Monday, February 27, 2023

அசகவதாளம் என்னும் மகத்தான விடுபடல்

அசகவதாளம் என்னும் மகத்தான விடுபடல்

- சாகிப்கிரான்


 "அனுபவ சுவாரஸ்யம், ஓசையின் ஒழுங்கற்ற தன்மையில் இடையறாது நிகழும் முடிவில்லாத இசையின் சாத்தியப்பாடுகளின் வழியே நிகழ்த்திக் கொள்ளும் துல்லிய விடுபடலே கவிதையாக உணரப்படுகிறது."


தொகுப்பில் உள்ள ஒரு சில கவிதைகளை மட்டும் விரிவாக வாசிப்பதன் மூலமாக இத்தொகுப்பிற்கான முழுமையான ஒரு பார்வையை அடைய முடியும் என்று நம்புகிறேன். மேலும் எல்லாக் கவிதைகளையும் எடுத்தாள்வது என்பது பொழிப்புரைபோல அமைந்துவிடும். வாசகன் தனக்கான ஒரு நோக்கில் கவிதைகளை விடுவித்துக் கொள்ளச் செய்வதே முழுமையான ஒரு வாசிப்பனுபவமாக அமையும். ஆனால் இக்கட்டுரை ரசனை சார்ந்தில்லாமல், பகுப்பாய்வு நோக்கியதாக இருப்பதால், இது எனது தனிப்பட்ட கருத்தாகக் கருதிக் கொள்ள தொகுப்பு இடம் தந்ததை வியக்காமல் இருக்க முடியாது.


கவிதையை முதலில் வாசிப்போம்.


எடிசன் புன்னகைக்கிறார்

********************************


நள்ளென் யாமத்தில் உறக்கம் கலைந்து தட்டுத்தடுமாறி சுவரில் கைவைத்துத் தடவியபடி அறையின் விளக்கை எரியவைக்க முயல்பவனிடம்


அந்தரத்தில் தொங்கும் ஒளிக்கூடையானது 

அந்த நேரத்தில் போய்


சரி தவறு என்றெல்லாம் கணக்குப் பார்ப்பதில்லை இதுபோலான இக்கட்டான சூழ்நிலையிலெல்லாம்

போனால் போகட்டுமென

தவறான சுவிட்ச்சுக்கும் ஒளிர்ந்துவிடும்

அதுதான்

தாட்சண்யம் மிக்கதோர் விளக்கு.

*


பெரு. விஷ்ணுகுமாரின் கவிதைகள் என்றில்லை, நவீன கவிதை சுவாரஸ்யத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்டவைகளாகவே பெரும்பாலும் இருப்பதான ஒரு பார்வையைத் தருவதும், திடுக்கிடச் செய்யும் அதன் உத்தி, அல்லது அதன் சாத்தியப்பாடு மிகப் புதியதாக இருக்கிறது. தற்காலக் கவிதையின் போக்கு தத்துவங்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டதாக அறிவித்துக் கொள்கின்றது. அதைத் தாண்டி, மறுக்கும் கவிதையின் கச்சிதத் தன்மை, கட்டமைக்கப்பட்ட அறத்திற்கான நையாண்டி, எளிமையாக இருந்தாலும் அதன் தெரிவுகளும் செயல்பாடுகளும் ஒரு மையமற்ற பிரக்ஞையைப் பிரதானப்படுத்தும்  தன்மை, பிடி கொடுக்காத அல்லது எளிதில் புரிந்து கொள்ள முடியாத மதிப்பீடுகள், இயல்பிலிருந்து தன்னை முற்றிலுமாக பீய்த்துக் கொள்ளும் தன்மை என நவீன கவிதை தன்னை இப்படியாகவே நிறுவ முயலுகிறது.


நவீன கவிதையின் பிரதான நோக்கமே, தத்துவத்திலிருந்து விடுவித்துக் கொள்வதுதான் என்றாலும் உண்மையில் எந்த ஒரு படைப்பும் தத்துவத்திலிருந்து தன்னை முற்றிலும் விடுவித்துக் கொள்ளும் இயல்புத் தன்மையைக் கொண்டிருக்கிறதா என்றால் இல்லை என்றே சொல்லலாம். தத்துவத்தின் தர்க்கத்தின் மூலமாகவே நவீன கவிதையை முழுமையாக, தனிப்பட்ட கவிதை என்றாலும் ஒட்டு மொத்தத் தொகுப்பானாலும் அதன் Core Thoughtயை, அல்லது அதன் மையத்தை இத்தகைய உத்தியைக் கொண்டே ஒருங்கிணைத்துப் புரிந்து கொள்ள முடிகிறது. கவிதை தர்க்கத்திற்கு அப்பாற்பட்டது என்பதை, தத்துவத்தின் அறிவு சார்ந்த உபாயத்துடன் அனுபவத்தில் உள்ள வெவ்வேறு வகையான உள் பார்வையால் பூடகமான தர்க்கத்தை முன்னெடுப்பதன் மூலமே, ஒன்று உடன்பட்டோ, அல்லது எதிர்வினைப்பட்டோ தன்னுள் செயல்படும் ஞானத்தை,  அது புறக்கணிக்கத்தக்கதாக இருந்தாலும், அதுவே அந்தப் படைப்பின் அடிப்படையாகிறது. தத்துவத்திலிருந்து வெளியேறுவதும் வகைப்படுத்தப்படாத ஒரு தத்துவமே.


கருத்து முதல்வாதத்தின் தந்தை என்று சொல்லப்படும் பிளேட்டோவின் காலம், கிருஸ்து பிறப்பதற்கு சுமார் 400 வருடங்களுக்கு முன்னால். இவர் தனது குருவான சாக்ரடீஸிடமிருந்து "மனிதனின் அறிவுதான் நற்பண்பு" என்ற மையச் சரடிலிருந்து "அறிவு" என்பதை புரிந்து கொள்ள முயல்கிறார். எது "அறிவு" என்ற கேள்விக்கு ஒருவன் வருகிறான் என்றால் அவன் முதலில் எதுவெல்லாம் "அறிவு" இல்லை என்ற நிலைக்கு வர வேண்டும். "காணக்கூடிய" அல்லது "உணரக்கூடிய" எதுவும் அறிவு இல்லை என்கிறார்.  "அபிப்பிராயம்" எப்போதும் அறிவாகக் கொள்ள முடிவதில்லை என்கிறார். அப்படி என்றால் அறிவு என்பதை எதைக் கொண்டு புரிந்து கொள்வது? இங்கே அறிவு என்பதை மனித அடிப்படை பண்பாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஓரறிவு உயிரி, ஈரறிவு உயிரி போல நாம் ஐந்தறிவு உயிரி. மனிதன் தன்னையும் தன்னைச் சுற்றியுள்ள சகலத்தையும் இதன் வழியாகவே அர்த்தப்படுத்திக் கொள்கிறான். இதன் அடுத்தக் கட்டமே மெய்யறிவு.


"கருத்துருக்களின் அறிவு வழியாக அடையப்படும் அறிவே, உண்மையான அறிவு" என்கிறார் பிளேட்டோ. இங்கே கருத்துருக்கள் என்பவை Concepts என வரையறுக்கிறார். அவை நிரந்தரமானவை, பிரபஞ்சத்தின் ஒட்டு மொத்த அறிவின் தனிப்பட்ட கூறு. எடுத்துக்காட்டாக, பூ என்ற (concept) கருத்துருவை எடுத்துக் கொண்டால், அது முல்லை, மல்லிகை, ரோஜா, தாமரை என தன்மைகளினாலும், வடிவ அமைப்புகளாலும் வேறுபட்டாலும் "பூ" என்ற பொதுத் தன்மையை நாம் அவைகளைப் பூ என்ற தன்னியல்பு நிலையின் புத்தியிலேயே உணர்ந்தறிந்து கொள்கிறோம். பூ என்ற கருத்துருவில் அர்த்தப்படுத்தும் தன்மையே உண்மையான அறிவு என்கிறார்.  இது பிரபஞ்சத்தில் உள்ள அத்தனைக்கும் பொருந்தும். இது நமது மனித மனத்தின் அடியாழங்களில் புரிதலின் அடிப்படைக் கூறாக இருக்கிறது. இதுவே புரிதல் என்ற செயல்பாட்டின் தோற்றப்பாடு. இந்தத் தோற்றப்பாட்டிலிருந்துதான் இலக்கியம் மனோரஞ்சிதத்தை பூ என்று குறியீடாக மாற்றுகிறது. மிகக் குறைந்த பொருத்தப்பாட்டில் அது அவ்வாறு புரிந்து கொள்ளப்படுவதே நம்முடைய நிலைப்பாடுகள் கருத்துருக்களின் சாயல்களே. அல்லது பிரதிபலிப்புகளே. ஏனொன்றால் மனித அறிவு என்பது உண்மையைத் தேடும் ஒன்று. அது அவ்வாறு கண்டடைவது 

மொழியை என்றில்லாமல் நம் நினைப்பே இத்தகைய தோற்றப்பாட்டின் உள் நிகழ்வால்தான் ஒன்றை புரிந்து கொள்கிறது. இதை மொழியியலார் தங்கள் வழியாகக் கட்டமைப்புக்குள் வகைப்படுத்துகின்றனர். ஆனால் இத்தகைய தத்துவத்திற்கு பின்னால்தான் பிரக்ஞை என்ற ஒன்று தன்னை உணர்ந்து கொள்கிறது. இதில் ஏதாவது சிக்கல் என்றால் மனித புரிதல் அபத்தமாக, ஒரு பைத்திய நிலையாக மாறிவிடுகிறது.


பெரு. விஷ்ணுகுமாரின், "அசகவதாளம்" கவிதைத் தொகுப்பிலிருக்கும் பெரும்பாலான கவிதைகள் இத்தகைய கருத்துருக்களை உடைப்பதன் விளைவாக புரிதலின் புதிய சாத்தியங்களுக்குக் கவிதைகளைக் கொண்டு செல்கின்றது. இவ்வாறே இந்தத் தொகுப்பினைத் திறந்து கொள்ள முடியும் என்று நினைக்கிறேன்.


"எடிசன் புன்னகைக்கிறார்" கவிதையில், "தாட்சண்யம் மிக்கதோர் விளக்கு", பற்றி வருகிறது.


இக்கவிதையில் மின் விளக்கின் கருத்துருவை கவிதைச் சிதைக்கிறது. அதாவது மின் விளக்கு என்பது அதற்குரிய பொத்தானை அழுத்தினால்தான் எரியும் என்பது கருத்துரு. ஆனால் இக்கவிதையில் வரும் விளக்கானது தாட்சண்யம் மிக்க ஒன்றாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் எப்போதைக்குமான இப்பிரபஞ்சத்தின் கருத்துருவின் வினைத் திறனை உடைப்பதன் வழியாக புதிய உள் அர்த்தத் திறப்புகளுக்கு வகை செய்கிறது.


நவீன கவிதை என்பது வழக்கமான கவிதைக்கான கூறுகளிலிருந்து முற்றிலும் தன்னை விடுவித்துக் கொண்டுவிட்டது என்பதை பொதுவான புதுக் கவிதை புரிதலாகக் கொள்வதற்கான நவீன வரையறையாகக் கொண்டோமானால், அதன் தர்க்கப் பூர்வமான சிந்தனைக்கும் ஓரிடம் உண்டு என்பது இக்கவிதை மறுக்கிறது.


இயற்பியலின்படி ஒரு செயலுக்கான பின் விளைவானது இந்த பிரபஞ்சத்தில் மாறாத தன்மை கொண்டதாக இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட சுட்சைத் தட்டினால்தான் அந்தக் குறிப்பிட்ட கருவி இயங்கும், அதாவது செயல்பாட்டின் பிரக்ஞையானது மனித அனுபவங்களின் செயல்களுடைய பின் விளைவுகளின் விழிப்புணர்வு மனோபாவத்தைத் தேவையாக்குகிறது. ஆனால் கவிதையில் கவிஞர், தவறான சுட்சுக்கு எரிந்துவிடும் ஓர் அற்புதத்தை முன் வைக்கிறார். அப்படி ஓர் அவசியத் தூண்டலின் நியதி என்ன என்ற புதிய மனோபாவத்திற்கு வாசகனைக் கொண்டு செல்வது ஏதோ எதேச்சையாகவோ, அதிசயத்திற்கோ அமைந்துவிட்ட ஒன்று இல்லை. இதன் வழியாகவே தொகுப்பை நாம் திறந்து கொள்ள வேண்டும்.


அதாவது இங்கே நிகழ்தகவின் அசாத்தியம் மூலமாக அறிவியலின் ஆன்மமற்ற தன்மையை, அறமுடைய ஒரு நிகழ்வாக மாற்றுவதன் மூலம், ஓர் அணுகுண்டை பிறந்த நாள் "பாப்பர்ஸாக", வெடிக்க வைக்கும் குதூகலமாக்குகிறது. இயந்தர மயமாக்கப்பட்ட உலகில், நிச்சயமாக்கப்பட அழிவை, ஆக்கமாக மாற்றுகிறது. மனிதனுக்கான இயற்கையின் அசலான கனிவன்பாக மாற்றுகிறது. இங்கே மனித பிறவிக்கு மட்டுமே அறமென்ற ஒன்று சதா வாழ்வை அர்த்தப்படுத்திக் கொண்டிருக்கும் சூழலில், கனிவன்பை மாறாத கருத்துருவை உடைப்பதன் வாயிலாக, பிரபஞ்சத்தின் விதியை மறுபரிசீலனை செய்கிறது. அதை அதன் பாரபட்சமற்ற தன்மையிலிருந்து கனிவன்பின் சாத்தியத்திற்கு கற்பனை செய்கிறது. அல்லது வற்புறுத்துகிறது. இவ்வாறே ஒரு படைப்பாளி தனக்கான அல்லது இந்த உயிர்த் தொகுப்புக்கான உலகைப் படைக்கிறான். 


இந்தக் கவிதையில் வேறு சில சாத்தியங்களும் இருக்கக்கூடும். அது ஒரு "ஸ்மார்ட் பல்ப்பாக" இருக்கும் பட்சத்தில், அசைவறிதல் (Motion Detection) என்ற தொழில்நுட்பத்தின் மூலமாகத் தானாகவே மனித நடமாட்டத்தை வைத்து அந்த பல்ப்பு எரியக்கூடும். ஆனால் தூக்கத்தின் விளிம்பில் பழைய ஞாபகத்தில் சுட்ச் போர்ட்டைத் தடவியிருக்கலாம்.


அல்லது அந்த மனிதன் சுட்சைப் போடும் நிகழ்வுதகவானது முதல் தேர்வே சரியான சுட்சைக்கூட அது அழுத்தியிருக்கலாம்.

 

ஆனால் கவிதையின் பிரதான கதையாடலானது கருத்துருவை சிதைப்பதே அதை மேன்மையான ஒரு புரிதல் நிலைக்குக் கொண்டு செல்கிறது. அதற்குத் தக்கவாறு அந்தப் படைப்பின் சாராம்ச பூர்வமாக அமைத்துக் கொள்கிறது. இதுவே அதன் ஆகச் சிறந்த நற்பண்பாகக் கருத இடமளிக்கிறது.


தொகுப்பின் மற்றொரு கவிதையான, 


புகழ்பெற்ற வாள்

********************

வயது முதிர்ந்த வாளொன்று


நடை திணறிச் சுவரோடு சாய்ந்து நிற்கிறது முன்பெல்லாம் வேண்டாமென்றாலும் கைப்பிடித்துக்

கூட்டிப்போக

அரசனே காத்திருப்பான்


ஆசைதீரப் போர்க்களம் கண்டு சலித்துப்போன இந்நாள்வரை அதன் கூர் நுனியோடு மோதுவதற்கு யாருக்கும் துணிவில்லை இவ்வுலகில் தெரியும் யாவும் தனித்தனித் துண்டுகளால்

ஆனதெனக்

கண்டறிந்த வாள் அது


அப்பேர்பட்ட அதன் முன்னே "எங்கே தைரியமிருந்தால் என்னை

இரண்டாக்கு" என்கிறது ஒரு செங்குளவி கைப்பிடிச் சுருங்கிப்போன வாளிற்கோ சிரிப்பு தாங்கவில்லை எல்லாம் தன் நேரமென ஒதுங்கி நின்றாலும் விடாமல் மோதி உசுப்பேற்றும் குளவி அதன் காலைத் தடுக்கி நிலைகுலையச்

செய்கிறது


தொடர்ந்து அதன் தாக்குதலைச் சமாளிக்க முடியாத அப்புகழ் பெற்ற வாள்


ஒருகட்டத்தில் கீழே சாய்ந்தபோது கேட்க வேண்டிய இரும்பொலிக்குப் பதிலாக வேறேதோ சத்தம் கேட்டது


இப்போது இதில் உண்டான அதிர்ச்சியைவிட இத்தனை நாட்களாக அந்த அட்டையால் தலை துண்டான வீரர்களெல்லாம்

இன்று வசமாய் மாட்டிக்கொண்டனர்.

*************************


இக்கவிதையிலும் வாள் என்ற தன்மையின் கருத்துரு சிதைக்கப்பட்டு, கவிதை திறந்து கொள்ளும் வெளியானது வீரத்தின் கருத்துருவையும் கேள்விக்குள்ளாக்குகிறது. 


பல போர்க் களங்களைக் கண்ட புகழ் மிக்க வாளானது தனது முதுமைக் காலத்தில் வெறுமனே மூலையில் சாய்த்து வைக்கப்பட்டு, ஒரு குளவியின் சவாலுக்கு அழைக்கப்படுகிறது. அது குளவியின் அறியாமையைக் கண்டு சிரிக்கிறது. ஆனால் தீரம் மிக்க குளவி அந்த வாளை தன் இடையறாத முயற்சியினால் சாய்த்து விடுகிறது. அப்போது ஓர் அதிசயம் நிகழ்கிறது. அது அட்டைக் கத்தியென்பது அதன் சத்தத்தில் வெளிப்படுகிறது. இவ்வாறு வாளின் தன்மையின் கருத்துருவை உடைப்பதால் நிகழும் மறுபரிசீலனையாக இக்கவிதை இருக்கிறது. அதிகாரத்திற்கான உண்மையான இயல்பென்பதை சாதகமான திறன்களைப் புறக்கணித்து, அதன் முகமூடி ஒரு கணத்தில் கழற்றப்படுகிறது. அதே சமயம் பலியான வீரத்தின் ஏமாற்றம் அடைந்த தோற்றுவாயைக் கேள்விக்கு உள்ளாக்குகிறது. இது வரலாற்றை மறுபரிசீலனை செய்கிறது. வரலாற்றின் வெற்றி தோல்விகளை கிளரும் பேருரைகளை முன்னெடுக்கிறது. இதற்கான இலக்கிய உருவம் மிகச் சிக்கலானதலிருந்து கவனமிக்க சிந்தனைகளை உருவாக்க வைக்கிறது. இதுவே ஒரு படைப்பின் ஆகச் சிக்கலான கூரிய உள் பார்வையையும் அரசியல் தெளிவையும் நோக்கித் திருப்புகிறது. நகைச்சுவை வழியாக ஒரு கட்டியங்காரன் கூத்தின் தன்மையை பிரக்ஞையின் இடையீட்டில் மெய்ம்மைப்படுத்தும் செயலே இப்படைப்பின் இயல்பூக்கமாகிறது. இவ்வாறே பல்வேறு வழிகளில் கவிதை தன்னை அர்த்தப்படுத்திக் கொள்வது, அந்தக் கருத்துரு உடைப்பின் வழியாகவே நிகழ்கிறது.


அதே போல மற்றொரு கவிதை...


சரீரா

******


அவ்வளவு எளிதாய்ச் சொல்லிமாளாது


பசியாற்றிக்கொண்டிருக்கும் இந்த மக்காச்சோளத்தை வேகவைக்கப்பட்ட சிரமங்களை


அச்சமயம் இதைத் தூரத்திலிருந்து கண்டபோது அச்சு அசலாக ஒரு பிணமெரிக்கும் காட்சிபோல் இருந்ததாக நகைச்சுவைக்கின்றான் நண்பன்


மேலே தென்பட்ட வெளிச்சங்களைத் திருப்தியாகத் தற்சமயம் எரியும் சிதையில் எறியவிருக்கும்

தின்ற பின்பாக

சோளமற்ற உடலே,


உண்மையாகவே இனி நீ ஒன்றுக்கும் ஆகமாட்டாயா மனம் ஒப்பவில்லையே . . .


இப்போதும் ஒன்றும் தாமதமில்லை


யாருக்கும் தெரியாமல் ஒரே ஒருமுறை எனக்கு உன் பெருவிரலை அசைத்துக்காட்டு போதும் இதிலிருந்து உன்னை நான் காப்பாற்றுகிறேன்

******


இது மற்ற இரண்டு கவிதைகளைப் போலல்லாமல் அந்தக் கருத்துருவை மிக நுட்பமாகத் தன்னுள் விகசித்து, பின்னர் நொறுக்குவதன் மூலம், கவிதையை திடுக்கிட வைக்கும் அபூர்வ புறமியாக (Subject) மாற்றமடைய வைக்கிறார் கவிஞர்.


மால்களில் அமெரிகன் கார்ன் என்றும், மலை பிரதேசங்களிலும் மக்காச் சோளக் கருதை அனலில் வாட்டி விற்பதைப் பார்த்திருக்கலாம். கவிதை இப்படி ஒரு காட்சியைத்தான் பேசுகிறது. 


ஆனால் வெறும் மக்காச் சோளக் கருது என்ற கருத்துரு இங்கே நொறுக்கப்பட்டு கம்யூனிசத்திற்கு குறியீடாக மாற்றப்படுகிறது. கம்யூனிஸ்ட் கட்சியின் சின்னம் அரிவாள் - சுத்தியல்தான். அதே போல இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு சின்னம் அரிவாள் - சோளக் கதிர். இதை முற்றிலுமாக மக்கா சோளக் கருதாக மாற்றியமைக்கிறது கவிதையின் கருத்துரு. பிளேட்டோ சொல்வதைப்போல கருத்துருக்கள் இந்த பிரபஞ்சத்தின் மாறாத தன்மையுடையவை. அவற்றின் பிரதிபலிப்புதான் நாம் உணர்வது அல்லது பார்ப்பது. நிழல் ஒன்று எவ்வாறு பறக்கும் ஒரு பறவையாகக் காட்சிப்படுகிறதோ, அதைப்போல சோளக் கதிர், மக்காச் சோளக் கருதாக சிதைக்கப்படுகிறது. அதாவது சிதைவு என்பது ஒன்றிலிருந்து மற்றொன்றாகக் காணக்கிடைப்பது. 


முன்னாள் சோவியத் தலைவர் மிகையில் கோர்பச்சோவ், 1991 ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியம் "துரோகத்தால்" சின்னாபின்னமாகியது என்று 2016 ல் ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார். இந்த இடம்தான் கவிதை தன்னை உருமாற்றிக் கொள்ள தோதாக்குகிறது. 


அமெரிக்கன் கார்ன் என்று குறியீடாக்கப்படும் சோஸலிசம் பிணம் எரிவதைப் போலத்தான் கவிஞருக்குத் தெரிகிறது. கருதின் கட்டமைப்பில் அமைந்துள்ள அத்தனை சோளப் பற்களும் சுட்டு, துரோகத்தால் அல்லது பன்னாட்டு நுகர்வு கலாச்சார சூழ்ச்சியால் கபளீஸ்வரம் செய்யப்பட்டு, சோஸலிசம் என்ற வெறும் கருத்துக் கட்டமைப்பு மட்டுமே எஞ்சியிருக்கிறது. அது கவிஞருக்கு பெரும் வேதனையையும் ஏக்கத்தையும் தருகிறது. உடனே அவர், அந்த வெற்றுக் கட்டமைப்பைப் பார்த்துக் கேட்கிறார். 


//மேலே தென்பட்ட வெளிச்சங்களைத் திருப்தியாகத் தற்சமயம் எரியும் சிதையில் எறியவிருக்கும்

தின்ற பின்பாக

சோளமற்ற உடலே,


உண்மையாகவே இனி நீ ஒன்றுக்கும் ஆகமாட்டாயா மனம் ஒப்பவில்லையே . . .//


என்று அந்த சித்தாந்தத்தைப் பார்த்து ஏங்குகிறார். உன்னால் இன்னும் உயிருடன் இருப்பதற்கான தன்மை இருக்குமானால், உன் ஒரு கட்டை விரலை அசைத்துக் காட்டு, போதும் என்கிறார். மிகச் சிலிர்ப்பான இடம் இது.


படைப்பாளி ஒரு சித்தாந்தத்தின் மீது கொண்டுள்ள பற்றையும் அதை மீட்டுருவாக்கம் செய்ய, தான் ஒரு மீட்பராக மாறுவதற்கு ஆயத்தமாகிறார். மிகையில் கோர்பச்சோவ் அதை இவ்வாறு தனது பேட்டியில் சொல்கிறார்.


"எங்கள் முதுகுக்குப் பின்னால் துரோகம் இழைக்கப்பட்டிருந்தது. ஒரு சிகரெட்டை பற்ற வைக்க அவர்கள் வீட்டையே கொளுத்தி கொண்டிருந்தனர். அந்த முயற்சி அதிகாரத்தை பெறுவதற்காக மட்டுமே. ஜனநாயக வழிமுறைகள் மூலம் அவர்களால் அதனை பெற முடியவில்லை. எனவே அவர்கள் ஒரு குற்றமிழைத்தனர். அதுவொரு ஆட்சி கவிழ்ப்பு" என்று  கூறுகிறார்."


ஒரு சித்தாந்தத்தின் வீழ்ச்சியை, துரோகத்தின் மூலம் நடந்த நாடகத்தை அல்லது மேற்கொண்டு நிலைபெற முடியாத அளவிற்கு சிதைந்துவிட்ட ஒரு சித்தாந்தம், அதன் மூல எண்ணத்திலிருக்கும் நற்பண்புகளால் மீள உருவாக்கம் கொள்ளுமா என்பது கவிதையின் உள் வெட்டு. வெளிப்படுத்தப்படாத நோக்கங்கள் என்பவற்றிற்கும் ஒரு விளைவு வெளிப்புறமாக இல்லாவிட்டாலும், உட்புறமாக அதன் ஒழுங்கு செயல்பட்டுக் கொண்டேதான் இருக்கும் என்பதற்கான நெகிழ்வானக் கவிதை இது.


இங்கே கவிதையின் தலைப்பன, "சரீரா", என்பதும் மற்றொரு கருத்துரு சிதைப்பின் சுவாரஸ்யம்தான். இதை கண்டடைவதே படைப்பனுபவத்தின் மற்றொரு சாத்தியம்.


ஒரு தொகுப்பின் கவிதைகளின் வகைமை பற்றிய புரிதலை அடையும் வாசக மனமானது, தன்னையும் அறியாமல் கருத்து முறையிலும், கலை முறையிலும் கவிதைகளின் குணாதிசயங்களை தொடர்ந்து அந்தத் தொகுப்பு முழுமைக்குமான ஒரு சரடை பின்ன முனையும். அதன் தொடர்ச்சியில் உண்டாகும் நெருடலை முடிந்த வரையிலும் அறநெறிகளின் பால் புரிந்து கொள்ளவும், அதன் புதிய சிந்தனைப் பழக்கத்தை அடையாளம் கண்டு கொள்ளவும் முயல்வதே தீவிர வாசிப்பாகிறது.


தொகுப்பின் மற்றுமொறு கவிதை...


புரைபோகும் கதவு

***********************

வெறிபிடித்தாற்போல் தட்டிக்கொண்டே இருக்கின்றான் 

கதவிற்கோ பயங்கரமாய்ப் புரைபோகிறது 

துணைவியோடு நான் துகில் மறந்து தூங்கும் இந்நேரம் ஏறக்குறைய இருபதுமுறையாவது தட்டியிருப்பான்


திறக்கவேயில்லை என்பதால்


கதவின்மேல் நெருப்பு நெருப்பென்று எழுதிவைக்கத் துவங்கினான்


எரியும் வீட்டிலிருந்து பாதி இறந்துபோய் வெளியேவந்த நான் அவனையும் கைப்பிடித்து உள்ளே இழுத்தேன் அவனோ 'அப்படியெனில் இந்நேரம் உன் மனைவியும் அறையில்

நிர்வாணமாகத்தானே கிடப்பாள்' என்று துள்ளிக் குதித்தபடி உள்ளே போனான் அதற்குள் நல்லவேளையாக அவள் முழுவதும் எரிந்துவிட்டாள்.

*************************************


இக்கவிதையில் கதவு என்ற கருத்துருவுடன் நின்றுவிடாமல் பல கருத்துருக்கள் உடைக்கப்படுகின்றன. ஆனால் அதன் மையக் கருத்தானது தொகுப்பின் சுவாரஸ்யத் தன்மையைத் தக்க வைத்தாலும் பிற்போக்கு கருத்தியல் ரீதியிலான அம்சங்களை நீக்க முடியாத சிக்கல் எழுகிறது. 


இந்தக் கவிதையைப் படித்தவுடன் எனக்கு ஹேராமின் அபர்ணாதான் ஞாபகத்திற்கு வருகிறாள். ராமின் மனைவி அபர்ணா. பகலில், கரிந்துபோன உணவைப் பொருட்படுத்தாது, கலவியில் கலைத்துப்போய் கிடக்கும் அவர்களை ஒரு தீவிரவாத கும்பல் கதவு, ஜன்னல் வழியாக உள் நுழைந்து, ராமை கட்டிப்போட்டுவிட்டு, அபர்ணாவை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து பிறகு கழுத்தை அறுத்துவிட்டு ஓடி விடுகின்றது. இது திரைப்படத்தின் காட்சி. 


ஜடப்பொருளான கதவுக்கு, விடாமல் தட்டுவதால் புரை ஏறுகிறது என்பதால் தட்டுபவன் Zomotoவோ, Swiggyயோதான் என்று தோன்றுகிறது. மனைவியோடு துகில் மறந்து தூங்குவதென்பது ஹேராமில் வரும் காட்சியை ஒத்த மனப்பான்மையையே நமக்கு ஏற்படுத்துகிறது. கவிதையில் டெலிவரி பாய், தட்டி தட்டி கோபமுற்று, இந்தக் கோபம் அந்த நியூக்ளியர் குடும்பம் நுகர்வு கலாச்சாரத்திற்கு எதிராகத் திரும்பிவிட்டதோ என்று அக்கலாச்சாரத்தின் தூதுவனாகக் கோபம் அடைந்து புரையேறியக் கதவின் மேல் நெருப்பு நெருப்பு என்று எழுதி ஒட்டிவிடுகிறான். வீடே பற்றி எறிகிறது. கவனிக்க, இந்த அமைப்பு, நெருப்பு என்று எழுதினாலே அது உண்மையான நெருப்பாகி வீட்டை எரிக்கத் துவங்குகிறது. அதன் வலிமை அபரிதமானதாக இருக்கிறது. எரியும் வீடு என்பது வாசகனின் மனதில் ஏற்படுத்தும் தாக்கமானது மிக வலுவானது. அது தார்க்கோவ்ஸ்கியின் பற்றி எரியும் வீடு காட்சியமைப்பின் எண்ண வலுவை ஞாபகப்படுத்தாமலில்லை. அப்போது பாதி எரிந்த நிலையில் கதவைத் திறந்து, டெலிவரி பாயையும் எரியும் வீட்டினுள் இழுக்கிறான். அவனது நிர்வாண கோலம் கண்டவன், நிலைமையை ஊகிக்கிறான். சந்தர்ப்பவாதியான நுகர்வு கலாச்சாரத்தின் பிரதிநிதி ஒரு கணம் சலனமுற்று, 'அப்படியெனில் இந்நேரம் உன் மனைவியும் அறையில்

நிர்வாணமாகத்தானே கிடப்பாள்' என்று துள்ளிக் குதித்தபடி உள்ளே போகிறான். அதற்குள் நல்ல வேளையாக அவள் முழுவதும் எரிந்துவிட்டாள் என்று எரியும் கவிஞன் சமாதானமடைகிறான். இதுவரை கருத்துரு உடைப்பின் சாதகத்தில் மேன்மையடைந்த கவிதையானது வாசகனை மேற்கொண்டு இதே மனப்போக்கில் முன்னேற முடியாமல் தடுமாற வைக்கிறது. இங்கு கற்பு என்ற சாயல் எடுத்தாளப்படுகிறது. சதி போல கவிஞன் அவன் மனைவியை முற்றிலுமாக எரித்துவிடுகிறான். சதியில் கணவன் இறந்து பிறகே அவன் சிதையில் மனைவியைத் தள்ளி எரிப்பார்கள். ஆனால், கவிதையில் இன்னும் சாகாத கணவனே, மனைவி முழுவதுமாக எரிந்துபோயிருப்பாள் என்று நிம்மதிப் பெருமூச்சு விடுவது, கருத்துரு உடைப்பைப் புறந்தள்ளி ஒரு கொடூரனாக, மனநோயாளியாகக் காட்சியளிக்கிறான். இங்கே கவிதையின் கருத்தியல் என்பது சுவாரஸ்யத்தைத் தந்தாலும் பிற்போக்குத் தனத்தின் பிரதியாகத் தோற்றம் அளிக்கவே செய்கிறது. ஆனால் ஒரு நம்பிக்கையில் முற்போக்கு சிந்தனையின்பால் இந்தக் கவிதையை நகர்த்த முயன்றால், அது தற்கால ஒரு கணவனின் சமூக மன அமைப்பைப் பிரதிபளிப்பதாகக் கொள்வதென்றாலும் அதுவும் கவிதை, அதற்கு எதிர்ப்புறமாகச் செயல்படும் தன்மையைத் தரவேண்டிய சிக்கலை ஏற்படுகிறது. 


படைப்பின் வீர்யம், முற்றிலும் நற்பண்பைக் கொண்டிருக்காவிடினும் நிகழ்காலத்து வாழ்க்கையின் மெய்மையைப் பிரதிபளிப்பதாக மட்டுமல்லாமல் அத்தகைய நோய்க்கூறுகளின் அபத்தத்தையும் அது எவ்வாறு இந்த மனித இன தொடர்ச்சிக்கு இடையூறாக இயற்கையின் சமநிலையைக் குலைத்து அதிகாரத்தின், ஆணாதிக்கத்தின் ஆணவக் குரலாக வென்று வருகிறது என்பதை மறந்துவிடக் கூடாது.


பெரு. விஷ்ணுகுமாரின் அசகவதாளம் கவிதைத் தொகுப்பு கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்டதுபோல ஒரு விடுபடல் என்பதைக் கட்டுரையின் இறுதிப் பகுதியில் முற்றாக விளங்கிக் கொள்ள முடியும் என்றே நம்புகிறேன். 


ஒரு படைப்பாளியை முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டுமானால் அந்தப் படைப்பாளியின் சின்னஞ்சிறு லட்சியங்களை மதிப்பிடுவதில் அவர்களது உயர்ந்த படிநிலை அல்லது தத்துவ கருத்தாக்கம் முன்னிலை பெறுகிறது.


தொகுப்பில் "சாகாவரம்" கவிதை ஜென் தத்துவத்தின் சாயலைப் பேசுகிறது. "பதற்றத்திலிருந்து வெளியேறியக் காட்சிகள்" கவிதை மரபார்ந்த மதிப்பீட்டின் புனிதத்தை உடைக்கிறது. "கும்பகர்ணனின் தலையணை", "இரை", என்று கவிதைகளை நாம் திறந்து கொள்ளும் கருத்தாக்கம், வழக்கமான சொல்லாடல்களால் வழக்கத்திற்கு மாற்றான ஒவ்வொரு வாசகனுக்குமான தனிப்பட்ட விடுபாடாக அமைவது மிக சுவாரஸ்யமானதுதான்.


கடைசியாக ஒரு கவிதையை எடுத்தாள்வதன் மூலம் இந்தக் கட்டுரையை, இந்தக் கவிதைத் தொகுப்பை இறுதியான சிருஷ்டி நிலை குறித்த கருத்தாக்கத்தினால் மனித மெய்ம்மையை கவிஞர் எப்படிப் பார்க்கிறார் என்ற நிலைக்கு வந்துவிடலாம்.


அந்தக் கவிதை,


சிறுகோட்டுப் பெரும்பாடல்

********************************

சுவரில் உண்டானால் விரிசல் 

பாறையில் என்றால் பிளவு 

வானத்தில் என்றால் வேர் 

அகன்று நின்றால் தூண் 

காகிதத்தில் கோடு 

வரைபடத்தில் பாதை 

பூவில் காம்பு 

விளக்கில் திரி 

நெளிந்தால் புழு 

மீட்டினால் தந்தி 

தேகத்திலோ நரம்பு ·.· 

அதென்ன அநியாயம்? 

எவ்வளவு நேரமானாலும் 

தீப்பந்தத்தின் நுனியைவிட்டு நகராத நெருப்பு தீக்குச்சியில் மட்டும் அத்துமீறுகிறது 

வேறுவழியின்றி இதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும் நண்பா 


ஒருபோதும் நம்மால்

ஒரு நேர்கோட்டைத் தலைகீழாய் வரையமுடியாது.

********


//ஒருபோதும் நம்மால் ஒரு நேர்கோட்டைத் தலைகீழாய் வரையமுடியாது.// என்பதுதான் அந்த மகத்தான விடுபடலாக இருக்கிறது. 


ஆனால் மனிதனின், தன்னுடைய புரிதல் எல்லைக்குள் எல்லாவற்றையும் வரையறுத்து, அதன் கருத்தாக்கங்களின் பயன்பாட்டு சாத்தியங்களின் இசைவை நோக்கியதொரு தன்மையானது அந்தக் கோட்டிற்கு A, B என்ற புள்ளிகளாக வரையறையை பாவிக்கிறது. இது மனிதனுக்கு மட்டுமே சாத்தியப்பட்ட ஒரு நுண்ணறிவு. இதன் செயல்பாட்டுத் தன்மை என்பது அதீத இயற்கையின் தன்மையைத் தன்னுடைய ஆக்கக்கூறுகளுக்குத் தேவையானதாக 

மடைமாற்றும் தேவை என்பதுகூட இயற்கையின் ஓர் அம்சமாகத்தான் இருக்கிறது.


இது அந்தத் தலைகீழற்ற கோட்டை தனது தேவைக்கேற்பத் திருப்ப முடிகிறது. அதன் மூலம் இந்த வாழ்க்கையை எவ்வாறு தனக்குச் சாதமாக மாற்றுவது என்பதன் மூலம் வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ இந்த அதி இயற்கைக்கு எதிரான தனது பயணத்தைத் திருப்புவதால் நடக்கும் எதிர்விளைவுகளையும் அதற்கான அதிகபட்ச சிதைவின் வரம்பெல்லையை வரையறுப்பது என்பதை தப்பித்துக் கொள்ளுதல் என்று எவ்வாறு நம்பமுடிகிறது?


தொகுப்பு இந்த இடத்தில்தான் தன்னை நிரந்தரமான பிரபஞ்சத்தின் கருத்துருக்களிலிருந்து முற்றிலுமாக விடுவித்துக் கொள்வதாகக் கொள்ளலாம். எப்படி முடிவற்ற கோடாயிருக்கும் ஒரு புள்ளியை, பல புள்ளிகளின் மூலம் குறிப்பிட்ட எல்லைகளுக்கு நிகழ்த்திக் காட்ட முடிகிறதோ அதேபோலத்தான், அந்தக் கருத்துருக்களின் ஒருவகையான பிரதிபலிப்புக்கு ஆட்பட்டு, அதுவே சாஸ்வதம் என்று மொழியை, கருத்தாக்கங்களை மெய்மை என்று நின்றுவிட்ட ஓரிடத்தில்தான் கவிஞர் அவற்றை அதிர்ச்சிகரமான உத்திகளாக அன்றாடங்களின் வழியாக புதிய கருத்தாக்கங்களின் தன்மையிலிருந்து விளங்கிக் கொள்ள முடியாத மதிப்பீடுகளாக முன்வைக்கிறார். இந்த உத்தி தமிழுக்கு புதியது. இதை விளங்கிக் கொள்ள வாசகன், அதன் சுவாரஸ்யத் தன்மையிலிருந்து முதலில் விடுபட வேண்டும். இந்த விடுபடலே கவிதையைத் தர்க்கங்களை நோக்கித் திருப்புவதன் மூலம் தனிமனிதன் சாராத செயல் தன்மையுடைய தத்துவத்தைக் காட்டுவதாக அமைகின்றன.


நிச்சயமாக இத்தொகுப்பு மிக சுவாரஸ்யம் மிக்கதாகவே இருக்கிறது.


"சாகாவரம்" கவிதை இப்படி முடிவதே அதன் சாதகம்தான்.


***************************************

நீரில் எறியப்படும் 'தவளைக்கற்கள்' அணைக்கட்டின் மார்பை அமிழ்த்தி அமிழ்த்திச் சோதனையிடுகின்றன. மூழ்கவேண்டிய நேரம் வந்தால் உடனே மூழ்கிவிடும் எத்தனையோ கற்களுக்கு மத்தியில்


இந்த வயதிலும் திராவகத்தில் நடந்துபழகும் சாக்கில் தன் சாவையே ஒத்திப்போடும் லாவகம் இங்கே எத்தனை பேருக்கு வாய்த்திடும்


ஆனால் இன்னமும் நாம்


நீருக்குள் நுழையும் வழிமறந்த கற்கள்தான் சலனத்தின் மேற்பரப்பை முட்டிமுட்டித் திறக்கின்றோம். மூழ்கினாலும் நனையாமலிருப்பதற்கு

*******************************************


எளிமையான கவிதைகளை கடினமான ஒரு மொழியில் விளங்கிக் கொள்வதென்பதும் ஒரு கருத்துரு தகர்ப்புதான்.

                                      - சாகிப்கிரான்

******************************************
கல்குதிரை இதழில் வெளியான கட்டுரை