Wednesday, March 11, 2009

நான் இறங்கும் நிறுத்தத்தில் மழை பெய்துகொண்டு இருக்கிறது

ஜீவன் பென்னியின்
கவிதைத் தொகுப்பிற்கான மதிப்புரை - சாகிப்கிரான்

கவிதையை எது உருவாக்குகிறது அல்லது கவிதை ஏன் உருவாகிறது என்ற கேள்விக்கு நிறைய பதில்கள் இருக்கலாம். ஆனால் ஒரு கவிஞனின் நிலைப்பாடு சார்ந்து இது தடம் மாறியும் போகலாம். இது கவிதை குறித்த ஒரு பொதுவான வரையறைக்கு நம்மைக் கொண்டு செல்வதைக் காணலாம். இதுவே எப்போதும் கவிதை குறித்த நிலையான சூக்கும வடிவை நிலை நிறுத்துவதாக அமைகிறது.

எனவே எப்போதும் கவிதை ஒரு திடப்பொருளாக முடிவுறாமல் காற்றுப் பொருளாகவே தன்னைக் கட்டற்று விரித்துக் கொள்ளுகிறது. கவிதை, உரைநடை போல நீர்மப் பொருளாக வழிந்தோடிவிடுவதில்லை. இதுவே கவிதையைப் பல பரிணாமங்களில் சாத்தியப்படுத்துகிறது.

ஜீவன் பென்னி தனது முன்னுரையில் ‘கவிதைகள் குறித்த எல்லா ஆய்வுகளும் பிரக்ஞையின் வழியே படரும்போது பெரும் குழப்பங்களையேத் தோற்றுவிக்கின்றன’ என்று துவங்குகிறார். இது ஒருவிதத்தில் கவிதையின் மேல் வைக்கப்படும் விமர்சனத்தைப் புறக்கணிப்பதாக அல்லது மறுப்பதாகவுமே அமைகிறது. அவர் தொடர்ந்து எழுதும் அந்த முன்னுரையின் தொடர்ச்சியாக,’தமிழ்ச்சூழலில் தொடர்ந்து இயங்குவதும் இருத்தலும் எதிர்வினையாற்றலும் மேற்சொன்ன குழப்பங்களை தீவிரமாக அனுபவிப்பதேயாகும். கவிதைகள் குறித்த பிறரின் எந்தவொரு தார்மீகக் கோட்பாடுகளின் சொற்களின் மீதும் நம்பிக்கையற்றவனாகவும் ஒவ்வொருவரும் கவிதை குறித்த மாறுபட்ட சொற்களையே தனக்கென வைத்திருக்க வேண்டுமென்று நம்புபவனாகவுமிருக்கிறேன்’என்று குறிப்பிடுகிறார்.

ஒரு கவிதையை வாசிக்கும்போது நம் மனம் இருவிதத்தில் செயல்படுகிறது. அது சுகிப்பு மனநிலையும் விமர்சன மனநிலையும் ஆகும். இது சுகிப்பை அடிப்படையாகக் கொண்ட விமர்சனம் என்று வைத்துக்கொள்ளலாம். மனிதர்களின் மாறுபட்ட சுகிப்பே வேறுபட்ட விமர்சனத்தை முன்வைக்கிறது. ஆனால் எல்லா விமர்சனங்களும் மையமான ஒழுங்குபாடு ஒன்றை முன்வைப்பதைத் தொடர்ந்த கவனிப்பில் கண்டுகொள்ளலாம். இது ஸ்துல வடிவிலிருந்து சூக்கும வடிவை அடையும் ஒரு செயல் முறை. இது தவிர்க்கப்பட்டால் அல்லது புறக்கணிக்கப்பட்டால் மொழி மொழியற்ற ஒரு நிலைக்குச் சென்றுவிடும், அதாவது ஒரு சொல் தனது சொல்லற்ற நிலையடைவது. அது மெளனம். செயல்பாடற்ற மெளனம்.

ஜீவன் பென்னியின் இத்தகைய நிலைப்படு அவரது உரிமை என்பதால் என்னுடைய பார்வையும் அதே நிலைகொண்ட ஒரு நியாயமாகிவிடுகிறது. ஒரு படைப்பு, எழுதப்படுவதற்கும் வாசிக்கப்படுவதற்கும் இடையில் எழும் அந்த மெளனத்தையே பேசுகிறது.

ஜீவன் பென்னியின் தொகுப்பை நான் குறிப்பிட்ட மூன்று கவிதைகளின் மூலமாக முழுத்தொகுப்பிற்கான ஒரு பார்வையைத் தர முயல்கிறேன்.

சீன மொழியில் லாவோட்சு எழுதிய நூல் தாவோ தே ஜிங். இது நமது திருக்குறளைப்போல இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முற்பட்டது. இதில் இந்த பிரபஞ்சத் தோற்றம் பற்றிய பாடலே முதல் பாடலாக அமைந்துள்ளது.

அந்த முதல் பாடல்,

இருத்தலின்மையும் இருத்தலும்
ஆதியில் ஒரே மாதிரி;
ஆனால், வெளிப்படும்போது
வேறு வேறு.
இந்த ஒற்றுமை
நுண்மையின் நுண்மை எனப்படுகிறது.
பிரபஞ்சப் பகுதிகளின் தொடக்கம்
வெளிவருகிற வாயில்
இந்த எல்லையற்ற
நுண்மையின் நுண்மையாகும்.

இது நவீன BigBang கோட்பாட்டையே முன் வைக்கிறது. அந்த பெருவெடிப்பு நிகழ்வதற்கு முன் சூன்யமும் சூன்யமற்ற இருத்தலும் இரு வேறாக இல்லாமல் ஒன்றாகவே இருந்திருக்கின்றன. அதாவது இருத்தலின்மை என்ற ஒன்று மட்டுமே இருந்திருக்கிறது. அதுவே ஆதி, பிரம்மா, எல்லாம் கடந்ததாக பரம்பொருள். அந்த வெடிப்பே அதை இரண்டாக்குகிறது. அந்த நிகழ்வின் காரணம் அல்லது இயல்பின் நோக்கமே பிரபஞ்ச ரகசியமாகப் பார்க்கப்படுகிறது. இதுவே நுண்மையின் நுண்மையான அனைத்து ரகசியங்களையும் தன்னுள் கொண்டுள்ளது. வெடிப்பிற்கு அடுத்த கணம் இருத்தலின்மையிலிருந்து இருத்தல் உருவாகிறது. எனவே அந்த ஒன்றிலிருந்து இரண்டு உருவாகிறது. இதுவே எல்லாவற்றிற்கும் மூலமாகிறது.

ஜீவன் பென்னி தனது ‘சூன்யம்’ என்ற கவிதையில்

சூன்யம் உண்மைகளின் பெருவெளி எனத் துவங்குகிறார்.

அடுத்த வரியில்

சிசுவின் உள்ளங்கைகளிலிருக்கும் குளிர்ந்த கடவுளைப் போல்

என்கிறார்.

இது கவிதையை அதன் விஞ்ஞான விளக்கத்திலிருந்து கட்டற்ற தன்மைக்குக் கொண்டு செல்கிறது. இதுவே ஒரு பேருண்மை, அல்லது ஒரு விஷயம் கவிதையாக்கப்படுவதில் துவங்குகிறது. பிறகு கவிதை இவ்வாறு முடிவடைகிறது.

சூன்யத்தின் சூழ்ச்சியால் ஒரு ஆப்பிள்தான் விழவேண்டும்
உண்மை இல்லை
உண்மைகள் உண்டு.

இங்கே மதம் சார்ந்த அரசியல் அடித்து நொறுக்கப்படுகிறது. அந்த மாபெரும் துக்கமானது படிப்படியாக அறிவியலாக்கப்பட்டு, இந்த மானுட சமுதாயத்தை துண்டாடிக்கொண்டிருக்கும் ஒரு காரணியாக முன் வைக்கப்படுகிறது. இந்த பிரபஞ்சத்தின் இருப்பு அதன் நுண்மையின் நுண்மையாக மாற்றப்பட்டு, மதம் என்ற எல்லைக்கோடு வேரறுக்கப்பட்டு, கவிதையின் பல்வேறுபட்ட சாத்தியத்தை முன் வைக்கிறது.
இவ்வாறான பேருண்மைகளிலிருந்தும் கருதுகோள்களிலிருந்தும் தொன்மங்களிலிருந்தும் கவிதை ஏற்படுத்தும் சடுதி மாற்றமானது, வாசகனை ஒரு குறிப்பிட்ட திசை நோக்கியே கொண்டு செல்கிறது. இது கவிதையின் ஆன்மாவிற்கு தொடர்ந்து சாதகமாகவே செயல்படும் எனக் கூறிவிடவும் முடியாது. தொகுப்பில் ஏராளமான கவிதைகள் ஆன்மத் தேடலுடனும் சமூகப் பிரச்சனை சார்ந்தும் தொன்மங்களை மீட்டெடுத்தும் தனக்கென தனியான ஒரு சொல்லாடல் முறையுடன் வெவ்வேறு விதமான கவிதா அனுபவத்தைத் தருவனவாக இருக்கின்றன.

இத்தகைய கவிதைகள் ஒரு தளத்தில் நிற்கின்றன என்றால், ஜீவன் பென்னியின் தோழி என்ற கவிதை மற்றொரு சாத்தியப்பாட்டிற்கு கவிதையை நகர்த்துகின்றது.

உளவியலில் கனவு என்பது மிக முக்கிய பங்குவகிக்கிறது. அதுவே ஒரு மனிதனின் வாழ்க்கையிலும் தனது ஆளுமையைச் செலுத்துகிறது. நிறைவேறாத ஆசைகளே கனவாக எழும்புகின்றன என விளக்கங்களும் சொல்லப்படுகின்றன. ஆனால் மனித மனம் சார்ந்து இது அறிவியலின் சகல விளக்கங்களையும் சாராத ஒரு அபூர்வமாகவே தொக்கி நிற்கிறது.

கவிதை இப்படி ஆரம்பிக்கிறது,

ஒரு கனவில் உன்னைக் காணத் தொடங்கினேன்
அல்லதுவொரு கனவைப்போல காணத் தொடங்கினேன்

இந்தக் கவிதை கனவை ஒரு கொண்டாட்டமாகப் பாவிக்கிறது. கொண்டாட்டமே பரிபூரண சுகிப்பை சாத்தியப்படுத்துகிறது. சிறு குறுக்கீடுமற்ற அனுபவ வெளியானது கனவால் வழங்கப்படுகிறது. மனம் வேறு அனுபவம் வேறாக இல்லாமல் இரண்டும் ஒன்றாகவே செயல்படுவதால் கனவின் உணர்வெழுச்சியானது புலன்களால் உணரப்படும் அந்த நிஜ நிகழ்வினைப் புறந்தள்ளிவிடுகிறது. இதுவே ஜீவன் பென்னியை தனது காதலியைக் கனவு நிகழ்வாகவே கற்பித்துக் கொள்ள செய்கிறது. இந்தக் கற்பிதமானது கவியின் மற்ற சில கவிதைகளிலும் வெகு இயல்பாகக் காணக்கிடக்கிறது. இது கவியாளுமையின் ஒரு கூறாகத் திகழ்கிறது.

அடுத்ததாக ஒரு நீண்ட அனுபவமானது ஒரு கருதுகோளை முன் வைக்கிறது. அந்த கருதுகோளானது முன் எப்போதும் நம்பப்பட்டதற்கு எதிரான ஒன்றாக, சட்டென ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவதன் மூலம் எல்லா நம்பிக்கைகளையும் கேள்விக்குள்ளாக்குவதாக அமைகிறது. இது போன்ற கவிதைகள் ஒரு கவிஞனின் தொடர்ந்த தேடலின் மூலமாகவே கண்டடையப் படுகின்றன.

அப்படிப்பட்ட ஒரு கவிதை,

கண்களால் காண்பதும் பொய்
காதுகளால் கேட்பதும் பொய்
தீர விசாரிப்பதும் பொய்
எல்லாம் பொய்.

உண்மை, பொய் என்பன யாவும் கற்பிதங்களே. ஒன்றைச் சார்ந்து உண்மையாகக் கொள்ளப்படும் ஒன்று, மற்றொரு வகையில் பொய்யாக நிற்கிறது. எனவே நிரந்திர உண்மை என்றோ அல்லது நிரந்திர பொய்யென்றோ ஏதுமில்லை. அறிவியலில் அணுவைப் பிளக்க முடியாது என்பது அதைப் பிளக்கும் வரை உண்மையாகவே கொள்ளப்பட்டது. மற்றொரு விதத்தில் சொன்னால், எல்லாம் பொய் என்பதும் நிலையற்ற ஒன்றாகவே இருக்கிறது.

இதுவே வாழ்வை மிக நெருக்கடியான தருணங்களிலும் முன்னெடுக்க வைக்கிறது. சாமான்யன் இதை நம்பிக்கை என்கிறான். தத்துவவாதி தீர்கதரிசனம் என்கிறான். இந்த பார்வையின் வழியாகவே ஜீவன் பென்னி தன்னை இனம் காட்டிக் கொள்கிறார். இக்கவிதையே தொகுப்பின் முதல் கவிதையாக இருக்கிறது. இதுவே கவியைப் பார்க்கும் ஜன்னலாகவும் இருக்கிறது.

இப்படிப்பட்ட ஒரு தத்துவப் பார்வையுடன் முன் வைக்கப்படும் படைப்புகள் மொழி சார்ந்தும் வெளிப்படுத்த எடுத்துக்கொண்ட வடிவம் சார்ந்தும் சில சிக்கல்களை எதிர்கொள்கிறன. அந்த வகையில் ஜீவன் பென்னியின் கவிதைகளில் தொடர்ந்த காட்சி அடுக்குகளினால் சொல்லப்படும் ஒரு நிகழ்வு, மொழி ஆளுமையை ஊனப்படுத்துகின்றது. சில கவிதைகளில் புனைவு மிகுந்த வறட்சியைக் கொடுத்தாலும் மொழியின் எளிமையால் கவிதை தனது ஆன்மாவை மீட்டெடுத்துக் கொள்கிறது.

கவிஞர் தற்கால ஒரு இளைஞனின் பார்வையுடன் சகல பிரச்சனைகளையும் தனது பாடுபொருளாகக் கொண்டு, உலகமயமாக்கல், அன்பு, காமம், தன்னியல்பில் வாழ இயலாத ஏக்கம், தத்துவத் தேடல் எனத் தனக்கென குறிப்பிட்ட சில குறியீடுகளை கையாள்கிறார். காகம், பூனை, கடவுளின் ஆப்பிள், இரவு, வண்ணத்துப் பூச்சி என தனித்தன்மையுடன் விரிந்தாலும் சில கவிதைகளில் வெற்று குறியீடுகளாக மட்டுமே எஞ்சிவிடுகின்றன. தேடலின் நீண்ட பயணம் என்றுமே இத்தகைய சில விபத்துக்களைக் கொண்டிருக்கவே செய்யும். ஆனால் முழுத்தொகுப்பும் நமக்கு ஒரு மாறுபட்ட தரிசனத்தைத் தரும்விதத்தில் பல்வேறுபட்ட பார்வை நுணுக்கங்களுடன் கவிதா அனுபவத்தைத் தர முயல்கின்றன.

இத்தகைய ஒரு தொகுப்பில் உள்ள கவிதைகள் நமக்கு எதைத் தருகின்றன?

ஒரு ஜீவனின் அனுபவத்தையா, உணர்வெழுச்சியையா, தீர்கதரிசனத்தையா அல்லது மிக அந்தரங்கமான கவிதா அனுபவத்தையா?

எதுவாகவும் இருக்கலாம். ஆனால் ஒரு கவியின் முதல் கவிதைத் தொகுப்பிற்கான அவருடைய முன்னுரை அந்தக் கவிதைத் தொகுப்பிலிருக்கும் கவிதைகளைவிட இவ்வளவு செறிவாக இருக்குமென்று நான் எதிர்பார்கவில்லை.

-------------------------------------------

மணல் வீடு, களரி தெருக்கூத்துப் பயிற்சிப்பட்டறை இணைந்து மேட்டூர் ஏர்வாடியில் 24-01-09 அன்று நடத்திய மக்கள் கலை இலக்கிய விழாவில் வாசிக்கப்பட்ட மதிப்புரை.