Thursday, January 22, 2026

புத்தம் புது ஆண்டு...

 


காலம்தோரும் ஓர் இரட்டை நிலை இருந்து கொண்டுதான் இருக்கிறது.

அம்மாவும் நானும் எம் ஜி ஆர் சிவாஜி என்று மல்லுக்கு நின்றிருந்தபோது நானும் துரையும் ரஜினி கமல் என்றும் மோதிக் கொண்டோம்.

அப்போது கல்லூரிக் காலம்.

1988, கமலின் 'சத்யா' வந்திருந்தது.

அதே வருடத்தில் ரஜினியின் குரு சிஷ்யன், தர்மத்தின் தலைவன், கொடி பறக்குது ஆங்கிலப் படமான பிளட் ஸ்டோன் என்று அவரது ' ஸ்டைலை' நிலைநாட்டி இருந்தனர்.

விவாதமே இருவரின் ஸ்டைலின் ஒப்பீட்டிலிருந்துதான் ஆரம்பித்தது.

ரஜினியின் முன்னால் தனது தோற்றுப்போன பரிதாபமான பாவனைகளை கமல் தனது  ரசிகர்களுக்கு காட்டி தனது ஸ்டைல் என்று நம்ப வைப்பதாக கேலி செய்ய ஆரம்பித்தான்.

குறிப்பாக சத்யாவில், நயவஞ்சக அரசியல்வாதி கிட்டி, கமலை ஏமாற்றி தனது அரசியல் சூழ்ச்சியை நிகழ்த்திக் கொள்வதை கமல் தெரிந்து கொண்டு போராடும்போது அவரை அடித்து துவைத்து அரை உயிராக முள்வேலியில் தூக்கி வீசிவிடுகின்றனர், கிட்டி ஆட்கள்.

இந்த படம், 'அர்ஜுன்' என்ற ஹிந்தி படத்தின் ரீமேக் என்றாலும் அதை நாங்கள் பார்க்கவில்லை. அதிலும் இப்படியெல்லாம் இருக்குமா என்பதும் எங்களுக்கு அப்போது தெரியாது.

குடும்பத்தால் காப்பாற்றப்பட்டு மீண்டும் அந்த அரசியல்வாதிகளை பழிவாங்க புறப்படும் கமல், கண்ணாடி முன்னால் தனது மொட்டையடித்து கொஞ்சமாக வளர்ந்த தாடி மீசையோடு கம்பீரமாக ' சட்டை ' போடுவதை காட்சிப்படுத்தியிருப்பார்கள். அதிலும் சிறப்பு, அந்தக் காப்பை தனது கையில் போட்டுக் கொள்வது.

இதுதான் இங்கே தோற்றுப்போன ஸ்டைல் என்று துரை நக்கலடித்தான்.

மற்றொரு விஷயம், அப்போதுதான் நாயகனுக்காக மொட்டை அடித்திருப்பார் கமல். அதன் அடுத்தக் கட்டத்தை தனது அடுத்த படத்தில் பயன்படுத்தியிருப்பது எனக்கு ஒவ்வொரு தொடர்ச்சியையும் பயன்பாடுள்ளதாக்கும் விஷயம் பெரிய திறப்பாக இருந்தது.

குறிப்பாக சட்டை என்பதே மேற்கத்திய வரவுதான். அதுவும் உயர்குடிக்கான ஒரு அம்சம்.

அதில் பட்டன் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேறுவிதமாக அமைத்திருப்பார்கள். ஆண்கள் அவர்களாகவே சட்டை போட இடப்பக்கமாகவும் பெண்கள் அவர்களது தாதிகள் போடுவதால் வலப்பக்கமாகவும் அமைத்திருப்பார்கள்.

அதுவும் சட்டைக்கான பட்டனை ஒருவர் தனக்குத்தானே மேலிருந்து போடுவது எப்போதும் நமது பார்வைக் கோணம் தப்பி, தவறான பட்டனில் தொடங்கி ஏறுமாராக சட்டை நிற்கும்.

அதனால் கீழிருந்து போடுவது இந்தத் தவறு நடக்காமல் தடுக்கும்.

கமலும் இந்தக் காட்சியில் கீழிருந்தே போடுவதாகக் காட்சி இருக்கும்.

அதாவது அவர் மூலமாக நடந்த அந்த தவறை சரி செய்வதாக, அதற்காக புறப்படுவதாகவும் அந்த நுணுக்கத்தை ஒரு மாஸ் ஹீரோவுக்கான காட்சியாக ரஜினி போன்ற ‌‌ஸ்டைலிஸ் ரசிகர்களின் மனநிலைக்கு மாற்றியிருந்தார்கள்.

இதையே துரை கிண்டல் செய்தான்.

மூல இழையின் சாரத்தை ஒரு படம் கொண்டிருக்கும்போது அது எவ்வாறு ஆழ்ந்த மனத்தாக்கத்தை பார்வையாளன் அறியாமலே கடத்திவிடக்கூடும் என்று விளக்கினேன்.

ஆனால் அவன் சிரித்தான்.

எனக்குள்ளாகவே நானும் சிரித்துக் கொண்டேன்.

ஸ்டைலாக இருந்தாலும் அது எவ்வாறு இருக்க வேண்டுமென்ற தெளிவு எனக்கு அப்போது உண்டானது.

அது திரைப்படமாக இருந்தாலும் கவிதையாக, கதையாக எதுவானாலும் ஒரு பொதிக்குள் அடைக்கும் சகலமும் அந்தப் பொதியின்  கட்டுக்குள் மட்டுமே இருக்க வேண்டும்.

எல்லாவற்றிற்கும் இப்படி யோசிக்க வேண்டுமா என்று அப்போது எனக்குத் தெரியாவிட்டாலும் வீம்புக்காகவேணும் இது அப்படி நடந்துவிட்டது என்றே இப்போது தோன்றுகிறது.

இங்கே கமலை உயர்த்துவது எனது நோக்கமல்ல. ஆனால் உயர்ந்த ஒன்றின் அடையாளம் காணுவதே, இது.

இந்தப் புத்தாண்டிலாவது நமது சட்டையை ஒழுங்காக போட்டுக் கொள்வோம். அரசியலும் அரசியலாக்கப்பட்ட அனைத்துமே இரண்டாவது வாய்பிற்காகக் காத்திருக்கின்றன.

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

2026

Wednesday, January 21, 2026

THE COURAGE TO BE DISLIKED

 

THE COURAGE TO BE DISLIKED 

சீனிவாச ராமானுஜத்தின் பேட்டி என்று சொல்ல முடியாத ஓர் உரை அல்லது கருத்து பகிர்வு காணொளியை தன்னறம் வெளியிட்டு இருக்கிறது.

அது மிக முக்கியமான ஒன்று. 

PENOMIENOLOGY என்ற தத்துவத்தின் ALGORITHM எப்படி புதிய சிந்தனை வெளியையும் மனிதனுடைய தர்க்கத்தின் பலஹீனத்தையும் போகிற போக்கில் நொறுக்கித் தள்ளுவதாக இருப்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.

மிக எளிமையாக இதை நமக்குச் சொல்லிவிடுகிறார். காந்தியை புரிந்து கொள்ள வேண்டுமானால் நீங்கள் அம்பேத்கரின் வழியாகத்தான் அது நிகழும் என்கிறார். அதேபோல அம்பேத்கரையும் காந்தியின் வழியாகத்தான் புரிந்து கொள்ள முடியும். எதிரிடைகளின் செயல்பாடுகள்தான் உண்மையான புரிதலையும் சாந்தியையும் கொடுக்கக்கூடும். 

இயற்பியலில் துகள் கொள்கையும் அலைக் கொள்கையும் வேறுவேறு அல்ல என்பதே குவாண்டம் கொள்கை. இரண்டும்தான் நிகழ்கிறது என்ற புரிதலுக்கு வரும்போதுதான் இயற்கையின் மர்மங்கள் என்று சொல்லப்படுபவை அதன் புதிர் அல்லது இயற்கைக்கு அப்பாற்பட்ட(!) இயங்கு நிலைகளை கையாளமுடிகிறது. அந்தக் காணொளியின் இறுதி என்பது அசாத்தியமானது. ஏனென்றால் அது அந்த காணொளிக்கே முரணானதுதான். 

ஆனால் இங்கே எதிரிடைகள், இணையானவை என்று எல்லாவற்றையும் இல்லாமலாக்குவதிலேயே ஒன்று தனது நிலையை நிரந்தரம் ஆக்கிக் கொள்ள முயலுகிறது.

நிற்க.

அப்போதெல்லாம் எனக்குக் கோவில் சேலம் சங்கீத் தியேட்டர்தான்.

எண்பது , தொண்ணூறுகளில் ஆங்கில படங்களை அங்கேதான் பார்த்தேன். குறிப்பாக இடைவேளையில் வருகிற படங்களுக்கான முன்னோட்டம் போடுவார்கள். அப்படி பார்த்த ஒன்றுதான் 1992ல் 'டிராகுலா'. வழக்கமான ஒன்றாக அது இல்லை.

அதில் டிராகுலா ஒரு சிறிய கத்தியை நாக்கருகே வைத்துக்கொண்டு ஒரு இடுங்கிய சிரிப்பு சிரிக்கும். அது என்னை விசித்திர மனநிலைக்குக் கொண்டு சென்றது என்றாலும் எண்பதுகளிலேயே மைக்கேல் ஜாக்சன் தனது Thriller பாடலின் இறுதியில் வெடித்த சிரிப்பொன்றை வைத்திருப்பார். இதன் பாதிப்பிலேயே Dracula வில் அந்தச் சிரிப்பும் உருவாகியிருக்கலாம்.

ஆனால் இரண்டும் ஒன்றல்ல. 

Thriller சிரிப்பு நிறவெறிக்கும் அதன் மூலம் அடையும் Mortality - க்குமானது. Dracula சிரிப்பு Mortality - க்கும் வஞ்சகத்திற்கும் ஏன், அதன் குற்றவுணர்வுக்குமான ஒரு அழுத்தமான சிரிப்பாக்கக்கூட சொல்லலாம்.

இங்கே வேறு விஷயத்திற்கு வருவோம்.

Missed Movies என்ற காணொளி வலைத்தளம் ஒரு வருடத்திற்கு முன்பே சீனிவாச ராமானுஜத்தின் இரண்டு பேட்டிகளைப் போட்டிருக்கிறது. அது மிகக் கவனமாக கேள்வி கேட்கப்பட்டு மிக கவனமாக நெறிப்படுத்தபட்டிருந்தது. தனிமனிதன், குடும்பம், சமூகம், அரசியல், அறிவியியல், கலை இலக்கியம், தத்துவம் என்று சகலத்தையும் அதன் எதிரிடைகளைக் கொண்டு புதிய திறப்பைக் காட்டியிருக்கிறது.

இந்த பேட்டியினிடையே ஒருமுறை சீனிவாச ராமானுஜம் சிரிக்கிறார்.

ஆனால் தன்னறம் காணொளியில் இடையிடையே அடிக்கடி தேவையில்லாத ஒன்றாக அல்லது எடிட் செய்திருக்க வேண்டிய ஒன்றாக அந்தச் சிரிப்பு நமக்கு தோன்றினாலும் இறுதியாக அவர் ஒரு கேள்வியை கேட்டுவிட்டு, மேற்சொன்ன இரண்டு சிரிப்புகளைப்போல அந்தக் காணொளி முடிந்துபோகிறது. அதேபோல மிக அதிக அழுத்தத்தையும் அது அடைந்துவிடுகிறது. 

இந்த இடம்தான் ஏன் தன்னறம் அந்த சிரிப்புகளை காணொளி முழுக்க அனுமதித்தனர் என்பதற்கான தீவிர எண்ணம் புரிகிறது. 

மேலும் மேற்சொன்ன இரண்டு சிரிப்புகளைப்போல இல்லாமல் இது குழந்தையின் சிரிப்பைப்போல மிக அதிக திறம் வாய்ந்ததாக, யாராலும் புறந்தள்ள முடியாத ஒன்றாக மாறிவிடுகிறது. 

நாமும் சிரித்தே ஆகவேண்டும். 

அது 'குணா' வில் குண்டடிப்பட்டு கடைசியில் குணாவின் மடியில் உயிர்விடும் 'அபிராமி' யின் ஒருகண சிரிப்பாகத்தான் இருக்கக்கூடும்.

அடுத்து, 

நேற்று 2026 சென்னை புத்தக கண்காட்சியில் நடைபெற்ற ஒரு புத்தக வெளியீட்டிற்கு ஒருவரும் வராததால்  

'தழல்' கிருஷ்ணமூர்த்தி (யாவரும் இணைய இதழாசிரியர்) மிகுந்த மனவேதனையுடன் தனது முகநூல் பக்கத்தில் அதைப் பகிர்ந்திருந்தார்.

ஓரளவுக்கேனும் மேற்சொன்ன சீனிவாச ராமானுஜத்தின் பேட்டியில் இதற்கான மன வலு நம்மெல்லொருக்கும் கிடைக்கக்கூடும்.

இது நம்மை வேறுவொரு இடத்திற்குக் கூட்டிச் சொல்வதை தவிர்க்கவும் முடிவதில்லை.

இப்போதெல்லாம் காணொளிகளில் Podcast என்பது மிகுந்துவிட்டது. குறிப்பாக தன்னம்பிக்கை சார்ந்தவைகளில் 'கிருஷ்ணா' வின் Karkakasadara காணொளிகள் மிக முக்கியமானவையாக இருக்கின்றன.

அதில் ஒன்றுதான், 'The Courage to be Disliked' பற்றிய Book summary.

ஜப்பானிய அட்லேரியன் தத்துவ எழுத்தாளரான Fumitake Koga ன் பிரபல நூல் இது. இதைப்பற்றி ஓரிரு வரிகளில் சொல்ல வேண்டுமானால், 

1. பிராய்ட் - ஒரு மனிதனின் கடந்த காலமே அவனை வழிநடத்துகிறது.

2.  யூங் - நமது ஆழ்மனமே எல்லாமுமாக இருக்கிறது.

3.  அட்லர் - நீயே தேர்ந்தெடுக்கும் இடத்தில் இருக்கிறாய்.

ஆனால் இந்த புத்தக அறிமுகத்தில் ஏதோ ஒரு மூலையில் மட்டுமே இந்த, 'விரும்பப்படாதிருக்க கொள்ளும் தைரியம்' இருக்கிறது. 

ஆனால் jonathan Haidt ன் ' Anxious Generation' புத்தக அறிமுகம் மிக முக்கியமானதாக இருக்கிறது. 

ஒரு காணொளியில் கிருஷ்ணாவே சொல்வதைப்போல ஒரு கட்டத்தில் அவர் தேடிப்போடும் புத்தகங்கள் அதிக விருப்பங்களையும் வெகுசன தீனியாகவும் இல்லாமல் ஆனால் மிக முக்கியமான ஒன்றை பேசுவதாக இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிற்கு அவர் வந்ததே அவர் காணொளி போடுவதற்காக படித்த நூல்கள்தான் என்றால் அது எவ்வளவு மேன்மையானது? இந்த தைரியத்தைப்போல?

நண்பர்களே, சிரிப்பு என்ற ஒன்றை கொண்டிருக்கும் ஒரே இனம், நாம்தான். ஆனால் ஒரு சிரிப்பு சந்தோஷத்தை மட்டுமா குறிப்பிடுகிறது?

இந்த பொங்கல் நன்னாளில் நமது உழவுக்கு துணையாயிருக்கும் சூரியனும் மாடுகளும் இந்தப் பண்டிகையை எதிர்ப்பார்த்தா இருக்கின்றன?

இல்லை. நாம்தான். 

அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்.


( இணைப்பு சுட்டிகள்)

1. https://youtu.be/MINp1XjLqB8?si=ruXmx5e3gS-MW-ek

2. https://youtu.be/R2jMZbonDWQ?si=wT50z9_yQPQQ2b3b

3. https://youtu.be/4OXXaljtRlY?si=qwvq06U-9O7FOBdm

4. https://youtu.be/KbWHs80-FXI?si=6r6LPG-OP8rehaIy

புத்தம் புது ஆண்டு...

  காலம்தோரும் ஓர் இரட்டை நிலை இருந்து கொண்டுதான் இருக்கிறது. அம்மாவும் நானும் எம் ஜி ஆர் சிவாஜி என்று மல்லுக்கு நின்றிருந்தபோது நானும் துரைய...