Tuesday, July 8, 2025

வான்காவும் இளையராஜாவும்

 


சமயங்களில் எல்லாவற்றுக்கும் காரணம் சொல்ல முடிவதில்லை.

சில மாதங்களாக முகநூல் பக்கம் வருவதில்லை. அப்படி ஒரு நிலைமையை சொல்லுவதே ஒரு காரணம்தான்.

சமீபத்தில் வான்காவின் நட்சத்திர இரவு ஓவியத்தைப் பற்றிய வித்தியாசமான ஓர் ஆய்வைக் காண நேர்ந்தது.

1889 ஆம் ஆண்டு வரையப்பட்ட வின்சென்ட் வான்கோவின் 'தி ஸ்டார்ரி நைட்', வளிமண்டல கொந்தளிப்பின் குறிப்பிடத்தக்க அம்சங்களை பகுப்பாய்வு செய்ததில், அது திரவ இயக்கவியல் (Liquid Dynamics) பற்றிய ஆழமான புரிதலை வெளிப்படுத்தியிருக்கிறது.

ஓவியத்தில் உள்ள தூரிகையின் வீச்சுகளை ஆய்வு செய்ததில் கொந்தளிப்பான காற்றில் மேகங்கள் மற்றும் இலைகளின் இயக்கங்களை ஒத்த 14 தனித்துவமான சுழல்களிலும் எதிர்ச்சுழல்களிலும் கவனம் கொள்ளப்பட்டது.

ஆராய்ச்சியாளர்கள் தூரிகை வீச்சுகளின் இடம் சார்ந்த பண்புகளையும் ஒளிர்வையும் பகுப்பாய்வு செய்ய உயர் தெளிவுத் திறன் கொண்ட டிஜிட்டல் படங்களைப் பயன்படுத்தினர். 

அவற்றை 'கோல்மோகோரோ'வின் கொந்தளிப்பு கோட்பாட்டுடன் (Kolmogorov's turbulence theory, 1941) ஒப்பிட்டனர். இந்தக் கோட்பாடு, ஆற்றல் எவ்வாறு பெரிய சுழல்களிலிருந்து சிறியவற்றுக்கு சிதறுவதற்கு முன்பு பாய்கிறது என்பதை விவரிக்கிறது. 

ஓவியத்தில் உள்ள சுழல்களின் அளவுகள், தூரங்கள் மற்றும் தீவிரங்கள் இந்தத் தத்துவார்த்த கட்டமைப்போடு ஒத்துப்போயின. இது வான்கோ இயற்கை நிகழ்வுகளை உள்ளுணர்வு விழிப்புடன் புரிந்துகொண்டதாக ஒரு கருத்திற்கு நம்மைக் கொண்டு செல்கிறது.

மேலும் இந்தக் கொந்தளிப்பு, நட்சத்திரங்கள் பிறக்கும் மூலக்கூறு மேகங்களில் காணப்பட்ட சக்தி நிறமாலையுடன் ஒத்துப்போவதையும் ஆய்வு கண்டறிந்துள்ளது.  

இந்த இணைப்பு, வான்கோவின் கலை பிரதிநிதித்துவத்தையும் அவரது அவதானிப்புத் திறன்களை மட்டுமல்ல, இயற்கையின் அடிப்படை பற்றிய ஆழமான புரிதலையும் பிரதிபலிக்கிறது.

இதை வான்கோ தன்னுணர்வோடு செய்தாரா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால் இயற்கையின் ஒரு பகுதியாக நாம் இருப்பதால் அந்த இயல்பும் தன்னியல்பான ஒன்றே.

இதைத்தான் இசைஞானி இளையராஜா தனது பேட்டிகளில் அடிக்கடி சொல்லுவார், 

"இசை என்றால் என்ன என்று எனக்குத் தெரியாது, அப்படி தெரிந்துவிட்டால் அப்புறம் இசை என்னிடமிருந்து வராது" என்பார்.

இவர்களெல்லாம் இயற்கையின் தேர்வா? என்றால், இல்லை.

ஏனென்றால் இந்த பிரமாண்ட சடத்துவம் ஓர் உயிரியின் வடிவிலே, அதுவும் குறிப்பாக மனித வடிவிலேதான் தன்னுணர்வு அடைந்திருக்கிறது. பிரபஞ்சத்தின் உச்சபட்ச நிகழ்வு இதுதான்.

அதே போலத்தான் எனது அம்மாவும். என் அம்மாவைப்போல தன்னுணர்வு அடைந்த ஒரு பிரபஞ்சக் கூறை எங்கும் காண முடியாது. அது வான்கா அல்லது இளையராஜா அல்லது என் அம்மாவாக இருந்தாலும் அந்த உணர்வு நிலை, இந்த உடல் சார்ந்தது இல்லை என்றே கருதுகிறேன்.

இது அறிவியலுக்குப் புறம்பான ஒரு பார்வையாக கொள்ள முடியாது. ஏனென்றால் நவீன குவாண்டம் இயற்பியல், தன்னுணர்வை நுட்பமாக விளக்கப் போதுமானதாக இருக்கிறது.

இன்று அம்மாவின் பிறந்த நாள். அவரது புதைவிடத்திற்கு சென்றேன். புதர் மண்டிக் கிடந்த அந்த பெருவெளி அமைதியாக, ஒரு பெரும் சூறாவளிக்கு மத்தியில் நின்றிருந்த பேரமைதியாக இருந்தது. 

இன்று அம்மாவின் நினைவு நாளும்தான். இதுவே தன்னுணர்வின் ஓர் அதிசயம்.

(அம்மாவின் பிறந்த நாளன்று 07-07-2025 எழுதிய நினைவுப் பதிவு)

 புதைவிடத்திற்கு சென்றேன். புதர் மண்டிக் கிடந்த அந்த பெருவெளி அமைதியாக, ஒரு பெரும் சூறாவளிக்கு மத்தியில் நின்றிருந்த பேரமைதியாக இருந்தது. 


இன்று அம்மாவின் நினைவு நாளும்தான். இதுவே தன்னுணர்வின் ஓர் அதிசயம்.


(அம்மாவின் பிறந்த நாளன்று 07-07-2025 எழுதிய நினைவுப் பதிவு)


No comments:

Post a Comment

புத்தம் புது ஆண்டு...

  காலம்தோரும் ஓர் இரட்டை நிலை இருந்து கொண்டுதான் இருக்கிறது. அம்மாவும் நானும் எம் ஜி ஆர் சிவாஜி என்று மல்லுக்கு நின்றிருந்தபோது நானும் துரைய...