சில சமயங்களில், அபூர்வமாக பாபுவுடன் திரைப்படம் பார்க்கும் வாய்ப்பு அமையும். பெரும்பாலும் பாபு படத்தின் வெளியீட்டு முதல் காட்சிக்கே சென்றுவிடுவதால் எனக்கு அது இயலாமல் போய்விடும்.
இரண்டாயிரங்களில் தூர்தர்ஷனில் இரண்டு மணிக்கு உலகப் படங்கள் போடுவார்கள்.
அப்போது நாங்கள் ஒருவருக்கொருவர் எதோசையாக அக்கிரோகுருசோவாவின் ஒரு திரைப்படத்திற்கு கடிதம் போட்டுக்கொண்டோம்.
இருவருமே பார்த்துவிட்டோம்.
ஆனால் பல வருடங்களாகியும் அப்படம் பற்றி பெரிதாக எதையும் எந்தச் சந்திப்பிலும் பேசிக் கொள்ளவில்லை. எப்போதுமே நாங்களிருவரும் எந்த ஒன்றானாலும் அதுபற்றி உடனே பேசிக் கொள்வதுமில்லை, பெரும்பாலும்.
தக்க சமயம் வாய்க்கும்போது ஓரிரு வார்த்தைகளில் ஒட்டுமொத்த படைப்பைப் பற்றியுமான ஒரு மையக் கருத்தாகத்தான் அது இருக்கும். இன்னும் சொல்லப்போனால் அப்படி ஒரு புரிதல் சில சமயங்களில் நாங்கள் இருவரும் பார்த்துக் கொள்ளும் ஒரே ஒரு பார்வையில்கூட நிகழ்வதுண்டு.
குரோசோவாவின் அந்தப் படம் ஒரு நகைச்சுவைப் படம்தான். நானும் குற்றாலம் தர்மராஜனும் சொல்லிச் சொல்லி சிரித்திருக்கிறோம்.
ஆனால் சமீபத்தில் சாக்ரட்டீஸ் ஸ்டுடியோவில் பேராசிரியர் முரளி அவர்கள் வெகுஜனவியம் பற்றிய ஒரு உரையாடலில் பேராசிரியர் தர்மராஜ் நினைவுபடுத்திய ஒன்று எனக்கு சட்டென பாபுவுடன் பகிர்ந்து கொள்ள வேண்டுமாய் ஒரு ஆற்றாமையை உண்டாக்கியது. அவன் இல்லாமல் போனாலும் அவன் பொருட்டான ஒன்று இருந்து கொண்டிருப்பது அந்த ஒன்றை மேலும் தீவிரப்படுத்தவதாகவே இருக்கிறது.
பேரா. தர்மராஜன் குறிப்பிடுவது இதுதான்.
தமிழில் நிகண்டுகள்தான் அதிகம் உண்டே அன்றி, அகராதி என்ற ஒரு கருத்தாகமே இல்லை என்கிறார். பதினாறாம் நூற்றாண்டிற்கு பிறகே வீரமா முனிவரால் தமிழுக்கு அகராதி உருவாகிறது. ஒரு மொழியில் அதன் சொந்த சொற்களுக்கான அகராதி என்பது அவசியமற்றது. பிற மொழியிலிருந்தோ அல்லது பிற மொழிக்கு செல்லும்போதுதான் வேர் சொற்களுக்கோ அல்லது அனைத்து சொற்களுக்குமான அகராதியின் தேவை உண்டாகிறது.
பூர்வீகம் இயல்பானது. அதற்கான எந்த விளக்கமும் தேவையில்லாதது.
அகிராவின் அந்தப் படத்தில் ஒரு வீட்டில் திருட இரண்டு திருடர்கள் வருகின்றனர். அவர்களுக்கு அந்த வீட்டில் மிகப் பெரிய ஆச்சர்யம் காத்திருக்கிறது. அதாவது வீட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் அதன் பெயர் எழுதிய ஒரு குறிப்பு இருக்கிறது. அதாவது திருடிய பிறகு வெளியேறுவதற்கான பாதையும் எழுதி ஒட்டப்பட்டுள்ளது.
இது அவர்களுக்கு உள்ளார்ந்த அளப்பறிய நகைப்பை உருவாக்கும் ஒன்றாக இருந்தாலும் அகிரா அந்த வீட்டின் அத்தனையையும் அவர்களிடமிருந்து அந்நியப்படுத்தவே அப்படி அதற்கான குறிப்பை விட்டுச் செல்கிறார். ஏனென்றால் அது அவர்களுடையதானால் அதற்கு ஒரு குறிப்போ அடையாளமோ தேவையில்லை அல்லவா?
ஒன்றை புரிந்து கொள்ள, அல்லது அப்படி ஒரு அற்புத சாத்தியத்தை அடைய ஒருவனுக்கு கால்நூற்றாண்டு தேவைப்படுகிறது.
ஆனால் இன்று அரசியலில் நடப்பது வெறும் முட்டிகளில் நடந்துவிட்டால் போதும் என்ற புரிதலுக்கு வந்திருக்கும் மனித சாரத்தை புரிந்து கொள்ள நமக்குத்தான் இன்னும் கால் நூற்றாண்டு தேவையென நினைக்கிறேன்.
பாபு எப்போதுமே திமுகவிற்கு ஆதரவளித்ததில்லை. என் அம்மாவும் பாபுவும் அஇஅதிமுக மட்டுமே. இன்று இருவரும் இல்லை. அப்படி ஒரு கட்சியும் இல்லாமல் போனது சற்று விசித்திரம்தான்.
பாபுவின் பிறந்த நாளில் மானசீகமாக அவனிடம் நான் சொல்லிக் கொள்ள முன்னது பெருத்த மெளனத்தையும் பின்னது அதிர்ச்சியையும் உண்டாக்கினால் உருவாகும் வேதனை மட்டுமே என்னால் இங்கே கடத்த முடிகிறது என்று நினைக்கிறேன்.
21-04-2026.
இன்று பாபுவின் பிறந்த நாள்.
(அகிராவின் படம் எது என்றோ கால் நூற்றாண்டுக்கு முன் நாங்கள் பார்த்த அந்தப் படத்தின் கதை சுருக்கத்தையோ AI கொண்டு தேடாத மனநிலைக்கு வந்துவிட்ட அந்த நினைவின் சொற்பமே அற்புதமானது என்று நினைக்கிறேன். அவன் நினைப்பைப்போல)

No comments:
Post a Comment