Monday, December 18, 2023

குணாவில் ஒரு தூக்கம்

              



குணாவில் ஒரு காட்சி. பாடான பாடுபட்டு, தன் அன்பை, மனிதர் உணர்ந்து கொள்ளாத அதையும் தாண்டிய புனிதக் காதலால் அபிராமியின் அன்பைப் பெற்று அவளே தாலி கட்டச் சொல்லி தாலிகட்டுவான் குணா. எரியும் அக்கினியை சாட்சியாக அந்தக் கல்யாணம் நடக்கும். அது ஒரு அற்புதமான இரவு. இதற்கு அடுத்தக் காட்சியில் குணா தூங்கிவிடுவான். குறட்டை விட்டு தூங்குவான். புது மணமகன் தூங்குவதாகக் காட்டப்படுவதை ஒரு பார்வையாளன் எளிதாகக் கடந்துவிடக் கூடும்.


ஆனால் க.நா. சுப்ரமணியத்தின் ஒரு கதை. அதன் தலைப்பே "தூக்கம்தான்". கதை இதுதான். தன் குழந்தையை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றிருப்பார்கள். மனைவி அங்கேயே இருந்து பார்த்துக் கொள்வாள். அந்தத் தகப்பன் என்ன ஆனதோ என்று அன்று இரவு தவியாய் தவித்தபடி இருப்பான். மறுநாளும் குழந்தை வீட்டுக்கு வராது. மருத்துவமனையிலிருந்து வரும் சகோதரனும் இவரிடம் வந்து எதையும் சொல்லாமல், பக்கத்து வீட்டுக்காரரருடன் பேசிக்கொண்டிருப்பான். ஒரு கணம்தான். அவன் வந்து பார்க்கும்போது அவர் தூங்கிவிடுவார். ஆழ்ந்தத் தூக்கம்.


இந்த இரண்டு புள்ளியும் இணையுமிடம் மிக அபூர்வம். மனதின் தாங்க முடியாதத் தன்மையானது தனக்குத்தானே தற்காப்பு நிலைக்குச் சென்றுவிடுகிறது. வலியை ஒரு அளவுக்கு மேல் தாங்க முடியாது, மயக்கம் போடும் மனத்தின்,  பிரக்ஞையின் ஒரு தப்பித்தல் தன்மையிது. மிக நுட்பமான இது, குணாவில் தான் அடைந்த சாதனையை தாங்கொணா சந்தோஷத்தில் தூக்கத்திற்குப் போய்விடுகிறது, கா.நா.சுவின் தூக்கம் கதையில் துக்கம் தாளாது, தன் இயல்பினில் தப்பித்தலுக்குப் போகிறது மனது.


கமல் க.நா.சுவை வாசித்திருக்க வாய்ப்பிருந்தாலும் அதை மிகச் சரியான இடத்தில் மிக நுட்பமாகப் பயன்படுத்தியது வியக்காமல் இருக்க முடியாது.