Friday, April 15, 2022

மேஸ்ட்ரோவின் இசை...

 


             சையைத் தவிர இளையராஜாவிற்கு எதுவும் தெரியாது என்பது இளையராஜாவைப் பற்றிய குறைந்த மதிப்பீடு. இளையராஜா, மிக நுட்பமானவர். பின்னணி இசையில் இந்திய அளவில்கூட அவரளவிற்கு உணர்வெழுச்சியையும், இசைக் கருவிகளின் புனைவுச்ச நெடுமையிலிருந்து உருக்கொள்ளும் கற்பனையையும் சாஸ்திரிய உள்ளடக்கத்துடன் கிராமிய சந்தங்களையும் ஒன்றிணைத்து அதிசயங்களை நிகழ்த்துபவர்கள் யாருமில்லை.

               அவர் இசையமைக்கும் பாடல்களுக்கான காட்சியமைப்பு தவிர்த்து, ஒட்டு மொத்த படத்தின் ஒவ்வொரு காட்சி நிலைமைக்கும் அதிகபட்ச சாத்திய பின்னணி இசையை, அந்தக் காட்சி கொடுக்க வேண்டிய உணர்வொழுங்கை, ஸ்வர கட்டமைப்பை, மிக அநாயசமாக, துரித கதியில்  இசைக் குறிப்புகளாக எழுதும் இசையமைப்பாளர் இளையராஜாவைத் தவிர வேறு யாருமில்லை என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்கப்போவதில்லை.

                அவர், தமிழில் வந்த மிக முக்கியமான, தமிழ் திரைப்பட வரலாற்றின் மைல் கற்கள் என்று சொல்லக்கூடிய பெரும்பான்மையான படங்களுக்கு இசையமைத்தவர். அத்தகைய படங்களில் குடும்பம், அரசியல், பொருளாதாரம், கம்யூனிஸம், மனப்பிறழ்வு, காதல், மசாலா என சகல கதைக் களன்களையும்,  கதை மாந்தர்களையும், அவர்களின் உணர்வு நிலைகளையும், உணர்ச்சி பதற்றங்களையும் தன்னுள் உள் வாங்கி அதற்கான, அத்தகைய காட்சிகளுக்கான இசைக் கோவைகளை மிகக் பொருத்தமாக உருவாக்கியவர்.

                 திரைப்படம் என்பது மக்கள் சமூகத்திலிருந்துதான் உருவாகின்றது. எனவே ஒரு எழுத்தாளனுக்கு இணையாக, ஒரு இயக்குநருக்கு தோன்றும் காட்சிப் புலத்திற்கான உணர்வொழுங்கை, அந்தக் காட்சியமைப்பிலிருந்து இசை வடிவத்திற்கு மடைமாற்றுவதென்பது எளிதானதில்லை. கூடவே இவை எதுவும் தெரியாமல், ஒரு சமூகத்தில் மனித வினையாற்றலை மிக எளிய, ஆனால் அழுத்தமான இசை வடிவமாக மாற்றுபவர் ஒரு துறையில் சிறந்தவர், மற்ற ஏதும் அறியாதவர் என்பதற்கு உதாரணமாக்க முடியாது.

                    இளையராஜாவிற்கு எது சரி, எது தவறு என்று நன்றாகவே தெரியும். அதாவது தனக்கு எது சரி, எது தவறு என்று நன்றாகவே தெரியும். எனவே அவர் மோடியை ஏன் அம்பேத்கருடன் ஒப்பிடுகிறார்? பா.ஜ.க ஆட்சியை நல்லாட்சி என்று ஏன் முன்னுரை வழங்குகிறார் என்றால், அவருக்கு இதுப் பிடித்திருக்கிறது. அதனால் அம்பேத்கரைப் பற்றிய பிம்பங்களின் இத்தனை நாள் நிலைப்பாடுகளை இத்தனை வருடங்களுக்குப் பிறகு மறுவுருவாக்கம் செய்கிறார். அம்பேத்கரையே இந்த ஆட்சி நல்லாட்சிதான் என்று சான்றளிக்க வற்புறுத்துகிறார். அல்லது அப்படி ஒன்றை அனுமதிக்கிறார். "தான்" என்ற அகங்காரத்தை ஒழித்தவரே ஞானி. ஆனால் ஒரு படைப்பாளி "நான்" மூலமே உருவாகிறான். ஆனால் இரண்டும் சாத்தியப்படும் இடம் ஒரு போலிதான். அது எதேச்சையாக ஒளி வீசுகிறது. அல்லது அதை மாபெரும் கருணை என்று நாம் நம்பிக் கொண்டிருக்கிறோம். அரசியல் நிலைப்பாடுகளில் தான் மாட்டிக் கொண்டேன் என்று வருத்தம் அடைவதில்லை. தன் இசையை இத்தனை நாட்களாக அதை நோக்கியே முன்னெடுத்தார் என்பது வரம்பற்ற செயல்பாடுகளால் நிரூபிக்கிறார்.  இதை நாம் மறுத்தால் அவரது இசையை முற்றாக மறுத்தாக வேண்டும். ஆனால் நமக்கு வேறு நாதியில்லை. வாய்த்ததே நல்வாய்ப்பாக வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். இது தமிழ்நாட்டின் நிலை மட்டுமல்ல. இது இந்தியாவின் நிலை மட்டுமில்லை. இது உலகம் முழுக்க நிலவும் சனாதன நிலை.

           நீதி தேவதையின் தர்க்கம் பாரபட்சமற்றது. அதுவே சாக்ரட்டீஸை விஷம் நிரம்பிய கோப்பையை காற்றில் ஏந்தி சமத்துவம் காண முடிந்தது. தான் பெரிய சிந்தனையாளன் என்பதால் நீதியின்பால் விதிவிலக்கை அவர் அனுமதிக்கவில்லை. சட்டம் எல்லோருக்கும் சமம் என்பது மக்களாலேயே வலுவான உரையாடல்களின் மூலம் மறுதலிக்கப்படுகிறது. இங்கே, அம்பேத்கர் எவ்வாறு ஓர் இனக்குழுவின் விடுதலைக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் போராடினாரோ அதையே ஒரு பேரினத்தின் விடுதலை போன்ற பாசிசத்திற்கு ஒப்பு வைக்கப்படுகிறது. எல்லோரும் சந்தர்ப்பவாதிகளாக மாற்றமடைந்துவிட்டதை நம்ப மறுக்கிறார்கள். ஒரு பெண் குழந்தையை வளர்த்தெடுக்கும் உரிமை தனக்கு இருப்பதாலேயே அக்குழந்தையின் பால் பாலியல் செயல்பாடு உரிமையுடையது என ஒரு தகப்பனின் நம்பிக்கைக்கு ஒப்பான கொடுமை இது.

                  எனவே, இனிமேல் அறிவு தளம் என்ற "ஒன்றை" நிலைத்த ஒரு வரையறைக்குள்ளே வைத்திருப்பது மொழியின் பெலஹீனம். அல்லது சமூகத்தின் பெலஹீனம். அல்லது கருத்தியல் பெலஹீனம். இது புதிய மனோபாவம். புதிய மனப் பழக்கங்களைக் தேர்ந்து கொண்டவர்கள் சுய சாதிப் பிரச்சனைகளுக்கு அந்த நிலைக்காகப் போராடியவரையே விட்டுக் கொடுக்கும் கருத்துவரைக் கொண்டு செல்வது, அல்லது அதற்கான காரணங்களைக் கொண்டிருப்பது வியப்பானதில்லை என்ற அறமற்ற நிலைக்கு வந்துவிட வேண்டும். தர்க்கம் கருத்தைக் கடந்ததாக இருக்கிறது. அது ஒரு கொலையாளியின் கையை மட்டுமே தண்டிக்க வகை செய்கிறது.

           ஊறுகாய் வேண்டுமா, சோறு வேண்டுமா என்பதற்கு நாம் முதலாவதையே தேர்ந்தெடுக்க வேண்டும்.

            நொடிக்கு ஆயிரம் வாகனங்கள் கடக்க, விபத்து நடந்த அந்த ஒரு வாகனத்தைப் பற்றியே கவனம் திரும்புவதே ஆரோக்கியமான மனநிலை. மீந்த தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்பது வாகனங்களை கவனம் கொள்ளாதது இயல்பு. ஆனால் அந்த ஒரு வாகனத்தை பொருட்படுத்தாமல் கடப்பது மானுட வர்க்கத்திற்கே துரோகிப்பது போல. ஆனால் கருத்தை முதன்மைப்படுத்தாமல் கருதுகிறவர்களை பொருத்திப் பார்ப்பதை தர்க்கம் எளிதாக்குகிறது. இனி தங்க ஊசிகளைக் கண்களில் குத்திக் கொண்டு அம்மனுக்கு குலவை சொல்ல வேண்டியதுதான் மிச்சம்.