Thursday, January 21, 2010

சாகிப்கிரான் கவிதைகள் - புது விசை டிசம்பர் 2009



சாலையோரங்களில் தென்படும் வயோதிகளும் கூடவே அவர்களது கிழட்டு நாய்களும்


......... வீடு.

அதன் ஒவ்வொரு நிலையிலும்
ஏ தாவ தொரு
விலங்கு
துணையாக இருக்கிறது.

அப்படியே
குட்டிச் சுவராகும் வரை
கூடவேயிருப்பது பூனையோ நாயோ.
தவிர
கிண்ணத்தைத் தட்டினால் ஓடிவரும்
பூனையாகவும்
பந்தை வீசினால் ஓடும்
நாயாகவும்.
வேறெது இருக்கக்கூடும்
இறுதிவரை?

பூவை
காயை
கனியை
பிறகொரு
வெறுமையையும்
காய்க்கிற தாவரம்
கல்மரம் எனப்படுகிறது

என்றைக்குமான.



மொழியற்ற இடத்தில் கவிதையற்ற ஒன்றை

வடித்துச் காட்டும் பித்தன்

நீங்களிரு வரும்
பெயரில் கூட
நிகழ்வின் வெவ்
வேறு முனைகளாக
வே யிருக்கரீர்கள்.

உன் பெயரையும்
அவன் பெயரையும்
ஒன்று . . .
இரண்டு . . .
என இலக்கமிட்டு
திருத்திப் பதிக்கிறேன்.

இப்போது
எனது அலைபேசியின்
பெயரடங்கல் பகுதியில்
நீங்களிருவரும் அருகருகில்
வேறெந்த பெயர்களிலுமில்லாத
வசீகரமும் அர்த்தமும்
மிளிர்கிறது உங்கள்
ஜோடியில்.

நெருப்பை பஞ்சுப்பொதியில்
பொதிக்கிறேன்.
ஆறுகளை வழிமாற்றுகிறேன்.
எல்லைகளைத் திருத்தி
நாடுகளை ஒழுங்குபடுத்துகிறேன்.
கண்டங்களை நகர்த்தி
பூமியை அழகுபடுத்துகிறேன்.
இந்த அழகை
வெப்பம் தணிய
கொஞ்சம் தள்ளி வைக்கிறேன்.
புதிய பாதையில்
குளிர்ந்த பூமி
அன்பும் சாந்தமும்
அடைகிறது.

எல்லாமே
என் வழியாக நிகழ

எத்தனை சாத்தியங்களை
கொண்டிருக்கிறது
இந்த அலைபேசி?

இவ்வாறே
உங்கள் கருவியொன்றை
நான் இறுதியாக
வடி
வமைக்கிறேன்.


அசரீரி கட்டமைக்கும் சமூகத்திற்கான மதிப்புரை


இப்படியாக
ஒரு பழம் உண்டாயிற்று.
அது பச்சை ரத்த நிறமும்
மாம்ச மணமும்
கொண்டதாயிருக்கிறது.

எம் மறைக்கு
அவ்வைக் கிழவி
கொண்டு சேர்க்க
பழத்தைக் கீறும்
சாத்தியத்தில் மூன்று
கத்திகள் மின்னலிட்டன.

ஆனால்
ஓர் அசரீரி:
“பழத்தை------”
என்றது மறையெங்கும்
தோட்டமும் காடுகளுமென
அடர்ந்தன.
பிறகு
“பகிர்ந்துண்டால்------”
என்றதும் இரவாகி
பச்சைமர மொன்று
பற்றியெரிந்தது.
அதுலிருந்து வந்த
அவ்வசரீரி,
“பழத்தின் பலன் கிட்டாது.”
என்று முடித்துக் கொண்டது.

உடனே
எனதறை இந்த மாநகரின்
மையப்பகுதியின்
சிமெண்ட் மரங்களடர்ந்த
பொட்டலின் உச்சியில்
தொங்கலிட்டபடி இருக்கிறது.
நிர்வாண நகரமொன்றின்
ஆணையர் என் வீட்டு
கழிவறைவரை பொருத்திய
காமிரா கண்களால்
யோனிகளையும் தொங்குறிகளையும்
வெறிக்க
எனக்காக இணையம்
இந்த உலகைச் சுற்றிவருகிறது
முதலில்.

எனவே
பழத்தை நான் கை பற்றுகிறேன்.
பழம் நழுவுவதாக இருக்கிறது.
கத்தி என் கைக்கு வருகிறது.
மூவரில் நானே
பழத்தை ஜீராவில்
முக்கவைத்து மென்மையாக
கீனுகிறேன்.
பழம் தொண்டையில் வழுக்குகிறது.

முழு பழமாக மட்டுமில்லை
பல பழங்களை
கத்திபோன்ற ஸ்பூனைக்கொண்டு
ஜீராவுடன், மதுவுடன்,
துரோகத்துடன், கயமையுடன்
பழக்கத்தின்
மிகத் தேர்ந்த பாவனையுடன்
படைப்பின் மென்மையைத்
தின்று கொண்டிருக்கிறது
நகரம்.

அசரீரி
மாற்று கருத்துக்களை
வழங்கியபடி வெளியெங்கும்
தொங்கிக் கொண்டிருக்கிறது.