Saturday, April 16, 2022

இரகசியங்களை மொழியினூடாக மர்மங்களாக வெளிக்காட்டிக் கொள்ள இயற்கையின் தேர்வே நான்.


 ஸ்ரீசங்கரின் பொயட்ரி இதழ் 2020.
( உரையாடியவர் அகச்சேரன்)

∅∅∅∅∅∅∅∅∅∅∅∅∅∅∅∅∅∅∅∅∅

 1. கவிதை எழுதுவது என்பது உங்களைப் பொறுத்தவரை எவ்வளவு முக்கியம்?


மனிதன் தவிர சில விலங்குகளும் பொருட்களை குறிப்பிட்ட வடிவத்தில் அடுக்கி, தனது அக ஒழுங்கைக் காட்டுபவை. குறிப்பாக குரங்கு, நாய், பூனை. நாம் எழுதுவதைத் தாண்டி முக்கியத்துவம் பெறுவது அக தரிசனம்தான். தரிசனம் என்பது மனிதனின் சமூக ஒழுங்கிற்கு அப்பாற்பட்டது. ஒரு தினவு. அறிவியல்படி சொல்வதானல், இது ஏதோ ஒருவகையில் ஜீன் கலைவமைவுதான். அவஸ்தையின் மாறுபட்ட வடிவம். அதேபோல முக்கியத்துவம் என்பதைத் தாண்டி, எழுதுவது என்பதே இரண்டாவது செயல்பாடுதான். அத்தகைய மன செயல்பாட்டிலிருந்து விலகுவது என்பதற்கு இடமேயில்லை. முக்கியம் முக்கியமில்லை என்பதற்கு அப்பாற்பட்டு தன்னியல்பாக நிகழ்த்திக் கொள்ளும் ஒரு உயிரியின் அகச் செயல்பாடுதான் இது போன்றவை.


சி.மணியும் நீங்களும்?

சி. மணியுடனான தொடர்பு என்பது ஒரு விபத்து என்றே சொல்ல வேண்டும். அதுவரை அவரது ஒரு சில கவிதைகளைத் தவிர, அவர் சேலத்தில்தான் அதுவும் அம்மாபேட்டை செளண்டம்மன் கோவில் தெருவில்தான் வசிக்கிறார் என்பதே தெரியாது. நீட்சே சொல்வதைப்போல ஒரு அதிமனிதனாக அவரைக் கண்டேன். அதிமனிதனை ஒரு சாதாரண கல்லூரி மாணவன் எதிகொள்வதென்பது தற்கொலைக்குச் சமமானதுதான். ஒரு மனிதன் நம்பிக்கொண்டிருந்தது எல்லாமே அடித்து நொறுக்கப்படும் நிகழ்வு ஒவ்வொரு மனிதனுக்கும் வெவ்வேறு சம்பவங்களால் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கலாம். ஆனால் அசாதரணனால் எதிர்கொள்ளப்படும் சாதாரணனின் மனோநிலையானது அதை அப்படியே ஏற்றுக் கொள்ளவோ, முரண்படவோ செய்யும் அவனது தனிப்பட்ட ஆளுமையைச் சார்ந்தது. அந்த விதத்தில் நான் சி. மணியில் என்னைப் பொருத்தியோ அல்லது விலக்கியோ பார்த்துக் கொண்டேனே தவிர அவர் என்னை நானே திருத்தி மேம்பட்டுக் கொள்ளவே அனுமதித்தார்.
இது ஒரு அபூர்வத்திலும் அபூர்வமான ஒன்று, அவரைப் போலவே.


3. தத்துவம் கவிதை இரண்டும் மகிழ்ச்சி இணையா? அல்லது பூட்டப்பட்ட மாடுகளா?

கவிதை தர்க்கத்திற்கு அப்பாற்பட்டது. தத்துவம் தர்க்கத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்படுகிறது. இரண்டுக்குமான தொடர்பு இங்கே பூஜ்ஜிய நிலையாக இருக்கிறது. ஆனால் கவிதையில்  செயல்படும் தத்துவமானது தர்க்கத்திலிருந்து பிறக்கும் ஒரு தர்க்கமற்ற நிலை. இதுவே அடர் இலக்கியத்தின் கூறாகவும் உள்ளது. ஆனால் ஒவ்வொரு மனிதனும் தான் அடையும் தர்க்கமற்ற நிலையை மீண்டும் தர்க்கமாக்கிக் கொள்ளவில்லை என்றால் அது பூட்டப்பட்ட மாடுகளாக மாறிவிடும் என்பதில் சந்தேகமில்லை.


4. 'வண்ணச் சிதைவு' கவிதைத் தொகுதியில் நீங்கள் ஒரு மெய்யியல்வாதியாக பரிணமித்திருந்தீர்கள். அது பற்றி?

மெய்யியல் என்பது ஒரு மனநிலை. இது இயற்கை, இருத்தல், சிந்தனை, மொழி இவற்றின் மீதான பொது விதிகளின் செயல்பாட்டை பேசுகிறது. அப்படி ஒரு மனோநிலையானது தொண்ணூறுகளில் அல்லது அதற்கு முன் மிகத் தீவிரமாக இருந்தது. அது வெறுமனே ஒரு பாவனையாக இல்லாமல் ஆன்மாவின் கூக்குரலாக இருப்பதே அதன் மெய்மை. அக்காலக்கட்டத்தில் சி. மணியின் கூடவே இருந்தேன். என்னையும் நாமக்கல் சர்வராஜையும் மிக நெருங்கிவர அனுமதித்தார். அவருடனான உரையாடலின் எதிர்வினையாக ஒரு கவிதையையும் நான் எழுதியதில்லை. என்னுள் தோன்றிய எல்லாமும் அவருக்கு எதிராக இருந்தன. அல்லது அப்படி அவர் காட்டிக்கொண்டார். எனது கவிதைகளை மிகச் சிக்கலான வெற்று சட்டகங்களை அறிவியியல் நிரூபணம் கொண்டு அடுக்குவதாகச் சொல்லிக் கொண்டார். அது வாசகனை கூடுதல் தகவல்களை கொண்டு சேர்க்கச் செய்வதாகவும் Esoteric தன்மையின் மர்மம் அடங்காத வெடிப்பு அதற்கான வலுவை,  வாசகனிடம் கேட்க வைப்பது கவிதையின் பொதுத் தன்மை இல்லை என்றும் சொல்வார். வண்ணச்சிதைவு தொகுப்பு வரும்போது அதை அவருக்குக் கொடுக்க எனக்கு பிராப்தம் அமையவில்லை. அதேபோலத்தான் அந்தத் தொகுப்பும் கணிக்கப்பட்டது எனக்கு பெரு மகிழ்ச்சியாக இருந்தது.



5. ஆனால் தற்போது வெளியாகியிருக்கும் 'அரோரா'வில் உங்களை அப்படி வரையறுக்க இடம் தரவில்லை. ஏன்?

அரோரா ஒரு தோற்றப்போலி. வாசகன் ஏமாந்து போவது இங்கேதான். வெறும் மொழி செயல்பாட்டை வைத்துக்கொண்டு ஒரு படைப்பாளியின் ஆன்மாவை தரிசிக்க இயலாமல் போவது ஒருவகை முன் முடிவுத் தன்மையாகும். தொடர்ந்து மாறிவரும் ஆளுமை கட்டத்தின் ஒரு காலக்கட்டம் இது. இதற்கு நிகழின் மெய்ம்மையைக் கருத்தில் கொள்ளவேண்டும். மற்றொரு வகையில் சொல்வதானால், வண்ணச் சிதைவின் தோல்விதான் அரோரா. அல்லது அரோரா மற்றொரு தோல்வியின் வெற்றியோ?
நிகழ்வின் இணையாக இருக்கும் இலக்கிய செயல் தன்மையை படைப்பின் பொதுத் தன்மையில் வெளிப்படுத்த முயன்றது வண்ணச்சிதைவு. சம்பவங்களின் ஊடாடும் மெய்ம்மையை வெளிப்படுத்த அந்த சம்பவங்களையே நிகழ்வாக்கிப் பார்த்ததன் விளைவே அரோரா.



6. கவிதையுடனான தனிமனிதனின் உறவுப் பரிவர்த்தனை தற்கால மீ மின்யுகத்திற்குப் பிறகு தேவையற்ற ஒன்றாகி விடும் என யூகிக்கலாமா?

புனைவாக ஒரு சினிமாவைக் கூறலாம். 6th day என்றொரு படம். அதில் கதாநாயகன், தன் வீட்டில் தன்னைப்போலவே ஒருவன் தன் மனைவியுடனும் குழந்தைகளுடனும் இருப்பதை கண்டு பின் தொடர்ந்து துப்பறிகிறான். கடைசியில் அவன் கண்டடைவது அவன், தன் வீட்டிலிருப்பவனின் clone என்பது தெரியவரும். மனித கட்டமைப்பு என்பது இயற்கையின் அதீத நிகழ்வு. தன்வயமான முற்றிலும் வரையறுக்க இயலாத தன்மையுடைய உயிர்த் தோற்றத்தின் உச்சபச்ச கற்பனா செயல்பாடு என்பது அதன் உள்ளுறைந்த தன்வயத்தின் ஒரு விஷயந்தான். எனவே எத்தகைய நெருக்கடி நிலையிலும் அது தன் சொந்தத் தன்மையை இழக்காது.

7. நீங்கள் மொழிபெயர்ப்பிலும் ஈடுபட்டு வருபவர். உங்கள் மொழிபெயர்ப்பு அனுபவம்?

நான் படித்தது தமிழ் வழியில்தான். நீர்முள்ளிக்குட்டை என்ற சிற்றூரில் நடுநிலைப் பள்ளியில் எனது தாயார் ஆசிரியையாக பணியாற்றிக் கொண்டிருந்தார். எனது கல்வியில் மிகுந்த அக்கறையும் கட்டற்ற சுதந்திரத்தையும் எனக்கு பரிசளித்தார். கிட்டத்தட்ட சி. மணியும் இதே மனநிலையில்தான் என்னை ஆற்றுப்படுத்தினார். திரைப்பட மேதை அந்தோனின் ஆர்தோவின் முக்கியமான நேர்காணலை தக்கை இதழுக்காக மொழியாக்கம் செய்தேன். அதை முடித்து அவரிடம் காட்டியபோது இன்னும் கொஞ்சம் வார்த்தைகளை ஒழுங்குபடுத்துங்கள் என்றார். முதலில் மொழியாக்கம் என்பதைப் பற்றி எனது கருத்தோட்டதை முற்றிலுமாகக் கலைத்துப் போட்டவர் சி. மணி. தாவோ தே ஜிங் மொழியாகத்தில் முழுமையாக நான் கூடவே இருந்தேன். ஒரு மொழியாக்கத்திற்கு ஐந்து ஆங்கில மொழியாக்கங்களை பயன்படுத்தினார். அதில் Gia- Fu Feng and Jane English பிரதியை பிரதானமான நூலாகவும் மற்ற நான்கையும் துணை நூற்களாகவும் பயன்படுத்தினார். அதேபோல பத்து திருத்த பிரதிகளை உருவாக்கினார். இதற்கு அவர் கொடுத்த உழைப்பென்பது யாரிடமும் காணக்கிடைக்காத முன்மாதிரி. ஒரு சொல்லுக்காக ஒரு வாரம்கூட அவர் காத்திருந்திருக்கிறார்.  இயல்பினில் மொழியாக்கம் என்பது அதிக பொறுமையும் ஒரு மொழிக்கான தார்மீகக் கடமையையும் தன்னையும் தன் எழுத்தையும் வெளியில் நிறுத்தி அந்நியமாக்கிப் பார்க்கும் திரானியும் கோரும் ஒரு உருமாற்றம்.

8. பொதுவாக தேவையற்ற பதங்கள் படைப்பை அதன் கூர்மைத் தன்மையிலிருந்து வெளியேற்றிவிடுகிறது. உங்களைப் பொறுத்த அளவில் படைப்பை எடிட் செய்வதன் அனுகூலம் குறித்து சொல்லுங்கள்?

என்றுமே எடிட்டிங் செய்வது ஒரு பிரதியை மேம்படுத்தும் என்றாலும் அதற்கான நோக்கு வேண்டும். எடுத்துக்காட்டாக எனது இருவர் மலையுச்சி கவிதையானது எந்த திருத்தமும் இல்லாமல் அப்படியே எழுத்தில் வந்தது. ஆனால் எல்லா படைப்பும் இப்படி அமையும் என்று சொல்லமுடியாது. அதேபோல ஒரு படைப்பை கூர்மைப்படுத்த கூர்மைப்படுத்த அது வாசகனை விட்டு விலகிவிடுகிறது. ஆனால் படைப்பிற்கான முதல் தன்மையே அதன் கச்சிதத் தன்மையில்தான் இருக்கிறது. படைப்பை கூர்மைப்படுத்த எடிட்டிங் என்கிற பிரதியாக்க மனநிலையை அடையும் தாராள மனம் வேண்டும். அல்லது அத்தகைய ஒரு நல்ல பிரதியாக்க ஆளுமையை நாட வேண்டும். இது நாள்பட நமக்கே கச்சிதத் தன்மையை நோக்கி நாம் செலுத்திவிடும் ஒரு அதிசயத்தையும் தரக்கூடும். தமிழில் Text Editor என்ற கருத்தாக்கமே இல்லை.

9. நீங்கள் எழுத நினைப்பதை எழுத்தில் கடத்தவியலாத போழ்து உங்களின் மனோநிலை தற்கொலைக்கு நிகரானதா? அல்லது மொழியைக் கழுவேற்றுவதா?

நூறு சதவீதம் நாம் எழுத நினைப்பதை எழுத்தில் கடத்த முடியாது. அது மொழி ஊடகத்துக்கும் நமது அனுபவ தரிசனத்துக்குமான நுண்மையின்மையினால் ஏற்படும் ஹீனம். எந்த மொழியும் அத்தகையத் தன்மையைச் சொல்லும் என்றும் கருத இடமில்லை. ஆனால் சபீர்- வொர்ஃப் தங்களின் கருதுகோளின்படி நம்மால் எதைச் சிந்திக்க முடியும் என்பதை நம் மொழியே தீர்மானிக்கிறது என்பதில் உறுதியாக இருந்தனர். ஒரு மொழி ஒரு விஷயத்தை மிக எளிதாக வெளிப்படுத்த மற்றொரு மொழி அதற்கு சிரமப்படுவதை தனி ஆளுமையின் குறையாகக் கருத இடமில்லை. ஆனால் அத்தகைய ஹீனத்தை சரி செய்ய நம்மிடம் போதிய முயற்சியும் காலமும் இல்லாமல் இருக்கிறது. சி.மணி தொழில் மயக்கம் கவிதையில் ஒலிப்பதிவு என்ற பதத்திற்காக பல வருடம் காத்திருந்திருக்கிறார். அந்த காலக்கட்டத்தில் அப்படி ஒரு சாதனம் கண்டுபிடிக்கவில்லை. அது பொதுமைப்படுத்தப்படவில்லை. இது மிக முக்கியமாக கலைச்சொற்கள் தேவைப்படும் அறிவியியல், கணிதம், பொருளாதாரம், கணக்கியியல், விண்வெளியியல் போன்ற நுட்பங்கள் தேவைப்படும் பிரிவுகளுக்குச் சாலப் பொருந்தும். இங்கே மொழியை செம்மையாக்கலின் திசை நோக்கி நகர்த்தும் தார்மீகக் கடமை ஒவ்வொரு படைப்பாளிக்கும் இருப்பதை கண்டு கொள்ள முடிகிறது.

10. கவித்துவம் என்பதை நீங்கள் எங்ஙனம் வரையறுப்பீர்கள்?

கவித்துவத்திற்கு வரையறை செய்ய முடியாது. அது படைப்பு, பேசும் பொருள், அதற்கான உத்தி, அது அப்படி படைப்பாக மாற்றம் கொள்ளதக்க கணம் எல்லாவற்றையும் கணக்கில் எடுத்துக் கொள்வதாக இருந்தாலும், ஒருவருடைய ஒரு கவிதைக்கும் மற்றொரு கவிதைக்குமான வரையறை மாறிக்கொண்டேதான் இருக்கும். வரையறையற்ற தன்மையே கவித்துவத்தின் உட்பொதிவாக இருக்கிறது. ஒவ்வொரு கவிதையும் தனக்கான கவித்துவதை தானே தீர்மானித்துக் கொள்கிறது. ஒன்று கவிதையில் கையாளப்படும் கூறுகள் அல்லது கவித்துவத்திற்கான கூறுகளாக நம்பப்படுபவை இணையும்போது அது கவித்துவமாக நம்பப்படுகிறது. இங்கே வரையறுக்க முடியாத ஒரு நோக்கமே அதன் வரையறையாக இருக்கிறது. குறைந்த பட்சம் உள்ளடக்கம் என்பதைவிட படைப்பில் காணப்படும் வெளிப்படையான உருவமே முக்கியமாகக் கவித்துவத்தை கோடிட்டுக் காட்டுகிறது. அப்படி இல்லாமல் உள்ளழகு என்றொரு தன்மையின் பூடகத்திலும் கவித்துவம் மிளிரக்கூடும். எதுவுமே தற்செயலானதே.


11. மர்மம், பூடகம், விடுகதைத் தன்மை இவற்றை எழுதும் ஆர்வமுள்ள உங்களுக்கு அலங்காரம், விளையாட்டு, அப்படியே விடுதல் போன்றவற்றில் பரிட்சார்த்தமாகவேணும் எழுத ஆர்வமில்லையா?

போதுமான அளவிற்கு எழுதப்பட்ட அல்லது எனக்கு அதன் அக தரிசனத்தைக் காட்டாத ஒன்றை எவ்வாறு நான் சோதனைக்காக வேணும் எழுதிப் பார்ப்பது? மர்மம், பூடகத்தன்மை, விடுகதைத் தன்மை போன்றவை தரும் மெய்யியியல் தன்மையை வேறு எதுவும் காட்ட முடியாது என்று நம்புகிறேன். தவிரவும் ஒரு விஷயத்தின் துல்லியத் தன்மையானது அது எந்த அளவிற்கு மற்றதிலிருந்து முற்றிலும் தன்னை வேறுபடுத்திக் கொள்கிறது என்பதையேக் காட்டுகிறது. அதில்லாமல் போலச் செய்து பார்த்தல் என்பது ஒரு மொழி விளையாட்டாகத்தான் இருக்க முடியுமோ அன்றி அது ஒரு தன்னியல்பான படைப்பாக இருக்காது.

12. அதிகமும் அறிவியல், நிரூபணம் கொண்டே பார்த்த உங்கள் பார்வையில் உங்களின் தாயாரின் இறப்பிற்குப் பின்பு, அறிந்தவற்றுக்கு அப்பாலுள்ள நம்பிக்கை சார்ந்த விடயங்களையும் நீங்கள் பேச தலைப்பட்டுள்ளீர்கள் என்கிறேன். சரிதானா?

முழுவதுமே அறிவியல் நிரூபணம் கொண்ட எனது சிந்தனை ஓட்டத்தில் எனது தாயாரின் மரணமும் மரணத்திற்கு முந்தய அவரின் செயல்களும் என்னை மிகப் பெரிய எல்லைகளுக்கு அப்பால் கொண்டு வீசியது. இயற்கை பற்றிய எனது புரிதலை விரிவுபடுத்தியது. நிரூபணங்கள் இல்லாத அறிவியலும் உண்டென்று கண்டு கொண்டேன். மரணம் ஒரு நிகழ்வு என்பதைத் தாண்டி அதன் மர்மம் என்னைத் திகைக்க வைத்தது. மரணம் எதிர் கொள்ளும் உயிரி இந்தப் பிரபஞ்சத்தின் புலப்படாத ரகசியத்தின் ரகசியமான ஒற்றைச் சொல் என்று கண்டு கொண்டேன். அந்த ஆன்மா அடையும் அனுபவ உண்மையானது இந்த பிரபஞ்சத்தின் விகாசமாக இருக்கிறது. அது அறிவு ரீதியிலான புரிதல்களுக்கு அப்பாற்பட்ட ஒரு பூடக நிலையாக உணர்ந்தேன். பொது விதி என்பது இந்த பிரபஞ்சத்தில் என்றுமே மாறாதது. ஆனால் அதனூடே பயணப்படும் ஒரு சிக்கலான நினைவோட்டத்தை ஏகமாக எல்லாவற்றிலும் ஊடாடி, காலம் என்பதை சுழி நிலைக்குக் கொண்டு வந்து அதன் மூலம் முக்காலத்தையும் அதாவது நாம் உணரும் இறந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் என்றில்லாமல் ஒட்டு மொத்த தரிசனமாக மாற்றும் இது ஒரு அதிசய நிகழ்வாக, இயற்கையின் வேறு பரிமாணங்களின் துருப்புச் சீட்டாகக் கண்டு கொண்டேன். இவை நம்பிக்கை சார்ந்த விஷயங்களுக்கும் அப்பால் உள்ள, அதாவது நம்பிக்கை என்பது ஒருவகையில் அதன் சாத்தியத்தின் உட்கிடையானதாகவே நினைக்கிறேன். அதுவும் ஒரு இருப்புதான். அது அதீதக் கற்பனைகளுக்கு, பயங்களுக்கு வெகு தொலைவில் இருக்கிறது. இதை எந்த மதமும் உள்ளபடியே வெளிப்படுத்தவில்லை என்றே நினைக்கிறேன். அவை இயல்பு வாழ்வின் ஸ்திரத் தன்மையையும் நிச்சயமின்மையின் பலத்திலும் மனிதனைப் பழக்கப்படவே எத்தனிக்கின்றன. நான் வெகு தொலைவு வந்துவிட்டேன். இதுவும் ஒரு நினைவு தப்பிய, சுழியாக்கப்பட்ட காலத்தின் ஒரு சொட்டாகவும் இருக்கலாம்.

13. உங்கள் இரண்டு தொகுப்புகளிலும் வண்ணங்களின் பங்களிப்பு முக்கிய இடம் வகிக்கிறது. பிரத்யேக காரணம் ஏதாவது?

வண்ணங்கள் என்பவை இந்த பிரபஞ்சத்தில் தற்காலிகமானவை. அவை ஒரு எல்லைக்கு உட்பட்டே தோன்றுகின்றன. மற்றபடி இருள் என்று சொல்லக்கூடிய ஒளியற்ற தன்மையே நிரந்தரமானது. ஒளியற்ற தன்மையிலிருந்து தோன்றி, மீண்டும் அந்தத் தன்மையை அடைவதையே இருப்பு கொண்டிருக்கிறது. இதில் வெளி என்பது ஒரு குறுக்குக் கோடு. அந்த கோடுதான் பிரபஞ்ச இருப்பாகிறது. ஆசீவகத்தில் ஒரு மனிதனின் படிநிலைகளை, அல்லது அவனடைந்த தத்துவ படிகளை அவனது உடையின் வண்ணத்தில் வெளிப்படுத்துகின்றனர். முதல் நிலையில் இருப்பவனுக்கு வழங்கப்படுவது கருப்பு உடை. இது இந்த பிரபஞ்சத்தின் இயல்புநிலை. அதாவது ஏதுமற்று இருப்பது. அவ்வாறு அவன் தன்னை உணரும் ஒவ்வொரு படிநிலையும் ஒவ்வொரு வண்ணமாக தோன்றுவது அறிதல் நிலையின் வண்ணச் சேர்க்கை ஒரு கட்டத்தில் வெள்ளொளியாக வீசித்தெறிப்பது அறிவு நிலையின் உச்சம். அது இயற்கைக்கு முற்றிலும் எதிரானதாக இருக்கிறது. ஆனால் இந்தப் பயணம்தான் அதாவது இன்மையிலிருந்து இருத்தலுக்கும், இருத்தலிலிருந்து இன்மைக்கும் செல்வது நீண்ட அலைவரிசையின் ஏற்ற இறக்க மடிப்புகளாக இருக்கிறன. அந்த அலை வரிசையின் பயணம்தான் என்ன? அதைக் கண்டடைவதே மீண்டும் அந்த இருள் நிலையை அடைவதுதானோ? இது வானவில்லின் ஏழு வண்ணங்களைப்போல் மிக வசீகரமானது. எனது ஆரம்ப பள்ளிக் கல்வியில் தமிழாசிரியர் மு.ப. மாரிமுத்து அவர்கள் அருட்பெரும் ஜோதி வழி நடப்பவர். தினமும் அந்தப் பாடலையும் வள்ளலாரின் ஒளி பொருந்திய உடல் பற்றிய கதைகளையும் சொல்லிக்கொண்டே இருப்பார். அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

14. முதல் தொகுப்பான வண்ணச்சிதைவு அதிகமும் பௌத்த கூறுகளுடன் அமைந்த விதம்?

மெய்மையை நாடும் ஒரு அறிவு தன்னிச்சையாக நாடுவது பெளத்தமாகத்தான் இருக்கும். பெளத்தம் மெய்யறிவை போற்றுகிறது. இது இந்த பிரபஞ்சத்தின் ஆகச் சிறந்த கற்பனா சக்தியை இறைவன் என்று ஏற்றுக் கொள்வதில்லை. அது ஒருவகையில் நாத்திக வாதமாக இருந்தாலும் அதுவே இயற்கையின் இயல்பு நிலையாக, மெய்ம்மையாக இருக்கிறது. இந்தப் புள்ளியே என்னை பெளத்தவாதியாக எனது படைப்பு வழியாகக் காட்டக்கூடும். மனிதன் அடையும் ஞானோதயம் அவனது வாழ்நாளில் ஒருமுறை நிகழ்ந்துவிடுகிறது. அந்த ஒற்றைப் பிம்பத்தை அவன் வாழ்நாள் முழுவதும் தன் வழியாக எல்லாவற்றிற்கும் பிரதியாக்குகிறான். அதன் வழியாகவே இந்தப் புற உலகத்தையும் அக உலகத்தையும் கற்பனை செய்து கொள்கிறான். ஓர் உயிரியின் உச்சபட்ச சாத்தியமே இதுதான். தவிரவும் எனது சிறார் பருவத்தில் அம்பேத்கரின் வாழ்வை தெரிந்து கொள்ளும் ஒரு வாய்ப்பு அமைந்தது. அவர் வழியாக நான் புத்தனை கண்டடைந்தேன். தன்னியல்பாக நிகழும் ஒரு சம்பவமாக இல்லாமல், இதில் ஏதோ ஒரு கண்ணி இருப்பதாக இப்போது தோன்றுகிறது. இயற்கையில் எல்லாவற்றிலும் ஒரு திட்டம் இருக்கிறது. இது மறுபிறவி சம்பவங்கள்போல காலம் ஒரு சுழியமாகி கருந்துளையில் இருக்கும் காலமற்ற ஒரு ஆதிநிலையில் நிற்கும் ஒரு எண்ணமாக மிதக்கிறது. உதாரணமாக ஸ்டீபன் ஹாக்கிங்கின் amyotrophic lateral sclerosis (ALS) என்ற நரம்பியல் நோயின் பின்னால் இருப்பது இவ்வாறான ஒரு பயன்பாட்டு நிலையா? அல்லது அது மெய்ம்மையின் ஒரு கொடூரத் தன்மையா? தன்னை வெளிப்படுத்திக் கொள்ள மறுக்கும் உள்ளியல்பா என்பதுபோல பல கேள்விகள்.

15. நீங்கள் பிறந்து வளர்ந்த கிராமம், தற்போது வசிக்கும் நகர நிலவெளிகளில் பௌத்தத்தின் தாக்கம் கிடைக்கப் பெற்றீர்களா?

நான் பிறந்த நீர்முள்ளிக்குட்டை கிராமத்தில் எனது சிறுவயதில் ஒரு முதியவர் அருகிருக்கும் கோதுமலையில் மாயவன் என்பவர் சித்தராக இருப்பதாகவும் அவர் வழியாக அவர் உடல் நீல நிறமாக மாறி ஐந்துபேர் தூக்கக்கூடிய மதுரை வீரன் கோவில் வேலைப் பிடுங்கிக் கொண்டு ஊரையே ஒரு சுற்று வருவார். பிறகு அவர் சொல்லும் வாக்கு அந்த ஊரின் நல்லதை நோக்கிய ஒரு பாடலாக இருக்கும். இந்த வகையாக நான் சிறு வயதிலிருந்தே இது போன்ற அதிசயங்களின் மெய்ம்மையை நோக்கி நகர ஏதோ ஒன்று உந்துதலாக இருந்தது. பிறகு சேலம் வந்தவுடன் சி. மணியுடனான நட்பில் பெளத்த புரிதலுக்கு வந்தேன். உள்ளூற இயங்கிய எனது கண்டடைதலின் இறுதி நிலை என்பதே பெளத்தமாக இருக்கலாம்.

16. நண்பர் வே. பாபுவுடனான உங்கள் நட்பை 'காகங்களின் புணர்ச்சி போல' என கூறி பெருமிதம் அடைந்த உங்களுக்கு பாபுவின் மரணமும் அதையொட்டி நடந்த கொதிநிலையும் என்ன மாதிரியான பாதிப்பை உண்டு

பாபுவை முதலில் கார்த்திகேயனுடன்தான் பார்த்தேன். அப்போது நாங்கள் இருவரும் வேட்கை சிற்றிதழின் ஆசிரியர் குழுவில் இருந்தோம். எனக்கும் பாபுக்குமான தனி நட்பு மெல்ல வளர்ந்தது. அது தக்கை சிற்றிதழ் வரை வந்தது. பாபுவின் தக்கையிலான மனது கவிதையிலிருந்துதான் சி. மணி மூலமாக தக்கை என்ற பெயர் உருவானது. தக்கை வடிவமைப்பிலும் அதன் படைப்புகள் விஷயத்திலும் நான் சுதந்திரமாகச் செயல்பட்டேன். எங்கள் சிற்றிதழில் நாங்கள் எழுதிக்கொள்வதில்லை என்ற உறுதிப்பாட்டையும் மீறி, உள்ளடக்கம் கருதி சினிமா பற்றிய ஒரு நேர்காணலை நான் புனைபெயரில் மொழிபெயர்த்து வெளியிட்டேன். சி. மணி நீண்ட நாட்களுக்குப் பிறகு தான் எழுதிய கவிதைகளையும் மொழிபெயர்த்த ஹைகூ கவிதைகளையும் வெளியிட என்னிடம் தந்தார். பிரபஞ்சன் தக்கைக்கான மக்கள் தொலைக்காட்சி அறிமுகத்தில் சி. மணி படைப்புகள் அதில் வந்திருப்பதைக் குறிப்பிட்டே அறிமுகப்படுத்தினார். ஆசிரியர் பெயர்களை ஏறெடுக்கவும் இல்லை. கண்டு கொள்ளவுமில்லை. இதில் எனக்கு மிகுந்த சந்தோஷம் ஏற்பட்டது. சி. மணியை மீண்டும் ஒரு சிறுபத்திரிக்கை வழியாக தரிசிக்கச் செய்துவிட்டோம் என்ற பெருமிதம் பொங்கியது. பின்னால் தக்கை பதிப்பகமும் உருவானது. பிரகாசமான இந்த நடப்புத் தொடர் சட்டென முடிந்துபோனது. பாபு நிரந்தரமாக தனது செல்போனை அணைத்து வைத்துவிட்டான். தக்கை நான்காவது இதழ் வந்ததை நண்பர்கள் சொல்லி கேள்விப்பட்டேன். ஆசிரியர் பெயரில் எனது பெயர் இருந்தது. நேரில் சந்திக்கும்போது ஏன் பாபு என்றேன். வீட்டிற்கு வருகிறேன் பேசிக்கொள்ளலாம் என்றான். வரவே இல்லை. பாபுவைப் பற்றிய பொதுக் கருத்தே அவனுக்கான எனது கருத்தும். இயற்கையிடம் ஏமந்துபோன ஒரு நண்பனை மிக ஏக்கத்துடன் அன்று பார்த்தேன். எல்லா ஆன்மாவும் ஒன்றல்ல. இயற்கையின் நுண்மையை தன்மேல் பிரதிபலிக்கச் செய்வது அவ்வளவு எளிதும் அல்ல.

17. எழுதிய கவிதைகளுக்கும் எழுதப் போகும் கவிதைகளுக்கும் நடுவில் நீங்கள் யார்?

படைப்பாளி தன் மீது திணிக்கப்பட்ட ஒரு மனநிறைவை அல்லது அப்படிப்பட்ட சீர்கேட்டினுள் தான் சிக்கிக் கொள்ளாமலிருக்க தப்பித்துக் கொள்ளும் யாரோ ஒருவனாக இருக்கிறான். எல்லாக் கவிதைகளும் வேறு ஒரு கவிதையின் மாறிய வடிவமாகத்தான் இருக்க முடியும். குறிப்பாக எதிர்நிலையாக அல்லது நேர்நிலையாக. ஒரு வைரஸ்ஸைப்போல தனது கட்டமைப்பை மாற்றிக் கொண்டே இருக்கும் தன்மையினால் அது எப்போதும் எதிர்பொருட்களை தவிர்க்கப் பார்ப்பது அதன் உயிர்த்தன்மையின் நிலைப்பை தக்க வைத்திருப்பதற்கு ஒப்பாகும் இது.

18. மனித, இயற்கை இயல்புகளின் கனபரிமாணம் உங்கள் வரிகளில் புதிய நோக்கில் அணுகப்படுகிறது. இதில் அரசியலும் பேசப்படுகிறது. எனில் உங்கள் லட்சியம்தான் என்ன?

லட்சிய வாதம் என்ற ஒன்று எப்போதும் இல்லை. ஆழ்மனம், அமுக்கப்பட்ட உள்ளுணர்வு, பதிலீடு செய்யப்பட்ட உணர்வுகள் என தத்துவார்த்த ரீதியில் மனம் செயல்படும் உள் செயல்பாடுகளின் அபூர்வ ஒருங்கமைவாகவே இவற்றைப் புரிந்து கொள்கிறேன். மனிதன் இயற்கையின் ஓர் அதீதக் கற்பனை. படைப்பின் உச்சம் தொடும் சகலமும் தன்னுள் அந்த கனபரிமாண வெளிப்பாட்டையும் தானே அடைந்து கொள்ளும் ஒரு திறனாகவே இதைப் பார்க்கிறேன். இரகசியங்களை மொழியினூடாக மர்மங்களாக வெளிக்காட்டிக் கொள்ள இயற்கையின் தேர்வே நான்.

19. கருந்துளையை அதிகம் உங்கள் கவிதைகளில் எழுதி உள்ளீர்கள். கருந்துளை உங்களுக்கு  அவ்வளவு முக்கியமானதா?

மர்மங்களின்பால் எனக்குள்ள ஈர்ப்பே கருந்துளையையும் பெருவெடிப்பையும் முக்கியமானதாக கருதுகிறேன். பெருவெடிப்பின் கணமும் கருந்துளையின் உள் நசுக்கமும் காலம், வெளி இரண்டையும் இல்லாமலாக்குகிறது. அல்லது இருப்புக்குள் சாத்தியப்படுத்துகிறது. இரண்டுமே இருத்தல் இன்மையைப் பேசுகின்றன. இங்கேதான் பெளத்தம் நுணுக்கம் மிக்க, சிக்கலான உளவியல், தியான உத்திகள், being & knowing மூலம் அதி இயற்பியல் மேலும் போற்றத்தக்க அறவியல் நெறியையும் வெளிக்காட்டுகிறது. இது இந்த பிரபஞ்சம் எவ்வாறு தன்னியல்பை கொண்டியங்குகிறதோ அதேபோல இந்த இயற்கையின் அதி அற்புத கற்பனையான மனிதனே இதை புரிந்து கொள்ளவும் தன்வசப்படுத்தவும் தக்கவனாக இருப்பதே, சி. மணி போன்ற அதிமனிதர்களை சாத்தியப்படுத்துவதாலேதான்.

20. வேறு எந்தக் காலத்திலும் இல்லாமல் இந்தக் காலத்தில் யாரும் யாரையும் நேசிக்க, நேசிக்கப்பட கட்டாயம் இல்லை என்றான சூழ்நிலையில் கவிதையற்ற கவிதையைத் தானே எழுதுகிறோம்?

தொலைந்துபோன ஒரு மனித முழுமையை நினைக்கும் நினைவேக்கமே இது. எஞ்சியிருக்கும் ஒரு தங்கலால் யோசிக்கும் சிக்கலான கேள்வி இது. கவிதை எதையும் தொடர்ந்து வற்புறுத்துவதில்லை. அதேபோல கவிதைக்கு எந்த அறமும் இல்லை. அது மனிதனைச் சார்ந்தது. கவிதையற்ற கவிதை என்பதே இங்கு கவிதையாக இருக்கிறது. 19 ம் நூற்றாண்டு வரை புத்தரின் தன்மையில் அதாவது ஏசுவுக்கு முன்னமே இத்தகைய அதி நவீன சிந்தனையை, ஞானோதயத்தை அடைந்த புத்தர் சராசரி மனிதனாகத்தான் மாண்டுபோனார். ஆனால் அவர் மானுடத்தைத் தனது சொந்த வாழ்க்கையால் மறுபரிசீலனை செய்கிறார். போதனைகளை தனது சொந்த வாழ்விலிருந்தே தொடங்குகிறார். அவரது வீடுபேறு அடைதல் அவரது காலத்திற்கு மட்டுமல்லாமல் இந்த சிதைவுற்ற நியூக்கிளியர் மனிதன்வரை சகலருக்குமானதாகவே இருக்கிறது. தனிமனித விடுபடலையே அவர் முன்னிருத்துகிறார். தன்னுடைய வீடுபேற்றையும் தன்னை முன்னிருத்தி தனக்கான விடுதலையையே பொதுமைப்படுத்துகிறார். இவ்வுலகம் உய்ய அவர் அடுத்தடுத்த பிறவி எடுத்து புத்தராகவே இம்மானுடம் பயனுற அவதரிக்காமல் தன்னை விடுவித்துக் கொள்வதிலேயே அதன் முக்கியத்தை வலியுறுத்துகிறார். இது ஒரு விதத்தில் பிறப்பின் இரகசியம் என்பது மனித புரிதல் எல்லைகளுக்கு அப்பாற்பட்டதாக அவர் உணர்ந்துவிட்டதையே காட்டுகிறது. அறம் என்ற ஒன்று தன் உட்பொருளை மாற்றிக் கொண்டே இருக்கிறது. காலந்தோரும் மாறும் அதன் கருத்தாக்கம் ஒரு நினைவேக்கமாக இருப்பதைத் தவிர்க்கவே புத்தர் வீடுபேறடைந்தார் என்றும் கருதியும் கொள்ளலாம்.


21. சினிமா கட்டுரைகள் எழுதுவதன் ஆர்வத்தை எப்படி அடைந்தீர்கள்?

காட்சி ஊடகமான சினிமாவானது பிம்பங்களின் கட்டமைப்பின் உருவான நமது ஆழ்மன எண்ண ஓட்டத்தை எளிதில் பாதிக்கக் கூடியது. இடையீடு இல்லாத நம் நனவிலி மனத்துள் நேரடியாகச் செலுத்தப்படும் இத்தகைய காட்சிகளின் தொடர் அழுத்தமானது இடையீடு அற்ற நேரடி தொடர்பின் மிக வலுவான பாதிப்பை நம்முள் ஏற்படுத்தும் பயனை நாம் அடைவதே இல்லை. தார்க்கோஸ்கி, அகிரோகுரோசாவோ, அந்தோனின் ஆர்த்தோ போன்றவர்கள் தங்கள் படைப்புகளை இத்தகைய இடையீடற்ற தன்மைகளை மிக நேர்த்தியாகப் பயன்படுத்திக் கொண்டனர். அத்தகைய தன்மையை நம் சினிமா அடைய வேண்டும். வெறும் கதை சொல்லல் முறையை வைத்து மட்டும் எத்தகைய சாதனையையும் செய்துவிட முடியாது என்பதால் அத்தகையப் படைப்புகள் பற்றிய கட்டுரைகளை எழுதவும் மொழிபெயர்க்கவும் செய்தேன்.

22. உங்களுக்கு பழந்தமிழ் இலக்கியப் பரிச்சயம் உண்டா?

நேரடியான பரிச்சயம் எனக்கு இல்லை. ஆனால் சி. மணி தனக்குப் பிடித்த பழந்தமிழ் கவிதைகளைத் தொகுத்து குறிப்புகளுடன் எனக்குத் தந்தார். அதுவும் அடிக்கடி அவற்றைப் பற்றி உரையாடவும் செய்தார். அது ஓர் அலாதியான அனுபவம். நேரம் கிடைக்கும்போது ஒரு வேலையாக அதை எடுத்துப் படிக்கவேண்டும் எனது நெடுநாள் அவா.

∅∅∅∅∅∅∅∅∅∅∅∅∅∅∅∅∅∅∅∅∅

(கவிஞர் ஸ்ரீசங்கருக்கும், அகச்சேரனுக்கும் நன்றி.)

∅∅∅∅∅∅∅∅∅∅∅∅∅∅∅∅∅∅∅∅∅