது. தொடர்ந்து பாடப்படும் அத்தகைய பாடல் ஒன்று எத்தகை அர்த்தங்களைக் கொண்டிருக்க முடியும்? ஒரு பெண் தவளை எதைச் சொல்லி ஆண் தவளையை அழைக்கும்?

என் யோனி
            தளிர் பச்சை
            ஊதா நிறப்பூ
           மேயும் ஆட்டுக் குட்டி
           இடையனின் முத்தம்


            ஒரு செத்த மிருகத்தை இழுத்து தைக்கும்வரை
            பழுதடைந்த கம்பி வலையையும் கூடவே
            நாற்றம் கீறிய தொண்டை பிளந்து
             உடைகள் இரத்த சகதியில் நனையும்வரை


என் யோனி
             நாற்றுப் பாடல்
             மழைப்பூச்சி ரீங்காரம்
             காட்டிருட்டின் இசை
             தாலாட்டும் சந்தம்
           
             துப்பாக்கியின் குழலை நுழைக்கும்வரை
             நுளம்பு துளைத்து இதையம் உதிரும்வரை
             வெடிப்பார்களா எரிப்பார்களா பிய்த்து எறிவார்களா
             பொசுங்கிய மூளையின் புகை ஓயும்வரை
             துடைப்பானின் கட்டை லத்தி சிகரெட்
             முகமூடிகள் போத்தல்களையும் செலுத்தும்வரை

கவிதை இவ்வாறு நீண்டு கொண்டுபோய் கடைசியில்

யோனி பச்சை பூ யுத்தம் ரீங்காரம் மிருகம் கம்பி நாற்றம் லத்தி
சிகரெட் தாலாட்டு மழைப்புச்சி சித்திரக்காரி துப்பாக்கி கருப்பு
யோனி பிணம் கடற்கரை வெயில் கன்னிமார் மாமிசம் விந்து
யோ னி மீ ன் தொ ப் பூ ள் நா டு அ ர சு
கு ழ ந் தை க ள் பா ம் பு தோ ணி
வா ரி சு ம யி ர் கொ டி
யோ னி . . . . .

            இணையை அழைக்கும் தவளை ஒரே கணத்தில் இருவிதமான பாடல்களைப் பாடுகிறது. அது தனது நிலையாமையை அல்லது ஒரு நிலைத்தன்மையின் அபத்தத்தை காட்சிப்படுத்துகிறது அது உறுதியாக ஒரு சிதைந்த அழகை, சிதைந்த இயல்புநிலை ஒழுங்கை பாடலாக வரிக்கிறது. இங்கே இரண்டு விஷயங்கள் ஒரே சமயத்தில் அல்லது இணையாகப் பேசப்படுகின்றன. ஒன்று இந்த உலகில் உயிர்கள் நிலைத்திருப்பதற்கான கலவிக்கான அழைப்பு. மற்றொன்று அத்தகைய இயற்கை செயல்பாட்டை சீர்குலைக்கும் அல்லது அந்த சங்கிலித் தொடரை சிதைத்துக் கொண்டு வரும் சகல செயல்பாடுகளும். அந்தத் தவளையின் பாடலானது எச்சமாக, ஒரு செயலின் எச்சமாக மாறுகிறது. அந்த எச்சமே நிலையாமையின் கூறாக வெளிப்பட ஆரம்பிக்கிறது. அது அதிகார சக்தியாக இருக்கிறது. அது கடைசியில் இரண்டையும் செயல்படுத்தி முடிக்கிறது. அதாவது கலவி, கற்பழிப்பாக அல்லது வன்புணர்ச்சியாக்கப்பட்டு அந்த அழகு சிதைக்கப்படுகிறது. சிதைவே எல்லா இடங்களிலும் அதிகாரத்தை, அரசியலை நிலைநிறுத்துவதில் வெற்றி பெருகிறது. கவிதையும் இந்த இடத்திலேதான் வெற்றியடைகிறது..

             அது பிணத்தைக் கூறுபோடுகிறது. அந்த பிரேத பரிசோதனை சிதைவுகளை ஆராய்கிறது. அதன் தடம் சிதைவற்ற இடங்களுக்கு நம்மை இட்டுச் செல்கிறது. ஆனால் அதன் நாற்றத்தை நாம் பொறுத்துக் கொள்வதில்லை. அத்தகைய பிரேத ஆராய்ச்சியானது முகம் சுழிப்பிற்கு இட்டுச் செல்கிறது. நம்மிடமிருந்து கிளம்பும் நாற்றமே நம்மை தடுமாறச்செய்கிறது. இங்கே கவிஞர் உயிர்களை உற்பத்தி செய்யும் ஆதர புள்ளியே அதற்கான அழிவுப் புள்ளியாகவும் இருப்பதாக கடந்துபோகிறார்.

            லீனாவின் கவிதைகள் நாற்றத்தைப் பேசுகின்றன.

           அது சகிக்க முடியாத்தாக இருக்கிறது. ஆனால் நாம் நாற்றத்தையும் அம்மணத்தையும் தடைசெய்யவும் அதைக் கைதுசெய்யவும் முயற்சிக்கிறோம். இது நம்மை புனிதத்தை நோக்கி அழைத்துச் செல்கிறது. புனிதங்கள் பண்பாடுகளால் பாதுகாக்கப்படுகின்றன. பண்பாடு பிணங்களின் குவியலுக்குமேல் வைக்கப்பட்டிருக்கின்றன.


பின் இணைப்புகள்

பின் இணைப்பு ஒன்று

           



                நான் ஒரு சூன்யக்காரி என்று தன்னை பிரகடனப்படுத்திக் கொள்ளும் கொரிய பெண்(ணிய) கவிஞரான கிம் ஹை – சன்னின் நேர்காணலின் ஒரு பகுதி. இது பாலி புரட்டாசி 2007 சிற்றிதழில் வெளிவந்தது. தமிழ் மொழிபெயர்ப்பு கே. நர்மதா. இதழாசிரியர் ராணிதிலக்

            கொரிய கவிதைகளில் பெண் மரபு உறுதியாகவே இருந்திருக்கிறது, என்றாலும் வெறும் போகப்பொருளாகக் கருதப்படுவதை சகித்துக் கொள்ளவும் அவர்களது செல்வாக்கின் மீது நடத்தப்படும் தாக்குதல்களைத் தாங்கிக் கொள்ளவும் வேண்டியிருந்தது. இதனால்தான் பெண் கவிஞர்களுக்கு முன்மாதிரியாக விளங்கவோ, கவிஞராக முக்கியத்துவம் பெறுவதற்கோ கடினமாக இருக்கிறது. பெண் கவிஞர்களுக்கு தோள்கொடுக்க யாருமில்லாத நிலையையும் தனக்கென்று புதுமொழியை உருவாக்க முடியாத நிலையையும் பொறுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது என்று மிக வலுவாக பெண் நிலைவாதத்தைக் கூறும் கொரிய பெண் கவிஞரான கிம் ஹை – சன் தன்னிடம் கேட்கப்பட்ட சில கேள்விகளுக்கு அளித்த பதில் இங்கே மிகப் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியதால் அதையும் இத்துடன் இணைத்துள்ளோன்.

கொரிய கலாச்சாரத்தைப் பற்றிப் பரிச்சயம் இல்லாதவர்களுக்குச் சி யோன்யோ, அஜும்மா என்றால் என்ன என்று விளக்க முடியுமா? எவ்விதமான கோரிக்கைகள் அவர்கள் மீது வைக்கப்பட்டன?

          சி யோன்யோ இருவிதங்களாக வழங்கப்படுகிறது. அது திருமணமாகாத இளம் பெண்களைக் குறிக்கிறது. ஆனால் அது கன்னிப் பெண்களைக் குறிக்கும் சொல். அதாவது அவர்கள் எந்தப் பாலுறவு அனுபவமும் இல்லாதவர்களாக இருக்க வேண்டும் என எதிர்ப்பார்க்கிறார்கள். இதுதான் ஆண்கள் சி யோன்யோவிடம் வற்புறுத்துவது. அஜூம்மா தனக்கென்ற வாழ்க்கையை வாழாதவளாக இருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறாள். அவள் தன்னை ஒரு தாயாக மட்டுமே அடையாளம் காணவேண்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறாள். வீடும் குடும்பமும் மட்டுமே அவளது உலகம். கொரியாவில் இவ்விரு மாபெரும் பாத்திரங்களைத் தவிர வேறு எதுவும் இருக்க முடியாது. ஆகவே ஒரு பெண் சி யோன்யோவாக, பிறகு அஜூம்மாவாக, இறுதியில் ஹால்மோனியாக (பாட்டி) இருக்க வேண்டுமெனக் கருதப்படுகிறாள். முதலில் அவள் தந்தைக்கும் பின்பு அஜூம்மாவுகும்போது கணவனுக்கும் கடைசியாக ஹால்மோனியாகும்போது மகனுக்கும் கீழ்படிய வேண்டும். வரையறுக்கப்பட்ட இந்தப் பாத்திரங்களைத் தாண்டி வாழ்கிற இந்த விதியை மீறுகிற பெண்கள் ச்சாய்யோ (வேசி) என அழைக்கப்படுவாள். ஒரு பெண்ணாக தென்கொரியாவில் நான் இந்தக் கணம் ஒரு அஜூம்மா, ஆனால் சமயங்களில் நான் சி யோன்யோ, ச்சாங்யோ மேலும் ஹால்மோனி . . . அப்புறம் சில நேரங்களில் மேன்யோ (சூன்யகாரி) மேலும் ‘பைத்தியக்காரி’. எனவே ஏன் என்னிடமிருந்து ஒரே ஒரு அடையாளத்தைக் கோரவேண்டும்? மக்கள் என் அடையாளம் எதுவென்று கேட்கும்போது நான் எதுவுமில்லை என்பேன். ஆனால் அதே நேரம் மேற்கூறிய அனைத்தும் என்பேன்.

உங்களுக்கு எந்த முன்மாதிரியோ அல்லது பெண் மொழியோ பின்பற்றுவதற்கு இல்லை என்று முன்பு கூறினீர்கள். அதைப்பற்றி விரிவாகக் கூறமுடியுமா?

            நான் கூறியது என்னைப் போன்ற அடையாளம் அற்றவர்களுக்கென்று எந்தவொரு மொழியும் இல்லை என்று. எனவே நான் எனக்கான மொழியை அதற்கென்ற இலக்கணம், தாளம், கட்டமைப்போடு உருவாக்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஒரு கட்டுரை வாசிக்க 1990 – ல் பெர்லினுக்குச் சென்றிருந்தபோது ஆற்றங்கரையில் அமைந்திருந்த ஓர் அழகான ஓட்டலில் தங்கியிருந்தேன். மிக அழகான இடம் அது. அந்த இடத்தைப் பற்றி ஒரு கவிதை எழுத வேண்டுமென்று நினைத்தேன். ஆனால் அதை எழுதிவிட்டு பார்த்தபோது அது ஒரு (கொரிய) ஆணின் கண்ணோட்டத்தில் ஆணின் மொழியில், ஓர் ஆணின் கவிதையுணர்வில் அமைந்திருந்தது.

அப்படி என்றால் கவிஞராக இருப்பது உங்களைப் பொறுத்தவரை என்ன?

              ஒரு கவிஞர் பசியைப் பொருட்படுத்தக் கூடாது. பணம் சம்பாதிக்கக் நினைக்கக் கூடாது. ஒரு கவிஞர் என்பவர் இல்லாத ஒன்றை இருப்பதாக அடித்துச் சொல்பவர். இல்லாத்தைச் சுட்டிக் காட்டுபவர். கவிஞர்கள் இல்லாத ஒன்றின் மறைவினைப் பற்றிப் பேசுபவர் என்று நான் நினைக்கிறேன். கவிஞர் மதிப்பில்லாதவர், ஒரு தாய்போல. தாய் என்பதன் பொருளை அகராதியில் நீங்கள் பார்த்தீர்களென்றால் அநேகமாக அதில் குழந்தையுடன் இருக்கும் பெண் என்றே இருக்கும். தாய் குழந்தையின் இருப்பை அனுமதிக்கிறாள் (அவள் அங்கே விரைவாகவே காணாமல் போகிறாள்). அவள் தன் குழந்தைக்கும் தனக்கும் இடையில் எங்கோ ஒரு படைப்புலகில் இருக்கிறாள். அந்த உலகம் குடும்பத்தை வழி நடத்துகிற குடும்பத்தலைவர் என்ற முதலாளித்துவ அமைப்பிலிருந்து வெகுதூரத்திலிருப்பது. அதுபோல பெண் கவிஞரின் இடம் மிக அசாதாரணமான ஒன்று.

தற்காலக் கொரிய பெண் கவிஞர்களின் கவிதைகளைப் பற்றிப் பரிச்சயமில்லாதவர்கள் அதைப் பற்றி என்ன தெரிந்து கொள்ளவேண்டும்?

            கொரிய கவிதையின் பாரம்பரியம் மிக பிரமாண்டமானது. மக்கள் ஒன்றுகூடும்போதெல்லாம் கவிதை இயற்றினார்கள். இருப்பினும் கொரிய கவிதை பெரும்பான்மையில் ஆணுலகைச் சார்ந்தது. கொரிய ஆண்களின் கவிதையின் தனிப் பண்புகளில் ஒன்று, அக்கவிதைகள் உடல் சார்ந்த விஷயங்களைக் கையாள்வது இல்லை. அவை காட்சி சம்பந்தப்பட்ட விஷயங்களையே கையாள்கின்றன. இயற்கை அவர்களைச் சார்ந்து இருக்கவில்லையென்ற யதார்த்தத்தை லட்சியம் செய்யாமல் ஆண்கவிஞர்கள் தமது எண்ணத்தையும், கவியுணர்வையும் பொறுத்து இயற்கையிலிருந்து அவர்கள் விரும்புபவற்றை உருவாக்குகின்றனர். பின்பு அதனுடன் முதுமொழிகளைச் சேர்க்கின்றனர். இதுதான் தற்கால ஆண் கொரிய கவிதையின் குறிப்பிடத்தக்க வடிவம். ஆனால் இந்தச் சக்தி மிக்க ஆண் பாரம்பரியத்தில் கொரிய பெண் கவிஞர்கள் இயற்கையை வேறு வழிகளில் கையாள்கின்றனர். பெண்கள் இயற்கையை அதன் போக்கிலேயே அனுமதிக்கின்றனர். மேலும் அதன் சொந்த இயல்பையும் அதன்படியே இருக்கவிடுகின்றனர். இயற்கையும், அவளது இயல்பும் எப்படி இருக்கிறதோ அப்படியே தனித்து விடப்படுகின்றன. அந்த நிலையிலிருந்தே அவர்கள் தங்களுக்கிடையேயான சந்திப்புகள் மற்றும் எதிர் விளைவுகள் பற்றித் தமது உடல்மொழியால் பேசுகின்றனர். பெண் கவிஞர்கள் சமூக நிலைக்குறித்தும் பேசுகின்றனர். அவர்கள் தங்கள் நிலைமையை அசாதாரணமான மற்றும் வழக்கத்தில்லாத மொழியினால் எதிர்த்தும் தாக்கியும் வருகின்றனர். அவர்களது எதிர்ப்புணர்வு அவர்களது மொழியை இயல்பு மீறிய சர்ரியல் மற்றும் விசித்திர பாணிக்கு அழைத்துச் செல்கிறது. பெண் கவிஞர்களின் மொழி மிகவும் அகவியலானதாக அதே சமயம் அறைகூவல் விடுப்பதாக, புரட்சிகரமானதாக அமைகிறது. ஆனால் ஆண்கள், பெண்களின் இந்த மொழியைப் பைத்தியக்கார பெட்டைநாய்களின் கூச்சலாகவே பார்க்கின்றனர். ஏன் எங்கள் மொழி பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது என்று அவர்கள் யோசிப்பதில்லை . . . .

உங்கள் கவிதைகள் எதிர்வாதக் கவிதைகள் என்று கருதுகிறீர்களா?

            நான் எழுதுவது மரணத்தின் கொண்டாட்டம், கேளிக்கை என்று நினைக்கிறேன். நான் ஒடுக்குமுறையின் கணத்தை விளையாட்டாகவும், எளிதானதாகவும் மாற்ற முயற்சிக்கிறேன் . . . .

பின் இணைப்பு இரண்டு

            அதேபோல குஷ்பு விவகாரம் சம்பந்தமாக உயிர்மை இதழ் ஏப்ரல் 2010 - ல் மனுஷ்யபுத்திரன் எழுதியிருந்த்தை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

குஷ்பு விவகாரமும் உச்சநீதிமன்றமும்

            திருமணம் அல்லாத ஆண் - பெண் உறவுகள் குறித்து நடிகை குஷ்பு தெரிவித்த கருத்துகளுக்காகத் தன்மீது ஊர் ஊராகக் கற்பின் காவலர்கள் தாக்கல் செய்த வழக்குகளைத் தள்ளுபடி செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் அவர் தாக்கல்செய்த மனு மீது நீதிபதிகள் தெரிவித்த கருத்துக்கள் மிகவும் குறிப்பிடத்தக்கவை. குஷ்பு மீது வழக்குத் தொடர்ந்தவர்கள் மீது நீதிபதிகள் முன் வைத்த கேள்விகளின் சாராம்சம் இதுதான். ‘குஷ்புவின் கருத்துக்களால் மனம் மாறி உங்கள் வீட்டிலிருந்து யாராவது ஓடிப் போய்விட்டார்களா?‘ என்பதுதான் அது. அதற்கு அவர்கள் ‘இல்லை‘ என்றே பதிலளித்தார்கள். தங்களைப் பாதிக்காத ஒன்று இந்த சமூகத்தைப் பாதிக்கும் என்ற உத்தேசத்தில் போடப்பட்ட இந்த வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தால் மட்டும் போதாது. இதுபோன்ற போலி வழக்குகளைப் பதிவு செய்து ஊடகங்களில் அற்ப பிரபலம் தேடுவதுடன் நீதிமன்றத்தின் நேரத்தையும் வீணடித்ததற்காகவும், ஒரு கருத்திற்காக ஒருவருக்கு இவ்வளவு மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காகவும் ஒவ்வொருவருக்கும் தலா பத்து லட்ச ரூபாய் அபராதமும் இரண்டாண்டுகள் கடும் காவல் தண்டனையும் விதிப்பது நல்லது.

            வயது வந்த ஒரு ஆணும் பெண்ணும் தங்களுக்கு விருப்பமிருந்தால் திருமணம் இல்லாமலேயேகூட சேர்ந்துவாழ்வது குற்றமல்ல என உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்க வேண்டியிருப்பது நாம் எந்த யுகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்ற குழப்பத்தையே ஏற்படுத்துகிறது..

பின் இணைப்பு மூன்று

              பத்திரிக்கை செய்தி: குஷ்புவின் மீது தொடுக்கப்பட்ட 22 வழக்குகளும் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டன.