Tuesday, October 3, 2023

ஒலியில்லாத உலகம் எவ்வளவு அபத்தமானது?

 

"லஜ்ஜாவதியே என்ன

அசத்துற ரதியே லஜ்ஜாவதியே

என்ன அசத்துற ரதியே ராட்சசியோ

தேவதையோ ரெண்டும் சேர்ந்த

பெண்ணோ அடை மழையோ

அனல் வெயிலோ ரெண்டும்

சேர்ந்த கண்ணோ...."


2004 வாக்கில் வெளி வந்த 4 ஸ்டூடண்ட்ஸ் என்ற மலையாளப்படத்தின் தமிழ் மாற்றுப் படப்பாடல்தான் இது.


ஜசி கிஃப்ட் இசையமைத்து பாடிய பாடல் அக்காலத்தில் மிகப் பிரபலம். பரத்தும் கோபிகாவும் நடித்திருப்பார்கள். கோபிகா உண்மையிலேயே ஒரு தேவதை போலவே இருப்பார். பரத் விடலைப் பையன்.


இந்தப் பாட்டின் காட்சி வடிவத்தை நான் முதலில் சி. மணி வீட்டில்தான் பார்த்தேன்.


CRT TV. Sony என்று நினைக்கிறேன். அவ்வளவு பெரிய அளவில் அகண்ட காட்சி. அவரது அறையை கால்வாசி நிறைத்திருக்கும். Turbo Speaker. ஒலி அளவைக் கூட்டினால், தியேட்டர் போல இருக்கும். ஆனால் சி. மணி 2 அல்லது 3 புள்ளிகளுக்கு மேல் வைக்க மாட்டார்.


நிறைய சமயங்களில் BBC, NDTV  சில மூவி சேனல்கள் ஓடும். 


நான் உட்கார்ந்திருக்கும்போது முக்கியமான செய்தி ஏதாகிலும் வந்தால் அவரது கவனம் சட்டென மாறும். ஆனால் ஒலி அளவை பெரிதாகக் கூட்ட மாட்டார். மிக உன்னிப்பாகக் கேட்டால்கூட புரியாது. சி. மணியின் வீடு பிரதான சாலை ஓரமே இருந்ததால் போக்குவரத்து சத்தம் TV ஒலியைத் தின்றுவிடும். 


நான்தான் தடுமாறுவேன். சி. மணி இன்னும் இன்னும் குறைத்துக் கேட்டுக் கொண்டிருப்பார்.


"கொஞ்சம் செளவுண்ட் வைங்க" என்று சொல்ல முடியாது. எனது வீட்டிற்குப் போய் அட்டகாசமாக வைத்துக் கேட்க வேண்டும் என்று நினைப்பேன். ஆனால் அவரது குறைந்த ஒலியளவின் இரகசியம் மிகப் பிறகுதான் தெரிந்து கொண்டேன்.


அதன் மூலம் அவர் ஒரு தியான முறைபோல அந்தக் கேட்டலை மாற்ற முயன்றிருக்கிறார். தனது கவனத்தை அசாத்தியமாகக் குவிப்பதற்கான பயிற்சியின் வெற்றிதான் அது என்று அவர் புத்தகங்களை படிக்கும்போதும் புரிந்து கொண்டேன். வேகமாகப் புரட்டுவார். ஆனால் படித்துவிடுவார்.


அவர் ஏன் அந்தப் பாடலை விரும்பிக் கேட்க வேண்டும்? 


அது ஒரு புதிய முயற்சி. கேண்டிட் கேமராவை வைத்து, அகண்ட கோணத்தில் எடுக்கப்பட்ட ஒரு துள்ளல் பாடல். காட்சி வடிவில் அது அதன் அடுத்த நகர்வை எப்படிக் காட்டும் என்பது ஒரு மர்மமான ஒளிப்பதிவு. 


சி. மணியின் 'நரகம்' நீள் கவிதை இதை போன்ற ஒரு காட்சி வடிவத்தைத்தான் வாசிப்பனுபவத்தில் தரக்கூடும். அந்த உருவாக்க மனம்தான் அந்தப் பாடலை வரும்போதெல்லாம் மிகக் குறைந்த ஒலியளவில் மீண்டும் மீண்டும் கேட்க வைத்திருக்கிறது.


ஆனாலும் எனக்கு மட்டுந்தானா, கோபிகா அற்புத தேவதையாக அந்த Headband அணிந்து வருவது என்று தெரியவில்லை.


ஒரு நாள் சி. மணி சொன்னார். "எந்த நடன பாடலாக இருந்தாலும் ஒலியை Mute செய்துவிட்டுப் பாருங்கள்".


ஒலியில்லாத உலகம் எவ்வளவு அபத்தமானது? பைத்தியக்காரத் தனமமானது?


அவர் வீட்டில் ஒரு அறை முழுக்க LP Recordகள் இருக்கும். அந்த ஃப்ளேயர், அதன் ஊசி முனைதான் எவ்வளவு கூர்மையானது? எவ்வளவு நிசப்தமானது?


இன்று சி. மணியின் பிறந்த நாள்(03-10-2023). 

அவர் நினைவு கடும் நினைவு.