EVERY INDIVIDUAL MATTERS.
EVERY INDIVIDUAL HAS A ROLE TO PLAY. EVERY INDIVIDUAL MAKES A DIFFERENCE.
- Jane Goodall
மொழிபெயர்ப்பு அல்லது மொழியாக்கம் என்ற எதுவுமே அண்ட முடியாத, ஜேன் குடாலுடைய இந்த மூன்று வரிகள்.
இந்த முழு விஷயத்திற்குமானது அவருடைய நெடிய வாழ்வு. தமிழைப் பொருத்தவரை இந்தத் திண்மையை வேறு எப்படியும் சொல்லிவிட முடியாது. அது இந்த பிரபஞ்சத்தின் ஒரு சிறு பகுதியை மட்டும் கணக்கிலெடுத்துக் கொள்வதாக முடிந்துவிடும்.
மேம்போக்காக பார்த்தால் இது மனிதர்களுக்கோ, விலங்குகளுக்கோ மட்டுமே பொருந்துவதாகக்கூட தோன்றலாம். ஆனால் இது அப்படியில்லை. அல்லது சமாதானமாக ஒரு முடிவுக்குக்கூட வரலாம். இதைத் தொடர்ந்து சில நினைவுகள் எழுகின்றன.
சி. மணியுடன் தொடர்ந்த சந்திப்பில் இருந்தபோது அவர் இந்த பிரபஞ்சத்திலேயே தனியான தன்மையுடன் இருக்கும் ஓர் ஆளுமை என்றே நினைத்திருந்தேன். வேறு எங்கும் அப்படி ஒரு தன்மையை சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டவில்லை.
எல்லா மனிதர்களுக்கும், ஏன் விலங்குகளுக்கும்கூட சொல்லலாம் ஒரு தனிப்பட்ட நடத்தையைக் கொண்டிருப்பதை கவனிக்கலாம். நடத்தை என்பதைவிட அதை ஒரு தன்மை என்று புரிந்து கொள்ளலாம்.
குறிப்பாக இதை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று தனக்குத்தானே நிகழ்த்திக் கொள்ளும் தன்மை. மற்றது சமூகத்தோடும் இந்த இயற்கையோடும் தொடர்பு கொள்ளும் போக்கு.
வழக்கமாக நாம் எல்லோருமே ஏதோ ஒருவகையில் சில அர்த்தமற்ற தொடர் செய்கைகளை நமது சிந்தனை இடைநிறுத்தங்களில் நம்மையும் அறியாமல் செய்வோம்.
தலை சொறிவது, மூக்கைத் துடைத்துக் கொள்வது, முடியைக் கோதுவது, கால்களை ஆட்டுவது அல்லது வெறுமனே விரல்களைக் கொண்டு எதையாவது செய்வது என்று எத்தகைய நிலையிலும் ஏதாவது ஒன்று வெளிப்பட்டுவிடும். எங்கள் ஜீனோகூட உணவு தயார் செய்யும் அந்தச் சிறிய காத்திருப்புக்குள், பல கொட்டாவிகளையோ அல்லது முன் கால்களைத் தளர்த்தவோ செய்வான்.
ஒன்று சிந்தனைத் தீவிரம் அல்லது சிந்தனையற்ற ஒரு வெற்று அல்லது குறிப்பிட்ட ஒரு நிலைமையை கைக்கொள்ள இயலாதத் தன்மையால் இது நிகழக்கூடும்.
இது ஒரு விஷயத்தைச் சொல்லுகிறது.
ஒரு நிலையில், மூளையின் உடல் கட்டுப்பாடு சார்ந்த, அதாவது தேவையான செய்கைகளை மட்டும் செய்து ஆற்றலை வீணடிக்காத இயற்கையின் அடிப்படை சறுக்கிவிடுகிறது. இதுவும் ஏதோ காரணமாகக்கூட இருக்கலாம். ஆனால் மூளையின் பகுத்தறிவிற்கு அப்பால் தன்னியல்பாக உடல் செயல்படும் ஒரு நிலையென்பது ஒரு கட்டத்தில் உடலே மூளையைக் கட்டுப்படுத்த அந்த மூளையே சம்மதித்துவிடுகிறது.
இதை டோப்பமைன் விளைவாகவும் வரையறுக்கலாம். ஆனால் அதையும் தாண்டி நாம் ஒரு புரிதலுக்கு வரலாம்.
கோயில் திருவிழாக்களில், பெருந்திரளான கூட்டங்களில், ஏன் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் கூடிவிடும்போது அங்கே மிக அதிகமாக பகுத்தறிவு மழுங்கிப்போகிறது. அதைவிட நாம்மைப் போன்ற பரிணாமத்தின் உச்சத்திலிருக்கும் ஒரு மனத்தின் நடைமுறை செயல்களைக் கணக்கிலெடுக்கும் பிரக்ஞை தவறிவிடுகிறது. இது சில பரிணாமத்தின் ஆதிகால பேராபத்தை எதிர் கொள்ளும் ஒரு கூட்ட மனோபாவ செயல்பாடகவும் இருக்கலாம். அதன் எச்சம் இன்று அந்த பரிணாமத்தின் ஆதார செயல்பாட்டு கருத்தாக்கத்திற்கே கேடாக முடிகிறது.
சரி. சி. மணியின் இந்த நிலையின் தன்மையென்ன என்று யோசித்தால், அவர் எதற்கும் பெரிதாக வினைபுரிந்ததில்லை. இது ஒரு மந்த புத்தியாக இருக்குமோ என்று யோசித்தால், அதுதான் இல்லை.
அவர் தனது முழு கட்டுப்பாட்டில், முழு முதலாக பிரக்ஞையுடன் இருந்தார் என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதுவே அவரை எந்த சார்பும் இல்லாத, அல்லது முகஸ்துதிகளை தூக்கித் திரியும் விபத்திலிருந்து காப்பற்றியிருக்கிறது.
'எழுத்து' சி.சு. செல்லப்பா ஞானக்கூத்தனின் படைப்புகளை மறுதலித்தப்போது, சி. மணி கொண்டாடினார். கொஞ்சமேனும் அதற்காக தனது, 'நடை' இதழை களமாக்கினார், சி. சு. செல்லப்பாவை எதிர்த்து. அதுவே இலக்கியத்தை, நவீனத்தை பின்நவீனத்திற்குக் கொண்டு சென்றது.
சி. மணி கடைசிவரை தனக்கான நிலையான நிலையாக எதையும் வைத்துக் கொள்ளாமல் இருந்ததற்குக் காரணம் அவர் ஒருமுறைகூட எனக்குத் தெரிந்து வெடித்துச் சிரித்ததில்லை. தலை சொரிந்ததில்லை. வெறுமனே காலாட்டியதில்லை அல்லது கட்டுக்கடங்காமல் கிளர்வுற்றதில்லை. அதுவே அவரை நிலையான உயர் பரிணாம உயிரியாக தக்கவைக்க உதவியது.
அவர் காலத்து இலக்கியவாதிகள் அவரைத் தவிர்த்தது சி. மணி கொண்டிருந்த தன்மையைக் கொண்டிருக்கவில்லையோ என்றே எண்ண வைக்கிறது. ஆமாம் ஞானக்கூத்தனோ, அசோகமித்திரனோ சி. மணியை எப்போதும் நினைவுகூறியதே இல்லைதான்.
ஆனால் நகுலனின்மேல் சி. மணியின் உடலிலிருந்து எழும் மணமே எழுவதாக எனக்குத் தோன்றும்.
நிற்க.
இன்று இந்த தமிழ்ச் சூழல் இருவேறு நிலைகளை ஒரு பகுத்தறிவின் முழுமையாக ஆக்கிக் கொண்டிருக்கிறது. அல்லது உலகமே அத்தகைய ஒரு தன்மையை நோக்கித்தான் செல்வதாகத்தான் தோன்றுகிறது.
அதாவது பகுத்தறிவை தனக்கும் முட்டாள்தனத்தை மற்றவர்க்கும் ஆக்கும் இந்த செயலுக்கு, முட்டாள்தனத்தை விளக்க பகுத்தறிவையும் பகுத்தறிவை விளக்க முட்டாள்தனத்தையும் கையிலெடுக்கிறது.
இதற்கு நாம் பகுத்தறிவு பேசிய, பேசும் அத்தனை சிந்தனையாளர்களையும் கடிந்து கொள்ளத் தேவையில்லை. ஏனென்றால் இந்த முட்டாள்தனங்கள் எல்லாமே அந்த பகுத்தறிவின் மேலேயே கட்டி எழுப்பப்படுகிறது.
ஜேன் குடால் சொல்வது இதைத்தான்.
நாலாபக்கமும் எறும்புகள் இழுத்துச் செல்லும் உணவு எப்படியோ இறுதியில் அதன் வசிப்பிட வாயிலுக்குச் சென்றுவிடுவதைப்போல, இதுவும் நிகழும். அந்த ஒரு எறும்பு மட்டும் தன் திசையை எப்போதும் மாற்றாது. அப்படி செல்லும் வழித்தடத்தின் சிக்கல்களும் இந்தத் திசைப் போராட்டத்தில் ஒன்றுமில்லாமல் ஆகிவிடுகிறது. கூடவே அந்த ஒற்றை எறும்பு பெரிய ஆசுவாசமடைந்துவிடுகிறது, இறுதியில்.
உயிர்களின் கூட்டு வாழ்க்கையில் எல்லா விஷயத்திற்கும் எல்லாமும் முக்கியம்.
சி. மணி அவர் வீட்டு வாசலில் வந்து சாக்கடையை துலாவும் பன்றிகளை என்றுமே அவர் விரட்டியதில்லை. எனது இருசக்கர வாகனத்தில் சாக்கடை தண்ணீரை தெளித்துவிடும் என்பதற்காக கொஞ்சம் தள்ளி நிறுத்தச் சொல்லுவார்.
இன்று சி.மணியின் எண்பத்து ஒன்பதாவது பிறந்த தினம்.
02-10-2025
