Thursday, March 14, 2024

ஆஸ்காரின் அரசியல்

 

ஹாப்பன்ஹைமரும் கில்லர்ஸ் அஃப் தெ ஃப்ளவர் மூன் திரைப்படமும் மிக நீண்ட படங்கள், மூன்று மணி நேரத்திற்கும் மேலானவை.


2024ம் ஆண்டுக்கான சிறந்த படத்திற்கான ஆஸ்காரை க்ரிஸ்டோபர் நோலனின் ஹாப்பன்ஹைமர் பெற்றிருக்கிறது. 


இரண்டு படங்களுமே வரலாற்றின் மறக்க முடியாத துயரத்தைத்தான் புதிய உத்திகளின் மூலம் திரை மொழியில் கட்டமைக்கின்றன.


உண்மையாலுமே மார்ட்டின் சி. ஸ்கோர்செசியின் கில்லர்ஸ் அஃப் தெ ஃப்ளவர் மூன் படத்திற்கே விருது சென்றிருக்க வேண்டும். 


ஓர் அணு விஞ்ஞானியான ஹாப்பன்ஹைமர், கருத்தளவில் இருக்கும் ஓர் அறிவியியல் தொழில் நுட்பத்தை ஒரு கருவியாக்கி, அதை உலகம் கண்டு அஞ்சும் அணு ஆயுதமாகச் சாத்தியமாக்குகிறார். படம் கிட்டத்தட்ட இவரது எண்ண ஓட்டத்திலேயேதான் நிகழ்கிறது. இவரது இருப்பில்லாத லெவிஸ் ட்ராஸாக வரும் ராபர்ட் ஜான் டவுனி ஜூனியர் காட்சிகள் கருப்பு வெள்ளையில் காட்டப்படும் ஓர் உத்தியாக பயன்பட்டிருக்கும். 


ஹைமர் ஓர் ஆர்வமுள்ள விஞ்ஞானியாதலால், அணுச் சிதைவு என்ற பிரபஞ்சத்தின் அடிப்படை செயலை, தூண்டுவதோடும் இல்லாமல் அது ஓர் எல்லையில் நின்றுபோகுமா என்பதே அந்த மன்ஹாட்டன் திட்டத்தில் அதீத ஈடுபாட்டைக் கொடுக்கிறது. 


திட்டத்தின்  யுரோனியத்தால் ஆன மாதிரி அணுகுண்டு வெடிக்கப்படுவது மட்டுமே காண்பிக்கப்படுகிறது. அதன் நாசகாரத்தை ஹைமர் பார்ப்பதில்தான் திருப்பமே ஏற்படுகிறது. லிட்டில் பாய் என்ற யுரோனிய குண்டும் ஃபேட் மேன் என்ற ஃப்ளூட்டோனிய குண்டும் மூன்று நாள் வித்யாசத்தில் 1947 ஆகஸ்ட் 6ம் தேதியும் ஜப்பான் தனது சரணை அறிவிக்கும் முன்பே, 9ல் இரண்டாவது குண்டும் போடப்படுகிறது. அப்படி ஒரு நிர்பந்தம், ஃப்ளூட்டோனியம் குண்டின் செயல்பாட்டை உறுதி செய்ய நிர்பந்தமாக வீசப்படுகிறது.


ஆனால் படத்தில் அந்த போரழிவு நிகழ்வுகள் காட்சிகளாகக் காட்டப்படுவதில்லை. ரேடியோ செய்தியாகத்தான் ஒலிக்கும். 


நோலனின் திரைக்கதை நுட்பம் இதுதான். அந்த போரழிவுகளை ஹைமர் விரும்பவில்லை. அவரின் மனப்போக்கை அடிப்படையாக திரைப்படத்தின் ஸ்க்ரிப்ட் இயங்குவதால் அவை யாவும் படத்திற்கு அப்பால் இயங்குகின்றன. 


பகவத் கீதையின் நானே மரணமாய் இருக்கிறேன் என்ற கிருஷ்ணனின் கூற்றை முன்மொழியும் ஹைமர், உண்மையான மரணத்தை சோதனைக் குண்டின் வீர்யத்தில் பார்த்துவிடுகிறார். 


இந்த மெய்மையே அவரை ரஷ்யாவின் உளவு நிறுவனத்திற்கு தொழில் நுட்பத்தைக் கசியவிட்டார் என்ற விசாரணைக்குக் கொண்டுபோகிறது. 


ஆனால் கில்லர்ஸ் அஃப் தெ ஃப்ளவர் மூன்   திரைப்படம் குரலற்ற ஒரு குற்றத்திற்கான குரலாக ஒலிக்கிறது. 


மார்ட்டின் சி. ஸ்கோர்செசி படத்தை மிக நேர்த்தியாகக் கட்டமைத்து, ஓசேஜ் பழங்குடி மக்களின் வாழ்க்கையையும் அமெரிக்கர்களின் நய வஞ்சகத்தையும் நுட்பமாக கிட்டத்தட்ட நாவலின் படியே பார்வையாளர்களுக்கு ஆழமாகக் கடத்துகிறார். 1920 களில் வெள்ளையர்களின் நய வஞ்சகத்தின் உச்சமான கோர முகத்தைக் காட்டும் படம் என்பதாலேயே ஹைமர் முந்திவிட்டது.


லியோனார்டோ டிகாப்ரியோ கிட்டதட்ட மார்லண்ட் பிராண்டோ போல முக பாவனையும் கறை படிந்த பற்களுமாக அசத்தியிருக்கிறார். 


ரொபேர்ட் அந்தோனி டி நீரோ, ஆடுகளத்தில் வரும் பேட்டைக்காரன் போல. மிக லாவகமான வில்லனாக வருகிறார். 


ஓசேஜ் பழங்குடி பணக்கார பெண்ணாக வரும் லில்லி கிளாட்ஸ்டோன் உண்மையிலேயே ஒரு பழங்குடி என்பதாலோ என்னவோ, தனது முகத்தில் அத்தனை பாவனைகளையும் ஒரு அடங்கிய முகபாவத்துடன் பெண்களின் சூழ்நிலை நிலைப்பாடுகளை அசாத்தியமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.


உண்மையாலுமே, சிறந்த படம், சிறந்த கதாநாயகன், சிறந்த கதாநாயகி, சிறந்த துணை நடிகர்கள் என்று 

லில்லி கிளாட்ஸ்டோன், லியோனார்டோ டிகாப்ரியோ, ரொபேர்ட் அந்தோனி டி நீரோ, கில்லர்ஸ் அஃப் தெ ஃப்ளவர் மூனுக்குதான் கிடைத்திருக்க வேண்டும்.


1988ல் வந்த மிஸிஸிபி பர்னிங் படத்தைப்போல, 1964ல் நடந்த உண்மை சம்பவம், மூன்று இனவெறி கொலையைத் துப்பு துலங்க வரும் FBI ஏஜண்டுகளுக்கு மிஸிஸிபி உள்ளூர் அதிகாரிகள் ஒத்துழைக்க மறுக்கின்றனர். காரணம் அந்த வெள்ளை அதிகாரிகள்தான் அந்த கொலைகளை செய்தவர்கள். இந்தக் காரணத்திற்காகவே படம் ஆஸ்கார் விருது போட்டியில் மட்டுமே இருந்தது. சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதை மட்டுமாவது அப்போது கொடுத்தனர். 


ஆனால் ஹாபன்ஹைமர் ஒரு விஞ்ஞானியின் மனவோட்டத்தைத் துள்ளியமாகக் காட்சிப்படுத்த தவறவில்லை.


சரியான போட்டி என்பதுபோல, ஆஸ்கர் கமிட்டி என்பது ஒரு விருதை வழங்குகிறது என்றால், அது விருது மட்டுமல்ல. அதற்கு பின்னால் பெரும் அமெரிக்க வெள்ளை அரசியல் இருக்கிறது.


கில்லர்ஸ் அஃப் தெ ஃப்ளவர் மூன் என்ற பெயரே மொத்த கதையையும் சொல்லிவிடுகிறது.


எண்ணை வளம் மிக்க ஒட்டஹாமா ஓசேஜ் பணக்கார பழங்குடி மக்களை வெள்ளையர்கள் நய வஞ்சகமாக ஏமாற்றி, அவர்களது சொத்துக்களை பிடுங்கிக் கொள்கின்றனர்.


ஒன்று ஓசேஜ் இன பெண்களை மணத்து கொண்டு, பிறகு அவர்களைக் கொன்றுவிட்டு சொத்திற்கு அதிபதியாகின்றனர். அல்லது ஓசேஜ் இன் ஆண்களுக்கு கார்டியனாக இருந்து கொண்டு, அவர்களை தற்கொலை செய்து கொண்டதுபோல கொன்றுவிட்டு, இன்சூரன்ஸ் மூலம் பணத்தையும் சொத்தையும் அடைகின்றனர்.


இந்த கதைக்கு எப்படி, விருது கிடைக்கும்?


இங்கே ஒரு கேள்வி எழுகிறது. வெறுமனே ஒரு படத்தின் தொழில்நுட்பம், கதாபாத்திர செதுக்கல் என்று இருந்தால் மட்டும் போதுமா?


இல்லை எடை தட்டு, அதன் ஆன்மாவிற்கே செவி சாய்க்க வேண்டும். கில்லர்ஸ் அஃப் தெ ஃப்ளவர் மூன் இந்த விஷயத்தில் ஹாபன்ஹைமரைவிட பல மடங்கு எடையுள்ளதாக இருக்கிறது.


செவ்வியல் தன்மையும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பேசும் திரைப்படம்தான், தனது உண்மையான ஆன்மாவைக் கொண்டிருக்கிறது.


தளபதியும் குணாவும் 1991ல் தீபாவளிக்கு வந்தாலும் கிட்டத்தட்ட 33 வருடங்கள் கழித்தும் குணா தனது நவீனத்தைத் தக்க வைத்துக் கொண்டிருப்பதுதான் உண்மையான சினிமா.