ஒரு படைப்பாளியின் அறமும் அனுபவங்களும் படைப்பாகும் கணம் என்பது ஒருவகையில் அந்தப் படைப்பாளியின் சிந்தனைகளும் அதன் உள்ளடுக்குகளும் ஒரு மொழி வழியாகவே வெளிப்படுவதால், அந்த மொழியை மிக நுட்பமாகக் கையாளக் கற்றுக் கொள்ளவேண்டும் என்ற ஒரு நிலைப்பாட்டை விட்டு வெளியேறிவிடுவதற்கான அத்தனை சாத்தியங்களும் விட்டல்ராவின் கதைகளை வாசிக்கும்போது நிகழ்கின்றன.
இந்தக் கட்டுரை விட்டல்ராவின் 33 கதைகள் அடங்கிய விட்டல்ராவ் கதைகள் என்ற நூலை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. எனது இளம்பிராயத்தில் 90 களில் நெருக்கமான இடைவெளி என்ற அவரது குறுநாவலை வாசித்துவிட்டு, அவரது கதைகளைத் தேடி வாசிக்கத் துவங்கினேன். கணையாழியில் வந்த அவரது பந்து பொறுக்கி என்ற சிறுகதை சிறந்த கதையாக அப்போது தேர்வாகியதுபோதுதான் அவர் கதைகளன் சேலத்தைச் சார்ந்தது என்று தெரிந்து கொண்டேன். அப்போது இப்போது இருப்பதுபோல தகவல் தொடர்பு இல்லை. கணையாழியை தேர்முட்டியை ஒட்டி இருக்கும் ஒரு சிறிய பெட்டிக்கடையில்தான் வாங்குவேன். கடைக்காரர், நா. பார்த்தசாரதியின் தீபத்தையும் சேர்த்து எடுத்துவைப்பார். ஆனால் எனக்கு கணையாழி தந்த அனுபவத்தை, தீபம் தரவில்லை.
வழக்கமான தீவிர இலக்கிய வாசகனாகத் தன்னை இருத்திக் கொள்ளும் ஒரு வாசகன் இவரது சிறுகதைகளின் தீவிரத் தன்மையாற்ற, மீயதார்த்தக் கதைகளை அப்படியே கடந்து போய்விடக் கூடும். அது மொழியின் ஆகச் சிறந்த வடிவ நேர்த்தியையோ, சொல்லுதலின் புதிய யுத்தியையோ, புதிர்த்தன்மையின் வியப்பிலோ, அல்லது கதை முடியும் திருப்பு முனையிலோ ஏமாந்துபோகும் ஒரு கலாப்பூர்வ அணுகலால்தானிருக்கும்.
தொகுப்பில் உள்ள கதைகள் யாவுமே, ஒரு நிகழ்வை, அல்லது நிகழ்வுக் கோர்வையை எந்தப் புனைவுமின்றி நேரடியான , சம்பவத்திற்கான வெளி கற்பனையால் உண்டாக்கும் அபூர்வங்கள் இல்லாதது போன்ற ஒரு தோற்றத்தையேக் கொண்டிருக்கின்றன. ஆனால் அது அப்படி இல்லை என்று முழுத் தொகுப்பையும் வாசித்துவிட்டு, ஒரு பயணம் மேற்கொள்ளும் சிந்தனையானது, அதிர்ச்சிக்கு உள்ளாகிறது.
தொகுப்பில் உள்ள முதல் கதையான சந்திப்பு, பெண் பார்க்க மாப்பிள்ளை வருவதுதான். அதேபோலக் கடைசிக் கதையான சிதை ஒரு ஏழைப் பெண் ஊழியரின் இறுதிச் சடங்கில் நடக்கும் ஏழைப் பணக்கார மோதல்தான். ஆனால் இரண்டு கதைகளுமே, அதன் சம்பவத் தன்மையைத் தாண்டி ஒரு அதீத உள் ஒழுங்கைக் கொண்டிருக்கவே செய்கின்றன. வெறும் தகவல்களை மட்டுமே வைத்துக் கொண்டு ஒரு தீவிர இலக்கியப் பிரதியை உருவாக்குவதென்பது அசாதாரமானதுதான்.
விட்டல்ராவ், அடித்தட்டு மக்களை, அபூர்வமான அவர்களின் மன அமைப்புகளை, பெரும்பாலும் சமூகத்துக்கும் அவர்களுக்குமான வினையாற்றலை, மிக நுட்பமான தகவல்களுடன் சொல்வதிலும், ஒரு காலக்கட்டத்தின் பிராந்திய பதிவுகளை கதைகளில் கொண்டு வருவதும், துறைகள் சார்ந்து அவருக்கு இருக்கும் அனுபவங்களும், தொழில் சார்ந்து அவர் வெளிப்படுத்தும் செறிவும் அவரை ஒரு ஆளுமையாக வெளிப்படுத்தினாலும், இவற்றைத் தாண்டி அவரது படைப்புகள் கூர்மையான வாசகனுக்கு சொல்லும் மெய்ம்மைகளின் வீச்சே அவரை தனிப்படுத்திக் காட்டுகிறது.
தொகுப்பிலுள்ள கதைகளை வரிசைப்படி விளக்குவதோ, கதைகளை சொல்வதோ அவரது படைப்புகளின் உள்ளடுக்குகளை அணுக பயன்படுமா என்று தெரியவைல்லை. இந்தக் கட்டுரை, அப்படிப்பட்ட கதைத் தன்மையிலிருந்து விலகி, புறவயமான கூறுகளிலிருந்து அகவயமான மர்மங்களை நோக்கிய ஒரு தேடலாகத்தான் அமைகிறது. அப்படி எல்லாக் கதைகளையும் இங்கே எடுத்தாண்டுவிட முடியுமா என்பது கேள்விதான். எனவே, தேர்ந்த, அல்லது அப்படிப்பட்ட கதைகளைப் பற்றி மட்டும் ஒரு அறிமுகமாக இங்கே நாம் கருதிக் கொள்ளலாம்.
முதலாவதாக ’கடன்’ என்ற கதை, தனது நண்பன், கோவிந்தனைப் பற்றிய கதை. அவன் ஒரு வியாபரியின் மகன். கதை நாயகனின் அப்பா கடனுக்கு பதில் சொல்ல முடியாத தர்ம சங்கடத்திற்கு குடும்பத்தையே தலைகுனிய வைப்பவர். நண்பன் கோவிந்தன் சும்மா இருக்க மாட்டான். பள்ளிக்கூடம் விட்டதும் நேராக அவர்களுடைய ஜவுளிக் கடையில் போய் உட்கார்ந்துவிடுவான். யாருடனும் போய் விளையாடுபவனும் இல்லை. வாரந்தோரும் சந்தைக்குச் சொன்று ஏதாவது மொத்த விலைக் கடைகளில் வாங்கியப் பொருள்களை சின்ன பொட்டலங்களாக விற்று காசாக்குவான். இவனை துணைக்குக் கூட்டிப் போவான். ஒரு முறை இவனிடம் காசில்லாவிட்டாலும் சினிமாவிற்குக் கூட்டிப்போய் செலவு செய்கிறான். அடுத்தவாரம் ”மூணு ரூபா நீ தரணும்”, என்று இவனையும் கடனாளியாக்கிவிடுகிறான். அந்தக் கடனை அடைக்க நாற்பத்தைந்தாண்டுகள் கழித்து மீதமிருக்கும் இந்த மூன்று ரூபாய்க் கடனை அடைக்க கோவிந்தனுடைய ஊருக்கு சேலத்து மாம்பழங்களுடன் கிளம்புகிறான் கதாநாயகன். எல்லாம் மாறியிருக்கிறது. ஜவுளிக் கடையில் அவனுடைய தம்பி உட்காந்திருக்கின்றான். கோவிந்தன் மூளைக் கட்டிவந்து இறந்து போய்விட்டதாகச் சொல்கிறன். அம்மாவைப் போய்ப் பார்க்கச் சொல்கிறான். இவன் மாம்பழங்களை எடுத்துக் கொண்டு செல்கிறான். கதையில் கோவிந்தனின் அம்மாவின் கூற்றாக இது வருகிறது. “அவந்தான் சரியாவே படிக்கலே. வியாபாரத்திலயும் கெட்டியில்லே, செத்துப் போயாச்சு”. அவனால் கோவிந்தனின் கடனை அடைக்க முடியாமல் போவதாகக் கதை முடிகிறது. வாசகனுக்கான இந்தக் கதை ஸ்தூலமாக இதை விட்டுச் சென்றாலும், சூக்குமமாக வேறொன்றைச் சொல்கிறது. அது, ஒட்டு மொத்த மனித இனத்தின் தன்னுணர்வைத்தான். ஒரு மனிதனின் செயல்பாடு அவனது தன்னுணர்வை சார்ந்தே அமைகிறது. கோவிந்தன் ஓயாது அலைந்து வியாபாரம் செய்தது, அல்லது ஒரு மனிதன் இடையறாது இயங்குவது ஏதோ ஒருவிதத்தில் அவனது வாழ்நாளை சார்ந்தே இருக்கிறது. ஒன்று அவன் உச்சத்திற்கு போவதாகவோ, அல்லது அவனது மரணமோ அதை இயக்குகிறது. இது விதி என்ற குறுகிய சமன்பாட்டிற்குள் வராத தன்னுணர்வின் ஒரு பொருள் விளக்கமில்லாத உள்ளிணைந்த செயல்பாடு. மேலோட்டமாகக் கதை, அடைக்க முடியாத ஒரு கடனாக முடிவது, நம்மால் எவ்வளவு முயன்றும் விளங்கிக் கொள்ள முடியாத சவாலாகவே நிற்கிறது. அந்த சவால், மனிதனின் தன்னுணர்வு. இதையே விட்டல்ராவின் கதை தனது எளிமையினுள் திணித்து வைத்திருக்கிறது.
அடுத்ததாக எடுத்துக் கொள்ளும் கதை, ’தோற்றம்’ குருநாதனின் நண்பன் சேஷகிரி வெளிநாட்டில் வேலை செய்பவன், ஒரு நீர்வீழ்ச்சியைப் பார்க்கப் போன கார் பயண விபத்தில் இறந்துபோகிறான். அந்த சவம் விமானத்தில் பல நாள் கழித்து வருகிறது. அதை, தன் நண்பனைப் பார்க்கப் போகிறான். அப்படி குருநாதன் ரயிலில் செல்லும்போது, ரயில் விபத்து மரணம் ஒன்றைப் பார்க்கிறான். பிச்சைக்காரனின் சடலம் அவனது லுங்கியை உருவிப்போட்டு மூடியிருக்கிறது. இந்தக் காட்சி நண்பனின் சடலத்தை நன்கு பதப்படுத்தப்பட பெட்டியைப் பார்க்கும்போது அவனுக்கு நினைவு வருகிறது. கதை அவ்வளவுதான். வந்தவர்கள் அந்த பதப்படுத்தப்பட்ட பெட்டியைக் கண்டு வியக்கின்றனர். இங்கே இரண்டு சாராம்சங்கள் உள்ளன. ஒன்று, பிச்சைக்காரனை, போர்த்தியிருக்கும் லுங்கியில் மரணமாகப் பார்க்கும் கூட்டம் இங்கே அந்த பெட்டியை முதன்மைப்படுத்தி, சேஷகிரியை இரண்டாமிடத்திற்கு தள்ளுகிறது. அதாவது ஒரு மரத்தை வெட்டும்போது பதைக்கும் மனித மனங்கள், ஒரு வீடு கட்ட அங்கிருக்கும் மரங்களை வெட்டுவதை சிறு உறுத்தலும் இல்லாமல் கடப்பதைப் போல ஒரு மரணமும் நிகழ்வதை ஒரு புதிய மனோபாவமாக விட்டல்ராவ் காட்ட முயல்கிறார். ஒரு படைப்பாளியாகப் படிக்கும் வாசகன் ஒரு நிகழ்வை எப்படி மற்றொரு நிகழ்வில் பொருத்திக் கதையாக்குவது என்பதை பழகவும் ஒரு வாய்ப்பாக இந்தக் கதை இருக்கிறது. நிச்சயம் அவர் பதப்படுத்தப்பட்ட பெட்டியைத்தான் பார்த்திருப்பார்.
மற்றொரு கதை ’ஊதாமணியை’. பெரியம்மாதான் எல்லாம் லட்சுமி அம்மாவிற்கு. எதுவானாலும் கடிதம் போட்டால் உடனே ஓடிவந்து நிற்பாள் பெரியம்மா. எல்லாமே சரியாக நடப்பது பெரியம்மாவால்தான். அம்மா எப்போதும் பெரியம்மாவைப் பற்றியேதான் பேசியபடி இருப்பாள். அன்று திடீரென்று அம்மாவுக்கு மைல்ட் அடாக், பத்துநாட்களுக்குப் பிறகு கண் விழிக்கும் அம்மா, முதலில் கேட்கும் வார்த்தை “பெரியம்மா இன்னும் வரலையா?. இங்கே நடந்த அதே சமயம் பெரியம்மா நீரிழிவு முற்றி கோமாவிற்குப் போய், கோமாவிலேயே இறந்தும்விடுகிறாள். அம்மாவிற்கு இதை சொல்ல வேண்டாம் என்று டாக்டர் சொல்கிறார். நாட்கள் ஓடுகின்றன. பெரியம்மா வராததற்கு ஏதேதோ காரணங்களைச் சொல்லி சமாளிக்கின்றனர். நாள்பட அம்மா, பெரியம்மாவைப்பற்றிக் கேட்பதை நிறுத்திவிடுகிறாள். பெரிய மெளனம் நிலவுகிறது. ஒருநாள் விஷயத்தை ஒரு கடிதத்தில் எழுதி அம்மா பூஜை செய்யும் இடத்தில் வைத்துவிட்டு, திருச்சி பஸ்ஸுக்குப் பயணமாகிறான் கதாநாயகன். சரியோ, தவறோ இதைத் தவிர வேறு வழியில்லை என்று கதை முடிகிறது. ஒன்றுபட்ட இரண்டு ஆத்மாக்கள், தங்கள் மரணத்தைத் தன்னுணர்வில் அறிந்து கொள்கின்றன. ஆனால் அது, பிரக்ஞைக்குப் புரிவதில்லை. இருவரும் ஒரே சமயத்தில் தங்களுக்குள் அறியாமலேயே உடல்நலம் குன்றுவது அல்லது இறந்துபோவது அல்லது ஒருவர் இறந்துபோவது என்பது கதைகளில் சொல்லப்படுவது ஒருவகையான நாடகீய பாவனையாகத் தோன்றலாம். ஆனால் ஸ்டிபன் ஸ்பீல்பெர்க்கின் E.T படத்தில் வருவதைப்போல, ஏலியனுக்கும் அந்த சின்ன பையனுக்கும் மனமும் உடலும் ஏதோ ஒரு சூக்குமத்தில் இணைந்திருக்கும். கடைசியாக ஏலியன் இறக்கும் தருவாயில், அந்தப் பையனும் உடல் ரீதியிலான பின்னடைவை சந்திப்பான். இரண்டுபேருக்கும் ஒரே மதிரி இதயத்துடிப்பு குறையும். ஒரு கட்டத்தில், அவனது சூக்கும இணைவு விடுபட்டு சகஜமாவான். அந்த ஏலியன் அப்போதைக்கு செத்துப்போகும். இந்தப்படம் 1982 ல் வந்தது. பெரியம்மாவிற்கும் லட்சுமியம்மாவிற்குமான உறவு கிட்டதட்ட இதே போன்றததுதான். சரியோ, தவறோ இதுதான் ஒரே வழி என்று எழுதப்பட்ட கடிதத்தை ஒரு வாசகன் தனக்குள் வாசிக்கிறான். பெளதீகத் தன்மையை மட்டும் நம்புகிறவன் லட்சுமியம்மாவின் இறப்பை கற்பனை செய்கிறான். அபெளதீகத்திலும் அதாவது எல்லாவற்றிற்கும் அப்பால் உள்ளவற்றையும் நம்புகிறவன், லட்சுமியம்மா, எந்த சலனமும் இல்லாமல் அந்தக் கடிதத்தை மீண்டும் மடித்து வைத்துவிட்டு, பூஜையைத் தொடர்வதாகக் கருதிக் கொள்வான். இயற்கைக்கு தனி மனிதனின் மேல் எந்த அக்கரையும் இல்லை என்பதே பொதுவான கருத்து. அது தன்னை நிலைநிறுத்த, உயிர் நீட்சியை சாத்தியப்படுத்த மட்டுமே ஏதுவானது என்பதை விட்டல்ராவ் கேள்விக்குள்ளாக்குகிறார். தனிமனித அக்கரையும் இயற்கைக்கு இருக்கிறது. அது பெரியம்மாவின் இழப்பை தாங்கி ஜீவிக்க, லட்சுமியம்மாவிற்கு எதிர்ப்பாராத அட்டாக்கை ஏற்படுத்தி, ஒரு கால நீட்சியை வழங்கிவிடுகிறது. அம்மா இருக்க வேண்டும் என்பதுதான் பெரியம்மாவின் எண்ணம். நம் எண்ணங்களே இயற்கை. இயற்கையே நம் எண்ணங்கள். அதனால்தான் ஸ்டீபன் ஹாகிங்கால் ஏதுமற்ற செயல்படாமையில் எல்லாவற்றையும் அறிந்து கொள்ள முடிந்தது. இத்தகைய தன்மையை விட்டல்ராவின் பல கதைகளில் வேறுவேறு அனுபவங்களாக அறிய முடிகிறது.
அப்படி இரண்டு கதைகள்தான் ஒத்திகையும் இரகசியமும்.
மற்றொரு கதை, பிம்பம். தனது குடிகாரக் கணவன், அவள் உள்ளறைக் கதவைத் திறந்து வெளியே வரவில்லை என்று, தீக்குளித்து, கத்திக் கொண்டே, தீப்பிழம்பாக விழுந்து எரிகிறான். ஆனால் வாணி கதவைத் திறக்கவே இல்லை. எல்லாம் முடிந்துவிடுகிறது. இதை அங்கச்சி வழியாகச் சொல்லும் விட்டல்ராவ், கடைசியாக, கணவனது எரியும் தோற்றம், தன்னுள் நிரந்திரமாக எந்த விதமான நிரந்தர அதிர்ச்சியையும் ஏற்படுத்தக்கூடாது என்றுதான் அவள் வெளியே வரவில்லை என்று பதிவு செய்கிறார். இது பிரதியின் ஒரு சின்ன அடையாளக் குறி. இந்த சம்பவம் பெரும்பாலும் அடிக்கடி நிகழ்ந்திருக்கும். கணவன் என்ற எண்ணத்தில் அவள் பலமுறை கோபம் தணிந்திருக்கலாம். ஆனால் இந்த முறை அவளது முடிவு வேறாக இருக்கிறது. கடைசியாகப் பிறக்கும் சவலைக் குட்டியை, அது பிழைக்காது என்ற உள்ளுணர்வில் ஒரு பூனை தின்றுவிடுவதுபோல, அவள் நெருப்பாக அவனைத் தின்றுவிடுகிறாள். அவளுடைய உணவே அவந்தான். அதன் மூலமே அவள் மீட்சியடைகிறாள். என்றுமே பெண்களின் முடிவு தீர்க்கமானது. இதை எல்லா பிள்ளைகளும் அறிந்திருப்பர். கதையின் தலைப்பான பிம்பம், அவளது வெள்ளைக் கோலத்தைக் குறிக்கிறதே ஒழிய, அவன் எரிந்து கொண்டு விழுவது ஒரு காட்சியாகத்தான் இருக்க முடியும். தலைப்பானது காட்சி என்று இல்லாதபோது வாசகனுக்கு இப்படிப்பட்ட ஒரு சாத்தியத்தை விட்டல்ராவ் வழங்குவது அபாரமானது.
அடுத்தக் கதை சிதிலங்கள். இது ஒரு சிறுகதையைத் தாண்டி குறுநாவல் போலவும் இருக்கிறது. இதன் கதை, பெண் புரோக்கர் ஒருவன் மனம் மாறி, கண்காணாத ஓர் இடத்தில் தெய்வ காரியம் செய்வதற்குப் போய்விடுகிறான். அவனை அப்படி மடைமாற்றம் அடைய வைத்தது, பத்மாவின் மரணம். அவளது வாடிக்கையாளன் ஒருவன் காசில்லை என்பதால், அவன் போட்டிருந்த குளிர்க் கண்ணாடியை அவளிடம் அடமானமாகக் கொடுத்துப் போகிறான். ஆனால் அவன் வரவேயில்லை. மாது அந்தக் கண்ணாடியை அவனிடம் கேட்கிறான். அவள் ஏதோ காரணம் சொல்லி தவிர்கிறாள். அப்போது அவள் அந்தக் கண்ணாடிக்காரனால் ஐந்துமாதம் கர்பிணியாக இருக்கிறாள். பிரிதொருநாள் அவளது சினேகிதி, அந்தக் கண்ணாடியை அவனிடம் தரச் சொல்லி பத்மா தன் கணவனிடம் சொல்லிவிட்டு, ஜன்னியில் இறந்துபோய்விட்டதாகச் சொல்கிறாள். ஆனால் அவன் அப்படி மறைந்து வாழும் சிதிலமைடைந்த கோவிலில், பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு மந்திரித்துவிடக் கேட்கின்றனர். தினமும் பெரிய வரிசை நிற்கிறது. இங்கே நாம் திகைப்படைவது என்னவென்றால், நகரத்தில் சுகத்திற்காக ஆண்கள் அவனைத் தேடி வந்தனர். இங்கே, இந்தக் கிராமத்தில் பெண்கள், தங்கள் குழந்தைகளின் பிணி போக அவனை நம்புகிறார்கள். மாது இரண்டு இடங்களிலும் ஒரே மாதிரியான புரோக்கர் காரியத்தைத்தான் செய்கிறான். இங்கே மீட்சி என்பது ஒரு கற்பனையானதாகத்தான் அவனுக்குத் தோன்றுகிறது. பெண் புரோக்கராக இருந்தபோது அவனடைந்த குற்ற மனநிலைதான் தன்னைக் கடவுளின் தூதுவனாக கருதும் குழந்தைகளை தூக்கிவரும் பெண்களிடமும் அடைகிறான். அவனது வாழ்வு இரண்டு இடங்களிலும் சிதிலமடைந்த ஒன்றாகத்தானிருக்கிறது. ஆனால் அவனால் இவற்றிலிருந்து வெளியேறிவிட முடியாது. ஏன் எந்த மனிதனாலும் வாழ்க்கையிலிருந்து வெளியேறிவிட முடியாது. அவனை எதோட்சையாக அந்த ஊரில் சந்திக்கும் வாடிக்கையாளனான சேட்டு, இவன் அடித்துப்போட்ட அந்தக் கண்ணாடிக்காரன் இவனைத் தேடிக் கொண்டிருப்பதாகச் சொல்கிறான். மனித மனம் எவ்வளவு நலிவுற்றாலும் அது தன்னை ஏதோ ஒரு கணத்தில் மேம்படுத்திக் கொண்டுவிடுகிறது. அது ஒரு கணமானாலும் சரி. ஆட்டோ சங்கரை அந்த விடிகாலை தூக்கிட உறுதியானபோது கடைசி நிமிடம் வரை, தன் தூக்கு ஒத்திவைக்கப்படும் என்ற நம்பிக்கை இழந்தபோது, அவன் தன் மகளுக்கு ஒரு கடிதம் எழுதுகிறான். மிக நிதானமாக. இது எவ்வளவு கீழ்த்தரமான வாழ்வும் ஒரு கணம் எழுந்து அடங்குவதைக் காட்டும் அகச்சித்திரம்.
கடைசியாக ஒரு கதையைப் பற்றி பார்ப்போம். இங்கே எல்லாக் கதைகளும் ஒரு மையமான கருத்தால் முடிச்சிட நான் விரும்பவில்லை. அதனால் ஒரு சில கதைகளின் அக ஒளியை மட்டும் சொல்கிறேன். இந்தக் கதை ’மஹமாயி..’ கதை மிகச் சிறியது. கதை இதுதான். சின்ன கிராமத்திலிருக்கும் அம்பாள் மஹமாயி கோவிலுக்கு போகத்திட்டமிடும் கிருஷ்ண பண்டாரமும், சார்லுவும் சக்தி வாய்ந்த மஹமாயியைப் பார்க்க ரயில்வே ஸ்டேஸன் போகின்றனர். சார்லுவுக்கு முதல் முறையாக இப்படி ஒரு இடத்திற்குப் போக வேண்டிய விருப்பம். சக்தி மிக்க மஹமாயியைப் பார்த்துவிட வேண்டி ஆவலாக இருக்கிறார். இவர்கள் ரயில் வருவதற்குள் ஒரு சரக்கு வண்டி வந்துவிடுகிறது. அதனால் இவர்கள் ஏறும் ரயில் எதிர் பிளாட்பாரத்திற்குத் திருப்பிவிடப்படுகிறது. இவர்கள் கூடவே புதிதாகத் திருமணமான ஒரு ஜோடியும் ரயிலேற காத்திருக்கிறது. அவளது மூக்குத்தியில் சூரிய ஒளிப்பட்டு ஜொலிக்கிறது. எல்லோரும் எதிர் பிளாட்பாரத்திற்கு ஓடுகின்றனர். அப்போது அங்கே இருக்கும் சப்பாணி, “அய்யய்யோ, எனக்கு உதவறதுக்கு யாருமில்லையே, மகமாயி.. என்ன பண்ணுவேன்.. ஒன்ன இந்த ஆடி வெள்ளிக்குப் பாத்தாகணுமினு ஆசைப்பட்டேனே” என்று கதறுகிறான். அப்போது யாரும் எதிர்ப்பார்க்காத ஒரு அற்புதம் நடக்கிறது. அந்த சப்பணியை குழந்தைபோல வாரித்தூக்கிக் கொண்டு அந்த புதுமணப் பெண் ரயிலின் கடைசிப்பெட்டியில் உள்ளே தள்ளிவிட்டு தனது சுயநினைவுக்கு வந்தவளாகக் கணவன்மேல் சாய்ந்தாள். இதுவே போதும். கதை இங்கே முடிவதைல்லை. ஆனால் நாம் இங்கிருந்தே துவங்க வேண்டும். அந்தக் கூட்டத்தில் அத்தனையோ பேர் இருக்க, அந்தப் புது மணப்பெண் ஏன் இதைச் செய்ய வேண்டும்? இங்கேதான் அந்த உள்ளொளி பரவுகிறது. சாதாரணமாகப் பார்த்தால் இது ஒரு மாய யதார்த்தக் கதைபோல இருக்கலாம். ஆனால் இதை உளவியல் ரீதியாகப் பார்க்கவே விட்டல்ராவ் இடமளிக்கிறார். கதையில் சில இடங்களில் அதற்கான திறவுகள் இருக்கத்தான் செய்கின்றன. புதுமணப் பெண்ணானவள் அப்போதுதான் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும், விடுதலை பெற்றிருக்கிறாள். அவளது மனம் புதிய உலகங்களை தரிசித்தபடி லயித்துக் கிடக்கிறது. தவிரவும் ஒரு வளர்ந்த ஆணைத் தன்னால் தாங்க முடியும் என்ற நிலைப்பாட்டிற்கும் வந்தவள், தனக்கான ஒரு கடமையாக அந்த சப்பாணியைக் குழந்தை போல தூக்கிக் கொண்டு ஓடியிருக்கலாம். அதுவும் தனது புது உலகின் ஒரு அங்கமாக அவளின் புரிதல் தொடங்கியிருக்கலாம். அன்னிய ஆணுக்கும் பெண்ணுக்குமான இடைவெளி கரைந்துபோகும் ஒரு மனநிலைதான் அந்தப் பெண்ணின் மணவாழ்க்கையாக இருக்கிறது. அல்லது எல்லா பெண்களுக்கும் ஆண்களுக்குமான ஒரு நிலையும் இதுதான். இங்கே ஒரு மாற்றுக் கருத்தாக்கமும் உண்டு. அவள் தான் பெறப்போகும் குழந்தையாகக் கூட அந்தச் சப்பாணியைத் தூக்கிக் கொண்டு ஓடியிருக்கலாம். ஆனால் அது வழக்கமாக குழந்தைகளைத் தூக்கும் பெண்களின் வடிந்த நிலை. எனவே முன்னதே, அதாவது அந்த மண வாழ்க்கையின் விடுதலையே அவளை அந்தச் செயலைச் செய்ய வைக்கிறது. அதை விட்டல்ராவ் ”அவள் சுய நினைவுக்கு வந்தவளாக சரீர ரீதியிலான அதிர்ச்சிக்கும் களைப்புக்கும் ஆளாகித் தன் கணவன்மேல் சாய்ந்தாள்” என்கிறார்.
விட்டல்ராவின் கதைகள் எந்தத் திருகும் இல்லாமல் நேரடியான நிகழ்வுகளை மட்டும் எழுதிச் செல்லும் இந்தத் தன்மையானது, வாசகனை மற்றொரு எல்லைக்கு இழுப்பதற்கே என்பதை ஒரு தேர்ந்த வாசகன் கண்டு கொண்டாக வேண்டும்..
அவரது கதைக் களம், நிகழ்வுகள், கதை நடக்கும் பிராந்தியப் பதிவுகள், கையாளும் தகவல்களின் துள்ளியத் தன்மை, இவையாவற்றையும் கருத்தில் கொண்டும், அது பெரும்பாலும் எல்லோராலும் கொண்டாடப்படுவதனால், வேறு ஒரு பார்வையில், அதாவது விட்டல்ராவ் தனது உள்ளுணர்வால் தனக்கேத் தெரியாமல் தன்னியல்பாக எழுதியிருந்தாலும், நாம் அவற்றைக் கண்டடைவது, கடமையாகிறது.
விட்டல்ராவின் எல்லா கதாபாத்திரங்களும் தெரிந்தோ, தெரியாமலோ மிக்க தன்னுணர்வடைந்தவர்கள். அதுவே கதைகளை ஜீவிதம் கொள்ளச் செய்கிறது.
நன்றி
சாகிப்கிரான்.
(2021, நவம்பரில் ' சிற்றில் ' அமைப்பு ஏற்பாடு செய்திருந்த விட்டால்ராவின் படைப்புகள் பற்றிய கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை)






