காலம்தோரும் ஓர் இரட்டை நிலை இருந்து கொண்டுதான் இருக்கிறது.
அம்மாவும் நானும் எம் ஜி ஆர் சிவாஜி என்று மல்லுக்கு நின்றிருந்தபோது நானும் துரையும் ரஜினி கமல் என்றும் மோதிக் கொண்டோம்.
அப்போது கல்லூரிக் காலம்.
1988, கமலின் 'சத்யா' வந்திருந்தது.
அதே வருடத்தில் ரஜினியின் குரு சிஷ்யன், தர்மத்தின் தலைவன், கொடி பறக்குது ஆங்கிலப் படமான பிளட் ஸ்டோன் என்று அவரது ' ஸ்டைலை' நிலைநாட்டி இருந்தனர்.
விவாதமே இருவரின் ஸ்டைலின் ஒப்பீட்டிலிருந்துதான் ஆரம்பித்தது.
ரஜினியின் முன்னால் தனது தோற்றுப்போன பரிதாபமான பாவனைகளை கமல் தனது ரசிகர்களுக்கு காட்டி தனது ஸ்டைல் என்று நம்ப வைப்பதாக கேலி செய்ய ஆரம்பித்தான்.
குறிப்பாக சத்யாவில், நயவஞ்சக அரசியல்வாதி கிட்டி, கமலை ஏமாற்றி தனது அரசியல் சூழ்ச்சியை நிகழ்த்திக் கொள்வதை கமல் தெரிந்து கொண்டு போராடும்போது அவரை அடித்து துவைத்து அரை உயிராக முள்வேலியில் தூக்கி வீசிவிடுகின்றனர், கிட்டி ஆட்கள்.
இந்த படம், 'அர்ஜுன்' என்ற ஹிந்தி படத்தின் ரீமேக் என்றாலும் அதை நாங்கள் பார்க்கவில்லை. அதிலும் இப்படியெல்லாம் இருக்குமா என்பதும் எங்களுக்கு அப்போது தெரியாது.
குடும்பத்தால் காப்பாற்றப்பட்டு மீண்டும் அந்த அரசியல்வாதிகளை பழிவாங்க புறப்படும் கமல், கண்ணாடி முன்னால் தனது மொட்டையடித்து கொஞ்சமாக வளர்ந்த தாடி மீசையோடு கம்பீரமாக ' சட்டை ' போடுவதை காட்சிப்படுத்தியிருப்பார்கள். அதிலும் சிறப்பு, அந்தக் காப்பை தனது கையில் போட்டுக் கொள்வது.
இதுதான் இங்கே தோற்றுப்போன ஸ்டைல் என்று துரை நக்கலடித்தான்.
மற்றொரு விஷயம், அப்போதுதான் நாயகனுக்காக மொட்டை அடித்திருப்பார் கமல். அதன் அடுத்தக் கட்டத்தை தனது அடுத்த படத்தில் பயன்படுத்தியிருப்பது எனக்கு ஒவ்வொரு தொடர்ச்சியையும் பயன்பாடுள்ளதாக்கும் விஷயம் பெரிய திறப்பாக இருந்தது.
குறிப்பாக சட்டை என்பதே மேற்கத்திய வரவுதான். அதுவும் உயர்குடிக்கான ஒரு அம்சம்.
அதில் பட்டன் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேறுவிதமாக அமைத்திருப்பார்கள். ஆண்கள் அவர்களாகவே சட்டை போட இடப்பக்கமாகவும் பெண்கள் அவர்களது தாதிகள் போடுவதால் வலப்பக்கமாகவும் அமைத்திருப்பார்கள்.
அதுவும் சட்டைக்கான பட்டனை ஒருவர் தனக்குத்தானே மேலிருந்து போடுவது எப்போதும் நமது பார்வைக் கோணம் தப்பி, தவறான பட்டனில் தொடங்கி ஏறுமாராக சட்டை நிற்கும்.
அதனால் கீழிருந்து போடுவது இந்தத் தவறு நடக்காமல் தடுக்கும்.
கமலும் இந்தக் காட்சியில் கீழிருந்தே போடுவதாகக் காட்சி இருக்கும்.
அதாவது அவர் மூலமாக நடந்த அந்த தவறை சரி செய்வதாக, அதற்காக புறப்படுவதாகவும் அந்த நுணுக்கத்தை ஒரு மாஸ் ஹீரோவுக்கான காட்சியாக ரஜினி போன்ற ஸ்டைலிஸ் ரசிகர்களின் மனநிலைக்கு மாற்றியிருந்தார்கள்.
இதையே துரை கிண்டல் செய்தான்.
மூல இழையின் சாரத்தை ஒரு படம் கொண்டிருக்கும்போது அது எவ்வாறு ஆழ்ந்த மனத்தாக்கத்தை பார்வையாளன் அறியாமலே கடத்திவிடக்கூடும் என்று விளக்கினேன்.
ஆனால் அவன் சிரித்தான்.
எனக்குள்ளாகவே நானும் சிரித்துக் கொண்டேன்.
ஸ்டைலாக இருந்தாலும் அது எவ்வாறு இருக்க வேண்டுமென்ற தெளிவு எனக்கு அப்போது உண்டானது.
அது திரைப்படமாக இருந்தாலும் கவிதையாக, கதையாக எதுவானாலும் ஒரு பொதிக்குள் அடைக்கும் சகலமும் அந்தப் பொதியின் கட்டுக்குள் மட்டுமே இருக்க வேண்டும்.
எல்லாவற்றிற்கும் இப்படி யோசிக்க வேண்டுமா என்று அப்போது எனக்குத் தெரியாவிட்டாலும் வீம்புக்காகவேணும் இது அப்படி நடந்துவிட்டது என்றே இப்போது தோன்றுகிறது.
இங்கே கமலை உயர்த்துவது எனது நோக்கமல்ல. ஆனால் உயர்ந்த ஒன்றின் அடையாளம் காணுவதே, இது.
இந்தப் புத்தாண்டிலாவது நமது சட்டையை ஒழுங்காக போட்டுக் கொள்வோம். அரசியலும் அரசியலாக்கப்பட்ட அனைத்துமே இரண்டாவது வாய்பிற்காகக் காத்திருக்கின்றன.
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
2026

No comments:
Post a Comment