Tuesday, July 7, 2026

Disclaimer மனோநிலை

 Disclaimer மனோநிலை 

++++++++++++++++++++++


                முக்கியமான ஒன்றைச் சொல்ல வரும்போது மிகக் குறைந்த விபரங்கள்தான் இருக்க வேண்டும்.

' A Seperation ' என்றொரு இரானிய திரைப்படம் 2011 ல் வந்தது. மறதி நோயால் பாதிக்கப்பட்ட தன் தந்தையை பிரிய மனமில்லாத அந்த மகன் அவருடனே தங்கிவிடுகிறார். அப்படி இருக்கையில் தந்தையை வெற்றுடம்புடன் குளிக்க வைப்பார். எந்த நினைவும் இல்லாத தனது தந்தையை அப்படி பார்க்கும்போது மனமுடைந்து அழும் அந்தக் காட்சி behind the screen ஆக எடுத்தபோது ஒளிப்பதிவாளர், கேமராவை நகர்த்திவிட்டு ஒருகணம் கண்களைத் துடைத்துக் கொள்வார். அந்தக் குழுவே மன அழுத்தத்திற்கு உள்ளாகும்,  இன்னும் சொல்லப்போனால் மகனாக நடித்தவர் மிகுந்த அழுத்தத்திற்கு சென்றுவிடுவார். குறிப்பாக அப்படி ஒரு காட்சியால் உந்தப்பட்டே, அதன் இயக்குநர் அதற்கான முழு திரைக் கதையையும் வடிவமைத்தாக குறிப்புகள் சொல்கின்றன.

எந்த பின்னணி இசையும் பெரிதாக அந்தக் காட்சியில் இருக்காது.

இந்த படம்தான் ஆஸ்கார் விருது வாங்கிய ஆங்கிலமல்லாத முதல் இரானிய பிற மொழி படம்.

இதேபோல பி. வாசு தனது படமொன்றில் (1992) ஒரு காட்சி வைத்திருப்பார். ஆனால் அந்தக் காட்சி ஒரு பாடலாக, அதனுள் ஒரு சிறு துண்டாகத்தான் இருக்கும்.

முக்கியமாக அந்தப் பாடலை படத்தில் வைப்பதற்கே மறுப்புத் தெரிவித்த கதாநாயகனை மிகவும் சிரமப்பட்டுத்தான் சம்மதிக்க வைத்திருந்தனர்.

ஆனால் அந்தப் பாடல் ஓர் அடையாளமாக மாறியது மட்டுமில்லாமல், 90 களில் நான் பணி புரிந்த நிறுவனத்தின் பொறியாளர் ஒருவர் மிகுந்த உணர்ச்சி வசப்பட்டு என்னிடம் பேசியது இன்னும் நினைவிலிருக்கிறது. அப்போது அவருக்கு 20 வயதிற்குள்தான் இருக்கும். அவர் தீவிர இரசிகரானதும் அந்தப் படத்திற்குப் பிறகுதான்.

ஆனால் அதற்குப் பிறகு 1994ல் ஒரு படம் வருகிறது. அது தொடர்ந்து பெண் குழந்தைகளாகப் பிறக்கும் சிசுக்களுக்கு கள்ளிப்பால் ஊற்றிக் கொல்லும் ஒரு முக்கியமான விஷயத்தை பேசுவதாக இருந்தது.

அதில் அப்படி கொல்லச் சொல்லும் பாத்திரத்தில் இதுபோன்ற இழி செயல்களுக்கு எதிரான கருத்தியல் கொண்ட முற்போக்கு சிந்தனையாளரான பெரியார்தாசன் நடித்திருப்பார்.

அப்படி கொல்லும் வாய்ப்பிலிருந்து தப்பிய அவரது பெண்ணும், பெண்ணும் பக்கவாதத்தால் முடங்கிக் கிடக்கும் அவருக்கு பணிவிடைகள் செய்யும் விதமாக தென்னந்தட்டி தடுப்புக்குள் குளிக்க வைப்பார்கள். (என்னுடைய நினைவு அப்படித்தான் இருக்கிறது) அந்தத் தட்டிகளை விலக்கி வேடிக்கைப் பார்க்கும் பெண் குழந்தைகளை விரட்டுவார்கள். அப்போது அந்தக் குழந்தைகள் தங்களின் எதிர் வினையாக ஒன்றைச் சொல்லிவிட்டு அந்த இடத்தைவிட்டு ஓடுவார்கள்.

அது, ' அய்ய, அம்மணக்குண்டி '

இது படத்தில் மிகச் சாதாரணமாக நடந்துவிடும் ஒரு காட்சியாக பார்வையாளன் கடந்துவிடுவான். அல்லது களுக் என்று ஒரு சிரிப்புகூட தோன்றிவிடக்கூடும். ஆனால் இது அந்த ஈரானிய படத்தைவிட பல மடங்கு அழுத்தம் வாய்ந்ததாகவும் நினைத்து பார்க்க முடியாத பரிமாணங்களை வெளிப்படுத்துவதாகவும் இருக்கிறது.

ஈரானிய படத்தில் அது மனித வாழ்வின் அபத்தத்தையும் மனிதத் தன்மையைக் குன்ற செய்யும் மனித நாகரிக வளர்ச்சியின் தேவைகளையும் அதன் நீட்சியாக உண்டாகும் பொறுப்பு துறப்பு மனோபாவத்தின் நியாயங்களையும் அதற்கு எதிரான தீவிர மனித நேய செயல்பாடுகளைக் கொண்டிருப்பதன் இழப்புகளையும் பேசுகிறது. 

தவிரவும் அப்படி இருக்கும் தன்மையினால் அவர்கள் தங்களையே சிதைத்துக் கொண்டாக வேண்டியவர்களாகவும் தனது மன சாட்சி குறித்த அதீத பிரக்ஞை உள்ளவர்களாகவும் மேலும் இந்த சமூகமும் இயற்கையும் ' தேவை ' கருதும் தன்மையை சகிக்காத, அதே சமயம் இந்த இயற்கைக்கே எதிராகக் களத்தில் இறங்கி, தங்களை மாய்த்துக் கொள்வதன் மூலம் அத்தகைய பொறுப்பு துறப்பின் கொடூரத்தை மையப்படுத்தி சமூகத்தைக் கவனத் திருப்பாலுக்கு உள்ளாகின்றனர்.

ஆனால்

இந்தப் பெண்கள், தங்கள் இனத்திற்கே துரோகம் செய்த ஓர் ஆணைக் குளிக்க வைக்கின்றனர். அவர்கள் அந்த ஆணையும் தங்கள் குழந்தையாகத்தான் பார்க்கின்றனர். அதனால்தான் அந்த அம்மணம். எந்த பெண் குழந்தைகளை கள்ளிப்பால் ஊற்றி கொன்றாரோ அவரைக் கொல்லாமல் குளிக்க வைப்பதை வேடிக்கை பார்ப்பது அப்படி தப்பிவிட்ட அல்லது அந்த நிலைமாறிய ஒரு காலகட்டத்தின் குறியீடுதான் வேடிக்கை பார்க்கும் அத்தனைக் குழந்தைகளும்.

கள்ளிப்பாலிலிருந்து தப்பிக்கும் குழந்தை மருத்துவராவது ஓர் அசாத்திய கணிப்பு.

அதுவும் குளியல் என்பது ஒரு சரணாகதி. குளிக்க வைப்பார் முன்னால் அமர்ந்திருக்கும் குளிப்பவர் 

பௌதிக ரீதியாகவும் தான் கொண்ட கொள்கையளவிலும் தோற்றுப்போனவர். அல்லது அந்த நிலையின் ஒரு படிநிலை. அதுவும் எதிர் பாலினம் சார்ந்து அது இன்னும் வலுவடைகிறது.

இயக்குநர், இந்த அம்மணத்தை நேரடியாகக் காட்டியிருந்தால் முகச்சுழிப்புதான் சாத்தியம். ஆனால் அந்தத் தட்டிகளுக்குப் பின்னால் ஏதுமில்லாமலும் இருந்திருக்கலாம். எட்டிப்பார்க்கும் குழந்தைகள் மட்டுமே அந்த அபூர்வ தருணத்தை நமக்குக் கடத்துகின்றன. இதுவே கனவுத் தொழிற்சாலையின் தீரம். தீரம் மிக்கவனே உண்மையான படைப்பாளி.

அல்லது இது ஓர் இட்டுக்கட்டல் என்ற நிலையில்கூட இதை வாசிக்கும் எதிர் மனநிலையாளர் நினைக்கக்கூடும்.

ஆனால், எப்படி ஒரு கிராமத்துச் சிறுவன், மழை பெய்த காலையில் சாலையைக் கடந்த ஒரு பேருந்தின் டீசல் சொட்டில் ஒளிரும் வண்ணங்களை, இந்த பிரபஞ்சத்தின் ஒரு கூறாக, ஒளி என்பது பல நிறங்களின் கூட்டு என்பதையும், அதுவே கிழக்கும் மேற்கும் சிவந்து கிடப்பதையும் அண்ணாந்த வானம் நீலமாயிருப்பதையும் தொடர்புபடுத்திக் கொண்டானோ, அவனே இதை எழுதவும் வாசிக்கவும் இயன்றவனகிறான்.

உங்களுக்கு இப்போது அந்தப் பாடலில் வரும் அபிஷேகம் எத்தகைய தட்டையான, சம்பிரதாயமான ஒன்று என்றும் அதற்கும் தீவிர கலைச் செயல்பாடுக்குமான தொடர்பும் புரியும்.

ஒரு படைப்பில் நாம் எவ்வளவு ஏமாந்து போகிறோம் என்பதே அதன் தீவிர கலைத் தன்மையை நிர்ணயிக்கிறது. 

இந்த பொறுப்புத் துறப்பு என்பதைப் பேச சில சமயங்களில் ஒரு மனநிலை வேண்டும் என்று நினைக்கிறேன். அல்லது தகுதி வேண்டும் என்றும் சொல்லலாம். 

' கடைசியல எல்லோரும் விட்டுட்டு போய்ட்டீங்க இல்ல '

இந்த ஆதங்கத்திற்கு கேவலமான எதிர்வினைகள் சமூக ஊடகங்கள் எங்கும் இருந்தது. ஆனால் இது இந்த ஊடகக்காரர்களால் வந்தது என்று ஒரு தரப்பும் இருக்கத்தான் செய்தது.

இல்லை.

இந்த பொறுப்பு துறப்பு மனோபாவத்தின் மேல் விழுந்த சாட்டையடிதான் இது.  அதனால்தான் சுடுகிறது.

ஏனென்றால் எனக்கு மூன்று சகோதரிகள். ஆனால் ஏழு வருடங்களாக A Seperation படத்தைப்போல என் அம்மாவை பார்த்துக்கொண்டேன். அதுவும் குனிந்திருக்கும் அந்த பழுத்த முதுகை தண்ணீர்விட்டு கழுவும்போது அடைந்த விமல் யாருக்கும் தெரியாது. எதிர் பாலினத்தை எதிர் கொள்வதில் இருக்கும் சிக்கல் சாதாரணமானதில்லை. 

அந்தப் படத்தில் நீதிமன்றத்தில் நீதிபதி முன்னால் ஓர் உரையாடல் நடக்கும்.

தங்கள் குழந்தை மற்றும் குடும்பத்தை முன்னிட்டு தனது தந்தையை விட்டுவிட்டு வெளிநாடு செல்ல மறுக்கும் தான் கணவனிடம் விவகாரத்து கேட்கும் மனைவி,

' மறதி நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் இவர் தந்தையை விட்டுவிட்டு இவர் வர மறுக்கிறார். அதுவும் இவர் யார் என்றே அவருக்குத் தெரியவில்லை ' என்பார்.

' ஆனால் எனக்குத் தெரிகிறதே? அவர் என் தந்தை ' என்பார்.

அதேபோல, மனோஜ் இருந்திருந்தால்? என்ற ஒரு தரப்பும் இருக்கிறது. இது மீண்டும் கள்ளிப்பால் விவகாரத்தில்தான் முடியும். 

இங்கே பாலினம் சார்ந்த ஒரு தப்பித்தாலும் நடக்கிறது. இதற்கான சமூக மாற்றம் மிக முக்கியம். மனித வாழ்வின் ஒவ்வொரு இருத்தலுக்கான தார்மீக உணர்வை தக்கவைப்பதே உண்மையான நாகரிக சமுதாயத்திற்கான அடையாளமும் கடமையும்.

நாம் ' எஸ்தர் ' கதையை இங்கே குழப்பிக் கொள்ளக்கூடாது. அதில் இருக்கும் கொடூரம் எது சார்ந்தது என்பதன் புரிதல் வேண்டும்.

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. லீனாவின் ' வெள்ளை வேன் அறிக்கை ' ஆவணப்பட திரையிடலுக்கு சென்றபோதுதான் அவரை மிக நெருக்கமாகப் பார்த்தேன். சட்டென திரும்பிப் பார்க்கையில் எனக்கு நேர் பின் இருக்கையில் அமர்ந்திருந்தார். ஏனோ தெரியவில்லை, சட்டென சாய்ந்தார்போல் உட்கார்ந்து எனது பார்வையைத் தவிர்த்தார். 

ஒருமுறை வே. பாபு த மு எ க ச மாநாட்டிற்கு சென்றிருந்தபோது, மண்டபத்தின் மாநாட்டு திடலில் மிக நள்ளிரவில் எண்ணிரந்த நாற்காலிகள் நடுவில் தன்னந்தனியாக பாலுமகேந்திரா அமர்ந்திருந்திருக்கிறார். கழிவறை சென்ற பாபு, திடுக்கிட்டு, அங்கேயே நின்றுவிட்டான்.

மணிக்கணக்காக அவன் அந்த மறைவிலிருந்து அவரை பார்த்தபடி இருந்திருக்கிறான். 

இந்தப் பகிர்தலின்போது, யாரோ ஒரு நண்பர், ' பேசியிருக்கலமல்லவா? ' என்று கேட்டார்.

பதிலேதும் சொல்லாத பாபு, என்னைப் பார்த்தான். 

ஏனென்றே தெரியவில்லை, அவரின் மறைவு மிகுந்த அழுத்தத்திற்கு உட்படுத்துகிறது. 

இன்று கணினி உலகம் செயற்கை நுண்ணுணர்வு நிலையை அடைந்திருக்கும் நிலையில், எனக்கு C கணினி மொழியை உருவாக்கிய டென்னி ரிச்சி நினைவுக்கு வருகிறார். அவர் தனது அறையில் செத்து கிடந்ததும்,  குர்ஜிப்பை தனது புத்தகத்தின் மூலம் உலகறிய செய்த கணித அறிஞர் உஸ்பெஸ்கி தொடர்ந்து குடித்து, தனது அறையில் செத்து கிடந்ததும் நமக்கு ஏதோ சொல்கிறது.

மாபெரும் அறிஞர்களும் சிந்தனையாளர்களும் அப்பழுக்கற்வர்கள் இல்லைதான்.

அத்தகைய அழுக்கிலிருந்தே அவர்களின் படைப்பும் உருவாகிறது.

ஆனால் அவர்களின் படைப்புகள் எப்போதும் இந்த மனித குலத்திற்கானது அல்லது இந்த ஒட்டு மொத்த பிரபஞ்சத்திற்கானதே.

No comments:

Post a Comment

Disclaimer மனோநிலை

 Disclaimer மனோநிலை  ++++++++++++++++++++++                 முக்கியமான ஒன்றைச் சொல்ல வரும்போது மிகக் குறைந்த விபரங்கள்தான் இருக்க வேண்டும். ...