Friday, January 22, 2010

சாகிப்கிரான் கவிதைகள் - புது விசை டிசம்பர் 2009



சாலையோரங்களில் தென்படும் வயோதிகளும் கூடவே அவர்களது கிழட்டு நாய்களும்


......... வீடு.

அதன் ஒவ்வொரு நிலையிலும்
ஏ தாவ தொரு
விலங்கு
துணையாக இருக்கிறது.

அப்படியே
குட்டிச் சுவராகும் வரை
கூடவேயிருப்பது பூனையோ நாயோ.
தவிர
கிண்ணத்தைத் தட்டினால் ஓடிவரும்
பூனையாகவும்
பந்தை வீசினால் ஓடும்
நாயாகவும்.
வேறெது இருக்கக்கூடும்
இறுதிவரை?

பூவை
காயை
கனியை
பிறகொரு
வெறுமையையும்
காய்க்கிற தாவரம்
கல்மரம் எனப்படுகிறது

என்றைக்குமான.



மொழியற்ற இடத்தில் கவிதையற்ற ஒன்றை

வடித்துச் காட்டும் பித்தன்

நீங்களிரு வரும்
பெயரில் கூட
நிகழ்வின் வெவ்
வேறு முனைகளாக
வே யிருக்கரீர்கள்.

உன் பெயரையும்
அவன் பெயரையும்
ஒன்று . . .
இரண்டு . . .
என இலக்கமிட்டு
திருத்திப் பதிக்கிறேன்.

இப்போது
எனது அலைபேசியின்
பெயரடங்கல் பகுதியில்
நீங்களிருவரும் அருகருகில்
வேறெந்த பெயர்களிலுமில்லாத
வசீகரமும் அர்த்தமும்
மிளிர்கிறது உங்கள்
ஜோடியில்.

நெருப்பை பஞ்சுப்பொதியில்
பொதிக்கிறேன்.
ஆறுகளை வழிமாற்றுகிறேன்.
எல்லைகளைத் திருத்தி
நாடுகளை ஒழுங்குபடுத்துகிறேன்.
கண்டங்களை நகர்த்தி
பூமியை அழகுபடுத்துகிறேன்.
இந்த அழகை
வெப்பம் தணிய
கொஞ்சம் தள்ளி வைக்கிறேன்.
புதிய பாதையில்
குளிர்ந்த பூமி
அன்பும் சாந்தமும்
அடைகிறது.

எல்லாமே
என் வழியாக நிகழ

எத்தனை சாத்தியங்களை
கொண்டிருக்கிறது
இந்த அலைபேசி?

இவ்வாறே
உங்கள் கருவியொன்றை
நான் இறுதியாக
வடி
வமைக்கிறேன்.


அசரீரி கட்டமைக்கும் சமூகத்திற்கான மதிப்புரை


இப்படியாக
ஒரு பழம் உண்டாயிற்று.
அது பச்சை ரத்த நிறமும்
மாம்ச மணமும்
கொண்டதாயிருக்கிறது.

எம் மறைக்கு
அவ்வைக் கிழவி
கொண்டு சேர்க்க
பழத்தைக் கீறும்
சாத்தியத்தில் மூன்று
கத்திகள் மின்னலிட்டன.

ஆனால்
ஓர் அசரீரி:
“பழத்தை------”
என்றது மறையெங்கும்
தோட்டமும் காடுகளுமென
அடர்ந்தன.
பிறகு
“பகிர்ந்துண்டால்------”
என்றதும் இரவாகி
பச்சைமர மொன்று
பற்றியெரிந்தது.
அதுலிருந்து வந்த
அவ்வசரீரி,
“பழத்தின் பலன் கிட்டாது.”
என்று முடித்துக் கொண்டது.

உடனே
எனதறை இந்த மாநகரின்
மையப்பகுதியின்
சிமெண்ட் மரங்களடர்ந்த
பொட்டலின் உச்சியில்
தொங்கலிட்டபடி இருக்கிறது.
நிர்வாண நகரமொன்றின்
ஆணையர் என் வீட்டு
கழிவறைவரை பொருத்திய
காமிரா கண்களால்
யோனிகளையும் தொங்குறிகளையும்
வெறிக்க
எனக்காக இணையம்
இந்த உலகைச் சுற்றிவருகிறது
முதலில்.

எனவே
பழத்தை நான் கை பற்றுகிறேன்.
பழம் நழுவுவதாக இருக்கிறது.
கத்தி என் கைக்கு வருகிறது.
மூவரில் நானே
பழத்தை ஜீராவில்
முக்கவைத்து மென்மையாக
கீனுகிறேன்.
பழம் தொண்டையில் வழுக்குகிறது.

முழு பழமாக மட்டுமில்லை
பல பழங்களை
கத்திபோன்ற ஸ்பூனைக்கொண்டு
ஜீராவுடன், மதுவுடன்,
துரோகத்துடன், கயமையுடன்
பழக்கத்தின்
மிகத் தேர்ந்த பாவனையுடன்
படைப்பின் மென்மையைத்
தின்று கொண்டிருக்கிறது
நகரம்.

அசரீரி
மாற்று கருத்துக்களை
வழங்கியபடி வெளியெங்கும்
தொங்கிக் கொண்டிருக்கிறது.



Thursday, October 22, 2009

சாகிப்கிரான் கவிதைகள்



நினைத்ததைத் தரும் கற்பக விருட்சத்திற்கு அடியில் ஒரு நவீனன்


பசியாற்றி
ஆசுவாசப் படுத்திய
பெண்கள்
சென்ற பின்
புலி வருவதற்கு
முன்

நடுவிலொரு

கோடாரியை வர
வழைத்த
ந்த மரத்தை
வெட்டி யெறிந்தானி
வன்.

அடையாளம் தேடிய
லைந்த புலி
திகைத்தது.

காடு
கல்லாகிக் காத்திருக்கக்
தொடங்கும் கணத்திற்கு
முந்தைய ஒரு
பூவின் யுகம்
தப்பி வண்ணத்துப்பூச்சியாக
இன்னும் பறந்து
கொண்டுதா னிருக்கிறது.



மறைந்திருக்கும் பூதம்

முதலில் நீ
மது வருந்துகிறாய்
பிறகு
மது வுன்னை யருந்துகிறது
இப்போது நீ
யென்னை யருந்த
திகி லுடனு ன்னைக்
கடந்து கொண்டிருக்கிறேன்.

கட்டமைக்கப்பட்டிருக்கும்
பதுங்கு குழிகளுள் உறங்கும்
சாத்தான்கள் உனை
நானறியும் சாத்தியத்தின்
அசலோ வியத்தைச் சுக்கல்களாக்கி
ஒன்று கூட்டும் விளையாட்டி லென்னை
தோற்கடிக்க

மறுநாளும் மறுநாளு
மென்னைத் தேடியலைகின்றன

மது வருந்த.



கொல்லனின் மகள்

பழுத்து விரியும்
அந்த சிவ ப்பிரும்பை
பார்க்க
தினமும் களத்திற்குச்
சென்றுவிடுவேன்.

ஆயுதக் குவியல்களுக் கிடையே
சாம்பல் பூவாக
எனக்கொரு
சிரிப்பை வைத்திருப்பாள்.

ஒருநாள்
பெரிய கூட்டத்தினிடையே
அழுதுகொண்டிருந்தாள்
தலைவெட்டிய சிதைவுடலாக
கிடக்கும் கொல்லனின் மகள்.

பிரிதொருநாள்
அயல் தேசத்து
ஆயுதக்கிடங்கெங்கும்
ஆயுதங்களுக்கு மாற்றாக
பூக்கள்
நிரம்பிக் கிடக்க
சர்வதேச சபைகள்
அம்மனுக்குப் பூ
மிதித்துச் சென்றன.

வாத்துகளை நம்பிய
முயலை மாமிச தின்னிகள்
தின்பதைப்போலவே
வாத்துகள் சிறு
புழுக்களைத் தின்கின்றன

திசைகள்
எல்லாவற்றிற்கும்
எதிராகவே
விரைந்து கொண்டிருக்கின்றன.

திசைகளற்று
சில பூக்களுடன்
பறவை யொன்றும்
பிறகு
ஆயுதக்கிடங்குகள்.



முன்னிலை ஒருமை

எப்போதும் போலவே

நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
விருட்சம் தன்னை
நெகிழ்த்துக் கொண்டு
செம்பச்சை இலை யொன்றை
பளபளக்கச் செய்கிறது.

அந்த இலையே
விருட்சமாக
அந்த இலையே
கிளையாக
அந்த இலையே
காம்பாக
அந்த இலையே
பச்சையமாக
அந்த இலையே
ஒளியாக
அந்த இலையே
காற்றாக
காட்சிப்படுகிறது.

சிமிட்டி மலர்ந்த கணம்
இலை பழுத்து விடுகிறது.
விருட்சத்தை
கிளையை
பச்சையத்தை
பிரிந்தும் விடுகிறது.

இப்போது மரம்
வலுவானதாக மாறுகிறது.
ஒளி கண்களைக் கூச
காற்று மரத்தைப் பெயர்த்து
என் கபாலம் நசுக்க
விரைகின்றது.

நசுக்கினால் நசுங்கி
அறுத்தால் அறுபட்டு
போகவே
எல்லாம் உண்டாக்கப்பட்டிருக்க
நசுங்கும்போது ஒரு
ஓவியத்தையும்
அறுபடும்போது ஒரு
சிலையையும் விட்டுச் செல்வது,

எப்போதும் போலவே
இப்போதும் நடக்கிறது.

பவளக்கொடி இதழ் ஐந்தில் வெளிவந்தவை
(அக்டோபர் – 2009 இதழ்)

Thursday, May 14, 2009

வனாந்திரத்தின், யாரும் அறியாத பூ


வனாந்திரத்தின், யாருமறியாத ஒரு மலர்.சாகிப்கிரான்


ஏப்ரல் 6, 2009, அதிகாலை மணி 1.15 க்கு சி. மணி என்கிற மிகப் பெரிய ஆளுமையை, மிக சாதாரணமாகச் சுவாசக் கோளாறு என்கிற உடல் நோய் மரணமடையச் செய்கிறது.


தமிழ் புதுக்கவிதையின் முன்னோடிகளை வரிசைப்படுத்தினால் கடைசியில் வரும் ஒரு பெயர்தான் சி. மணி. கடைசி என்பதன் பொருள், மேலோட்டமாகப் பார்க்கும்போது ஏதும் தெரிவதில்லை. கடைசி என்பதன் அரசியல், வழக்கம்போல அவரது வாழ்விலும் தொடர்ந்து கொண்டே இருந்ததுதான் வியப்பு.


சி. மணி, 1939 அக்டோபர் 3 ம் தேதி பிறந்தார். இவர் இயற்பெயர் எஸ். பழனிசாமி. சி. மணி, வே. மாலி என்ற பெயர்களில் கவிதை எழுதிய இவர், செல்வம் என்ற பெயரில் யாப்பும் கவிதையும் என்ற மிக முக்கியமான ஒரு யாப்பிலக்கண நூலையும், ஓலூலூ என்ற பெயரில் அலசல் என்கிற அபத்த நாடகம் ஒன்றையும், தாண்டவ நாயகம் என்ற நெடுங்கதை ப. சாமி என்ற பெயரிலும் எழுதியிருக்கிறார்.


தோண்டு கிணறுகளும் அவற்றின் அமைப்பும் என்ற ஒரு மொழிபெயர்ப்பு, டேனிடா நலவாழ்வுத் திட்டத்திற்காக ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கான நிர்வாக கையேடு மொழிபெயர்ப்பு, தாவோ தே ஜிங் என்ற இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சீன மொழி கவிதைத் தத்துவ நூல் மொழிபெயர்ப்பும், மிகச் சுருக்கமான அறிமுக நூல் வரிசையில் புத்தர், பெளத்தம், பிராய்ட் நூல் மொழிபெயர்ப்பும், உதய நாராயண சிங்கின் முன்னிலை ஒருமை என்ற மைதிலி மொழி கவிதைத் தொகுப்பை ஆங்கில வழியில் தமிழுக்கு மொழிபெயர்த்தார். Contemporary prose reader என்ற ஆங்கில வழியில் தமிழ் கற்கும் மாணவர்களுக்கான மொழிபெயர்ப்பு நூலாக்கமும், கிரியாவின் தற்கால தமிழ் அகராதியின் உருவாக்கத்திலும் இவரின் பங்கு மிக அதிகம்.


கவிதைக்கான குமாரன் ஆசான் நினைவுப் பரிசும், விளக்கு விருது வாழ்நாள் சாதனைக்கும், நிர்வாகம், தொழில்நுட்பத் துறைகளில் மொழிபெயர்ப்புக்காக இருமுறை தமிழ்ப் பல்கலைக்கழகப் பரிசும், தென்னிந்திய புத்தகப் பதிப்பாளர் சங்கம் வழங்கிய கலைஞர் பொற்கிலி விருது, கவிதைக்காக வாழ்நாள் சாதனையாக ஒரு லட்சம் பரிசும் பெற்றிருக்கும் இவர், தமிழ் வினைச்சொல் அகராதி ஒன்றை அமெரிக்க தமிழ் அறிஞர் பேராசிரியர் ஹெரால்டு ஷிஃப்மனுடன் இணைந்து உருவாக்கினார்.


தனது செல்வங்கள் அனைத்தையும் நடை என்ற இலக்கிய முத்திங்கள் ஏட்டிற்காகச் செலவு செய்தார். அது அக்டோபர் 1968 முதல், ரூபாய் மூன்று விலையுடன் ஜி. கிருஷ்ணசாமியை வெளியீட்டாளர், ஆசிரியராகக் கொண்டு எட்டு இதழ்கள் வெளிவந்தன (ஜூலை 1970 வரை). நடையானது நவீன படைப்பிலக்கியம், விமர்சன இலக்கியத்துடன் நின்றுவிடாமல், இலக்கியம் தன்னுடன் சம்பந்தப்பட வேண்டிய நவீன ஓவியம், நாடக இலக்கியம், சமூக இலக்கியம், அரசியல் சார்ந்த இலக்கிய போக்குகளையும் தன்னுள் பொதித்து, இதழ் வடிவமைப்பு, மாறுபட்ட முகப்பட்டை உருவாக்கம், கவிதைகளை ஓவியத்துடன் பிசைந்து மற்றொரு தளத்தைத் தொடவைத்து வெற்றி கண்டது.


தன்னை முன்னிருத்தாமலும், தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொள்ளக்கூட மனமில்லாத சி. மணி, தொழிலுக்காகக் கற்றது ஆங்கிலமும் ஆங்கிலத்தைக் கற்பிக்கும் முறையும். அவரது மனம் விரும்பி ஈடுபட்டது பழந்தமிழ் இலக்கியம், இலக்கணம், அறிவியல், தத்துவம், உளவியல். எல்லாவற்றிற்கும் மேலே, அறிந்ததற்கு அப்பாலுள்ள பிரக்ஞைத் தளங்களைக் கண்டறிய உதவும் சிந்தனைகளான திருமூலரிலிருந்து, தாவோ, ஜென், சூஃபி, குர்ட்ஜீப், ஜே. கிருஷ்ணமூர்த்தி, கார்லோஸ் காஸ்டெனடா. ஆனாலும் எதிலும் நிலைகொள்ள முடியாத, ஒரு அந்நியன் உணர்வு. அவற்றின் வெளிப்பாடுகள் ஒரு தன்மையானவை இல்லை. எனவேதான் செய்நேர்த்தியும், எளிதில் எதிலும் சிக்கிக் கொண்டுவிடாத ஜாக்கிரதையும், எள்ளலும் புராதனமும், நவீனமும், கலையும், விளையாட்டுத்தனமும் நவீனத்தன்மை தமிழில் வேர் விடும் முன்பே பின் – நவீனத்துவத்தின் கூறுகள் இவரது படைப்புகளில் கலந்து காணப்பட்டன.


ஒரு கலைஞன் தனது படைப்பின் மூலமே தன்னுடைய மரணத்தை வெல்கிறான். ஆனால் மரணம் அனைத்தையும் வென்றுவிடுகிறது.

Thursday, March 12, 2009

நான் இறங்கும் நிறுத்தத்தில் மழை பெய்துகொண்டு இருக்கிறது

ஜீவன் பென்னியின்
கவிதைத் தொகுப்பிற்கான மதிப்புரை - சாகிப்கிரான்

கவிதையை எது உருவாக்குகிறது அல்லது கவிதை ஏன் உருவாகிறது என்ற கேள்விக்கு நிறைய பதில்கள் இருக்கலாம். ஆனால் ஒரு கவிஞனின் நிலைப்பாடு சார்ந்து இது தடம் மாறியும் போகலாம். இது கவிதை குறித்த ஒரு பொதுவான வரையறைக்கு நம்மைக் கொண்டு செல்வதைக் காணலாம். இதுவே எப்போதும் கவிதை குறித்த நிலையான சூக்கும வடிவை நிலை நிறுத்துவதாக அமைகிறது.

எனவே எப்போதும் கவிதை ஒரு திடப்பொருளாக முடிவுறாமல் காற்றுப் பொருளாகவே தன்னைக் கட்டற்று விரித்துக் கொள்ளுகிறது. கவிதை, உரைநடை போல நீர்மப் பொருளாக வழிந்தோடிவிடுவதில்லை. இதுவே கவிதையைப் பல பரிணாமங்களில் சாத்தியப்படுத்துகிறது.

ஜீவன் பென்னி தனது முன்னுரையில் ‘கவிதைகள் குறித்த எல்லா ஆய்வுகளும் பிரக்ஞையின் வழியே படரும்போது பெரும் குழப்பங்களையேத் தோற்றுவிக்கின்றன’ என்று துவங்குகிறார். இது ஒருவிதத்தில் கவிதையின் மேல் வைக்கப்படும் விமர்சனத்தைப் புறக்கணிப்பதாக அல்லது மறுப்பதாகவுமே அமைகிறது. அவர் தொடர்ந்து எழுதும் அந்த முன்னுரையின் தொடர்ச்சியாக,’தமிழ்ச்சூழலில் தொடர்ந்து இயங்குவதும் இருத்தலும் எதிர்வினையாற்றலும் மேற்சொன்ன குழப்பங்களை தீவிரமாக அனுபவிப்பதேயாகும். கவிதைகள் குறித்த பிறரின் எந்தவொரு தார்மீகக் கோட்பாடுகளின் சொற்களின் மீதும் நம்பிக்கையற்றவனாகவும் ஒவ்வொருவரும் கவிதை குறித்த மாறுபட்ட சொற்களையே தனக்கென வைத்திருக்க வேண்டுமென்று நம்புபவனாகவுமிருக்கிறேன்’என்று குறிப்பிடுகிறார்.

ஒரு கவிதையை வாசிக்கும்போது நம் மனம் இருவிதத்தில் செயல்படுகிறது. அது சுகிப்பு மனநிலையும் விமர்சன மனநிலையும் ஆகும். இது சுகிப்பை அடிப்படையாகக் கொண்ட விமர்சனம் என்று வைத்துக்கொள்ளலாம். மனிதர்களின் மாறுபட்ட சுகிப்பே வேறுபட்ட விமர்சனத்தை முன்வைக்கிறது. ஆனால் எல்லா விமர்சனங்களும் மையமான ஒழுங்குபாடு ஒன்றை முன்வைப்பதைத் தொடர்ந்த கவனிப்பில் கண்டுகொள்ளலாம். இது ஸ்துல வடிவிலிருந்து சூக்கும வடிவை அடையும் ஒரு செயல் முறை. இது தவிர்க்கப்பட்டால் அல்லது புறக்கணிக்கப்பட்டால் மொழி மொழியற்ற ஒரு நிலைக்குச் சென்றுவிடும், அதாவது ஒரு சொல் தனது சொல்லற்ற நிலையடைவது. அது மெளனம். செயல்பாடற்ற மெளனம்.

ஜீவன் பென்னியின் இத்தகைய நிலைப்படு அவரது உரிமை என்பதால் என்னுடைய பார்வையும் அதே நிலைகொண்ட ஒரு நியாயமாகிவிடுகிறது. ஒரு படைப்பு, எழுதப்படுவதற்கும் வாசிக்கப்படுவதற்கும் இடையில் எழும் அந்த மெளனத்தையே பேசுகிறது.

ஜீவன் பென்னியின் தொகுப்பை நான் குறிப்பிட்ட மூன்று கவிதைகளின் மூலமாக முழுத்தொகுப்பிற்கான ஒரு பார்வையைத் தர முயல்கிறேன்.

சீன மொழியில் லாவோட்சு எழுதிய நூல் தாவோ தே ஜிங். இது நமது திருக்குறளைப்போல இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முற்பட்டது. இதில் இந்த பிரபஞ்சத் தோற்றம் பற்றிய பாடலே முதல் பாடலாக அமைந்துள்ளது.

அந்த முதல் பாடல்,

இருத்தலின்மையும் இருத்தலும்
ஆதியில் ஒரே மாதிரி;
ஆனால், வெளிப்படும்போது
வேறு வேறு.
இந்த ஒற்றுமை
நுண்மையின் நுண்மை எனப்படுகிறது.
பிரபஞ்சப் பகுதிகளின் தொடக்கம்
வெளிவருகிற வாயில்
இந்த எல்லையற்ற
நுண்மையின் நுண்மையாகும்.

இது நவீன BigBang கோட்பாட்டையே முன் வைக்கிறது. அந்த பெருவெடிப்பு நிகழ்வதற்கு முன் சூன்யமும் சூன்யமற்ற இருத்தலும் இரு வேறாக இல்லாமல் ஒன்றாகவே இருந்திருக்கின்றன. அதாவது இருத்தலின்மை என்ற ஒன்று மட்டுமே இருந்திருக்கிறது. அதுவே ஆதி, பிரம்மா, எல்லாம் கடந்ததாக பரம்பொருள். அந்த வெடிப்பே அதை இரண்டாக்குகிறது. அந்த நிகழ்வின் காரணம் அல்லது இயல்பின் நோக்கமே பிரபஞ்ச ரகசியமாகப் பார்க்கப்படுகிறது. இதுவே நுண்மையின் நுண்மையான அனைத்து ரகசியங்களையும் தன்னுள் கொண்டுள்ளது. வெடிப்பிற்கு அடுத்த கணம் இருத்தலின்மையிலிருந்து இருத்தல் உருவாகிறது. எனவே அந்த ஒன்றிலிருந்து இரண்டு உருவாகிறது. இதுவே எல்லாவற்றிற்கும் மூலமாகிறது.

ஜீவன் பென்னி தனது ‘சூன்யம்’ என்ற கவிதையில்

சூன்யம் உண்மைகளின் பெருவெளி எனத் துவங்குகிறார்.

அடுத்த வரியில்

சிசுவின் உள்ளங்கைகளிலிருக்கும் குளிர்ந்த கடவுளைப் போல்

என்கிறார்.

இது கவிதையை அதன் விஞ்ஞான விளக்கத்திலிருந்து கட்டற்ற தன்மைக்குக் கொண்டு செல்கிறது. இதுவே ஒரு பேருண்மை, அல்லது ஒரு விஷயம் கவிதையாக்கப்படுவதில் துவங்குகிறது. பிறகு கவிதை இவ்வாறு முடிவடைகிறது.

சூன்யத்தின் சூழ்ச்சியால் ஒரு ஆப்பிள்தான் விழவேண்டும்
உண்மை இல்லை
உண்மைகள் உண்டு.

இங்கே மதம் சார்ந்த அரசியல் அடித்து நொறுக்கப்படுகிறது. அந்த மாபெரும் துக்கமானது படிப்படியாக அறிவியலாக்கப்பட்டு, இந்த மானுட சமுதாயத்தை துண்டாடிக்கொண்டிருக்கும் ஒரு காரணியாக முன் வைக்கப்படுகிறது. இந்த பிரபஞ்சத்தின் இருப்பு அதன் நுண்மையின் நுண்மையாக மாற்றப்பட்டு, மதம் என்ற எல்லைக்கோடு வேரறுக்கப்பட்டு, கவிதையின் பல்வேறுபட்ட சாத்தியத்தை முன் வைக்கிறது.
இவ்வாறான பேருண்மைகளிலிருந்தும் கருதுகோள்களிலிருந்தும் தொன்மங்களிலிருந்தும் கவிதை ஏற்படுத்தும் சடுதி மாற்றமானது, வாசகனை ஒரு குறிப்பிட்ட திசை நோக்கியே கொண்டு செல்கிறது. இது கவிதையின் ஆன்மாவிற்கு தொடர்ந்து சாதகமாகவே செயல்படும் எனக் கூறிவிடவும் முடியாது. தொகுப்பில் ஏராளமான கவிதைகள் ஆன்மத் தேடலுடனும் சமூகப் பிரச்சனை சார்ந்தும் தொன்மங்களை மீட்டெடுத்தும் தனக்கென தனியான ஒரு சொல்லாடல் முறையுடன் வெவ்வேறு விதமான கவிதா அனுபவத்தைத் தருவனவாக இருக்கின்றன.

இத்தகைய கவிதைகள் ஒரு தளத்தில் நிற்கின்றன என்றால், ஜீவன் பென்னியின் தோழி என்ற கவிதை மற்றொரு சாத்தியப்பாட்டிற்கு கவிதையை நகர்த்துகின்றது.

உளவியலில் கனவு என்பது மிக முக்கிய பங்குவகிக்கிறது. அதுவே ஒரு மனிதனின் வாழ்க்கையிலும் தனது ஆளுமையைச் செலுத்துகிறது. நிறைவேறாத ஆசைகளே கனவாக எழும்புகின்றன என விளக்கங்களும் சொல்லப்படுகின்றன. ஆனால் மனித மனம் சார்ந்து இது அறிவியலின் சகல விளக்கங்களையும் சாராத ஒரு அபூர்வமாகவே தொக்கி நிற்கிறது.

கவிதை இப்படி ஆரம்பிக்கிறது,

ஒரு கனவில் உன்னைக் காணத் தொடங்கினேன்
அல்லதுவொரு கனவைப்போல காணத் தொடங்கினேன்

இந்தக் கவிதை கனவை ஒரு கொண்டாட்டமாகப் பாவிக்கிறது. கொண்டாட்டமே பரிபூரண சுகிப்பை சாத்தியப்படுத்துகிறது. சிறு குறுக்கீடுமற்ற அனுபவ வெளியானது கனவால் வழங்கப்படுகிறது. மனம் வேறு அனுபவம் வேறாக இல்லாமல் இரண்டும் ஒன்றாகவே செயல்படுவதால் கனவின் உணர்வெழுச்சியானது புலன்களால் உணரப்படும் அந்த நிஜ நிகழ்வினைப் புறந்தள்ளிவிடுகிறது. இதுவே ஜீவன் பென்னியை தனது காதலியைக் கனவு நிகழ்வாகவே கற்பித்துக் கொள்ள செய்கிறது. இந்தக் கற்பிதமானது கவியின் மற்ற சில கவிதைகளிலும் வெகு இயல்பாகக் காணக்கிடக்கிறது. இது கவியாளுமையின் ஒரு கூறாகத் திகழ்கிறது.

அடுத்ததாக ஒரு நீண்ட அனுபவமானது ஒரு கருதுகோளை முன் வைக்கிறது. அந்த கருதுகோளானது முன் எப்போதும் நம்பப்பட்டதற்கு எதிரான ஒன்றாக, சட்டென ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவதன் மூலம் எல்லா நம்பிக்கைகளையும் கேள்விக்குள்ளாக்குவதாக அமைகிறது. இது போன்ற கவிதைகள் ஒரு கவிஞனின் தொடர்ந்த தேடலின் மூலமாகவே கண்டடையப் படுகின்றன.

அப்படிப்பட்ட ஒரு கவிதை,

கண்களால் காண்பதும் பொய்
காதுகளால் கேட்பதும் பொய்
தீர விசாரிப்பதும் பொய்
எல்லாம் பொய்.

உண்மை, பொய் என்பன யாவும் கற்பிதங்களே. ஒன்றைச் சார்ந்து உண்மையாகக் கொள்ளப்படும் ஒன்று, மற்றொரு வகையில் பொய்யாக நிற்கிறது. எனவே நிரந்திர உண்மை என்றோ அல்லது நிரந்திர பொய்யென்றோ ஏதுமில்லை. அறிவியலில் அணுவைப் பிளக்க முடியாது என்பது அதைப் பிளக்கும் வரை உண்மையாகவே கொள்ளப்பட்டது. மற்றொரு விதத்தில் சொன்னால், எல்லாம் பொய் என்பதும் நிலையற்ற ஒன்றாகவே இருக்கிறது.

இதுவே வாழ்வை மிக நெருக்கடியான தருணங்களிலும் முன்னெடுக்க வைக்கிறது. சாமான்யன் இதை நம்பிக்கை என்கிறான். தத்துவவாதி தீர்கதரிசனம் என்கிறான். இந்த பார்வையின் வழியாகவே ஜீவன் பென்னி தன்னை இனம் காட்டிக் கொள்கிறார். இக்கவிதையே தொகுப்பின் முதல் கவிதையாக இருக்கிறது. இதுவே கவியைப் பார்க்கும் ஜன்னலாகவும் இருக்கிறது.

இப்படிப்பட்ட ஒரு தத்துவப் பார்வையுடன் முன் வைக்கப்படும் படைப்புகள் மொழி சார்ந்தும் வெளிப்படுத்த எடுத்துக்கொண்ட வடிவம் சார்ந்தும் சில சிக்கல்களை எதிர்கொள்கிறன. அந்த வகையில் ஜீவன் பென்னியின் கவிதைகளில் தொடர்ந்த காட்சி அடுக்குகளினால் சொல்லப்படும் ஒரு நிகழ்வு, மொழி ஆளுமையை ஊனப்படுத்துகின்றது. சில கவிதைகளில் புனைவு மிகுந்த வறட்சியைக் கொடுத்தாலும் மொழியின் எளிமையால் கவிதை தனது ஆன்மாவை மீட்டெடுத்துக் கொள்கிறது.

கவிஞர் தற்கால ஒரு இளைஞனின் பார்வையுடன் சகல பிரச்சனைகளையும் தனது பாடுபொருளாகக் கொண்டு, உலகமயமாக்கல், அன்பு, காமம், தன்னியல்பில் வாழ இயலாத ஏக்கம், தத்துவத் தேடல் எனத் தனக்கென குறிப்பிட்ட சில குறியீடுகளை கையாள்கிறார். காகம், பூனை, கடவுளின் ஆப்பிள், இரவு, வண்ணத்துப் பூச்சி என தனித்தன்மையுடன் விரிந்தாலும் சில கவிதைகளில் வெற்று குறியீடுகளாக மட்டுமே எஞ்சிவிடுகின்றன. தேடலின் நீண்ட பயணம் என்றுமே இத்தகைய சில விபத்துக்களைக் கொண்டிருக்கவே செய்யும். ஆனால் முழுத்தொகுப்பும் நமக்கு ஒரு மாறுபட்ட தரிசனத்தைத் தரும்விதத்தில் பல்வேறுபட்ட பார்வை நுணுக்கங்களுடன் கவிதா அனுபவத்தைத் தர முயல்கின்றன.

இத்தகைய ஒரு தொகுப்பில் உள்ள கவிதைகள் நமக்கு எதைத் தருகின்றன?

ஒரு ஜீவனின் அனுபவத்தையா, உணர்வெழுச்சியையா, தீர்கதரிசனத்தையா அல்லது மிக அந்தரங்கமான கவிதா அனுபவத்தையா?

எதுவாகவும் இருக்கலாம். ஆனால் ஒரு கவியின் முதல் கவிதைத் தொகுப்பிற்கான அவருடைய முன்னுரை அந்தக் கவிதைத் தொகுப்பிலிருக்கும் கவிதைகளைவிட இவ்வளவு செறிவாக இருக்குமென்று நான் எதிர்பார்கவில்லை.

-------------------------------------------

மணல் வீடு, களரி தெருக்கூத்துப் பயிற்சிப்பட்டறை இணைந்து மேட்டூர் ஏர்வாடியில் 24-01-09 அன்று நடத்திய மக்கள் கலை இலக்கிய விழாவில் வாசிக்கப்பட்ட மதிப்புரை.

Wednesday, September 17, 2008

லீனா மணிமேகலையின் தேவதைகள்

ஆவணப்படம் குறித்து.....


லீனா மணிமேகலையின் தேவதைகள் ஆவணப்படம் (என் டி டிவி 24x7 டாக்குமெண்டரி)பார்த்தேன். மூன்று பெண்களின் வாழ்க்கையையும் அவர்கள் அதை எதிர்கொள்ளும் கணங்களையும் ஆவணப்படுத்தியிருப்பது மிகுந்த பாதிப்பை உண்டாக்கும் விதமாக இருக்கிறது.

இந்த ஆவணப்படம், ஆவணப்படம் என்பதையும் தாண்டி பரிமாணங்கள் பெற்று ஒரு கவிதையாக, வேதனைகளை ஏற்றுக்கொண்ட அந்தப் பெண்களின் மனநிலையைச் சொல்கிறது.

வாழ்வின் கோர பக்கங்களின் சிதைவுக்குள்ளானவர்கள் எப்படி தங்களைச் சுற்றியவர்களுடனும் அற்ப ஜீவன்களிடமும் பேரன்பு பாராட்டுபவர்களாக இருக்கிறார்கள்?

ஆம் இது தேவதைகளால் மட்டுமே சாத்தியம்.

லீனாவிற்கு எனது பாராட்டுகள்.

விட்டல்ராவ் கதைகளின் எளிமையின் அடியாழங்கள்.

ஒரு படைப்பாளியின் அறமும் அனுபவங்களும் படைப்பாகும் கணம் என்பது ஒருவகையில் அந்தப் படைப்பாளியின் சிந்தனைகளும்  அதன் உள்ளடுக்குகளும் ஒரு மொழி வழ...