Thursday, October 22, 2009

சாகிப்கிரான் கவிதைகள்



நினைத்ததைத் தரும் கற்பக விருட்சத்திற்கு அடியில் ஒரு நவீனன்


பசியாற்றி
ஆசுவாசப் படுத்திய
பெண்கள்
சென்ற பின்
புலி வருவதற்கு
முன்

நடுவிலொரு

கோடாரியை வர
வழைத்த
ந்த மரத்தை
வெட்டி யெறிந்தானி
வன்.

அடையாளம் தேடிய
லைந்த புலி
திகைத்தது.

காடு
கல்லாகிக் காத்திருக்கக்
தொடங்கும் கணத்திற்கு
முந்தைய ஒரு
பூவின் யுகம்
தப்பி வண்ணத்துப்பூச்சியாக
இன்னும் பறந்து
கொண்டுதா னிருக்கிறது.



மறைந்திருக்கும் பூதம்

முதலில் நீ
மது வருந்துகிறாய்
பிறகு
மது வுன்னை யருந்துகிறது
இப்போது நீ
யென்னை யருந்த
திகி லுடனு ன்னைக்
கடந்து கொண்டிருக்கிறேன்.

கட்டமைக்கப்பட்டிருக்கும்
பதுங்கு குழிகளுள் உறங்கும்
சாத்தான்கள் உனை
நானறியும் சாத்தியத்தின்
அசலோ வியத்தைச் சுக்கல்களாக்கி
ஒன்று கூட்டும் விளையாட்டி லென்னை
தோற்கடிக்க

மறுநாளும் மறுநாளு
மென்னைத் தேடியலைகின்றன

மது வருந்த.



கொல்லனின் மகள்

பழுத்து விரியும்
அந்த சிவ ப்பிரும்பை
பார்க்க
தினமும் களத்திற்குச்
சென்றுவிடுவேன்.

ஆயுதக் குவியல்களுக் கிடையே
சாம்பல் பூவாக
எனக்கொரு
சிரிப்பை வைத்திருப்பாள்.

ஒருநாள்
பெரிய கூட்டத்தினிடையே
அழுதுகொண்டிருந்தாள்
தலைவெட்டிய சிதைவுடலாக
கிடக்கும் கொல்லனின் மகள்.

பிரிதொருநாள்
அயல் தேசத்து
ஆயுதக்கிடங்கெங்கும்
ஆயுதங்களுக்கு மாற்றாக
பூக்கள்
நிரம்பிக் கிடக்க
சர்வதேச சபைகள்
அம்மனுக்குப் பூ
மிதித்துச் சென்றன.

வாத்துகளை நம்பிய
முயலை மாமிச தின்னிகள்
தின்பதைப்போலவே
வாத்துகள் சிறு
புழுக்களைத் தின்கின்றன

திசைகள்
எல்லாவற்றிற்கும்
எதிராகவே
விரைந்து கொண்டிருக்கின்றன.

திசைகளற்று
சில பூக்களுடன்
பறவை யொன்றும்
பிறகு
ஆயுதக்கிடங்குகள்.



முன்னிலை ஒருமை

எப்போதும் போலவே

நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
விருட்சம் தன்னை
நெகிழ்த்துக் கொண்டு
செம்பச்சை இலை யொன்றை
பளபளக்கச் செய்கிறது.

அந்த இலையே
விருட்சமாக
அந்த இலையே
கிளையாக
அந்த இலையே
காம்பாக
அந்த இலையே
பச்சையமாக
அந்த இலையே
ஒளியாக
அந்த இலையே
காற்றாக
காட்சிப்படுகிறது.

சிமிட்டி மலர்ந்த கணம்
இலை பழுத்து விடுகிறது.
விருட்சத்தை
கிளையை
பச்சையத்தை
பிரிந்தும் விடுகிறது.

இப்போது மரம்
வலுவானதாக மாறுகிறது.
ஒளி கண்களைக் கூச
காற்று மரத்தைப் பெயர்த்து
என் கபாலம் நசுக்க
விரைகின்றது.

நசுக்கினால் நசுங்கி
அறுத்தால் அறுபட்டு
போகவே
எல்லாம் உண்டாக்கப்பட்டிருக்க
நசுங்கும்போது ஒரு
ஓவியத்தையும்
அறுபடும்போது ஒரு
சிலையையும் விட்டுச் செல்வது,

எப்போதும் போலவே
இப்போதும் நடக்கிறது.

பவளக்கொடி இதழ் ஐந்தில் வெளிவந்தவை
(அக்டோபர் – 2009 இதழ்)

கரிகாலனின் ஏழு கடல்களும், ஏழு மலைகளும்

கரிகாலனின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளுக்கான ஒரு பார்வை
சாகிப்கிரான்

ஒரு தொகுப்பு எப்போதும் தனக்கான ஒரு கால வெளியையும் அதற்கான அரசியல், பண்பாடு, சமூகப் பார்வை, நான் எனும் சுயம், அதனுடன் சேர்ந்து செயல்படும் ஆளுமை, அதற்கான ஒரு தனித்தப் பார்வை, அது மீட்டெடுக்கும் தனிப்பட்ட அல்லது பொதுப்படையான ஒரு குரலையும் கொண்டிருக்கிறது. ஆனால் கரிகாலனின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் என்ற தொகுப்பானது மேலே குறிப்பிட்ட ஒரு சிலவற்றை இழப்பதற்கான வாய்ப்பைக் கொண்டிருக்கிறது. கூடவே, அவரின் ஏழு கவிதைத் தொகுப்புகளின் மிக வலுவான கால நீட்சியானது தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளைத் தொகுத்ததால், தொடர்பற்று தனித்தக் குரல்களாகச் சிதைக்கப்பட்டும் விடுகிறது. இதையும் மீறி அது கரிகாலனின் மனவெளியை நினைவூட்டியபடி இருப்பதும் வியப்பே.
தொண்ணூறுகளில் உருவான தனித்த அடையாளங்களுடனான கவிஞர்களுள் கரிகாலனின் இருப்பானது தனக்கான அரசியலில் முக்கியத்துவம் பெறுகிறது. அயராது இயங்குவதன் மூலமான தனது இருப்பை நிலைநாட்டிக்கொள்ளும் இத்தகைய ஆளுமையானது தொடர்ந்து ஏழு கவிதைத் தொகுப்புகளினால் ஒரு நிலைப்பாட்டிலிருந்து மற்றொரு நிலைப்பாட்டிற்கு தனது கவனிப்பைச் செலுத்துவதை உணர முடிகிறது. சாதாரண, ஆரம்ப நிலைக் கவி நிலையிலிருந்து துவங்கிய கரிகாலன், ஒரு கட்டத்தில் நவீனத்துவத்தைக் கடக்க முயற்சிக்கிறார். இது இவரை பின் நவீனத்துவ சாயலில் கொண்டு நிறுத்துகிறது.
முதலில் எனக்கு சற்று தயக்கமாக இருந்தது. ஏழு கவிதைத் தொகுப்புகளை கொண்டு வந்திருக்கும் கரிகாலனின் இந்த தேர்ந்தெடுக்கப்பட்ட நூறு கவிதைகள் கொண்ட தொகுப்பிற்கு ஒரு கவிதைத் தொகுப்பைக்கூட கொண்டுவராத நான் விமர்சனம் செய்வது ஒரு கணத்தில் மனத்தடையை ஏற்படுத்தவே செய்தது. பிறகு ஒரு கட்டத்தில் அதைக் கடந்த பின் மற்றொரு சிக்கல் உண்டானது. இது தனித்த ஏழு கவிதைத் தொகுப்புகளிலிருந்து தொகுக்கப்பட்டிருப்பதால் ஒட்டு மொத்தக் கவிதைக்கான ஒரு தனித்த விமர்சனத்தை வைப்பது சிரமமானது இருந்தது. அதைவிடவும் அதை அவ்வாறு செய்தால் தன்னளவில் நிறைய முரண்களைக் கொண்டிருப்பதாகவும் அமைந்துவிடும் என்று தோன்றியது. எனவே கரிகாலனின் கவிதைகளை மூன்று பிரிவுகளாகப் பிரித்துக் கொண்டு அவற்றிற்கான தனித்த விமர்சனங்களின் ஊடாக மொத்தத் தொகுப்பிற்கான ஒரு விமர்சனத்தை நோக்கி நகர்வோம். அந்தப் பிரிவுகள் பின்வருமாறு,

1. அரசியலும் அதை உள்ளொடுக்கிய சமூகமும்
2. தத்துவங்களின் மூலமாக நிரப்பப்படும் வெளி
3. நவீனத்தை கடக்க விரும்பும் கவிஞன்.


1. அரசியலும் அது உள்ளொடுக்கிய சமூகமும்

பாலஸ்தீனியக் கவியான முகமது தார்விஷ் தனது அரசியல் கவிக் குரலால் தொடர்ந்து நாற்பது ஆண்டு காலம் அந்நாட்டின் மகாகவியாகக் கோலோச்சினார். ஆரம்பக் காலங்களில் அவரது கவிதைகள் காதலையும் அரசியலையும் பேசின. பிற்பாடு அவை மிக எளிய குரலில் அரசியலை மட்டும் பேசின. அவர் எளிய வார்த்தைகளில் வாழ்வின் அன்றாடங்களை மிக வலுவான உணர்வுடனும் அடர்த்தியான உள்பொதிந்த உணர்ச்சிகளுடனும் வெளிப்படுத்தினார். சிர்ஹான் உணவு விடுதியில் தனது காபியை அருந்துகிறான் என்ற தனது கவிதையில் எளிய நிகழ்ச்சி ஒன்றினை முன்வைத்து ஒரு கவிதையினை எழுதுகிறார். அந்தக் கவிதையின் இறுதி வரிகள் இவ்வாறு முடிகிறது.

சிர்ஹான்!
கொலை செய்தாயா?
சிர்ஹான் அமைதியாக இருந்தான்.
அவன் தனது காபியை அருந்தி கனவு காண்கிறான்.
எல்லைகள் அற்ற ஒரு வரைபடத்தை அவன் வரைகிறான்.
பூட்டப்படும் விலங்குகளால் பூமியை அளக்கிறான்.
அவன் தன்னைக் கொல்லும் கொலைகாரனின் படத்தை வரைகிறான்,
பிறகு சுக்கல்களாக கிழித்தெறிந்து
கொல்கிறான், அது தனது இறுதி வடிவத்தை எட்டியவுடன்.

(தமிழில்:லும்பி)

இங்கே கவிதை படர்க்கையில் பேசப்படும் ஒரு தொனியைக் கொண்டிருக்கிறது. தன்னிலையற்ற அத்தகைய ஒரு சொல்லல் முறையால் கவிதையானது கவியின் கட்டுப்பாட்டிலிருந்து விலகியே இருக்கக் காண்கிறோம். இது கவிதையை ஒரு கருத்தையோ அல்லது எப்போதும் கொள்ளப்படும் ஒரு அர்த்தத் தொனியையோ மறுத்து தன்னியல்பான ஒரு இயக்கத்தையும் அதன் மூலம் ஒரு கட்டற்ற தன்மையையும் அடைகிறது. இந்தப் பாவனையானது அவனைக் கொல்லும் அல்லது அவனது ஆன்மாவைக் கொல்லக்கூடிய கொலைகாரனை வரைவதாகக் கருதலாம். ஆனால் அவன் அத்தகைய ஒரு பாவனைக்கு முன்பே அதைச் செய்ததற்கான ஒரு விசாரணைக்கு ஆட்படுத்தப்படுகிறான். இது சர்வாதிகாரத்தின் தன்மையையும் ஏகாதிபத்தியத்தின் குரூரத்தையும் எல்லைகளால் துண்டாடப்படும் ஆன்மாவையும் அதனால் இழக்கப்படும் தாய் மண்ணையும் அத்தகைய ஒரு துயரத்தையும் வெகு எளிதாக, அதன் கொடூரம் குறையாத ஒரு தன்மையுடன் பொருந்தக் கூடியதாக இருக்கிறது.

இதே கூறுகளை உடைய ஒரு கவிதையானது கரிகாலனிடமும் காணக்கிடக்கிறது. அந்தக் கவிதை.

ரம்மின் வெதுவெதுப்பேறியவென் குருதியைத் தொட்டு
உன் முகத்தை வரைந்து திருப்தியடைகிறேன்
மூலவியாதி பிடித்த தெருநாயின் பின்புறத்தைப்போல
காலி கோக் டின்னில் மூத்திரத்தைப் பெய்யும்
உணவு விடுதியின் மேசை துடைக்கும் சிறுவன்
அவமானப்படுத்திச் செல்கிறான் உன் தேசத்தை.

எதிர்வினை என்ற கரிகாலனின் இக்கவிதையின் கடைசி வரிகள், கிட்டத்தட்ட முகமது தார்விஷின் கவிதையோடு ஒப்பு நோக்கக் கூடியதே. ஆனால் அவனைப் போலல்லாமல் இவன் காப்பியை அருந்தவில்லை. தான் சிந்தியக் குருதியால் முகத்தை வரைந்து திருப்தி அடைந்துவிடுகிறன். இங்கே தன்னிலையானது வேறு வகையில் கவிதையைத் திசைத்திருப்புகிறது. தன்னிலையிலிருந்து படர்க்கையில் அந்த எதோச்சதிகாரத்தை மூத்திரம் பெய்து அவமானப்படுத்துவதாகக் காட்டுவது ஒரு சமூக நிலையை அது தொடர்ந்த ஆக்கிரமிப்பால் காட்டும் எதிர்ப்பை முன்மொழிகிறது. ஆனால் இங்கே தார்விஷ் கவிதைக்கான ஒரு அபூர்வ உத்தியைக் கையாள்வதை தவிர்க்க முடியாத அளவிற்கு காட்டவே செய்கிறது. அதுவே தமிழ் கவிதைக்கான தேவைகளாகவும் இருப்பதைக் காட்டுகிறது.

கரிகாலனின் அரசியல் கவிதைகளுக்கான ஆளுமையைக் காட்டும் இத்தகைய கவிதைகள் மிகுந்த வெளிப்படைத் தன்மையையும், அதற்கான மிக வலுவான காரணங்களையும் தவிர்க்க முடியாத வாதத் தன்மையையும் கொண்டிருக்கின்றன. தலித்தியம், பெண்ணியம், சுற்றுச் சூழலியல், இன, சாதி அரசியல், உலகமயமாக்கல், நகரமயமாக்கல், தொன்மங்களின் வழியாக நிறுவப்படும் நில அடையாளங்கள், அது இட்டுச் செல்லும் ஆன்ம நசிவு, வேசிகள், சூன்யக்காரிகள், முரணான உறவுகள், ஆதிக்க சாதிகள், கடவுளை சமுதாயத்திலிருந்து உருவி எடுத்தல், சாக்கடை அரசியல், தனக்கான அடையாளங்களை தொலைத்த ஞாபகங்களையும் மறந்த சமூகக் கூட்டங்கள், ஏகாதிப்பத்தியத்தை வெகு இயல்பாக்கிக் கொண்ட நாடு, அது விளைவிக்கும் மூன்றாம் உலக நாடுகளின் நிலை என சில சமயங்களில் மெல்லிய குரலிலும் சில சமயங்களில் வலுத்தக் குரலிலும் கரிகாலன் தனக்கான ஒரு சொல்லல் முறையை நிறுவுகிறார்.

2. தத்துவங்களின் மூலமாக நிரப்பப்படும் வெளி

சீன மொழியில் லாவோட்சு எழுதிய நூல் தாவோ தே ஜிங். இது நமது திருக்குறளைப்போல இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முற்பட்டது. இது மிக எளிய கவிதை வரிகளின் மூலம் இந்தப் பிரபஞ்சத் தோற்றம் முதல் மீன் குழம்பு சமைப்பது வரை நுணுக்கமான ஒரு பார்வையால் சகலத்தையும் அசாதாரணத் தொனியுடன் பேசுகிறது. இதில் ஞானியைப் பற்றிய கவிதைகள் தத்துவத்தின் மிக உயர்ந்த தன்மையைக் கொண்டிருப்பதாக இருக்கின்றன. கீழைத் தேசத்தவர்களான நமக்கு தத்துவ ஞானம் என்பது பரம்பரை சொத்து. தத்துவ ஞானம் என்பது உண்மையை அறிவது எனப் பொருள்படும். உண்மை என்பது உள்ளது, அதாவது என்றும் உள்ளது. இங்கே நிரந்தரம் என்பது கேள்விக்குறியாகும் போதுதான் மனிதன் தத்துவத்தை நாட ஆரம்பிக்கிறான்.

பாடல் எட்டில், ஒரு ஞானியை இவ்வாறு லாவோட்சு வரையறுக்கிறார்.

எவனொருவன் அறிந்தவனோ
அவன் பேசுவதில்லை;
எவனொருவன் பேசுகிறானோ
அவன் அறியாதவன்;
எவனொருவன் உண்மையானவனோ
அவன் பகட்டுவதில்லை;
எவனொருவன் பகட்டுகிறானோ
அவன் உண்மையானவனில்லை;
எவனொருவன் தே உடையவனோ
அவன் வாதாடுவதில்லை;
எவனொருவன் பண்டிதனோ
அவன் ஞானி இல்லை;
எவனொருவன் ஞானியோ
அவன் பண்டிதனில்லை;

எனவே, ஞானி பகட்டுவதில்லை,
தன் நற்பணிகளை.
(தமிழில்: சி. மணி)

ஒரு வகையில் தத்துவங்கள் யாவுமே எல்லாவற்றிற்குமான ஒரு கேள்வியை முன்வைத்து அதற்கான ஒரு பார்வையில் சகலத்தையும் பார்க்க வைப்பனவே. இது கலைக்கான கற்பனா சக்தியை மழுங்கடித்துவிடுகிறது. எனவே, படைப்பாளி அந்தத் தத்துவம் தருகின்ற சுதந்திர எல்லைக்குள்ளேயே இயங்கியாக வேண்டியிருக்கிறது. உண்மையில் இயல்பு என்பது தத்துவங்களுக்கு வெளியில் அதாவது அதைத் தாண்டிய ஒரு சூன்யத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இது தத்துவங்கள் கட்டமைக்கும் கவிதை வெளியானது, கவிதையின் இயல்பு நிலைக்கு முற்றிலும் முரணாக இருப்பதையேக் காட்டுகிறது. எனவே கவிதை தனக்கான ஒரு கட்டற்ற தன்மையை இழக்கிறது. கட்டற்ற தன்மை என்பது கவிதை எதை நோக்கியும் சாயாமலிருக்கும் ஒரு தன்மையையும் சகல சாத்தியத்தையும் தன்னுள் கொண்டிருக்கும் ஒரு பொருட்திணிவையும் குறிக்கிறது. இங்கே தத்துவத்தைக் கவிதையாக மாற்றும் முயற்சியானது, அதன் எல்லைகளை இதுவரை கட்டமைக்கப்பட்டிருக்கும் தத்துவங்களிலிருந்து தன்னை முற்றிலும் தனிப்படுத்திக் காட்டுவதாகக் கூட இருக்கலாம்.

கரிகாலனின் சித்தன் இவ்வாறு பேசுகிறான்.

சீடர்களாக
விரும்பி
சம்மதம் கேட்டார்கள்
சித்தனாக விரும்புகிறவன்
சீடனாயிருக்கக் கூடாது
சீடனாகயிருப்பவன்
சித்தனாக முடியாது
என்றான்
சித்தன்.

இது கிட்டத்தட்ட தாவோவை ஒத்ததாகவே இருக்கிறது. தாவோ சகலத்தையும் அதற்கு பின்னின்று நடத்துகிறது. சீடன் முக்தி அடைந்து விட்டால் சித்தனாகிவிடுகிறான். எனவேதான் அவனால் தொடர்ந்து சீடனாக இருக்க முடிவதில்லை. இது இத்தகையத் தன்மையால் தொடர்ந்து கவிதையாகும் ஒரு தன்மையையும் இழந்து விடுகிறது. ஒரு கருத்தை நிறுவும் எதுவும் நவீன கவிதையாவதில்லை. ஆனால் கரிகாலனின் மற்றொரு கவிதையானது இத்தகைய ஒரு நிலையிலிருந்து விடுபட்டு நவீன கவிதைக்கான நிலையை எட்டுகிறது. அந்தக் கவிதை,


தனது அந்தரத்தின்
துர் நெடியைப் போக்க
திறந்த வெளியிலெடுத்து
உலர்த்துகிறான் சித்தன்
இறந்ததையுண்ணும் கழுகுகள்
அதையெடுத்துப் போய்
இறைத்தபடி தின்கின்றன.

நவீனத்தன்மையானது, அடிக்கடி தன்னை தனது வடிவம், உள்ளடக்கம் சார்ந்து சோதனைகளுக்கு இட்டுச் செல்வதும், அப்படிப்பட்ட வேலையானது அத்தகைய செயலுக்கும் அதற்காகப் பயன்படுத்தப்பட்டிருப்பவை மேல் எப்போதும் ஒரு கவனத்தை வனைந்து கொள்வதுமாக இருக்கிறது. இங்கே கவிதையானது இதுவரை கட்டமைக்கப்பட்ட சகல தத்துவங்களையும் அதாவது அது, இந்தியத் தத்துவங்களாகட்டும், குறிப்பாக இந்திய தத்துவ உட்பிரிவுகள் பெரும்பாலும் வேத உபநிடத் வாக்குகளையே ஆதாரமாகக் கொண்டவையாக இருக்கின்றன, சமணம், பெளத்தம், ஜென் தத்துவம், தனித்தனி ஆளுமைகளால் கண்டடையப்பட்ட மேற்கத்திய தத்துவ ஞானங்கள் அனைத்தும் மேற்கண்ட கவிதையில் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன. இது சித்தன் என்ற சமூகக் கட்டமைப்பே சமய அரசியலொன்றின் செயலாக்கமாக பார்க்கும் ஒரு சாத்தியத்தைக் கொண்டிருக்கிறது. கவிதையை உறுதியற்றதாக மாற்றும் இந்த கவிதை உத்தியே இதை பிரசங்கத்திலிருந்து நவீனக்கவிதைக்கு நகர்த்துகிறது. முழுமுதலான ஒரு தூய்மைக்கு எதிராக்குகிறது. அதாவது எல்லா மதங்களும் அல்லது தத்துவங்களும் கட்டமைக்கும் தூய்மைக்கான ஒரு எதிரை நிர்மாணிக்கிறது. அத்தகைய சாத்தியப்பாட்டைக் குலைப்பதன் மூலமாக என்றைக்குமான ஒரு கவிதை, நவீனக் கவிதையை முன்மொழிகிறது.

3. நவீனத்தைக் கடக்க விரும்பும் கவிஞன்.

நவீன கவிதையானது வெறும் தகவல் தெரிவிக்கும் செயலின் மொழிவடிவம் அல்ல. தெளிவுடனும் துல்லியமாகத் தெரிவிப்பதற்கு மாறாக அவன் கையாளும் மொழியை மீறிய ஒருவித நிர்பந்தம் அவன்மேல் சுமையாய் கனக்கிறது. அதையே நாம் அவனது பிரதியிலிருந்து எடுத்துக் கொள்ளும் ஒன்றாகவும் நமது நிலைப்பாடகவும் கொள்ளலாம். ஒரு தீவிர எழுத்து என்பது முதலில் தன்னைத்தானே கேள்விக்குள்ளாக்கிக் கொள்ள வேண்டும். தன்னைச் சுற்றியுள்ள சமூகச் சூழலை நிர்மாணிக்கும் பண்பாடு நிறுவும் ஒழுங்கையும் கேள்விக்குள்ளாக வேண்டும். அப்போதுதான் அதன் புரட்சித்தன்மை வீரியத்துடன் இருக்க முடியும். இது பார்த்தின் வாதம்.

கவிதையானது ஒரு மேகத்தின் வடிவ ஒழுங்கைப்போல தன்னளவில் மாற்றமடைந்த வண்ணமே இருக்கிறது. கரிகாலனின் தொல்புனைவு கவிதை வரிசையில் ஒரு கவிதை இவ்வாறு இருக்கிறது.

மாறன் ஆலயத்தில்
ரதியின் பிரதிமையை
கஞ்சாத் தூளில் மயங்கி
பேரரசியின் சாயலாக்கினான் சிற்பி
ஆலய விதானத்தில் பிரவேசிக்கும்
பேரரசன் மாறனிடப்புறத்தில்
அரசியின் சாயலைக் கண்ணுற்று
திகைப்பிலாழ்கிறான்
தனக்கேயான மையத்திலிருந்து
அரசியை விலக்கிய
சிற்பி சதா ஊர்ந்தவாறிருக்கிறான்
அரசனின் உறக்கத்தில்
ராணியின் கனவை
வேவு பார்க்கும் அரசன்
மனநோயாளியாய் மாறுமுன்
தீர்மானிக்கிறான்
சிற்பியின் இறுதிக்கணத்தை.

கவிதையானது சிற்பி, அரசன், அரசி, கனவு, படைப்பாக்கம், சுதந்திரம், அதிகாரம் முதலிய மிக அடிப்படையான ஆதார குறிகளின் மூலமாக ஒரு பிரதியைப் தன்னகத்தே கொண்டு, அத்தகைய குறிகள் வேறு எதுவும் இணையாகாத அற்புத சாத்தியமாக இருக்கின்றது. ஆலயம் என்பது கட்டமைக்கப்பட்ட ஒரு இனக்குழு அரசியலமைப்பையும் அரசனை அத்தகைய ஒரு கட்டமைப்பிற்கான காவலனாகவும் அதை முன்னெடுக்கும் ஒரு தொடர்ச்சியாகவும் பதிலீடு செய்கிறது. சிற்பியை கலையின் குறிப்பாகவும், அரசியை நுகர்வுப் பொருளாக மாற்றிக்கொண்ட அதிகாரத்தையும், அரசியின் சாயலுள்ள பேரரசியின் ஓவியத்தைக் கலைப் படைப்பிற்கான பிரதியாகவும் ராணியின் கனவை வேவு பார்க்கும் செயலானது மனித உரிமை மீறலையும், சிற்பியின் இறுதிக் கணத்தை அதிகாரத்தின் வெற்றியையும் தொடர்ந்து இருக்கும் அந்த ஓவியமானது நிரந்தரத்தின் சாயலாகவும் மாற்றப்படுகிறது. இந்தக் கவிதை நவீனத்துவத்திலிருந்து பின்நவீனத்துவத்திற்கு தன்னை மாற்றிக் கொள்கிறது. எவ்வாறு என்றால்,

பின்நவீனத்துவமானது தீவிர உட்சிக்கல்களுக்கு உருக்கொடுத்தல், முரண்பாட்டு இறுக்கம், தெளிவின்மை, இந்த வகையில் இவை தங்களுடன் தொடர்புடைமை ஆகிய இவற்றை முன்னெப்போதும் கையாளாத சொல்லல் முறையில் தன்னைத்தானே எள்ளல் செய்வதை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. ஒரு பார்வைக்கு மிக எளிதாகத் தோன்றுகின்ற இந்தக் கவிதையானது மறுகணமே அத்தகைய எளிமையை மாய்த்துக் கொள்கிறது. அரசனின் மனச்சிதைவானது கவிதைக்கான முரண்பாட்டு இறுக்கத்தையும் தெளிவின்மையையும் உருவாக்கிவிடுகிறது. மேலும் மனநோய்க்கூறானது கட்டமைக்கப்பட்ட அதிகாரத்தின் பாதுகாவலை சிதைப்பதற்கான ஒரு சாத்தியத்தைத் தன்னுள் ஏந்துகிறது. எனவே இவை தங்களின் தொடர்புடைமையை முன்னெப்போதும் கையாளாத தீரத்துடன் வெற்றி கொண்டு பின்நவீனக் கவிதைக்கான ஒரு வாய்ப்பை வழங்குகிறது. இது கரிகாலன் தான் மேற்கொண்ட கவித்துவ எல்லையாக அல்லது அடைந்த ஒரு வெற்றியாகக் கருதிக்கொள்ளலாம்.

மேலே கண்ட மூன்று வகைப்பாட்டிலும் கவிதைகளை எனது விமர்சனப் பார்வைக்கு இணக்கமான ஒரு பிரிவுகளை கொண்டதாக மாற்றிக்கொண்டது என் தனிப்பட்ட அபிப்பிராயமே. எனவே இது, இது போன்ற வேறு பல சாத்தியங்களையும் அபிப்பிராயங்களையும் கொண்டிருக்கலாம். எனவே, இந்த மூன்று பிரிவுகளும் தங்களுக்கான ஒரு நிறைவான பார்வையைக் கொண்டிருந்தாலும் இவற்றிக்கான ஒட்டு மொத்த பார்வையானது நூறு கவிதைகளுக்குமான ஒரு பார்வையையே கருதுகிறது.

தொகுப்பிலுள்ளக் கவிதைகளின் அரசியலனது பொருள் சார்ந்த தளத்தில் நின்று பிறகு தத்துவ நிலையினை அதற்கு முற்றிலும் எதிர் நிலையான அரசியல் பண்பாட்டு வட்டத்தில் பொருத்திப்பார்க்கும் ஒரு உலகத்தரம் என்று மெல்ல தனது கவிதைத் தளத்தை ஒரு செஸ் ஆட்டம் போல காய்களை நகர்த்தி, எல்லாவற்றிற்கும் செக் வைக்கிறார். இது மிக விரிந்த தேடலால் சாத்தியப்பட்டாலும் அது சில சமயங்களில் தனக்கான இடரல்களைக் கொண்டிருப்பதையும் காண முடிகிறது. சிறு நிலம், ஆறாவது நிலம் வரிசைக் கவிதைகள் சிதைவுறும் நில அடையாளங்களை பண்பாட்டு சீரழிவை வீரியத்துடன் முன்வைக்கின்றன. தொகுப்பின் பின்பகுதிக் கவிதைகள் மிக நேர்தியான வடிவ ஒழுங்குடன் மொழி நுணுக்கமும் சொல்லல் முறையில் புதிய பார்வைகளும் அவ்வாறு அவை இருப்பதால் கவிதையானது தனது வெளிப்பாட்டு திறத்தை தமிழ்க்கவிதைகளை புதிய தளங்களுக்கு இட்டுச் செல்கிறது.
ஆனால் முன்பகுதி கவிதைகள் அல்லது தொகுப்பெங்கும் கையாளப்படும் ஒரு உத்தியானது நிகழ்வுகளை அதாவது கவிதையை ஒரே மாதிரியான அடுக்குமுறை சொல்லல் முறையால் தொடர்ந்து ஒன்றிற்கான ஆதாரங்களை அடுக்குவது அல்லது நிகழ்ச்சிகளை அடுத்தடுத்து வைப்பது மிக சலிப்பூட்டுவதாக இருக்கிறது. அதே போல இத்தகைய செயலானது ஒருவகையான ஆவணப்படுத்தப்படும் மொழி வர்ணனைகளாகவும் எஞ்சி விடுகின்றன.
கரிகாலனின் மிக எளிய மொழி ஆளுகையே அவரது பலமாக இருந்தாலும் நிறைய இடங்களில் அது கவிதையை நீர்த்துப்போக வைத்துவிடுகிறது. அல்லது மிக நேரிடையான ஒரு காட்சிப்படுத்தலாக மாற்றிவிடுகிறது. இது இத்தகைய ஒரு மொழியாளுகையின் விபத்தாகக் கூட கருதலாம்.
ஒரு தனிமனித வாழ்வானது இத்தகைய ஏழு கவிதைத் தொகுப்புகளுக்கான வாய்ப்பைத் தர இயலுமா என்பது என் போன்ற எப்போதாவது எழுதும் கிறுக்கல்களுக்கான ஒரு கேள்வி. இது வாழ்வின் அன்றாடங்களை மிகக் கூர்மையுடனும் சமூக அக்கரையுடனும் நோக்கும் ஒரு பார்வையாலேயே சாத்தியம். கரிகாலனின் ஒட்டுமொத்த கவிதைத் தொகுப்பை வாசித்ததும் எனக்கு சில கேள்விகள் தோன்றின.

1. கவிதையானது சமூக அக்கறையுடன் சேர்ந்து வினையாற்றும்போது அது அடையும் வீரியமானது எத்தகைய பாதிப்பை அந்தச் சமூகத்தில் ஏற்படுத்தக்கூடும்?

2. தொடர்ந்து மாறிவரும் கவிதையானது எவ்வாறு ஒரு கவிஞனைத் தக்கவைத்துக் கொள்கிறது?

3. ஒரு கவிஞனை அவன் படைப்பை வைத்து அளவிடும்போது அவனது கவித்துவம் அவனால் அடையாளம் கண்டுவிட முடியாதபடி ஏன் மாறிவிடுகிறது?

ஏழு கவிதைத் தொகுப்புகளையும், நவீன தமிழ்க் கவிதையின் போக்குகள் என்ற கட்டுரைத் தொகுப்பும் நிலாவை வரைபவன் என்ற புதினத்தையும் வெளியிட்டுள்ள கரிகாலனின் ஆளுமையை நினைக்கும்போது எனக்குள் தோன்றுவது அவரது இந்த கவிதை வரிகளே

மேரு மலையைக் கட்டியிழுத்து
தோட்டத்தில் வைத்திருப்பதாகாக்
கூறினேன்
‘ஓகோ அப்படியா’ என்று
விடை பெற்றார் பக்கத்து வீட்டுக்காரர்.


---------------------------------------------------------------------------------
27,28 ஜூன் 2009 அன்று கடவு இலக்கிய அமைப்பு நடத்திய கூடல் சங்கமம் நிகழ்ச்சியில் வாசிக்கப்பட்டது.