Thursday, May 14, 2009


வனாந்திரத்தின், யாருமறியாத ஒரு மலர்.சாகிப்கிரான்


ஏப்ரல் 6, 2009, அதிகாலை மணி 1.15 க்கு சி. மணி என்கிற மிகப் பெரிய ஆளுமையை, மிக சாதாரணமாகச் சுவாசக் கோளாறு என்கிற உடல் நோய் மரணமடையச் செய்கிறது.


தமிழ் புதுக்கவிதையின் முன்னோடிகளை வரிசைப்படுத்தினால் கடைசியில் வரும் ஒரு பெயர்தான் சி. மணி. கடைசி என்பதன் பொருள், மேலோட்டமாகப் பார்க்கும்போது ஏதும் தெரிவதில்லை. கடைசி என்பதன் அரசியல், வழக்கம்போல அவரது வாழ்விலும் தொடர்ந்து கொண்டே இருந்ததுதான் வியப்பு.


சி. மணி, 1939 அக்டோபர் 3 ம் தேதி பிறந்தார். இவர் இயற்பெயர் எஸ். பழனிசாமி. சி. மணி, வே. மாலி என்ற பெயர்களில் கவிதை எழுதிய இவர், செல்வம் என்ற பெயரில் யாப்பும் கவிதையும் என்ற மிக முக்கியமான ஒரு யாப்பிலக்கண நூலையும், ஓலூலூ என்ற பெயரில் அலசல் என்கிற அபத்த நாடகம் ஒன்றையும், தாண்டவ நாயகம் என்ற நெடுங்கதை ப. சாமி என்ற பெயரிலும் எழுதியிருக்கிறார்.


தோண்டு கிணறுகளும் அவற்றின் அமைப்பும் என்ற ஒரு மொழிபெயர்ப்பு, டேனிடா நலவாழ்வுத் திட்டத்திற்காக ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கான நிர்வாக கையேடு மொழிபெயர்ப்பு, தாவோ தே ஜிங் என்ற இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சீன மொழி கவிதைத் தத்துவ நூல் மொழிபெயர்ப்பும், மிகச் சுருக்கமான அறிமுக நூல் வரிசையில் புத்தர், பெளத்தம், பிராய்ட் நூல் மொழிபெயர்ப்பும், உதய நாராயண சிங்கின் முன்னிலை ஒருமை என்ற மைதிலி மொழி கவிதைத் தொகுப்பை ஆங்கில வழியில் தமிழுக்கு மொழிபெயர்த்தார். Contemporary prose reader என்ற ஆங்கில வழியில் தமிழ் கற்கும் மாணவர்களுக்கான மொழிபெயர்ப்பு நூலாக்கமும், கிரியாவின் தற்கால தமிழ் அகராதியின் உருவாக்கத்திலும் இவரின் பங்கு மிக அதிகம்.


கவிதைக்கான குமாரன் ஆசான் நினைவுப் பரிசும், விளக்கு விருது வாழ்நாள் சாதனைக்கும், நிர்வாகம், தொழில்நுட்பத் துறைகளில் மொழிபெயர்ப்புக்காக இருமுறை தமிழ்ப் பல்கலைக்கழகப் பரிசும், தென்னிந்திய புத்தகப் பதிப்பாளர் சங்கம் வழங்கிய கலைஞர் பொற்கிலி விருது, கவிதைக்காக வாழ்நாள் சாதனையாக ஒரு லட்சம் பரிசும் பெற்றிருக்கும் இவர், தமிழ் வினைச்சொல் அகராதி ஒன்றை அமெரிக்க தமிழ் அறிஞர் பேராசிரியர் ஹெரால்டு ஷிஃப்மனுடன் இணைந்து உருவாக்கினார்.


தனது செல்வங்கள் அனைத்தையும் நடை என்ற இலக்கிய முத்திங்கள் ஏட்டிற்காகச் செலவு செய்தார். அது அக்டோபர் 1968 முதல், ரூபாய் மூன்று விலையுடன் ஜி. கிருஷ்ணசாமியை வெளியீட்டாளர், ஆசிரியராகக் கொண்டு எட்டு இதழ்கள் வெளிவந்தன (ஜூலை 1970 வரை). நடையானது நவீன படைப்பிலக்கியம், விமர்சன இலக்கியத்துடன் நின்றுவிடாமல், இலக்கியம் தன்னுடன் சம்பந்தப்பட வேண்டிய நவீன ஓவியம், நாடக இலக்கியம், சமூக இலக்கியம், அரசியல் சார்ந்த இலக்கிய போக்குகளையும் தன்னுள் பொதித்து, இதழ் வடிவமைப்பு, மாறுபட்ட முகப்பட்டை உருவாக்கம், கவிதைகளை ஓவியத்துடன் பிசைந்து மற்றொரு தளத்தைத் தொடவைத்து வெற்றி கண்டது.


தன்னை முன்னிருத்தாமலும், தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொள்ளக்கூட மனமில்லாத சி. மணி, தொழிலுக்காகக் கற்றது ஆங்கிலமும் ஆங்கிலத்தைக் கற்பிக்கும் முறையும். அவரது மனம் விரும்பி ஈடுபட்டது பழந்தமிழ் இலக்கியம், இலக்கணம், அறிவியல், தத்துவம், உளவியல். எல்லாவற்றிற்கும் மேலே, அறிந்ததற்கு அப்பாலுள்ள பிரக்ஞைத் தளங்களைக் கண்டறிய உதவும் சிந்தனைகளான திருமூலரிலிருந்து, தாவோ, ஜென், சூஃபி, குர்ட்ஜீப், ஜே. கிருஷ்ணமூர்த்தி, கார்லோஸ் காஸ்டெனடா. ஆனாலும் எதிலும் நிலைகொள்ள முடியாத, ஒரு அந்நியன் உணர்வு. அவற்றின் வெளிப்பாடுகள் ஒரு தன்மையானவை இல்லை. எனவேதான் செய்நேர்த்தியும், எளிதில் எதிலும் சிக்கிக் கொண்டுவிடாத ஜாக்கிரதையும், எள்ளலும் புராதனமும், நவீனமும், கலையும், விளையாட்டுத்தனமும் நவீனத்தன்மை தமிழில் வேர் விடும் முன்பே பின் – நவீனத்துவத்தின் கூறுகள் இவரது படைப்புகளில் கலந்து காணப்பட்டன.


ஒரு கலைஞன் தனது படைப்பின் மூலமே தன்னுடைய மரணத்தை வெல்கிறான். ஆனால் மரணம் அனைத்தையும் வென்றுவிடுகிறது.