Thursday, May 19, 2022

சிதைவை நோக்கி . . . (சி. மணியுடன் சில வருடங்கள்)

   


1.பெருவெடிப்பு

ஒரு மழைக்காலம். இரவு மழைக் கொட்டித்தீர்த்திருந்தது. நகரம் சுத்தமாகி, மிகக் கண்ணியமான ஒரு கதியில் நகர்ந்து கொண்டிருந்தது. அன்று ஞாயிற்றுக்கிழமை. வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைக்கே உரிய நிதானம் வந்து ஒட்டிக்கொண்டது. இயல்பானதோ அல்லது ஒரு புரிந்துணர்தலாகவோ, பகுக்க முடியாத ஒரு மனநிலையாகவோ உணர்ந்தேன். வழக்கம்போல எல்லா ஞாயிறும் தூங்கிக் கழிக்கும் ஒன்றாகவோ, இலக்கிய நண்பர்களைச் சென்று பார்பதாகவோ, இலக்கிய கூட்டமொன்றிற்குச் செல்லும் குதூகலமாகவோ, ஏதாவது பிற மொழிப் படம் பார்ப்பதாகவோ இருந்து கொண்டிருந்தது. இத்தகைய இலக்கிய செயல்பாடானது விளக்க முடியாத ஒரு மகிழ்ச்சியைத் தருவதாக இருந்தது. அது எத்தகைய ஒரு பயன்பாடும் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. சமயத்தில் எல்லா அன்றாடச் செயல்களையும் ஒருவித கவனிப்புடன் ஈடற்ற கருணையோ, கரிசனமோ பொங்கும் ஒருத்தப் பார்வைக் கொண்டதாக மாற்றுவதாக அமைந்துவிடுகிறது. இது புற நோக்காளிக்கு போக்கற்ற செயலாக, வெட்டி வேலையாக, அல்லது இதுதான் அவன் இயல்பு என்று வகைப்படுத்திவிடும் ஒரு எளிய செயலாகத் தோற்றம் கொண்டுவிடுகிறது.


சொன்னபடி சீனிவாசன் நண்பகல் பதினொன்றிற்கு வீட்டிற்கு வந்துவிட்டார். யாரைப் பார்க்க என்றதற்கு, ‘அது ரகசியம் அல்லது பூடகமான ஒன்று’ என்றார். இரு சக்கர வாகனத்தில் அம்மாபேட்டை செளண்டம்மன் கோவில் தெரு, முப்பத்தி நாலாம் கதவிலக்கம் கொண்ட வீட்டைத் தட்டினோம். 


சார் இருக்கிறாரா? கேட்டது சீனி. 

தூங்குகிறார். பன்னிரண்டு மணிக்கு மேல் வாங்க . . .


யாரு, சீனி?

சி. மணி.


அதிர்ந்துபோனேன். பதற்றம் தொற்றிக்கொண்டது. ஒரு கட்டத்திற்கு மேல், நான் வரவில்லை என்றேன். அவரைப் பார்க்க இது சரியான தருணமாகத் தோன்றவில்லை. தேர்வுக்குப் போவதைப்போல எந்த ஏற்பாடும் இல்லாமல், எதையும் படிக்காமல், மிக தட்டையான ஒரு நிலையுடன் வந்துவிட்டதாகத் தோன்றியது. 


சீனி ஆசுவாசப்படுத்தினார். அருகிலிருந்த ஒரு தேனீர் விடுதியில் தேனீர் குடித்தோம். மிக ஆழமாகப் புகைப்பிடித்துக் கொண்டிருக்கும் சீனி, நல்லத் தயாரிப்புடன் வந்த ஒரு மாணவனைப்போல தோன்றினார். மணி பன்னிரெண்டைத் தொட்டது. எனக்கு சில நினைவுகள் மின்னலிட்டன. மீட்பு கவிதையே சி. மணியை எனக்கு இணக்கமான ஒரு கவியாக இனம் காண வைத்தது. அந்தக் கவிதை வெறும் மூன்று வரிதான்.


கம்பிகள் கூறு போட்ட

கீழ்வான ஆரஞ்சை

சன்னல் நெருங்கி மீட்டேன்.


இந்தப் படிமமும் அது கொண்டிருக்கும் பொருட்திணிவும் என்னைப் பாடாய்ப் படுத்தியிருக்கின்றன. நிறைய நாட்கள் இந்தக் கவிதைக் குறித்த எண்ணங்களிலேயே என்னை முற்றாக இழந்ததுண்டு. ஆனால் மிகக் குறைந்த வாசிப்பே கொண்டிருந்த எனக்கு சி. மணி சேலம்தான் என்பதோ, அவரைப் பார்ப்பதற்கான சாத்தியமோ தெரியாமல் இருந்தது. இதை பின்னாளில் ஒரு குறைபாடாககூட மனம் கசந்ததுண்டு. இந்தக் கவிதையைக் குறிப்பிட்டுத்தான் சுஜாதா சி. மணியை ஏதோ ஒரு வார ஏட்டில் எழுதியிருந்தார். 


மீண்டும் வீட்டிற்கு வந்து கதவைத் தட்டினோம். மிகப் பதட்டமாக இருந்தது.


அவரை, ஏற்கனவே ஒருமுறை சீனி பார்த்திருப்பார் போல. தாழ்வாரத்தில் அவரது வருகைக்காகக் காத்திருந்தோம். மிகத் தேய்ப்பான ஒரு செருப்பணிந்தக் காலடி ஓசை உள்ளறையிலிருந்து வெளிப்பட்டது. எனது இதயம் வேகமாக இயங்கத் துவங்கியது. மெலிந்த தேகமாக, முகம் ஒட்டிப்போய், மிக உயரமானதால் கூன் விழுந்த கழுத்துடன் அறுபது வயதில் ஒருவர், சி. மணி எங்களை வரவேற்றார். உள்ளறைக்குச் சென்று உட்கார்ந்தோம்.


என்ன சாப்பிடரிங்க, காபி? 


நான் அமைதியாகவே இருந்தேன். அல்லது எனக்கு பேசுவதற்கு ஒன்றுமில்லாமலிருந்து. மிக நிதானமான உரையாடல். அடுத்து என்முறை. மிகத் தயக்கத்துடன் பதிலளித்தேன். அவரது கேள்விகள் பெயரில் ஆரம்பித்து, பல கிளைகளாக கிளைத்து வளர்ந்தன. ஒரு கட்டத்தில் என்னைப் பற்றியே என்னால் தெளிவாகச் சொல்ல முடியாமல் இருந்தது. நிலம் சார்ந்து, தொழில் சார்ந்து, குடும்பம் சார்ந்து, கல்வி சார்ந்து விரிந்தது. என்னைப் பற்றிய ஒவ்வொரு விஷயத்திற்கும் எனக்குத் தெரியாத ஒரு அல்லது பல கேள்விகளை அவர் வைத்திருந்தார். மிகக் கவனமாக எனது வார்த்தைகளைக் கவனித்தார். நான் பேசும்போது அமைதியாகக் கேட்டுக்கொண்டார். ஆனால் நிறைய சமயங்களில் அவர் கேள்விகளை முடிப்பதற்கு முன்பாகவே அதற்கான பதிலாக நான் அனுமானித்ததை உளரிக் கொண்டிருந்தேன். அவர் ஒரு கணம் சற்றே கோபப்பட்டதைப் போல, நிதானித்து கேள்வியை முடித்தபோது, எனது பதில் சற்றும் தொடர்பற்ற ஒன்றாக இருந்தது. தடுமாறினேன். சீனி எந்தத் தடுமாற்றமுமில்லாமல் சி. மணியின் கவிதைத் தொகுப்பைப் புரட்டிக்கொண்டிருந்தார்.


காபி வந்தது. தனது மனைவியையும் பேரன்களையும் மகன்களையும் மருமகள்களையும் எங்களுக்கு அறிமுகப்படுத்தினார். எனக்கு மிகக் கூச்சமாக இருந்தது. இவ்வளவு மதிக்கத் தக்கவன்தானா நான் என்று சங்கடப்பட்டேன். 


பிறகு தனது கவிதைகளை வாசித்ததுண்டா என்ற தொனியில் கேள்விகள் சென்றன. நான் மீட்பு கவிதையைப் பற்றி சொன்னேன். மறுமொழியில்லாமல் மெளனமாக இருந்தார். கவிதை பற்றிய எனது பார்வை பண்படாத ஒன்றோ என்ற சந்தேகம் அடைந்தேன். அதற்கு மாற்றாக எனது தேடலின் தன்மையை அவருக்கு இணங்காட்ட முயன்றேன். வாழ்வின் அபத்தம் பற்றியும், பிரபஞ்சம் குறித்தும், கவிதையில் அழகியல், மேற்கத்திய அல்லது கீழத்திய கவிதைத் தன்மைகளை பேச ஆரம்பித்தேன். நேரம் மதிய உணவு நேரத்தைத் தாண்டிக்கொண்டிருந்து. சீனிவாசன் கிளம்பலாம் என்றார்.


கிளம்பினோம்.


நேரமிருந்தால் இந்தப் பக்கம் வாருங்கள் சாகிப்கிரான் என்றார். சரி என்றேன். அவர் எனது பெயரை முன் எப்போதும் யாரும் அழைத்துவிட்டிருக்காத ஒரு தெளிந்த உச்சரிப்புடனும் அழுத்தமாகவும் அழகாகவும் அழைத்தார். ஆனால் எனது பெயரை அவரிடம் ஒருமுறை மட்டுமே சொல்லியிருந்தேன். அது தாஜ்மகாலின் ஷாஜகானின் விருப்பப் பெயர் என்றும் குறிப்பிட்டிருந்தேன். 


வானம் மீண்டும் இருண்டு மின்னலடித்துக் கொண்டிருந்தது.


அன்று முழுதும் நான் மிகத் தீவிரத்தன்மையடைந்த ஒரு இலக்கியவாதியைப் போல நடந்து கொண்டேன். வாழ்வில் மிகப் பெரிய சிகரத்தை அடைந்துவிட்டதாக உணரத் தொடங்கினேன். என் தேடலுக்கான முழு விடையும் அவரிடம் இருப்பதாக கற்பித்துக் கொண்டேன். கவிதை மட்டுமில்லாது, வாழ்வின் அபத்தம் அல்லது அத்தகைய ஒரு சாத்தியமானது ஏன் புரிபடாத ஒன்றாக இருக்கிறது? 


படைப்பாளிகள் தேடிக்கொண்டிருப்பது இதைத்தானா? ஏன் நான் இதுவரை பார்த்த, சந்தித்த எல்லா படைப்பாளிகளும் இயல்பில் எனது பக்கத்து வீட்டுக்காரனைப் போல, ஒரு பங்காளியைப் போல, அல்லது அன்றாட வாழ்வின் வெகு சராசரியாகவே இருக்கிறார்கள்? இதுதான் உண்மை என்று நம்பிக் கொண்டிருந்த எனக்கு, ஒரு பெரிய அதிர்ச்சியாக இந்த சந்திப்பு அமைந்தது. 


இலக்கியத்தை தனது இயல்பு வாழ்வாகக் கொண்டிருக்கும் சி. மணியை, கவிதை எழுதும் அல்லது படைப்பாளியாக இருக்கும் ஒரு மனிதனாக என்னால் கருத முடியவில்லை. அதிசயமாகவே எனக்குப்பட்டது. மிக நேர்த்தியான ஒரு கவிதையைப்போல வாசிப்பனுபவத்தின் நுட்பத்தை தேர்ந்த மொழி நடையானது கைக்கொண்டிருப்பதாகத்தான் எனக்குத் தோன்றியது. அந்நிய பிரதேசத்தில், அல்லது குட்டி இளவரசனின் ஏதோவொரு கிரகத்தில் இறங்கியதாக கிறக்கம் தோன்றியது. இந்தக் கிறக்கமே அல்லது யாருக்கும் கிடைக்காத ஒரு வாய்ப்பே என்னை மீண்டும் அவரைப் பார்க்கத் தூண்டியது.


2.இரண்டாம் நாள்



இரண்டு வாரம் கழித்து, ஞாயிற்றுக் கிழமையில் அவரைச் சந்திக்கச் சென்றேன். இந்தமுறை நான் தனியாகச் சென்றது ஒரு நடுக்கத்தை மனதில் உருவாக்கியிருந்தது. அப்படி ஒன்று தேவையில்லை என்றாலும் அவரது புதுமையான அணூகுமுறையானது எனது ரகசியங்கள், பலகீனங்கள் பலவற்றை வெளிக்கொண்டு வருவதாக இருந்தது.


அநேகமாக நான் அவரை சந்திக்கச் சென்றது, அவரது லண்டன் பயணத்திற்குப் பிறகுதான். இரண்டாவது சந்திப்பிலேயே மிக நெருக்கமான ஒரு நட்பை உருவாக்கும் விதத்தில் எனது நடைமுறைகளை மாற்றியமைத்துக் கொண்டேன். ஏனென்றால் இரண்டாவது சந்திப்பானது எனது தனிப்பட்ட ஆளுமையையே மாற்றுவதாக அமைந்துவிட்டது.


அழைப்புமணியை அழுத்தி சிறிது நேரத்தில் தேய்ந்தக் காலடி ஓசைகளுடன் வந்த அவர், முன்னால் இருந்த வராண்டாவில் என்னை அமர வைத்தார். பிறகு உள்ளே சென்ற அவர் அரைமணி நேரம் கழித்தே வந்தார். பாத்ரூம் சென்றதாக மன்னிப்புக் கேட்டார். அந்த அரைமணி நேரம் என்பது மிகப்பெரிய யுகமாகக் கழிந்தது. எனது காத்திருப்பானது நேரம் ஆக ஆக, வலுவானதாக மாறியது. அது மிகப்பெரிய ஆக்கச் சக்தியைத் தக்கவைக்கக் கூடிய ஒரு நீண்ட குச்சியாக மாறத் தொடங்கியது. அந்த காத்திருப்பின் மூலமாக நான் எனது இருப்பை மறுபரிசீலனைச் செய்ய வாழ்நாளில் முதல்முறையாக தருணம் வாய்த்ததாகக் கருதினேன். ஆனால் ஒவ்வொருமுறையும் அவ்வாறே காத்திருக்க வேண்டும் என்று அப்போது எனக்குத் தெரியாது.


வழக்கம்போல காபி வந்தது. 


வினைச்சொல் அகராதி ஒன்றை உருவாக்கும் வகையில் அவரது லண்டன் பயணம் அமைந்திருந்தது. இயல்பிலேயே மெலிந்த தேகமும், அசைவ உணவை மறுப்பவருமான சி. மணிக்கு அந்த கடுங்குளிர் பிரதேச பயணமானது மிகச் சிக்கலான ஒன்றாகவே இருந்திருக்கிறது. வெறும் சாக்லேட்டையும் காபியையுமே எடுத்துக்கொண்டு, மிக பெலஹீனமாக உணர்ந்திருக்கிறார். அது அவரை மாயத்தோற்றங்களை உருவாக்கும் அளவிற்கு மூளையை மழுங்கடித்திருக்கிறது. தனது மனைவி அங்கே வரவேற்பரையில் காத்திருப்பதாக யாரோ கூறியதாகக் கூட சொன்னார். 


ஆனால் வினைச்சொல் அகராதிக்கான பணியை முடிக்கும்போதுதான் அவரை யாரோ ஒரு நண்பர் தமிழ் உணவு விடுதி ஒன்றிற்கு அழைத்துச்சென்று சாதம் வாங்கித் தந்திருக்கிறார். மிகக் குறைந்த, மிக அந்நியமான சூழலிலும் மிகத் தீவிரமாக இயங்கிய அவர், லண்டனில் இறங்கியதும் ‘சார்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறார். அது மிகக் கடைநிலையான ஒரு மரியாதைச் சொல்போல. அல்லது நாம் இந்தியாவில் பயன்படுத்துவதுபோல இல்லை என்றார். அங்கே இருக்கும் கட்டுப்பாடுகளும், இந்தியர்களுக்கான மரியாதையையும் அவரை அங்கே தொடர்ந்து இயங்க விடவில்லை. சென்ற வேலையை முழுவதுமாக முடிக்காமலேயே இந்தியா திரும்பினார்.


இங்கே இந்தியாவில், தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் அம்மாபேட்டை திரெளபதை அம்மன் கோவில் தெருவின் 34 எண் வீட்டில் வாழும் சி. மணியை சார் என்று அழைக்காமல் வேறு என்னவென்று அழைப்பது என்று புரியவில்லை. அவர் சிரித்தார். சார் என்றே அழைக்குமாறும் கூறினார்.


இந்த இரண்டாம் சந்திப்பு எனக்கு வேறு ஒரு முக்கியமான விஷயத்தையும் கற்றுத் தந்தது. எனக்குத் தெரிந்த ஒரு விஷயத்தைப் பற்றி அவர் பேசும்போது இடையில் அடிக்கடி நான் குறிக்கிட்டு, அவரது கவனத்தைச் சிதறடிதேன். அது அவரை எரிச்சலடைய வைத்திருக்கக் கூடும். In Search of The Miraculous புத்தகத்தைப் பற்றி தெரிந்து கொள்ளச் சொன்னார். அது G. I. Gurdjieff உருவாக்கிய இயங்குமுறையைப் பற்றி உஸ்பென்ஸ்கி தொகுத்தெழுதிய ஓர் அபூர்வமான புத்தகம். அது மனிதனின் விழிப்பு நிலையைப் பற்றி பேசுகிறது. மனிதனின் பூரண விழிப்புணர்வை மீட்டெடுக்கும் ஒரு கருவியாக, செயல்முறையாக அது அமைந்திருந்தது. மனிதன் விழிப்பற்ற நிலையிலேயே தனது வாழ்நாளை முடித்துக்கொள்கிறான். அதாவது, அவன் காபியை அருந்தும்போது அந்தக் காபியை அருந்தும் உணர்வை தக்கவைத்துக் கொள்வதில்லை, மாறாக தனது அலுவலக அல்லது வீட்டு நினைப்புடனே அந்தச் செயலை ஒரு அனிச்சைச் செயலைப்போல செய்துமுடிக்கிறான். இது தூக்கத்தில் நடக்கும் ஒரு செயலுக்கு ஒப்பானதுதான். 


அன்றிலிருந்து நான் காபியை காபியாகப் பருகத்துவங்கினேன். செவியையும் கூர்மைபடுத்திக்கொண்டேன். சமயங்களில் நான் பேசுவதை நானே செவியுற ஆரம்பித்தேன். அத்தகைய விழிப்புநிலைக்கு இதுவே முதல்படியாக நான் உணர்ந்தேன். சரி இதுபோன்ற விழிப்புநிலையின் பயன் என்ன என்ற கேள்வி என்னுள் ஒலிக்கத் துவங்கியது. அது தொடர்ந்து என்னைத் துரத்தியபடியே இருந்தது. அது வாழ்க்கைக்கான மூல ஆதாரக்கேள்வியாக இருக்கக் கூடுமென எனக்குத் தோன்றியது. சி. மணி எனது பிரஞ்ஞையின் உதற முடியாத ஒரு உறுப்பாக ஒட்டிக்கொண்டார். எனது அன்றாட அத்தனை நடவடிக்கைகளிலும் அவரது இயல்பு நீங்கா இடம் பிடிக்கத் துவங்கியது. நான் என்னை சி. மணியாகவே கற்பனை செய்து கொள்ள ஆரம்பித்தேன். சமயங்களில் அது எவ்வளவு அபத்தமானது என்று சிரித்துக் கொள்வேன். அவரது இயல்பானது தன்னை மாற்றிக்கொள்ளாத, எவராலும் கைக்கொள்ள இயலாததும் அரிதானதுமான ஒரு தன்மையைக் கொண்டிருந்ததைக் கண்டு கொண்டேன். அது எத்தகைய முன்மாதிரியும் கொண்டிருக்காத, தாந்தோன்றியானது என்பதை நாள்பட உணர்ந்து கொண்டேன்


. இனிமேல் வருவதற்கு முன்னால் ஒரு போன் செய்துவிட்டு வரச்சொன்னார். 



2. சி. மணி கவிதைகள்



முதல்வேளையாக சி. மணியின் இதுவரை கவிதைத் தொகுப்பையும், க்ரியாவின் தற்கால தமிழகராதியையும் வாங்கினேன். அவரது கவிதைகளை தொடர்ந்து வாசிக்கத் தொடங்கினேன். கவிதை தனக்கான விளக்கத்தைக் கொண்டிருந்தால் அது கவிதையிலிருந்து உரைநடையாக மாற்றமடைந்துவிடுகிறது. அப்படியென்றால் நவீனக் கவிதையானது எப்படி தனது சூக்குமங்களை விரித்துக்கொள்ள இயலும் என்ற கேள்வியும் தொடங்கிவிடுகிறது. சி. மணியின் கவிதைகள் தனது செவ்வியல் தன்மையிலிருந்து இந்தியத் தன்மையில் மிக விசித்திரமான மேற்கத்திய சிந்தனை மரபுகளின் வேர்களை பாய்ச்ச ஆரம்பித்தன. ஒவ்வொரு கவிதையும் அந்தக் கவிதைக்கான ஒரு நுழைவைக் கொண்டிருக்கும். அதுவே அந்தக் கவிதையை நம்முள் கொண்டு செலுத்தும் சாத்தியத்தைக் கொண்டிருக்கிறது.


தொழில் மயக்கம் என்ற அவரது கவிதையானது, கிட்டத்தட்ட ஒரு வார்த்தை அல்லது சொல் பற்றாக்குறையால் பத்து வருடங்கள் முடிவுறாமல், முடிக்க முடியாமல் இருந்திருக்கிறது. அந்தப் பதமானது ஒலிப்பதிவு. Recording என்ற தொழில் நுட்பம் கண்டுபிடிக்கப்படும்முன் அதற்கான தேவையை முன்னிறுத்தி இருந்திருக்கிறது. நவீன கவியானவன், எவ்வாறு வெறும் மொழியறிவை, கற்பனையை, கவிப்புனைவைத் தாண்டி, அறிவியல், வரலாறு, விண்ணியல், மனோத்தத்துவம், மருத்துவம், உடற்கூறியல், இசை, ஓவியம், விளையாட்டு, தொன்மங்கள், வேதாந்தங்கள், சித்தாந்தங்கள், தத்துவ ஞானங்கள், அதற்கு அப்பால் இயங்கிக் கொண்டிருக்கும் சகலத்தையும் தெரிந்திருக்க வேண்டியவனாகிறான். அத்தனையும் சாத்தியம்தானா என்பது சி. மணியைப் பார்த்ததும் எனக்கு ஆமாம் என்று தோன்றியது.


அவர் வழக்கமான கற்பித்தல் முறையை முற்றிலும் மறுத்திருக்கிறார். எல்லோரும் நினைப்பதுபோல அவர் Teacher’s Training College லிருந்து விருப்ப ஓய்வோ, ஓய்வோ பெறவில்லை. வழக்கமான அந்தக் கற்பித்தலுக்கு மாற்றான ஒரு முறையைக் கண்டடைந்திருக்கிறார். அதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டதும் தனது பணியைத் துறந்திருக்கிறார். பிறகே நடைக்கான அவரது தேடல் தொடங்கியிருக்கிறது. 


அவர் ஒருபோதும் எந்த விஷயத்தையும் நேரடியாக விளக்கியது கிடையாது. அது அவருக்கு இணக்கமான ஒன்றாகவும் இருந்ததில்லை. அவரது கேள்விகள் அடிமடியில் கை வைப்பவை. நம்மால் அல்லது யாராலும் அத்தகைய ஒரு கண்ணோட்டத்தில் எதையும் அணுகியிருக்க முடியாது. அவரது அணுகுமுறையானது எந்த ஒன்றை நாம் தெரிந்து கொண்டால் மற்ற எல்லாம் தெரிந்துவிடுமோ அதை உணர்த்துவதாகவே இருந்தது. ஒரு முறை இதை அவருக்குச் சொல்ல வேண்டும் என்ற உந்துதல் எனக்கு ஏற்பட்டது. நேரடியாகச் சொல்ல இயலாமல், ஒரு போஸ்ட் கார்டில் எழுதி அனுப்பினேன்.


‘யார் வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம். ஆனால் திருத்தி மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை எடுத்துரைத்து தனது விமர்சனத்தை நியாயப்படுத்தும் செயலை சாதாரண ஆட்கள் செய்ய முடியாது’ என்று எழுதியிருந்தேன். 


இது தனது ஆசான் யாமாஸான் பற்றி அகிரா குரோசாவா தனது Something Like an Autobiography என்ற நூலில் குறிப்பிடும் கருத்து. இது சி. மணிக்கு முற்றிலும் பொருந்தும். அவர் எந்த சந்தேகங்களுக்கும் எனக்கு இதுவரை விளக்கமளித்ததில்லை. எந்தக் கருத்தையும் வெளிப்படையாக விளக்கியதுமில்லை. மிக உன்னிப்பான கவனிப்பின் மூலம் அவரது பேச்சில் நாம் கொண்ட சந்தேகங்களுக்கான விடை எப்போதாவது கிடைக்கலாம். 


அடுத்தமுறை நான் அவரைப்பார்க்கப் போனபோது, அவர் அந்தப் போஸ்ட் கார்டைப் பற்றி ஏதாவது குறிப்பிடுவார் என்று எதிர்ப்பார்த்தேன். அமைதியாகவே இருந்தார். தொடர்ந்து ஒவ்வொரு ஞாயிறும் அவரைப்போய்ப் பார்ப்பதை வழக்கமாக்கிக் கொண்டேன். அப்போது எனக்கு அடிக்கடி வயிற்றுத் தொல்லை வந்துவிடும். வயிற்றுப் புண்ணும் தலைவலியும் என்னைப் பாடாய்ப்படுத்திய காலம் அது. அவர் மருந்துகள் பற்றிய மிக ஆழமான தெரிதல் கொண்டிருந்தார். அப்போது நான் சாப்பிட்டு வந்த மருந்துகள் dye based தன்னை கொண்டவை என்று குறிப்பிட்டார். அவை எத்தகைய உடல் வினையாற்றும் என்பதையும் சொன்னார். இதற்கு ஹோமியோபதி மருந்துகள் நல்ல பலன் தரும் என்றார். நான் பதில் ஏதும் சொல்லவில்லை. 


கிளம்பும்போது காபி அருந்திய பாத்திரத்தை சமயலறையில் வைக்கப்போனேன். அவர்களது வீடு எனக்கு மிக நெருக்கமானதாகிவிட்டது. அப்போதுதான் பார்த்தேன், இருட்டாக இருந்த நடையில் ஹோமியோபதி மெம்பர்ஷிப் சர்டிபிகட் சட்டகமிடப்பட்டு தொங்கிக் கொண்டிருந்தது. அதில் எஸ். பழனிசாமி என்ற பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. அதுதான் அவரது இயற்பெயர். எனக்கு எந்த மருந்து சாப்பிடலாம் என்று கேட்டேன். ‘அடுத்தமுறை சொல்கிறேன்’ என்றார். உடனே நான் ‘கார்டு வந்து சேர்ந்ததா சார்’ என்றேன். ‘ஆமாம்’ என்றார். பிறகு வாசல் வரை வந்து வழியனுப்பினார். இன்று மட்டுமல்ல, ஒவ்வொருமுறையும் அவர் அவ்வாறே வழியனுப்புவார். 


அவர் கார்டுக்கு பதில் சொல்லாதது எனக்கு ஆச்சர்யம் எதையும் உண்டாக்கிடவில்லை. செல்போன் புழக்கத்திற்கு வந்திராத அந்த சமயங்களில் அஞ்சல் அட்டைகளில் அடிக்கடி எனக்கு கடிதங்கள் எழுதுவார். அந்த வாரம் என்னால் போகமுடியாத அளவிற்கு அலுவலக வேலை ஏதேனும் இருந்திருக்கும். பிறகு வாரத்திற்கு இரண்டு நாள் செல்ல ஆரம்பித்தேன். என்னோடே நாமக்கல் நண்பர் சர்வராஜும் வருவார். அவர் வெகுகாலமாக அவரைப்பார்க்க வந்து கொண்டிருக்கிறார். நாங்கள் மட்டுமில்லாமல் இன்னும் சிலரும் அவரைப் பார்க்கத் தொடர்ந்து வந்து கொண்டிருந்தனர்.


ஒவ்வொருமுறை நான் போகும்போதும் யார் யார் வந்தார்கள், அவர்களுடன் நடந்த உரையாடலின் சுருக்கத்தை எனக்குச் சொல்லிவிடுவார். ஆனால் விஷயங்களை வெறும் தகவல்களாகவே சொல்லுவார். அதில் அவர் எந்தக் கருத்தையும் முன்னிருத்தாமல் மிக அந்நியமான ஒன்றாகவே வெளிப்படுத்துவார். ஒவ்வொரு பெளர்ணமியும் மிக விஷேசமானது. பெரும்பாலும் நானும் சர்வராஜுவும் அங்கே இருப்போம். எங்களிருவரையும் வீட்டின் மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றுவிடுவார். அங்கே முழுமதி கந்தகிரி மலையைத் தாண்டி ஒளிர்ந்தபடி இருக்கும். அவர் குழந்தைகளை உட்கார வைக்கும் புட்டிக்கூடை இருக்கையில் அமர்ந்திருப்பார். முதல்நாள் பார்க்கும்போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அந்த மிகச் சிறிய கூடைச்சேரில் அவ்வளவு எளிதில் யாரும் அமர்ந்துவிட முடியாது. அவரைத் தவிர அதில் யாரும் அமர்வதும் இல்லை. அவருக்கு அருகிலேயே அந்த மதுப்புட்டியும் நிலா காய்ந்தபடி இருக்கும். அவர் மதுவை நேரடியாக எந்த கலப்புமில்லாமலும் துணை உணவுகள் இல்லாமலும் அருந்துவார். நாங்கள் அவருக்கு எதிரில் மிக உயரமான இருக்கைகளில் அமர்ந்திருப்போம். கீழே அமர்ந்தாலும் விடமாட்டார். 


இரவு வெகுநேரம் பேசியபடி இருப்போம். அவரை எந்த அளவு மதுவும் நிலைகுலைய வைத்ததில்லை. அப்போது நிறைய கவிதைகளை வாசித்திருக்கிறோம். இசையைப் பற்றி பேசியிருக்கிறோம். நாவல் பற்றி, பிரபஞ்சம் பற்றி, மரணம் பற்றி, ஒருமுறை ‘உஸ்பென்ஸ்கி ஏன் தனது இறுதி நாட்களில் அளவுக்கதிகமாக மதுவை குடித்து, தனியனாக அவனது அறையில் செத்துக் கிடக்க வேண்டும்’ என்ற ஒரு கேள்வியைக் கேட்டார். அது மிக முக்கியமான ஒரு கேள்வியாக இருந்தது.  P. D. உஸ்பென்ஸ்கி அடிப்படையில் ஒரு கணித அறிஞன். தத்துவ தேடலில் தன்னைக் கரைத்துக் கொண்ட தத்துவ ஞானி. 


In Search of The Miraculous யை எழுதியவன் அவன். அக்கினியைப் போல மது ஒருவகையில் மனிதனை கிளர்ச்சியடையச் செய்வதுமட்டுமல்லாது, அவனை அபத்தத்தின் இறுதிக்கு இட்டுச் செல்கிறது. மிக வலுவான உடல் மனதின் உள்முக தியானங்களுக்கு பெரிய தடையாக இருந்துவிடுகிறது. மிகச் சோர்வுற்ற, பெலகீனமான காய்ச்சல் கண்ட உடலானது மிக அதிக கற்பனைத் திறனையும் மாயத்தோற்றங்களையும் உருவாக்கிக் கொள்வது இத்தகைய ஒரு அமைப்பால்தான். மதுப்புட்டியுடன் தொடர்ந்து சிகரட் புகை கனிந்த வண்ணம் இருக்கும். நிலவு தனது உணர்ச்சி ஒளிகற்றையால் அந்த மொட்டைமாடியை நிறைத்தப்படி சென்று கொண்டிருக்கும். அவரது அசாத்தியமான பார்வை நோக்கும், அபூர்வமான விஷய ஞானமும் எங்களை அன்றிரவு உறங்க விடாமல் செய்தபடி இருக்கும். சகலத்தையும் அறிந்தவர்களாக மாற்றமடைவதாக அல்லது அதற்காகத் தயாராவதாக உணர்ந்தபடி இருப்பேன்.


சி. மணி என்மேல் மிக அன்பு கொண்டிருந்தார். அல்லது நான் அவ்வாறு நினைத்தபடி இருப்பேன். அது எனக்கு மிகப்பெரிய ஊக்கத்தைத் தந்த வண்ணமிருந்தது. என் மனைவி, மக்கள் அனைவரின் மேலும் அன்பு செலுத்துபவராக அவர் இருந்தார். ஒவ்வொரு சந்திப்பிலும் அவர்களை நலம் விசாரித்தபடி இருப்பார். தனிப்பட்ட பெண்களைவிட ஒட்டுமொத்தமாக பெண்களின்மேல் அவருக்கு அளப்பரிய மரியாதை இருந்தது. குழந்தைகளை மிக விரும்பி, அவர்களது தன்மையை வியப்பார். அவர்களுக்கான மிக அதிகப்பட்ச மரியாதையை அல்லது அவர்களுக்கான கவனத்தைத் செலுத்துவார். பெண் குழந்தைகளின்மேல் அவருக்கு அதிக அன்பிருந்தது. 


அப்போது தாவோ தே ஜிங் மொழிபெயர்ப்பு நடந்து கொண்டிருந்தது. மொத்தம் பத்து ஆங்கில மொழிபெயர்ப்புகளை பயன்படுத்தி, ஒரு பிரதியை மையமாகவும் மற்றவற்றை துணைப் பிரதியாகவும் கொண்டு தமிழாக்கம் செய்து கொண்டிருந்தார். வழக்கமாக அவர் மொழிபெயர்ப்பு பிரதி புத்தகத்தை ஏடேடாகப் பிரித்து விடுவார். பிறகு ஒவ்வொரு ஏட்டிற்கும் மொழிபெயர்ப்பு மேற்கொள்வார். முதலில் எனக்கு அதில் உவப்பில்லாமலிருந்தது. என்னுடைய உவப்பிற்கு அர்த்தமில்லைதான் என்றாலும் ஒரு எதிர்ப்புணர்வு மிதந்து கொண்டிருந்தது. ஒரு கட்டமைப்பை சிதைப்பதான உறுத்தல் நிரடிய வண்ணம் இருந்தது. அதுவும் ஒரு மழைக்காலம். எங்களுடன் வேறு ஒரு கவிஞரும் வந்திருந்தார். அவர் சி. மணியிடம் பல கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தார். அவற்றிற்கான பதிலையை எதிர்ப்பார்த்தார். நானும் சர்வராஜும் விபரீதத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தோம். பிறகு அந்த நண்பரை சி. மணியின் வீட்டில் நான் பார்த்ததே இல்லை. சி. மணியிடம் இலக்கிய அரசியல் தோற்றுப்போயிருந்தது. எத்தகைய கவர்ச்சிகளையும் அவர் அனுமதித்ததில்லை. மிக இயல்பான, என்றும் நினைத்து அதிசயக்கக் கூடிய தன்மையுடன் அவர் இருந்தார்.


நடை இதழ்களும், மிக முக்கியம் என்று நான் கருதிய ஒரு மலை போன்ற புத்தகங்களும் அவரது படிக்கட்டு அறைக்கருகில் குவித்து வைக்கப்பட்டிருந்தன. வீட்டில் அவற்றை பத்திரப்படுத்த ஏராளமான இடம் இருந்தும் அவை அங்கேயே கிடந்தன. ஆரம்ப நாட்களில் அவற்றை ஒழுங்குபடுத்திவிட வேண்டும் என்ற முனைப்பு எனக்கு இருந்தது. மொழிபெயர்ப்பு புத்தகங்களை அவர் தனித்தனி ஏடுகளாகச் சிதைத்ததை புரிந்து கொண்டதும் அந்த எண்ணம் படிப்படியாக விலக ஆரம்பித்தது. ஒவ்வொரு முறை வீட்டை சுத்தம் செய்யும்போதும் அல்லது கரையான்களின் தாக்கம் மிகுந்துவிடும்போதும் அந்தப் புத்தகங்களில் ஒரு பகுதி கழித்து எரியூட்டப்படும். அல்லது குப்பையில் வீசப்படும். எல்லாம் கரையான் அரித்துவிட்டது. இனி பயன்படாது என்பார். நான் ஆமாம் என்பேன்.


ஒருமுறை எனக்காக The Hindu - வின் Sunday Magazine - ல் வந்த புதியதொரு கேலக்ஸி கண்டுபிடிப்பு பற்றிய ஒரு கட்டுரையையும், பிறகு கருந்துளை இருப்புக்கான புதிய சாத்தியம் பற்றிய குறிப்பொன்றையும் எடுத்து வைத்திருந்தார். நானும் அவரும் இதுபற்றி நிறைய பேசியிருந்தாலும் அவர் அல்லது நான் எதிரான ஒரு கருத்து நிலையிலேயே இருப்பதாக இருந்தது. ஒரு லட்சம் ஒளியாண்டு, இதை எவ்வாறு மனதில் கற்பித்துக் கொள்வது என்பார். மனதின் சிக்கலான அமைப்பைப் பற்றி விரிவாகத் தெரிந்து வைத்திருந்த அவர், அதனால் நிகழும் விபத்துக்கள் பற்றிய தெளிந்த புரிதலுடன் செயல்பட்டார். ஐன்ஸ்டைனைவிட நியூட்டனை அவருக்கான ஆதர்சமாகக் கொண்டிருந்தார். ஃபிராய்டைவிட யூங்கையே அவர் உயர்வாகக் கருதினார். அதற்கான காரணங்களை நான் அவருடனான நீண்ட கால புரிதலினாலே கண்டடைந்தேன். நியூட்டனின் அஸ்திவாரத்தில் கட்டப்பட்டதே ஐன்ஸ்டைனின் அதிசயக் கட்டிடம். பிரபஞ்ச ரகசியம், மனிதனின் தேடல், நிரந்தரத் தன்மையின் சுவடுகள், எல்லாவற்றையும் கடந்து சென்று கொண்டிருக்கும் காலம். அதை பரிமாணமாகக் கொண்டிருக்கும் வெளி. நிரந்தரமின்மையின் வலு இவையெல்லாம் நாம் சிக்கலாக்கிக் கொண்டிருக்கும் இந்த இருத்தலின் ஒரு பகுதியாகையால், அது பூரண விடுதலையைச் சாத்தியப்படுத்துவதில்லை. அதாவது அப்படி ஏதுமில்லை என்பதுதான் அதற்கான விடையாக இருக்கிறது. சி. மணி ஒரு பேராற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் ஒரு தக்கையைப் போல, தன்னளவில் நிதானமாக, ஆனால் அந்த ஆற்றின் வழியே பயணப்பட்டுக் கொண்டிருந்தார். 


சில சமயங்களில் அவர் திடீரென எனது அலுவலகத்திற்கு போன் செய்வார். அப்போது மிகச் சுருக்கமாகவே பேசுவார். எனக்கு சில ஹிந்தி அல்லது உருது வார்த்தைகளுக்கு பொருள் தெரியவேண்டும். உங்களால் ஞாபகப்படுத்த முடிகிறதா? என சில வார்த்தைகளைக் கேட்பார். எனக்குத் தூக்கிவாரிப்போடும். ஏனென்றால் எனக்கு உருது தெரியாது. அது அவருக்கும் தெரியும். சரி, நேரில் வாருங்கள் பார்த்துக் கொள்ளலாம் என்பார். நான் முஸ்லீமாக இருந்தாலும் எனக்கு உருது தெரியாது. எனது வீட்டிலிருப்பவர்கள் எல்லோருக்கும் தெரியும். ஆனால் ஆரம்பத்திலிருந்தே தமிழின் மீது உள்ள பற்றோ என்னவோ, நான் உருதில் பேசுவதை ஊக்கப்படுத்திக் கொள்ளவில்லை. இது எனக்கு நிறைய இடங்களில் பெரிய பின்னடைவை உண்டாக்கியிருந்தாலும் விடாப்பிடியாக அவ்வாறே இருந்தேன். சி. மணி நிறைய ஹிந்தி பாடல்களைக் கேட்பார். ரஃபியினுடைய பாடல்கள், ஷெனாய், சிதார், வாய்ப்பாட்டு அவருக்கு மிகவும் பிடிக்கும். அதேபோல அவரது தாய்மொழியாகிய கன்னடம் தனக்கு தெரியாது என்பார். நான் அவர் குறிப்பிட்ட ஹிந்தி வார்த்தைகளுக்கு பொருள் விசாரித்துச் சொல்கிறேன் என்றால், ஓ! உங்களுக்கும் தாய்மொழி தெரியாது, இல்லை? என்பார். என்னால் எனது உறவுகளுடன் எத்தகைய உரையாடலையும் அல்லது ஒரு தகவல் தொடர்பையும் வைத்துக்கொள்ள இயலாமலிருந்தது. அவர்கள் அல்லது அவர்களிடமிருந்து நான் பிரிந்து ஒரு தீவைப்போல உணருவேன். சி. மணி பெரும்பாலும் அவரது உறவினர்களுடன் மிகக் குறைந்த உரையடலையே மேற்கொள்வார். அல்லது பேசத் தலைப்படமாட்டார். ஏனென்றால் கன்னடத்தில் உரையாடுவதை அவர்கள் விருப்பவில்லைபோல. எனவே அவர் தமிழிலேயேதான் பேசுவார். அவர் மணிக்கணக்காகப் பேசுவது எங்களைப் போன்ற இலக்கியவாதிகளிடம்தான். அது அவரது ஒருவகை எதிர்ப்புணர்வைக் காட்டுவதாக இருந்தது. பூரண விழிப்புநிலைக்கான ஆதார மூலங்களில் இதுவும் ஒன்றாக அவர் இவற்றைக் கருதியிருக்க வேண்டும். அல்லது இவை அத்தகைய முயற்சிகளுக்குத் தடையாக இருக்கக் கூடாது என்று கருதியிருக்கலாம். தன்னை இந்த சமூகத்திலிருந்து தொடர்பறுத்துக் கொள்வதன் மூலம், சீரழிந்த சமுகத்திற்கு ஒரு எதிர்ப்பைக் காட்டியிருந்தார் என்றே நான் கருதினேன். 


ஒருமுறை எனது கவிதை வெளியிடப்பட்ட இலக்கியச் சிற்றிதழை அவரிடம் காட்டினேன். அமைதியாக ஒருகணம் பார்த்துவிட்டு உள்ளே சென்றவர், அரை மணி நேரம் கழித்தே திரும்பி வந்தார். வழக்கம்போலவே அவரிடமிருந்து எதையும் நான் எதிர்ப்பார்க்கவில்லை. அவரது முகத்தைப் பார்த்தேன். ‘நீங்கள் ஏன் உங்கள் பெயரை மறுபரிசீலனைக்கு உட்படுத்தக்கூடாது?’ என்றார். அடுத்தகணம் எனது பெயரின் முதல்பாதி, எனக்கு மிக உறுத்தலாக மாறியது. சாகிப்கிரான் என்பதில் சாகிப் என்பது ஒரு வெள்ளைத்தாளில் மைப்புள்ளிபோல இருப்பதாக அவர் உணர்ந்திருக்க வேண்டும். நான் அமைதியாக இருந்தேன். அவர் மேற்கொண்டு இதுபற்றி விவாதிக்கவில்லை. மதம், இனம், சாதி, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், மிகக் கேவலமான தனித்த அடையாளங்கள் யாவற்றிற்கும் அவர் எதிராகவே இருந்தார். மொழி என்பது மனிதனைப் பண்படுத்தும் ஒன்றாகவே இருக்கிறது. மொழியின் தீவிர அமைப்பு மற்ற மொழிகளை நேசிக்கவே வைக்கின்றது. அது தவிர மற்ற எல்லாமே மனித ஆன்மாவைச் சிதைப்பதாகவே அவர் உணர்ந்திருந்தார். அதனாலேயே அவர் தனது இயற்பெயரான எஸ். பழனிசாமி என்பதைப் நேரடியாக இலக்கியத்தில் எங்கும் பயன்படுத்தியதில்லை. சி. மணி என்பதையே அவர் பயன்படுத்திவந்தார். அது அவரது செல்லப்பெயராகும். அதில்லாமல் அது ஒரு பெயர்ச்சொல்லாக, அஃறிணைக்குறிய பெயர்ச் சொல்லாக இருந்தது. அதை மணி ஓசை என்றோ, விலையுயர்ந்த ஆபரண மணி என்றோகூட எடுத்துக்கொள்ளலாம். அத்தகைய ஒரு வாய்ப்பை மட்டுமே அவர் வாசகர்களுக்கு விட்டிருந்தார்.


In Search of The Miraculous மொழிப்பெயர்ப்பு முடிந்து, தாவோ தே ஜிங் நடந்து கொண்டிருந்தது. அவர் மிகத் தீவிரமாக மொழிபெயர்ப்பில் ஈடுபட்டிருந்தார். நான்கு ஆங்கில அகரமுதலிகளை பயன்படுத்திக் கொண்டிருந்தார். இது யாராலும் நாம்பமுடியாமலும், இயலாததுமான ஒன்று. அகர முதலிகளை மிகச் சரியாக எவ்வாறு பயன்படுத்துவது என்பதை நான் அவரிடமிருந்தே தெரிந்து கொண்டேன். அவர் சரியான ஒரு மொழிபெயர்ப்புப் பதத்திற்காக வாரக்கணக்கில் காத்திருந்திருக்கிறார். அந்த தவமானது எனது கண்முன்னால் இன்னும் தகித்துக் கொண்டிருக்கிறது. அவரது கருத்துகளுடன் சில முரண்பாடுகள் எனக்கிருந்தாலும் அவரது ஆளுமை அனைத்தையும் உறிஞ்சிக் கொள்வதாக இருந்தது. 


தொடர்ந்த கடினமான உழைப்பு அவரை மிக மோசமான உடல் சிதைவிற்குக் கொண்டு சென்றது. தாவோ தே ஜி முடித்ததும் அவரது உடல் மீண்டும் தேற இயலாத வண்ணம் நோயுற்றது. தொடர்ந்த புகைப்பழக்கம் அவரது நுரையீரல்களை முற்றிலும் பொசுக்கிச் சிதைத்துவிட்டது. ஒரு கட்டத்தில் இயங்க மறுத்த அவை, சப்பையாக ஒட்டிக் கொண்டுவிட்டன. மிக மோசமான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த அவரை, நீண்ட மருத்துவ சிகிச்சைக்கு பிறகே வீட்டிற்கு போக அனுமதித்தது. அவரது நுரையீரகள் வெறும் பதினைந்து சதவிகிதம் மட்டும் இயங்குபவையாக இருந்தன. அவரால் சிறிது தூரம்கூட நடக்க இயலாமல்போய்விட்டது. 


இந்த காலக்கட்டம்தான் அவர் மிகத் தீவிரமாகத் தன்னை மொழிபெயர்ப்பில் ஈடுபடுத்திக்கொண்ட காலம். தொடர்ந்து அவர், சுருக்கமான அறிமுக வரிசையில் புத்தர், பெளத்தம், ஃபிராய்டு, A Contemporary Tamil Prose Reader, மைதிலி மொழி கவிதைகளான முன்னிலை ஒருமை, சூஃபியிசம், பள்ளி வாசலில் பெண்கள், Six Characters in search of an Author முதலியவற்றை மொழிபெயர்த்தார் என்பதை விட மொழியாக்கம் செய்தார் எனலாம். அவரது வீடானது சாலையின் ஓரத்திலேயே அமைந்திருந்தது. வீட்டிற்கு எதிரில்தான் குப்பைத்தொட்டி. அங்கே மிகப் பெரிய அளவிலான பன்றிகள் அலைந்தபடியே இருக்கும். அவர் உட்கார்ந்து மொழிபெயர்ப்பு செய்யும் வராண்டாவிற்கு மிக அருகிலேதான் அந்த வீதியின் பிரதான சாக்கடை மலங்கள் மிதந்தபடி, எப்போதும் ஓடியபடி இருக்கும். ஒரு சில சமயங்களில் எனது இருசக்கர வாகனத்தை பன்றிகள் உரசிப்போன சுவடுகள் இருக்கும். அது மிகத் தொந்தரவு தரக்கூடிய ஒரு இடமாக எல்லோருக்கும்படும். தினமும் ஒரு பிணமாவது அவ்வழியாகச் செல்லும். அவர் பேசுவது வாகன சத்தத்தில் நிறைய சமயங்களில் தெளிவாக எனக்குப் புரியாமலும் இருந்திருக்கிறது. ஆனால், நாளாக நாளாக அது எனக்குப் பழகிப்போனது. அவர் அத்தகைய ஒரு தொந்தரவு நிறைந்த இடத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டது ஒரு யுக்தியாக எனக்குப்பட்டது. இத்தகைய இடர்பாடுகளை அவர் தனக்கான ஒரு உந்து சக்தியாக, நெருக்கடியில் கிளர்ந்தெழும் சாத்தியமாக மாற்றுவதாகத் தோன்றியது. இது அவரின் ஒரு மனவீழ்ச்சியைக் கண்ணுற்ற நான், மறுநாள் அதிலிருந்து அவர் எவ்வாறு மீண்டார் என்பதற்கான ஒரு பதிலாகவும் இருந்தது.


நடை இலக்கிய ஏட்டையும், சாரல் பதிப்பகத்தையும் அவர் தனது மிகப்பரந்த நிலமொன்றை விற்று அதிலேயே நிறுவினார். ஆனால் சாரலானது காப்பி ரைட் பிரச்சனை வழக்கில் நின்றுபோனது. நடை தொடர்ந்து மிகத் தரமான, அவர் எதிர்பார்த்தபடி உலகத் தரத்திலான படைப்புகள் கிடைக்காததால், அல்லது அத்தகைய படைப்புகளை யாரும் தரத் தயாராக இல்லாதததால் எட்டு இதழ்களுடன் நின்றுபோனது. இவை எதைப்பற்றியும் அவர் எப்போதும் வருத்தப்பட்டது இல்லை. அவர் அவரைப் பற்றிய விமர்சனத்தைக்கூட மிக மூன்றாம் நிலையிலிருந்தே வைத்தார். ஒரு கட்டத்தில் அவர் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராக இருந்தார். எல்லாவற்றையும் சார்பற்ற ஒரு தன்மையிலேயே அணுகினார். அது அவரை ஜென், சூஃபி, தாவோ என எல்லாவற்றையும் கடப்பதற்கான ஒரு திறவைத் தந்தது.


ஒருமுறை அவர் எனக்கு ஒரு கடிதத்தின் பிரதியை அனுப்பியிருந்தார். அது அவரது மொழிபெயர்ப்பு பற்றியது. அவர் உட்கார்ந்து எழுதிக்கொண்டிருக்கும் தாழ்வாரத்தின் மேற்கூரையில் அவரது ஜட்டிகள் காய்வதற்காகத் தொங்கும். அதில் அவர் சாக்லேட்டுகளை வைத்திருந்து எனக்கொன்றை எடுத்துத் தந்துவிட்டு, தானும் ஒன்றை சாப்பிடுவார். முதலில் எனக்கு தயக்கமாக இருந்தது. இப்போது அப்படியில்லை. அவர் தற்போதெல்லாம் சாக்லேட்டை சாப்பிடுவதே இல்லை. வாங்குவதும் இல்லை. அவரது மொழிபெயர்ப்பில் அறிய, வரலாற்றை போன்ற பதங்கள் பதிப்பாசிரியரால் அறிந்திட, வரலாற்றினை என்று மாற்றப்பட்டிருந்ததைக் கண்டு மிக வேதனையடைந்தார். அவர் வார்த்தையின் மிகச் சிறிய வடிவத்தை அல்லது அத்தகைய சாத்தியத்தை நோக்கியே தனது கவனிப்பை குவிப்பார். அதுவே மொழியின் சாதனையாகக் கொள்ளப்படும். Seduce என்ற பதத்திற்கான புதிய தமிழ்ச் சொல்லாக, மென்னாத்காரம் என்பதை பலாத்காரம் என்ற அடிச்சொல்லிலிருந்து உருவாக்கியிருந்தார். அப்படி உருவாக்கிய அனைத்துச் சொற்களையும் மாற்றிவிட்டனர். அவற்றிற்கு பதிலாக மனப்பிறழ்வு என்ற மொன்னையான ஒற்றை வார்த்தையை எல்லா இடங்களிலும் கையாண்டிருந்தது மிக அநியாயமான ஒன்றாகக் கருதினார். பதிப்பாளரும், பதிப்பாசிரியரும் சந்திப்பிழைகள், எழுத்துப்பிழைகளை ஒழுங்குபடுத்துவதையே கண்டிருந்த அவர், இத்தகைய திருத்தங்களுக்கு எதிராக நடந்து கொண்டார். தனக்கு அனுப்பப்பட்ட பிரதிகளைத் திருப்பி அனுப்பிவைத்தார். சி. மணி பன்மொழிப் புலமையும் ஆங்கில, தமிழ் இலக்கியங்களை முழுமையாகக் கற்றவரும், மொழிவல்லுனராகவும் இருக்கும் அவருக்கு பதிப்பாசிரியரின் தேவை இல்லை என்பதே எனது அபிப்பிராயமாக இருந்தது. ஒரு சீரிய, தீவிரத் தன்மையுடைய படைப்பாளியால் தொடர்ந்து இயங்காமலிருப்பதற்கான காரணங்களை நாம் மேலோட்டமான சில கருத்துக்களால் நிறுவி விடமுடியாது. 


அவர் எப்போதும் தன்னுடன் வாசன் பஞ்சாங்கத்தை வைத்திருப்பார். அது எப்படி பயன்படுகிறது என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அதை உபயோகிக்கும் முறையை, அவரது செய்கைகளை வைத்து ஓரளவிற்கு உணர்ந்து கொண்டேன். அவர் அதை முழுதாக நம்புவதாகத் தோன்றும் அந்தத் தோற்றப் பிழையிலிருந்து வெகு எளிதில் நான் விடுபட்டுவிடேன். அது ஒரு நிலையாற்றலின் அசைவு என்று கருதினேன். அவர் அந்தந்தக் கிழமைகளுக்கான அதிபதிகளுக்கு அதாவது கடவுள்களுக்கு தான் சாப்பிடும் அனைத்தையும் அர்ப்பணம் செய்துவிட்டு பிறகே அவற்றைச் சாப்பிடுவார். 


அக்டோபர் மூன்று மிக விஷேசமான ஒன்று. அன்று அவரது பிறந்தநாள். நிச்சயமாக நானும் சர்வராஜும் அன்று அவரைப் பார்க்கச் சென்றுவிடுவோம். அவர் எங்களுக்கான இனிப்புகளை தனியாக எடுத்து வைத்திருப்பார். வழக்கமான சந்திப்பாக அது இருந்தாலும் அன்று ஏதோ நிகழ்ந்துவிடும் எதிர்ப்பார்ப்புடன் செல்வேன். அன்று அவரது ஏதாவது ஒரு கவிதையை வாசிப்போம். மிகக் குறைந்த வெளிச்சத்தில் மிகச் சிரமப்பட்டு நான் வாசிக்கும் அந்தக் கவிதை, அன்றைய சகல நிலைமைகளுக்கும் பொருந்துவதாக அமைந்திருக்கும். பிறகு மிகக் குளிர்ந்த தனது கைகளால் எங்களுக்குப் பிரியா விடை கொடுப்பார். அவரது இயல்பானது வெகு அப்பட்டமான ஒன்று. அவரது இறுதி நாட்களில் யாரும் அவரை வந்துப் பார்க்காமலிருந்தனர். இந்த நிலையில்தான் அவருக்கு தென்னிந்திய புத்தகப் பதிப்பாளர்களின் வாழ்நாள் சாதனையாளருக்கான கலைஞர் விருது கவிதைக்காக அவருக்குக் கிடைத்தது. ரூபாய் ஒரு லட்சம்.


அதை சென்னையில் நடந்த புத்தகத் திருவிழாவில் பெற்றுக்கொள்வதற்காக நானும் அவரும் சென்னை செல்வதாக இருந்தது. விருதுகள் வாங்குவதில் அவருக்கு மிகப் பெரிய மறுப்பு எப்போதும் உண்டு. அவர் அதை அதாவது அத்தகையத் தடையை இன்று மீறி இருந்ததாக தோன்றியது. இது அவரது இயல்பல்ல என்றே நான் எண்ணினேன். ஆனாலும் வெகு உற்சாகமாக கிளம்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தேன். விடியற் காலமாகக் கிளம்புவதாக இருந்தது. வாடகைக் கார் பேசி இரவு தூங்கச் சென்றுவிட்டேன். நள்ளிரவு இரண்டு மணியளவில் எனக்கு ஒரு செல்போன் அழைப்பு வந்தது. 


அப்பா, இரவு பாத்ரூமில் விழுந்துவிட்டார். இடுப்பெலும்பில் விரிசல் ஏற்பட்டுவிட்டது. கோகுலம் மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றோம்.


 நான் மிக நிதான கதிக்கு வந்துவிட்டேன். பயண ஏற்பாடுகளை கலைத்து முறைப்படுத்திவிட்டு, அவரைப் பார்க்கச் சென்றேன். மிகத் தளர்ந்திருந்தார். வெகு நேரமாக வரவேற்பறையில் காத்திருந்தேன். அறுவை சிகிச்சை நடந்து கொண்டிருந்தது. அவர் ஏன் விழவேண்டும் என்பதற்கான விடை கிடைத்திருந்தது. தன்னைச் சிதைவுக்குள்ளாக்கிக் கொண்ட அவர், இத்தகைய ஒரு அப்பட்டமான அரசியல் நிகழ்விற்கு தன்னை ஒப்புக்கொடுத்தது அவரை, அந்த தனிமை இரவில் அலைக்கழித்திருக்க வேண்டும். அதற்கான மிகப் பெரிய போராட்டத்தில் அவர் வெற்றி கண்டிருக்கிறார். மிகவும் கலைத்திருந்த அவர், என்னை அன்புடன் அருகழைத்து பேசினார். சீக்கிரம் தான் தேறிவிடுவதாகக் கூறினார். அவரிடம் எனக்கு பகிர்ந்து கொள்ள ஏதுமில்லாதிருந்தது. அமைதியாக அவரருகில் அமர்ந்திருதேன். அவரது சுதந்திரம் பறிபோன நிலையில் சூழ்நிலைக் கைதியாக அவரைப் பார்க்க எனக்கு துக்கமாக இருந்தது. சர்வராஜும் நானும் நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தோம். விழாக் குழுவிலிருந்தும் பேசியிருக்கிறார்கள். விருதை க்ரியா ராமகிருஷ்ணன் வாங்கி அனுப்புவதற்கான ஏற்பாட்டைச் செய்திருந்தார். எனக்கு சி. மணியின் தீர்வு கவிதை ஞாபகத்திற்கு வந்தது. என்ன செய்வதிந்தக் கையை?


கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக அவர் படுத்தப் படுக்கையாக இருந்தார். எழ முடியாமலும், குளிக்க முடியாமலும் வீழ்ந்து கிடந்தார். நான் தினமும் அவரைப் பார்க்கச் செல்லத் தொடங்கினேன். தனிமையில் இருந்த அவருக்கு ஒரு மிடறு மதுதான் ஆறுதல் அளித்த வண்ணமிருந்தது. அவரிடம் நிறைய பேச வேண்டியிருந்தது எனக்கு. அவர் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார். கவிதை பற்றி நிறைய பேசினேன். அவரது கவிதைகள் பற்றி முதல் முறையாக எனது அபிப்பிராயங்களைச் சொல்லத் தொடங்கினேன். அந்தக் காலக்கட்டத்தில் ஒரு சில கவிதைத் தொகுப்புகளுக்கு விமர்சனம் எழுதியிருந்தேன். அவற்றைத் தொடர்ந்து அவருக்கு வாசித்துக் காட்டுவேன். அவர் மிக உற்சாகமாக அவற்றைக் கேட்டுக் கொண்டிருப்பார். 


ஒருமுறை அவரிடம் பேசிக் கொண்டிருக்கும்போது லீனா மணிமேகலையின் அழைப்பு வந்தது. சி. மணியிடம் பேச விருப்பமா எனக் கேட்டேன். ஆனால் அப்போது அத்தகைய மனநிலையில் இல்லாத லீனா மற்றொரு நாள் பேசுவதாகக் கூறினார். ஆனால் அதற்குப் பிறகு லீனாவால் அவரிடம் பேசவே முடியாமல் போய்விட்டது. இது மிக வருத்தமான ஒன்றாக பின்னாளில் லீனா குறிப்பிட்டார்.


சி. மணி லீனாவை விசாரித்தார். லீனாவின் தேவதைகள் படம் குறித்து அவர் அறிந்திருந்தது எனக்கு வியப்பாக இருந்தது. அவர் தனது கவிதைகள் குறித்த ஒரு விமர்சனத்தை நான் எழுத வேண்டும் என்றார். சீக்கிரமாக எழுதிவிடுங்கள் என்றார். அதை அவர் பார்க்க விரும்பினார். கூடவே அவர் மொழி பெயர்த்திருந்த சீன, ஜப்பான் ஜென் கவிதைகளைத் தொகுப்பாகக் கொண்டுவர வேண்டுமென்ற விருப்பமும் கொண்டிருந்தார். அந்த மொழிபெயர்ப்புகளை தக்கை காலாண்டிதழில் நான் தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டேன். அது தக்கை இதழுக்கு மிகப் பெரிய கவனிப்பைப் பெற்றுத் தருவதாக இருந்தது.


ஒரு மனிதனுக்கு இயக்கம் மிக முக்கியமான ஒன்று என்று சி. மணி குறிப்பிடுவார். Mobility என்பது தற்சார்புத் தன்மையைச் உறுதிப்படுத்தும் ஒன்று. தற்சார்பற்றவன் தனது குடும்பத்தினால் மிக அனாவசியமாக நடத்தப்படுவது சாதாரண ஒன்று. தண்ணீர் குடிக்க, தேவையான ஒன்றை கையெட்டும் தூரத்திலிருந்து எடுப்பதற்கு, குறிப்பாக சிறுநீர், மலம் கழிப்பதற்கு மற்றொருவருடைய உதவியை நாடுவது மிகுந்த வேதனையளிக்கக் கூடிய ஒன்று. சாதாரண ஒரு மனிதனே இத்தகைய விஷயங்களுக்கு தடுமாறிப்போகும்போது, சி. மணி போன்ற ஈடு இணையற்ற ஆளுமைகள் எவ்வாறு இதை சமன்செய்துகொள்ளக் கூடும்?


ஒருநாள் ஹோட்டல் சாதம் அவருக்கு வயிற்றுப்போக்கை ஏற்படுத்திவிட்டது. அவர் மிகக் குறைந்த அளவு உணவையே எடுத்துக் கொள்ளும் தன்மையால், இத்தகைய சக்தி இழப்பை சமாளிக்க இயலவில்லை. உடல் தளர்ந்து மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அன்று மதியமாக நான் அவருக்குப் பிடித்தமான, சிவப்பு உடை அணிந்து சென்றேன். Intermediate Care Unit – ல் இருந்தார். என்னைக் கண்டதும் அருகில் அமரச் சொன்னார். அவரது கை மிகக் குளிர்ந்த நிலையில் இருந்தது. கண்களிலிருந்து ஒரு கணம் நீர் வழிந்தோடியது. நான் இமைக்காமல் பார்த்தேன். ‘நான் அழவில்லை. கண்களில் ஏதோ தூசு விழுந்துவிட்டது’ என்றார். பிளாஸ்கிலிருந்த காபியை அருந்தச் சொன்னார். சரி என்றேன்.


அன்று அவர் எழுந்து நடப்பதற்கான பிஸியோதெரபி அப்பியாசங்கள் சொல்லித்தரப்பட்டதாகக் கூறினார். தன்னால் எழமுடியாத நிலைமையில் எவ்வாறு அதைச் செய்வது என்று மருத்துவரைக் கடிந்து கொண்டதாகச் சொன்னார். நிர்பந்தங்களை என்றுமே எதிர்கொள்ளாத, சாமானிய மனிதனால் மிகக் கடுமையாக ஆட்டுவிக்கப்படும் இது போன்ற கணங்கள் சி. மணி போன்ற ஆளுமைகளால் தாங்கமுடியாத ஆற்றாமைக்குக் இட்டுச் செல்வதாக இருந்தன. இதுதான் வாழ்வின் மிகக் கொடூர கணங்களாக நான் கண்டு அதிர்ந்துபோனேன். மறுநாள் வருவதாகச் சொல்லிவிட்டு அந்த இரவு அவரிடமிருந்து விடைபெற்றேன். கிளம்பும்போது அவரது கவிதைக்கான எனது விமர்சனத்தை உடனே எழுதிவிடுமாறு சொன்னார். 


அவர் எந்த நிர்பந்தத்தையும் ஒப்புக் கொண்டதில்லை. அவருக்கு வழங்கப்பட்ட அத்தனை சலுகைகளையும் அது தானாக வந்ததோ அல்லது நண்பர்களின் மூலம் உண்டானதோ அத்தனையையும் அவர் சிதைத்தார். அதன் பிரதியாக தனது சுயத்தை நிறுவினார். அவரிடம் எடுக்கப்பட்ட பல நேர்காணல்களை மிக லாவகமாக தன்னை ஒரு வெகு சாதாரண நிலைக்குக் காட்டிக் கொள்வதன் மூலம் ஒரு விளையாட்டை உருவாக்கியிருந்தார். அது மிகப் பூடகமான ஒன்றாக, அவரை நன்கு அறிந்தவனாலேயே உணரமுடியும். இது ஒரு பார்வைக்கு அபத்தமான ஒன்றாகப்பட்டாலும் ஒரு வண்ணத்துப் பூச்சியானது எவ்வாறு ஒழுங்கற்ற அல்லது தாந்தோன்றியான தனது பாதையை கொண்டிருப்பதற்கான கருத்துருவாக மாறுவதைப் போன்றது. அது அவரது அயராத உழைப்பின் பின்னால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அவர் தனது சகல அசைவுகளையும் தன் பூரண விழிப்புநிலையால் அளந்தபடியே இருப்பார். எனவேதான் அவர் தான் இருக்கும்வரை தனது நேர்காணல் ஏதும் வெளிவராதபடி நடந்து கொண்டார். அன்று அவர் மிகத் தெளிவாக இருந்தார். அவரது கண்கள் பஞ்சடைத்த குழிகளைப்போல உருண்டபடி இருந்தன. 


சொன்னபடி என்னால் மறுநாள் மருத்துவமனைக்கு போக முடியவில்லை. அதாவது ஏப்ரல் 2009 ஐந்தாம் தேதி. அது ஞாயிற்றுக்கிழமை.


அன்று இரவு அதாவது ஆறாம் தேதி. எனக்கு அந்த போன் வந்தது.


எனது கண்கள் குளமாகத் திரண்டு நின்றன. என் மனைவி ஓவென்று அழுது புலம்பினாள். காலையில் அவரது வீட்டின் ஒழுங்குக் கலைக்கப்பட்டு, ஆட்கள் நிரம்பியிருந்தனர். மெளனமாக நின்று பார்த்தேன். இன்னும் நான் அவரது கவிதைகளுக்கான விமர்சனத்தை எழுதவில்லை. சடங்குகள் ஆரம்பித்திருந்தன. நான் சுருண்டு ஒரு படிக்கட்டு முனையில் ஓய்ந்துவிட்டேன். புது எழுத்து மனோன்மணியும் வே. பாபுவும் என்னை ஆறுதல்படுத்தினர். லீனா போனில் என்னை தைரியப்படுத்தினார். சிபிச்செல்வன் நான் தகவல் சொல்லவில்லை என்று வருத்தப்பட்டதாகக் காட்டினார். ஆனால் சி. மணி வீடு சிபிக்குத்தான் பக்கம். நான் எந்த பதிலையும் உரக்கச் சொல்லும் திரணியற்று நின்றிருந்தேன். இத்தனை நாட்களாக கட்டிலோடு கிடந்த அவரை எட்டிக்கூடப் பார்க்காத எல்லோரும் இன்று வந்திருந்தனர். கிரியா ராமகிருஷ்ணன், சர்வராஜ், மல்லூர் பாலமுருகன், பா. ராஜா, அடையாளம் சாதிக்பாஷா, வெங்கடேசன், நா.பெரியசாமி என்று ஒரு பத்து இலக்கியவாதிகளும், பதினைந்து உறவுகளுமாக அந்த மேதையின் இறுதி ஊர்வலம் முடிவடைந்தது.


அவரது வீட்டில் சில மனக்குறைகள் தகித்திருந்ததை அப்போது என்னால் கண்டு கொள்ள முடிந்தது. அவரது நிரந்தரத்தன்மைக்கு நேர்ந்த சில பெலஹீனக் குறைபாடுகள் குறித்து அது எழுந்தது. சி. மணியைப் போன்ற ஆளுமையொன்று வெற்று நிரந்தரத்தை என்றுமே ஏந்துவதில்லை. அவர் வானவில்லிலிருந்து தனக்கான ஜீவ சக்தியைப் பெற்றுக்கொண்டார். அவருக்குப் பிடித்த ஒரு கீர்த்தனையிலிருந்து ஒரு நாளுக்கான உணவை எடுத்துக் கொண்டார். தான் ரசித்த ஒரு கவிதையிலிருந்து ஒருநாள் காலை விழித்தெழுந்தார். தனக்கான ஒரு மிடறு மதுவிலிருந்து இந்த பிரபஞ்ச ரகசியத்தைப் பிழிந்தெடுத்துக் கொண்டார். சிகரெட்டின் வெம்மையான புகையிலிருந்து இந்த உலகின் ஆன்மாவை தன்னுள் நிறைத்துக் கொண்டார். அவர் உணவை மறுத்தார். அது நிரந்தரத்தை கொண்டுவந்து சேர்த்தது. சிதைவைத் தடுத்தது. எனவே அவர் இல்லாததிலிருந்து இருப்பதை எடுத்துக் கொண்டார். 


எல்லாம் முடிந்துவிட்டது. கடைசி சுவடும் அழித்தொழிந்துவிட்டது. அதோ அந்த வைக்கோல் போர் எரிந்துபோய் இப்போது நிலவு தடையற்று தெரிகிறது. அந்த நிலவின் ஒளி அருகிருக்கும் குளத்தில் பிரதிபலித்தபடி இருக்கிறது. ஆனால் அந்த நிலவோ அல்லது அந்த குளமோ எங்கேயும் தங்களுக்குள் தொட்டுக் கொண்டிருக்கவில்லை.



வாழ்வு இருப்பது, அதை நாம்

கண்டறிவது  போலத்தான்.


சாவும் அவ்வாறே.

பிரிவுக் கவிதை ஒன்றா?

எதற்கு இந்த


வற்புறுத்தல்?


மரணம்: டெயே - சேகு

(தமிழில் சி. மணி)


---------------------------------------------------------------------------------------

புது எழுத்து - 18, 2010 பத்தாம் ஆண்டு சி. மணி நினைவு மலரில் வெளி வந்த கட்டுரை

(பின் குறிப்பு: 19-04-2009 அன்று சென்னையில் லீனா மணிமேகலை மற்றும் தமிழ்க்கவிஞர்கள் இயக்கம் ஏற்பாடு செய்திருந்த சி. மணி, அப்பாஸ் நினைவரங்கில் சி. மணியின் இதுவரை. . . கவிதைத் தொகுப்பு பற்றிய கட்டுரையை மிகுந்த மனவலியோடு வாசித்தேன்.)

Tuesday, April 26, 2022

இரண்டு படங்களும் ஒரு விமர்சனமும்

           


            கிக்கிஜிரோவும் தட்டானும்
             (2011 ல் எழுதிய கட்டுரை)

மீபத்தில் ஜப்பானிய இயக்குநர் டகாசி கிடானோவின் கிக்குஜிரோ என்ற படத்தைப் பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதை ஏற்கனவே பலமுறை பார்த்திருந்தாலும் ஒரு சில விஷயங்களை நினைவுபடுத்திக் கொள்ள அல்லது தக்க வைத்துக் கொள்ள மீண்டும் பார்க்க வேண்டியிருந்தது.

 அதற்கு முன் இங்கே நாம் தெளிவுபடுத்திக் கொண்டாக வேண்டியவை.

1.   சினிமா என்பது என்ன?

2.   சினிமாவின் சாத்தியங்கள் எவை?

3.    நம்மிடமிருந்து சினிமா எதை எடுத்துக்                      கொள்கிறது?

4.     நவீன சினிமா எதை வடிவமைக்கிறது?

5.     ஒரு தட்டான் சினிமா பார்க்குமா?

 
சினிமாவை காட்சிகளின் தொகுப்பாக்கும் ஒரு வறட்டுத் தன்மையே அதை கலை வடிவமாக்கும் தன்மையிலிருந்து விலக்கி வைக்கிறது. நமது சினிமா அனுபவம் அளப்பறியது. அது தன்னுள் கொண்டிருக்கும் அனுபவ படிவுகள் மிக மேலோட்டமான, மனப் பரப்புகளற்ற வெட்டவெளியின் வெற்று சாயங்களாகவே இருக்கின்றன.


நாம் சிலவற்றை நம்புகிறோம். அவை இயல்பினில் சினிமாவைப்போல வேறொன்றாகவே இருக்கின்றன. இங்கே ஒரு கதையைச் சொல்ல வைப்பதே நமது ஆகச் சிறந்த செயல்பாடாக வலுப்பெற்றிருக்கிறது. ஆனால் சினிமாவின் சாத்தியமானது, உணர்வுகளின் வழியாக ஒரு கதையை அல்லது ஒரு தரிசனத்தை மையப்படுத்துவதாக இருக்கிறது. தரிசனம் என்பது மனிதனின் ஒரு மனநிலையை, அதாவது, மன ஒழுங்கின் கட்டமைப்பை சாத்தியமாக்குவதன் தீவிரத் தன்மைக்கு அவனையறியாமல் கொண்டு செல்லும் ஒரு செயல்பாட்டைக் குறிக்கிறது.


சினிமா ஒரு வர்த்தக தயாரிப்பாகி, இலக்கியத்தை, கலையை இரண்டாமிடத்திற்குத் தள்ளிவிட்டிருக்கிறது. அல்லது அது தனது சாதகத்தை இந்த இரண்டாமிடத்திலிருந்தே பெற்றுக் கொள்ள இயலும் என நம்ப வைத்திருக்கிறது. எனவே நாம் வாழ்கையிலிருந்து சினிமாவை எடுக்காமல், சினிமாவிலிருந்து வாழ்வை அடைந்து கொண்டிருக்கிறோம்.

 
இத்தகைய பிற்போக்குத்தனமான சினிமா, வன்முறை, சிதைவுற்ற உறவுகள், பாலியல் பிறழ்வுகள், அரசியல் சாக்கடைத்தனம், கொஞ்சமும் நேர்மையற்ற நீதிமன்ற தராசுகள், முற்றிலும் இயல்புணர்வை மறுக்கும் தன்மையை அடைந்திருக்கும் புரிதலற்ற மனோநிலையை வடிவமைப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.


ஆனால் இதிலிருந்து தமிழ் சினிமா தப்பிவிட்டது என்னும் ஆடம்பரக் கூச்சல்கூட மேலே குறிப்பிட்ட வகைமைகளின் ஒன்றாக அமைந்துவிடுவதே மிகப் பெரிய அபத்தமாக நமது சினிமாவில் இன்னும் நடந்து கொண்டிருக்கிறது.

ஒரு தட்டான் சினிமா பார்க்குமா?

கிக்குஜிரோவில் ஒரு தட்டான் சினிமா பார்க்கிறது.

கதை இதுதான். மசாவோ, ஆரம்ப பள்ளியில் படிக்கும் சிறுவன், பாட்டியுடன் ஒரு நகரத்தில் வசிக்கிறான். அப்பா இல்லை. அம்மா தொலைதூர நகரத்தில் இவனுக்காக வேலை செய்து கொண்டிருக்கிறாள். இதுவே அவனுக்கு சொல்லப்படும் தகவல். ஒரு கோடை விடுமுறையில் எப்படியும் அம்மாவை அந்த நகருக்குச் சென்று பார்த்துவிட வேண்டும் என்று முடிவெடுக்கிறான். அவனுக்கு பக்கத்து வீட்டு பெண்மணி உதவுகிறார். செலவுக்கான பணத்தை கொடுத்து, தனது கணவரையும் அவன்கூட அனுப்புகிறார். அவர், சூதாடும், சில்லறைத் திருட்டுகளில் ஈடுபடும் ஒரு நடுத்தர வயதுக்காரர். ஒருவகையான கோமாளித்தனமான போக்கிரி, அவர்தான் இயக்குநர் டகேசி கிடானோ. நகரை விட்டு கிளம்பும் முன்னமே, ஜப்பானின் பிரபலமான சைக்கிள் பந்தயத்தில் எல்லா பணத்தையும் இழந்துவிடுகிறார்.

அதனால் அந்தத் தொலைதூர நகரத்திற்குச் செல்வதற்கான ஒரே வழி, ஆங்காங்கே கிடைக்கும் இலவச சவாரிகளில் போய்ச் சேருகின்றனர். சில வாகனங்கள் அவர்களை அழைத்துச் செல்ல மறுக்கவும் செய்கின்றனர். அவனிடம், அவனும் அவன் அம்மா, பாட்டியுடன் இருக்கும் ஒரு புகைப்படமும் ஒரு முகவரியும்தான் இருக்கின்றன.

தெருமுனையிலேயே சிறுவனை நிற்க வைத்துவிட்டு, அவர் அந்த முகவரியுள்ள வீட்டை நெருங்குகிறார். அங்கே அவள் மற்றொருவருடன், ஒரு பெண் குழந்தையுடன் சிரித்தபடி வெளியே வருகிறாள். அவர் அதிர்ச்சியடைந்தபடி பையனிடம் ஓடிவருகிறார். அவன் அழுகிறான். அவள், புகைப்படத்திலுள்ள பெண் இல்லை. உன் அம்மா வேறு முகவரியில் இருப்பார். தேடுவோம் என்று திரும்புகின்றனர். இவ்வாறு அந்த விடுமுறை கழிந்து, பள்ளி ஆரம்பிக்கிறது.

இந்த ஒற்றை நரம்புக் கதை படத்தின் ஒரு இழைதானே தவிர, அது கதையாக இருப்பதில்லை. இந்த பயணத்தினூடே அவர்கள் கடக்கும் மனிதர்களின் வழியாக, அவர்களின் செயல்பாட்டு உணர்வுகளின் வழியாகவே படம் விரிகிறது.

படத்தில் சலனமற்ற காமிரா, சுவாரஸ்யமற்ற தன்மையுடன் அல்லது ஒரு தீர்க்கமான பார்வையுடன் காட்சிகளை விவரிக்கிறது. காட்டப்படும் ப்ரேம்கள் விரிந்த கோணத்தில், அவன் உணரும் தனிமையை நமக்கு பூடகமாக, இயல்பின் ஒரு சிறு கோடும் சுழிந்துவிடாமல் கையாளப்படுகிறது. ஒளிப்பதிவு, கட்சுமி யனாகிஷிமா.

படத்தில் இசையானது, மிக நுட்பமாக, கட்சிகளை தனது கட்டுப்பாட்டில் கொள்ளாமல், காட்சிகளின் பிம்பங்கள் உருவாகும் அடிப்படை உணர்வின் மேலே படியும் இயல்புணர்வாக நீள்கிறது. அதாவது சினிமாவின் துவக்க காட்சிகளில், மசாவோவும் அவன் நண்பனும் வீடு திரும்பும்போது அவர்களின் ஓட்டத்திற்கு இயைந்து செல்லும் அது, ஒரு வாயிலைக் கடந்ததும் நண்பர்கள் வேறுவேறு திசைகளில் பிரிந்தவுடன், அங்கே இசையானது மெளனித்துவிடுகிறது. இது அவனது தனிமையை மிக வலுவான ஒரு நிலையில் விவரிப்பதாக மாறிவிடுகிறது. அதேபோல அவன் தனது அம்மாவை வேறு ஒரு நிலையில் கண்டு திரும்பும் கணமானது, துக்கமும், யாராலும் மீட்டுத்தர இயலாத ஒரு தனிமையுணர்வை நுட்பமான இசைப் படிமங்களால் மிகைப்படுத்தாமல் பிரமிக்க வைக்கிறது. அது பிரமாண்டமாக இல்லாமல், மிக எளிய ஒரு சிம்பொனியாக விரிகிறது. இசையானது படத்தை நகர்த்தாமல் படம் இசையை கையாள்கிறது. இது நவீன சினிமாவிற்கு பெரும் சவாலாக விரியும் ஒன்று. இசை, ஜோயி ஹிஷெய்ஷி

மசாவோ, எதற்கும் உடனே பதிலளித்துவிடக் கூடாதவனாக, தனிமையும் துயரமும் பெருக்கிய உள்முகப் பார்வை கொண்டு, எல்லாவற்றிற்கும் உம் என்று மட்டும் பதில் வைத்திருக்கும் ஒரு சிறுவன். படமானது ஒரு ஓவியத்தின் கண்களில் இருக்கும் தேவதை உருவத்தை விரித்துக் காட்டும் விதமாகவே ஆரம்பிக்கிறது. குழந்தைகளுக்கான ஜப்பானிய பழங்கதை வடிவமொன்று அக்குழந்தையின் ஆழ்மனத்தில் தனது அம்மாவை அப்படி கற்பித்துக் கொள்வதாக மாற்றம் கொள்வது படம், ஒரு குழந்தையின் பார்வைப் பக்குவத்தில் நகர்வதை அறிவுறுத்துகிறது. அவனுக்கான தனிமையை அந்தப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் விளையாடத் தெரியாத கால்பந்துடன் அகண்ட ஒரு கோணத்தில் சொல்லும் விதம், அவனது இறுதி முயற்சியாக, அந்தத் தனிமையை சமன்படுத்தும் ஒரு செயலாகவும் விரிகிறது.

சைக்கிள் பந்தையத்தில் கிட்டானோ தேர்ந்தெடுத்து பணம் கட்டும் எண்கள், மசாவோவிடம் கேட்கப்பட்ட எண் ஜோடிகள். ஒவ்வொருமுறையும் புதிய உற்சாகத்துடன் அவர் கேட்பதும் அவன் தனது குழந்தைத்தனமான எண் ஜோடிகளைச் சொல்வதும் இந்த விளையாட்டின் அபத்தத்தையும் அது விளைவிக்கும் படு அபத்தமான லாஜிக்குகளையும் கட்டமைவதை விவரிக்கிறது. ஒரு கட்டத்தில் பணம் அனைத்தும் இழக்கும் நிலைவரும்போது, அவனைக் கோபத்துடன் தலையில் அடிப்பதாக ஒரு காட்சி வருகிறது. மறுகணம் கேமரா நகரும்போது தனியாக கழற்றி வைக்கப்பட்டிருக்கும் மசாவோவின் தொப்பியை அவர் அடிப்பது புரியும். அதேபோல தங்கும் விடுதியிலிருந்து ஒரு பெரிய விவாதத்திற்குப் பிறகு அவர்கள் கிளம்பும்போது அவர் தலையில் அடித்துக் கிளம்பச் சொல்லும் சிறுவன் மசாவோ இல்லை. வேறு ஒருவன். இந்த காட்சியானது ஒரு அதீதக் காட்சியாகவே வருகிறது. அடிப்படையில் மசாவோவின் மனநிலையில் காட்சிகள் நகர்த்தப்படுவதால் அவன் தனக்கான எந்த, வன்முறையையும் தன்னிலிருந்து விலக்கியே வைக்கிறான்.

அதாவது மசாவோவை பாலியல் வன்முறைக்கு வற்புறுத்தும் ஒரு வழிப்போக்கன், தொடர்ந்து அவனது கனவில் வந்து கொண்டே இருப்பான். அவன் ஜப்பானிய பாரம்பரிய உடையணிந்து ஜப்பானிய மரபுவழி நடனமொன்றை ஆடுகிறான். அங்கே அவன் அம்மாவும் இருப்பதாக வரும். ஆனால் வழிப்போக்கனின் ஒவ்வொரு அசைவையும் அந்தக் குழந்தை உள்ளம் ஒரு ஹாஸ்யமாகவே பார்க்கிறது. அதாவது மசாவோ, தனது மனநிலையிலிருந்தே படத்தை, தன் உணர்வு நிலைக்கு ஏற்றபடி நகர்த்துகிறான். குழந்தைகள் தங்கள் கைகளுக்கு எந்த நெருப்பும் சுடாது என்ற கற்பித்தலோடு எதையும் செய்யத் துணிவதைப்போல படம் முழுக்க ஒரு செய்கையின் உணர்வு நிலையே மேலோங்கி நிற்கிறது. இதன் உச்சக்கட்டமாக, அவர்களை ஏற்றிச் செல்லாத ஒரு ட்ரக் ஓட்டுநருக்கும் கிட்டானோவுக்கும் நடக்கும் கைகலப்பை மிக தொலைதூர காட்சியாகக் காட்டப்படுகிறது. வீடுகளில் நடக்கும் சிறு சண்டைகளைக்கூட தாங்கும் இயல்பற்ற குழந்தைகள் கண்களில் மிரட்சியுடன் சண்டையின் அவசியமற்ற வன்முறையை விளங்கிக் கொள்ள இயலாது, அவர்களின் புரிதலுக்கு அப்பால் இருக்கும் அத்தகைய ஒரு நிகழ்வு, படத்தில், லாங்ஷாட்டில் புரிந்து கொள்ள இயலாத தோற்றத்துடன் காட்டப்படுவது, பார்வையாளனிடம் ஒரு குழந்தையின் உணர்வு தளத்தை வேண்டுவதே. அல்லது அத்தகைய ஒரு புரியாத் தன்மையைச் சாத்தியப்படுத்துவதே.

மசாவோவும் கிட்டானோவும் தங்களது பயணத்தின் நீட்சியில் சந்திக்கும் ஒவ்வொரு வழிப்போக்கனும் மேலே சொன்ன அந்த உணர்வுநிலையில் நகர்த்தப்படும் காட்சிகளே. காரில் வந்து அவர்களை கொஞ்ச தூரத்திற்கு கூட்டிச் செல்லும் இளம் ஜோடி ஒன்று, நடமாடும் நூலகமொன்றை தன்னுடனே வைத்திருக்கும் அந்த ஆம்னி வேன் கவிஞன், இருசக்கர வாகனத்தில் வரும் திடகாத்திர உடல் எடை கொண்ட ஹிப்பி வழிப்போக்கர்கள், அவர்கள் தங்கும் ஹோட்டல் வரவேற்பாளன் என எல்லோருமே மசாவோவை சந்தோஷப்படுத்தும் வகையில் நடந்து கொள்வது மேலே சொன்ன மைய கதாபாத்திரம், தனக்கான உணர்வு தளத்திற்கு படத்தின் ஒவ்வொரு பிரேமையும் வடிவமைப்பதில் அமைகிறது.

அந்த இளம் ஜோடி, மசாவோவை, அவன் தனது முதுகில் சுமந்துவரும் பையில் இருக்கும் இறகுகள், தேவதையைப்போல பறக்க, அவர்களை சுற்றிவர அனுமதிப்பது, இருசக்கர வாகன ஹிப்பி வைத்திருக்கும் தேவதை சாவிக்கொத்து, இரவு ஒரு ஏலியனாக அவனை வியப்புற வைக்கும் கவிஞன் எல்லோரும் குழந்தை மனநிலைக்கு வருகிறார்கள். அல்லது குழந்தைக்காக குழந்தையாக மாறுகின்றனர். ஆனால் இந்த நிலை மாற்றமடைகிறது. கோவில் பொருட்காட்சியில் கதாநாயகனாக நடிக்கும் கிட்டானோ அடிவாங்குவது, அதற்காக அவன் மருந்துகள் வாங்கச் செல்வது முதல் அவர்களுக்குள் மிக அந்தரங்கமான ஒரு உறவு உருவாகிறது. அது பெரியவர்களும் குழந்தைகளும் இந்த உலகை எவ்வாறு எதிர்கொள்கின்றனர் என்பதை தெளிவுபடுத்துவதாக இருக்கிறது. இதை படத்தின் ஆரம்பக் காட்சிகளிலேயே ஒரு சிறிய நிகழ்வின் மூலமாக காட்டப்படுகிறது. மசாவோவும் அவன் நண்பனும் ஓடிவரும் வழியில், பாரம்பரை உடையணிந்த பொம்மைகளின் தலையில் தங்கள் தலையைப் பொருத்த இயலாது தம் வழியில் செல்லும்போது ஒரு ஆடவன் வெகு இயல்பாக அந்த பொம்மையின் தலையாக கண நேரம் நின்றுவிட்டு செல்வது, குழந்தைகளின் உள்ளம் அல்லது அவர்களது எண்ணம் உருவாக்கப்பட்ட ஒரு கட்டுக்குள் என்றுமே இருப்பதில்லை. அது தேடல் நிறைந்த, முன் முடிவுகளற்ற ஒரு மணல் பரப்பாக இருக்கிறது என்பதை வெல்லமுடியாத ஒரு காட்சி வடிவில் சொல்ல முயல்கிறது.

மசாவோ தனது அம்மாவை பார்க்க இயலாமல், ஊருக்குத் திரும்பும் வழியில் கிட்டானோ, தனது அம்மாவின் ஞாபகம் வர வழிப்போக்கர்களின் வசம் மசாவோவை விட்டுவிட்டு, ஒரு மனநல காப்பகத்திற்கு செல்கிறார். அங்கே அவரது அம்மா நிலைகுத்திய பார்வையுடன் இருப்பதைப் பார்த்துவிட்டு, எந்த ஒரு சலனமுமற்று இறுகிய முகத்துடன் திரும்புகிறார். அது ஒரு பார்வையாளன் எதிர்ப்பார்க்காத ஒன்று. ஆனால் கிட்டானோவும் மசாவோவும் ஒத்தப் புள்ளியில் பயணம் செய்வது இந்த மையம்தான். இது படத்தின் முதல் காட்சிகளிலேயே உணர்த்தப்பட்டதாகும் அதாவது கிட்டானோவின் மனைவி அவரைத் திட்டும்போது ஓடிப்போன அவரது அம்மாவை நினைவுப்படுத்துகிறார். இந்த இடத்தில் படம் மசாவோவிடமிருந்து கிட்டானோவிடம் கைமாறுவது கூர்ந்து பார்க்கும் ஒரு பார்வையாளனால் உணர்ந்துகொள்ள இயலும்.

கிட்டானோவின் மனைவி, தனது பக்கத்துவீட்டு சிநேகிதியின் பேரனை அவனது அம்மாவைப் பார்க்க வெகு தொலைவிலுள்ள நகருக்கு அனுப்புவது, மறைமுகமாக தனது கணவனை, அவனது அம்மாவைப் பார்த்துவரச் செய்யும் ஒரு ஏற்பாட்டைப் போலவும் தெரிகிறது. இங்கேதான் ஒரு தட்டானின் பார்வையில் படமானது கட்டமைக்கப்பட்டிருப்பது பார்வையாளனுக்குச் சட்டெனப் புரியும். ஒரு தட்டானானது, படத்தில் வரும் அந்த ஆம்னி வேனைத் தனது கூட்டுக்கண்களால் பார்ப்பதாக ஒரு காட்சி வைக்கப்பட்டிருக்கிறது. இது எதோச்சையாக வைக்கப்பட்ட ஒன்றாக இல்லாமல், படத்தின் கதையற்ற தன்மையை, ஒரு கூட்டுக் கண்ணானது எவ்வாறு எதிரிலிருக்கும் பொருளைப் புரிந்து கொள்கிறது என்பதில் தொடங்குகிறது.

படமானது ஒரு முடிவுக்கு வருகிறது. இருவரும் ஏறக்குறைய இலக்கை அடையும் செயலிலிருந்து திரும்பியிருக்கிறார்கள். விடைபிரியும் தருணம் வருகிறது. அடுத்த விடுமுறைக்கு மீண்டும் தேடுவோம் இப்போது போய்வா என கிட்டானோ மசாவோவிற்கு விடையளிக்கிறார். அவனும் சிரித்தபடி புறப்படும் முன் ஒரு கேள்வியைக் கேட்கிறான்.

‘உங்க பேர் என்ன?’

‘கிக்கிஜிரோ, ஓடு வீட்டிற்கு, டாமிட். . .’

இங்கே படம் முடிவடைவதில்லை. அவன் மேம்பாலங்கள் அடர்ந்த அந்த வழியாகக் கடந்து வீடு செல்வதாக படம் முடிந்தாலும் அதன் கதையற்ற தன்மையானது, ஆழமான பார்வையும் கூர்ந்த உணர்வனுபவமும் கட்டி எழுப்பும் ஒரு விஷயம்தான் படத்தை இயல்புணர்வில் தொடர வைக்கிறது. மசாவோ தனது மன எழுச்சியின் வழியாக நகர்த்தப்படும் படத்தில், காட்சிகளின் உணர்வானது தங்களையும் ஒரு குழந்தை மனநிலைக்கு ஆட்படுத்திக் கொள்வதில் பொதிந்திருக்கிறது.

கிக்கிஜிரோ சகப்பயணியிடம் திருடும் உணவு, சோளக்காட்டில் திருடும் சோளக் கதிற்களை விற்பனைக்கு வைக்கும் ஆம்னி நூல் நிலைய கவிஞன், பொம்மைக்காக துப்பாக்கியால் சுடாமல் விளையாட்டு விதிமுறைக்கு முரணாக கல்லால் அடித்து பலூனை உடைப்பது, லிப்டிற்காக கண் தெரியாதவராக நடுபாதையில் நின்று காரில் அடிபடுவது எல்லாமே, நல்லது - கெட்டது என்ற வரைமுறையற்ற, இயல்பான ஒரு குழந்தை அணுகுமுறையான இந்தச் செயல்கள் விளைவிக்கும் சகல தளங்களும், நிலையற்ற வாழ்வின் ஒழுங்கற்ற ஒரு விளைச்சலின் உணர்வு மேட்டில் கட்டப்பட்ட ஒரு தரிசனமாகவே தெரிகிறது.

அதாவது, அன்பு, வெறுப்பு, பிரிவு, சந்தோஷம் எல்லாமே நிரந்தரத் தன்மையில்லாத, ஒரு குறிப்பிட்ட காலவரையறையற்ற உணர்வு நிலைகளாகக் காட்டப்படுகின்றன. அவை நிலையற்றதாக இருப்பதாலே நிலைத் தன்மையை நோக்கிய அவற்றின் பயணம் சாத்தியமாகிக் கொண்டிருக்கிறது. வாழ்வானது இத்தகைய பயணங்களில் ஆங்காங்கே இளைப்பார நம்மை அனுமதிக்கிறது. மசாவோ தனது அம்மாவாக, கைக்கு அருகில் கிடைக்கும் வேறு ஒரு பெண்ணை கற்பித்துக் கொள்வதில்லை. தனது அம்மாவை, அடுத்த விடுமுறையில் தேடும் எண்ணத்துடன் பள்ளி செல்லத் துவங்குகிறான். கிக்கிஜிரோ தனது அம்மாவை கட்டியழுவதில்லை. தொலைவிலிருந்து பார்த்துக் கொள்வதே அடுத்த அவரது வருகைக்கான ஆதாரமாகக் கருதுகிறார். வாழ்க்கை எத்தகைய இறுதி முடிவுகளையும் கொண்டிருப்பதில்லை. அது அவ்வாறு இருந்தால் அவ்விடமே மானுடத்தின் அல்லது உயிர்த் தொடர்ச்சியின் முடிவாக நின்றுவிடும்.

ஒவ்வொரு செயலும் அதற்கான நியாயத்தைக் கொண்டிருப்பதால், அன்பு மட்டுமே, எல்லாவற்றையும் இயல்புணர்விலிருந்து பார்க்கக் கற்றுத் துதருகிறது. குழந்தைகளும் தேவதைகளும் அன்பை தமது உள்ளங்கையில் வைத்துக் காத்திருக்க, நாம் நம்பிக்கையுடன் தேவதைக்குரிய மணிகளை ஒலிக்கச் செய்கிறோம். அது சாத்தியப்படும்போது மனம் ஒரு தரிசனத்தை அடைகிறது. அந்த தரிசனமே ஆன்மாவை ஜீவித்திருக்க வைக்கிறது.

படத்தில் கடைசியாக ஒரு அகண்ட காட்சி படமாக்கப்பட்டிருக்கிறது. கடற்கரையின் மிக விரிந்த ஒரு பரப்பில் மசாவோ, கிக்கிஜிரோவையும் கவிஞனையும் கண்டுபிடி விளையாட்டில் தேடுகிறான். வெட்ட வெளியில், ஒரு பெரிய தகர ட்ரம்மில் ஒளிந்து கொள்ளும் கிக்கிஜிரோவை ட்ரம்முடன் நகர்த்தியபடி ஓடிக்கொண்டிருக்கிறான் கவிஞன். இறுதிவரை மசாவோ தானே அவர்களைக் கண்டடைவதில்லை. ஒருகணத்தில் அந்த தகர ட்ரம் கீழே சாய்ந்துவிட, ஏற்படும் ஒலியில் அவனுக்குப் பின்னாலேயே ஒளிந்து கொண்டிருக்கும் அவர்களைக் கண்டடைகிறான். எந்த இருப்பும் என்றுமே கண்டடையப்படுவதில்லை. அதாவது அது தன்னை வெளிப்படுத்திக் கொண்டாலொழிய சாத்தியப்படுவதும் இல்லை.

வாழ்வின் மீதான இத்தகைய தரிசனத்தை, இவ்வளவு எளிய வடிவில் வேறு எங்கும் காணமுடிவதில்லை. இத்தகைய சாத்தியத்தை சினிமாவில் சாத்தியப்படுத்தியிருக்கும் டேகாசி கிடானோ இந்தப்படத்தை எழுதி, இயக்கி, கிக்கிஜிரோவாக நடித்திருக்கிறார்.

ஒரு தட்டானாக சினிமாவைப் பாருங்கள். நவீன சினிமா கூட்டுக்கண்களைத் தேடியபடியிருக்கிறது.
---------------------------------------------------------------

    (புது எழுத்து 19 – ஏப்ரல் 2011 இதழில் வெளி வந்தக் கட்டுரை)

Sunday, April 17, 2022

இரகசியங்களை மொழியினூடாக மர்மங்களாக வெளிக்காட்டிக் கொள்ள இயற்கையின் தேர்வே நான்.


 ஸ்ரீசங்கரின் பொயட்ரி இதழ் 2020.
( உரையாடியவர் அகச்சேரன்)

∅∅∅∅∅∅∅∅∅∅∅∅∅∅∅∅∅∅∅∅∅

 1. கவிதை எழுதுவது என்பது உங்களைப் பொறுத்தவரை எவ்வளவு முக்கியம்?


மனிதன் தவிர சில விலங்குகளும் பொருட்களை குறிப்பிட்ட வடிவத்தில் அடுக்கி, தனது அக ஒழுங்கைக் காட்டுபவை. குறிப்பாக குரங்கு, நாய், பூனை. நாம் எழுதுவதைத் தாண்டி முக்கியத்துவம் பெறுவது அக தரிசனம்தான். தரிசனம் என்பது மனிதனின் சமூக ஒழுங்கிற்கு அப்பாற்பட்டது. ஒரு தினவு. அறிவியல்படி சொல்வதானல், இது ஏதோ ஒருவகையில் ஜீன் கலைவமைவுதான். அவஸ்தையின் மாறுபட்ட வடிவம். அதேபோல முக்கியத்துவம் என்பதைத் தாண்டி, எழுதுவது என்பதே இரண்டாவது செயல்பாடுதான். அத்தகைய மன செயல்பாட்டிலிருந்து விலகுவது என்பதற்கு இடமேயில்லை. முக்கியம் முக்கியமில்லை என்பதற்கு அப்பாற்பட்டு தன்னியல்பாக நிகழ்த்திக் கொள்ளும் ஒரு உயிரியின் அகச் செயல்பாடுதான் இது போன்றவை.


சி.மணியும் நீங்களும்?

சி. மணியுடனான தொடர்பு என்பது ஒரு விபத்து என்றே சொல்ல வேண்டும். அதுவரை அவரது ஒரு சில கவிதைகளைத் தவிர, அவர் சேலத்தில்தான் அதுவும் அம்மாபேட்டை செளண்டம்மன் கோவில் தெருவில்தான் வசிக்கிறார் என்பதே தெரியாது. நீட்சே சொல்வதைப்போல ஒரு அதிமனிதனாக அவரைக் கண்டேன். அதிமனிதனை ஒரு சாதாரண கல்லூரி மாணவன் எதிகொள்வதென்பது தற்கொலைக்குச் சமமானதுதான். ஒரு மனிதன் நம்பிக்கொண்டிருந்தது எல்லாமே அடித்து நொறுக்கப்படும் நிகழ்வு ஒவ்வொரு மனிதனுக்கும் வெவ்வேறு சம்பவங்களால் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கலாம். ஆனால் அசாதரணனால் எதிர்கொள்ளப்படும் சாதாரணனின் மனோநிலையானது அதை அப்படியே ஏற்றுக் கொள்ளவோ, முரண்படவோ செய்யும் அவனது தனிப்பட்ட ஆளுமையைச் சார்ந்தது. அந்த விதத்தில் நான் சி. மணியில் என்னைப் பொருத்தியோ அல்லது விலக்கியோ பார்த்துக் கொண்டேனே தவிர அவர் என்னை நானே திருத்தி மேம்பட்டுக் கொள்ளவே அனுமதித்தார்.
இது ஒரு அபூர்வத்திலும் அபூர்வமான ஒன்று, அவரைப் போலவே.


3. தத்துவம் கவிதை இரண்டும் மகிழ்ச்சி இணையா? அல்லது பூட்டப்பட்ட மாடுகளா?

கவிதை தர்க்கத்திற்கு அப்பாற்பட்டது. தத்துவம் தர்க்கத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்படுகிறது. இரண்டுக்குமான தொடர்பு இங்கே பூஜ்ஜிய நிலையாக இருக்கிறது. ஆனால் கவிதையில்  செயல்படும் தத்துவமானது தர்க்கத்திலிருந்து பிறக்கும் ஒரு தர்க்கமற்ற நிலை. இதுவே அடர் இலக்கியத்தின் கூறாகவும் உள்ளது. ஆனால் ஒவ்வொரு மனிதனும் தான் அடையும் தர்க்கமற்ற நிலையை மீண்டும் தர்க்கமாக்கிக் கொள்ளவில்லை என்றால் அது பூட்டப்பட்ட மாடுகளாக மாறிவிடும் என்பதில் சந்தேகமில்லை.


4. 'வண்ணச் சிதைவு' கவிதைத் தொகுதியில் நீங்கள் ஒரு மெய்யியல்வாதியாக பரிணமித்திருந்தீர்கள். அது பற்றி?

மெய்யியல் என்பது ஒரு மனநிலை. இது இயற்கை, இருத்தல், சிந்தனை, மொழி இவற்றின் மீதான பொது விதிகளின் செயல்பாட்டை பேசுகிறது. அப்படி ஒரு மனோநிலையானது தொண்ணூறுகளில் அல்லது அதற்கு முன் மிகத் தீவிரமாக இருந்தது. அது வெறுமனே ஒரு பாவனையாக இல்லாமல் ஆன்மாவின் கூக்குரலாக இருப்பதே அதன் மெய்மை. அக்காலக்கட்டத்தில் சி. மணியின் கூடவே இருந்தேன். என்னையும் நாமக்கல் சர்வராஜையும் மிக நெருங்கிவர அனுமதித்தார். அவருடனான உரையாடலின் எதிர்வினையாக ஒரு கவிதையையும் நான் எழுதியதில்லை. என்னுள் தோன்றிய எல்லாமும் அவருக்கு எதிராக இருந்தன. அல்லது அப்படி அவர் காட்டிக்கொண்டார். எனது கவிதைகளை மிகச் சிக்கலான வெற்று சட்டகங்களை அறிவியியல் நிரூபணம் கொண்டு அடுக்குவதாகச் சொல்லிக் கொண்டார். அது வாசகனை கூடுதல் தகவல்களை கொண்டு சேர்க்கச் செய்வதாகவும் Esoteric தன்மையின் மர்மம் அடங்காத வெடிப்பு அதற்கான வலுவை,  வாசகனிடம் கேட்க வைப்பது கவிதையின் பொதுத் தன்மை இல்லை என்றும் சொல்வார். வண்ணச்சிதைவு தொகுப்பு வரும்போது அதை அவருக்குக் கொடுக்க எனக்கு பிராப்தம் அமையவில்லை. அதேபோலத்தான் அந்தத் தொகுப்பும் கணிக்கப்பட்டது எனக்கு பெரு மகிழ்ச்சியாக இருந்தது.



5. ஆனால் தற்போது வெளியாகியிருக்கும் 'அரோரா'வில் உங்களை அப்படி வரையறுக்க இடம் தரவில்லை. ஏன்?

அரோரா ஒரு தோற்றப்போலி. வாசகன் ஏமாந்து போவது இங்கேதான். வெறும் மொழி செயல்பாட்டை வைத்துக்கொண்டு ஒரு படைப்பாளியின் ஆன்மாவை தரிசிக்க இயலாமல் போவது ஒருவகை முன் முடிவுத் தன்மையாகும். தொடர்ந்து மாறிவரும் ஆளுமை கட்டத்தின் ஒரு காலக்கட்டம் இது. இதற்கு நிகழின் மெய்ம்மையைக் கருத்தில் கொள்ளவேண்டும். மற்றொரு வகையில் சொல்வதானால், வண்ணச் சிதைவின் தோல்விதான் அரோரா. அல்லது அரோரா மற்றொரு தோல்வியின் வெற்றியோ?
நிகழ்வின் இணையாக இருக்கும் இலக்கிய செயல் தன்மையை படைப்பின் பொதுத் தன்மையில் வெளிப்படுத்த முயன்றது வண்ணச்சிதைவு. சம்பவங்களின் ஊடாடும் மெய்ம்மையை வெளிப்படுத்த அந்த சம்பவங்களையே நிகழ்வாக்கிப் பார்த்ததன் விளைவே அரோரா.



6. கவிதையுடனான தனிமனிதனின் உறவுப் பரிவர்த்தனை தற்கால மீ மின்யுகத்திற்குப் பிறகு தேவையற்ற ஒன்றாகி விடும் என யூகிக்கலாமா?

புனைவாக ஒரு சினிமாவைக் கூறலாம். 6th day என்றொரு படம். அதில் கதாநாயகன், தன் வீட்டில் தன்னைப்போலவே ஒருவன் தன் மனைவியுடனும் குழந்தைகளுடனும் இருப்பதை கண்டு பின் தொடர்ந்து துப்பறிகிறான். கடைசியில் அவன் கண்டடைவது அவன், தன் வீட்டிலிருப்பவனின் clone என்பது தெரியவரும். மனித கட்டமைப்பு என்பது இயற்கையின் அதீத நிகழ்வு. தன்வயமான முற்றிலும் வரையறுக்க இயலாத தன்மையுடைய உயிர்த் தோற்றத்தின் உச்சபச்ச கற்பனா செயல்பாடு என்பது அதன் உள்ளுறைந்த தன்வயத்தின் ஒரு விஷயந்தான். எனவே எத்தகைய நெருக்கடி நிலையிலும் அது தன் சொந்தத் தன்மையை இழக்காது.

7. நீங்கள் மொழிபெயர்ப்பிலும் ஈடுபட்டு வருபவர். உங்கள் மொழிபெயர்ப்பு அனுபவம்?

நான் படித்தது தமிழ் வழியில்தான். நீர்முள்ளிக்குட்டை என்ற சிற்றூரில் நடுநிலைப் பள்ளியில் எனது தாயார் ஆசிரியையாக பணியாற்றிக் கொண்டிருந்தார். எனது கல்வியில் மிகுந்த அக்கறையும் கட்டற்ற சுதந்திரத்தையும் எனக்கு பரிசளித்தார். கிட்டத்தட்ட சி. மணியும் இதே மனநிலையில்தான் என்னை ஆற்றுப்படுத்தினார். திரைப்பட மேதை அந்தோனின் ஆர்தோவின் முக்கியமான நேர்காணலை தக்கை இதழுக்காக மொழியாக்கம் செய்தேன். அதை முடித்து அவரிடம் காட்டியபோது இன்னும் கொஞ்சம் வார்த்தைகளை ஒழுங்குபடுத்துங்கள் என்றார். முதலில் மொழியாக்கம் என்பதைப் பற்றி எனது கருத்தோட்டதை முற்றிலுமாகக் கலைத்துப் போட்டவர் சி. மணி. தாவோ தே ஜிங் மொழியாகத்தில் முழுமையாக நான் கூடவே இருந்தேன். ஒரு மொழியாக்கத்திற்கு ஐந்து ஆங்கில மொழியாக்கங்களை பயன்படுத்தினார். அதில் Gia- Fu Feng and Jane English பிரதியை பிரதானமான நூலாகவும் மற்ற நான்கையும் துணை நூற்களாகவும் பயன்படுத்தினார். அதேபோல பத்து திருத்த பிரதிகளை உருவாக்கினார். இதற்கு அவர் கொடுத்த உழைப்பென்பது யாரிடமும் காணக்கிடைக்காத முன்மாதிரி. ஒரு சொல்லுக்காக ஒரு வாரம்கூட அவர் காத்திருந்திருக்கிறார்.  இயல்பினில் மொழியாக்கம் என்பது அதிக பொறுமையும் ஒரு மொழிக்கான தார்மீகக் கடமையையும் தன்னையும் தன் எழுத்தையும் வெளியில் நிறுத்தி அந்நியமாக்கிப் பார்க்கும் திரானியும் கோரும் ஒரு உருமாற்றம்.

8. பொதுவாக தேவையற்ற பதங்கள் படைப்பை அதன் கூர்மைத் தன்மையிலிருந்து வெளியேற்றிவிடுகிறது. உங்களைப் பொறுத்த அளவில் படைப்பை எடிட் செய்வதன் அனுகூலம் குறித்து சொல்லுங்கள்?

என்றுமே எடிட்டிங் செய்வது ஒரு பிரதியை மேம்படுத்தும் என்றாலும் அதற்கான நோக்கு வேண்டும். எடுத்துக்காட்டாக எனது இருவர் மலையுச்சி கவிதையானது எந்த திருத்தமும் இல்லாமல் அப்படியே எழுத்தில் வந்தது. ஆனால் எல்லா படைப்பும் இப்படி அமையும் என்று சொல்லமுடியாது. அதேபோல ஒரு படைப்பை கூர்மைப்படுத்த கூர்மைப்படுத்த அது வாசகனை விட்டு விலகிவிடுகிறது. ஆனால் படைப்பிற்கான முதல் தன்மையே அதன் கச்சிதத் தன்மையில்தான் இருக்கிறது. படைப்பை கூர்மைப்படுத்த எடிட்டிங் என்கிற பிரதியாக்க மனநிலையை அடையும் தாராள மனம் வேண்டும். அல்லது அத்தகைய ஒரு நல்ல பிரதியாக்க ஆளுமையை நாட வேண்டும். இது நாள்பட நமக்கே கச்சிதத் தன்மையை நோக்கி நாம் செலுத்திவிடும் ஒரு அதிசயத்தையும் தரக்கூடும். தமிழில் Text Editor என்ற கருத்தாக்கமே இல்லை.

9. நீங்கள் எழுத நினைப்பதை எழுத்தில் கடத்தவியலாத போழ்து உங்களின் மனோநிலை தற்கொலைக்கு நிகரானதா? அல்லது மொழியைக் கழுவேற்றுவதா?

நூறு சதவீதம் நாம் எழுத நினைப்பதை எழுத்தில் கடத்த முடியாது. அது மொழி ஊடகத்துக்கும் நமது அனுபவ தரிசனத்துக்குமான நுண்மையின்மையினால் ஏற்படும் ஹீனம். எந்த மொழியும் அத்தகையத் தன்மையைச் சொல்லும் என்றும் கருத இடமில்லை. ஆனால் சபீர்- வொர்ஃப் தங்களின் கருதுகோளின்படி நம்மால் எதைச் சிந்திக்க முடியும் என்பதை நம் மொழியே தீர்மானிக்கிறது என்பதில் உறுதியாக இருந்தனர். ஒரு மொழி ஒரு விஷயத்தை மிக எளிதாக வெளிப்படுத்த மற்றொரு மொழி அதற்கு சிரமப்படுவதை தனி ஆளுமையின் குறையாகக் கருத இடமில்லை. ஆனால் அத்தகைய ஹீனத்தை சரி செய்ய நம்மிடம் போதிய முயற்சியும் காலமும் இல்லாமல் இருக்கிறது. சி.மணி தொழில் மயக்கம் கவிதையில் ஒலிப்பதிவு என்ற பதத்திற்காக பல வருடம் காத்திருந்திருக்கிறார். அந்த காலக்கட்டத்தில் அப்படி ஒரு சாதனம் கண்டுபிடிக்கவில்லை. அது பொதுமைப்படுத்தப்படவில்லை. இது மிக முக்கியமாக கலைச்சொற்கள் தேவைப்படும் அறிவியியல், கணிதம், பொருளாதாரம், கணக்கியியல், விண்வெளியியல் போன்ற நுட்பங்கள் தேவைப்படும் பிரிவுகளுக்குச் சாலப் பொருந்தும். இங்கே மொழியை செம்மையாக்கலின் திசை நோக்கி நகர்த்தும் தார்மீகக் கடமை ஒவ்வொரு படைப்பாளிக்கும் இருப்பதை கண்டு கொள்ள முடிகிறது.

10. கவித்துவம் என்பதை நீங்கள் எங்ஙனம் வரையறுப்பீர்கள்?

கவித்துவத்திற்கு வரையறை செய்ய முடியாது. அது படைப்பு, பேசும் பொருள், அதற்கான உத்தி, அது அப்படி படைப்பாக மாற்றம் கொள்ளதக்க கணம் எல்லாவற்றையும் கணக்கில் எடுத்துக் கொள்வதாக இருந்தாலும், ஒருவருடைய ஒரு கவிதைக்கும் மற்றொரு கவிதைக்குமான வரையறை மாறிக்கொண்டேதான் இருக்கும். வரையறையற்ற தன்மையே கவித்துவத்தின் உட்பொதிவாக இருக்கிறது. ஒவ்வொரு கவிதையும் தனக்கான கவித்துவதை தானே தீர்மானித்துக் கொள்கிறது. ஒன்று கவிதையில் கையாளப்படும் கூறுகள் அல்லது கவித்துவத்திற்கான கூறுகளாக நம்பப்படுபவை இணையும்போது அது கவித்துவமாக நம்பப்படுகிறது. இங்கே வரையறுக்க முடியாத ஒரு நோக்கமே அதன் வரையறையாக இருக்கிறது. குறைந்த பட்சம் உள்ளடக்கம் என்பதைவிட படைப்பில் காணப்படும் வெளிப்படையான உருவமே முக்கியமாகக் கவித்துவத்தை கோடிட்டுக் காட்டுகிறது. அப்படி இல்லாமல் உள்ளழகு என்றொரு தன்மையின் பூடகத்திலும் கவித்துவம் மிளிரக்கூடும். எதுவுமே தற்செயலானதே.


11. மர்மம், பூடகம், விடுகதைத் தன்மை இவற்றை எழுதும் ஆர்வமுள்ள உங்களுக்கு அலங்காரம், விளையாட்டு, அப்படியே விடுதல் போன்றவற்றில் பரிட்சார்த்தமாகவேணும் எழுத ஆர்வமில்லையா?

போதுமான அளவிற்கு எழுதப்பட்ட அல்லது எனக்கு அதன் அக தரிசனத்தைக் காட்டாத ஒன்றை எவ்வாறு நான் சோதனைக்காக வேணும் எழுதிப் பார்ப்பது? மர்மம், பூடகத்தன்மை, விடுகதைத் தன்மை போன்றவை தரும் மெய்யியியல் தன்மையை வேறு எதுவும் காட்ட முடியாது என்று நம்புகிறேன். தவிரவும் ஒரு விஷயத்தின் துல்லியத் தன்மையானது அது எந்த அளவிற்கு மற்றதிலிருந்து முற்றிலும் தன்னை வேறுபடுத்திக் கொள்கிறது என்பதையேக் காட்டுகிறது. அதில்லாமல் போலச் செய்து பார்த்தல் என்பது ஒரு மொழி விளையாட்டாகத்தான் இருக்க முடியுமோ அன்றி அது ஒரு தன்னியல்பான படைப்பாக இருக்காது.

12. அதிகமும் அறிவியல், நிரூபணம் கொண்டே பார்த்த உங்கள் பார்வையில் உங்களின் தாயாரின் இறப்பிற்குப் பின்பு, அறிந்தவற்றுக்கு அப்பாலுள்ள நம்பிக்கை சார்ந்த விடயங்களையும் நீங்கள் பேச தலைப்பட்டுள்ளீர்கள் என்கிறேன். சரிதானா?

முழுவதுமே அறிவியல் நிரூபணம் கொண்ட எனது சிந்தனை ஓட்டத்தில் எனது தாயாரின் மரணமும் மரணத்திற்கு முந்தய அவரின் செயல்களும் என்னை மிகப் பெரிய எல்லைகளுக்கு அப்பால் கொண்டு வீசியது. இயற்கை பற்றிய எனது புரிதலை விரிவுபடுத்தியது. நிரூபணங்கள் இல்லாத அறிவியலும் உண்டென்று கண்டு கொண்டேன். மரணம் ஒரு நிகழ்வு என்பதைத் தாண்டி அதன் மர்மம் என்னைத் திகைக்க வைத்தது. மரணம் எதிர் கொள்ளும் உயிரி இந்தப் பிரபஞ்சத்தின் புலப்படாத ரகசியத்தின் ரகசியமான ஒற்றைச் சொல் என்று கண்டு கொண்டேன். அந்த ஆன்மா அடையும் அனுபவ உண்மையானது இந்த பிரபஞ்சத்தின் விகாசமாக இருக்கிறது. அது அறிவு ரீதியிலான புரிதல்களுக்கு அப்பாற்பட்ட ஒரு பூடக நிலையாக உணர்ந்தேன். பொது விதி என்பது இந்த பிரபஞ்சத்தில் என்றுமே மாறாதது. ஆனால் அதனூடே பயணப்படும் ஒரு சிக்கலான நினைவோட்டத்தை ஏகமாக எல்லாவற்றிலும் ஊடாடி, காலம் என்பதை சுழி நிலைக்குக் கொண்டு வந்து அதன் மூலம் முக்காலத்தையும் அதாவது நாம் உணரும் இறந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் என்றில்லாமல் ஒட்டு மொத்த தரிசனமாக மாற்றும் இது ஒரு அதிசய நிகழ்வாக, இயற்கையின் வேறு பரிமாணங்களின் துருப்புச் சீட்டாகக் கண்டு கொண்டேன். இவை நம்பிக்கை சார்ந்த விஷயங்களுக்கும் அப்பால் உள்ள, அதாவது நம்பிக்கை என்பது ஒருவகையில் அதன் சாத்தியத்தின் உட்கிடையானதாகவே நினைக்கிறேன். அதுவும் ஒரு இருப்புதான். அது அதீதக் கற்பனைகளுக்கு, பயங்களுக்கு வெகு தொலைவில் இருக்கிறது. இதை எந்த மதமும் உள்ளபடியே வெளிப்படுத்தவில்லை என்றே நினைக்கிறேன். அவை இயல்பு வாழ்வின் ஸ்திரத் தன்மையையும் நிச்சயமின்மையின் பலத்திலும் மனிதனைப் பழக்கப்படவே எத்தனிக்கின்றன. நான் வெகு தொலைவு வந்துவிட்டேன். இதுவும் ஒரு நினைவு தப்பிய, சுழியாக்கப்பட்ட காலத்தின் ஒரு சொட்டாகவும் இருக்கலாம்.

13. உங்கள் இரண்டு தொகுப்புகளிலும் வண்ணங்களின் பங்களிப்பு முக்கிய இடம் வகிக்கிறது. பிரத்யேக காரணம் ஏதாவது?

வண்ணங்கள் என்பவை இந்த பிரபஞ்சத்தில் தற்காலிகமானவை. அவை ஒரு எல்லைக்கு உட்பட்டே தோன்றுகின்றன. மற்றபடி இருள் என்று சொல்லக்கூடிய ஒளியற்ற தன்மையே நிரந்தரமானது. ஒளியற்ற தன்மையிலிருந்து தோன்றி, மீண்டும் அந்தத் தன்மையை அடைவதையே இருப்பு கொண்டிருக்கிறது. இதில் வெளி என்பது ஒரு குறுக்குக் கோடு. அந்த கோடுதான் பிரபஞ்ச இருப்பாகிறது. ஆசீவகத்தில் ஒரு மனிதனின் படிநிலைகளை, அல்லது அவனடைந்த தத்துவ படிகளை அவனது உடையின் வண்ணத்தில் வெளிப்படுத்துகின்றனர். முதல் நிலையில் இருப்பவனுக்கு வழங்கப்படுவது கருப்பு உடை. இது இந்த பிரபஞ்சத்தின் இயல்புநிலை. அதாவது ஏதுமற்று இருப்பது. அவ்வாறு அவன் தன்னை உணரும் ஒவ்வொரு படிநிலையும் ஒவ்வொரு வண்ணமாக தோன்றுவது அறிதல் நிலையின் வண்ணச் சேர்க்கை ஒரு கட்டத்தில் வெள்ளொளியாக வீசித்தெறிப்பது அறிவு நிலையின் உச்சம். அது இயற்கைக்கு முற்றிலும் எதிரானதாக இருக்கிறது. ஆனால் இந்தப் பயணம்தான் அதாவது இன்மையிலிருந்து இருத்தலுக்கும், இருத்தலிலிருந்து இன்மைக்கும் செல்வது நீண்ட அலைவரிசையின் ஏற்ற இறக்க மடிப்புகளாக இருக்கிறன. அந்த அலை வரிசையின் பயணம்தான் என்ன? அதைக் கண்டடைவதே மீண்டும் அந்த இருள் நிலையை அடைவதுதானோ? இது வானவில்லின் ஏழு வண்ணங்களைப்போல் மிக வசீகரமானது. எனது ஆரம்ப பள்ளிக் கல்வியில் தமிழாசிரியர் மு.ப. மாரிமுத்து அவர்கள் அருட்பெரும் ஜோதி வழி நடப்பவர். தினமும் அந்தப் பாடலையும் வள்ளலாரின் ஒளி பொருந்திய உடல் பற்றிய கதைகளையும் சொல்லிக்கொண்டே இருப்பார். அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

14. முதல் தொகுப்பான வண்ணச்சிதைவு அதிகமும் பௌத்த கூறுகளுடன் அமைந்த விதம்?

மெய்மையை நாடும் ஒரு அறிவு தன்னிச்சையாக நாடுவது பெளத்தமாகத்தான் இருக்கும். பெளத்தம் மெய்யறிவை போற்றுகிறது. இது இந்த பிரபஞ்சத்தின் ஆகச் சிறந்த கற்பனா சக்தியை இறைவன் என்று ஏற்றுக் கொள்வதில்லை. அது ஒருவகையில் நாத்திக வாதமாக இருந்தாலும் அதுவே இயற்கையின் இயல்பு நிலையாக, மெய்ம்மையாக இருக்கிறது. இந்தப் புள்ளியே என்னை பெளத்தவாதியாக எனது படைப்பு வழியாகக் காட்டக்கூடும். மனிதன் அடையும் ஞானோதயம் அவனது வாழ்நாளில் ஒருமுறை நிகழ்ந்துவிடுகிறது. அந்த ஒற்றைப் பிம்பத்தை அவன் வாழ்நாள் முழுவதும் தன் வழியாக எல்லாவற்றிற்கும் பிரதியாக்குகிறான். அதன் வழியாகவே இந்தப் புற உலகத்தையும் அக உலகத்தையும் கற்பனை செய்து கொள்கிறான். ஓர் உயிரியின் உச்சபட்ச சாத்தியமே இதுதான். தவிரவும் எனது சிறார் பருவத்தில் அம்பேத்கரின் வாழ்வை தெரிந்து கொள்ளும் ஒரு வாய்ப்பு அமைந்தது. அவர் வழியாக நான் புத்தனை கண்டடைந்தேன். தன்னியல்பாக நிகழும் ஒரு சம்பவமாக இல்லாமல், இதில் ஏதோ ஒரு கண்ணி இருப்பதாக இப்போது தோன்றுகிறது. இயற்கையில் எல்லாவற்றிலும் ஒரு திட்டம் இருக்கிறது. இது மறுபிறவி சம்பவங்கள்போல காலம் ஒரு சுழியமாகி கருந்துளையில் இருக்கும் காலமற்ற ஒரு ஆதிநிலையில் நிற்கும் ஒரு எண்ணமாக மிதக்கிறது. உதாரணமாக ஸ்டீபன் ஹாக்கிங்கின் amyotrophic lateral sclerosis (ALS) என்ற நரம்பியல் நோயின் பின்னால் இருப்பது இவ்வாறான ஒரு பயன்பாட்டு நிலையா? அல்லது அது மெய்ம்மையின் ஒரு கொடூரத் தன்மையா? தன்னை வெளிப்படுத்திக் கொள்ள மறுக்கும் உள்ளியல்பா என்பதுபோல பல கேள்விகள்.

15. நீங்கள் பிறந்து வளர்ந்த கிராமம், தற்போது வசிக்கும் நகர நிலவெளிகளில் பௌத்தத்தின் தாக்கம் கிடைக்கப் பெற்றீர்களா?

நான் பிறந்த நீர்முள்ளிக்குட்டை கிராமத்தில் எனது சிறுவயதில் ஒரு முதியவர் அருகிருக்கும் கோதுமலையில் மாயவன் என்பவர் சித்தராக இருப்பதாகவும் அவர் வழியாக அவர் உடல் நீல நிறமாக மாறி ஐந்துபேர் தூக்கக்கூடிய மதுரை வீரன் கோவில் வேலைப் பிடுங்கிக் கொண்டு ஊரையே ஒரு சுற்று வருவார். பிறகு அவர் சொல்லும் வாக்கு அந்த ஊரின் நல்லதை நோக்கிய ஒரு பாடலாக இருக்கும். இந்த வகையாக நான் சிறு வயதிலிருந்தே இது போன்ற அதிசயங்களின் மெய்ம்மையை நோக்கி நகர ஏதோ ஒன்று உந்துதலாக இருந்தது. பிறகு சேலம் வந்தவுடன் சி. மணியுடனான நட்பில் பெளத்த புரிதலுக்கு வந்தேன். உள்ளூற இயங்கிய எனது கண்டடைதலின் இறுதி நிலை என்பதே பெளத்தமாக இருக்கலாம்.

16. நண்பர் வே. பாபுவுடனான உங்கள் நட்பை 'காகங்களின் புணர்ச்சி போல' என கூறி பெருமிதம் அடைந்த உங்களுக்கு பாபுவின் மரணமும் அதையொட்டி நடந்த கொதிநிலையும் என்ன மாதிரியான பாதிப்பை உண்டு

பாபுவை முதலில் கார்த்திகேயனுடன்தான் பார்த்தேன். அப்போது நாங்கள் இருவரும் வேட்கை சிற்றிதழின் ஆசிரியர் குழுவில் இருந்தோம். எனக்கும் பாபுக்குமான தனி நட்பு மெல்ல வளர்ந்தது. அது தக்கை சிற்றிதழ் வரை வந்தது. பாபுவின் தக்கையிலான மனது கவிதையிலிருந்துதான் சி. மணி மூலமாக தக்கை என்ற பெயர் உருவானது. தக்கை வடிவமைப்பிலும் அதன் படைப்புகள் விஷயத்திலும் நான் சுதந்திரமாகச் செயல்பட்டேன். எங்கள் சிற்றிதழில் நாங்கள் எழுதிக்கொள்வதில்லை என்ற உறுதிப்பாட்டையும் மீறி, உள்ளடக்கம் கருதி சினிமா பற்றிய ஒரு நேர்காணலை நான் புனைபெயரில் மொழிபெயர்த்து வெளியிட்டேன். சி. மணி நீண்ட நாட்களுக்குப் பிறகு தான் எழுதிய கவிதைகளையும் மொழிபெயர்த்த ஹைகூ கவிதைகளையும் வெளியிட என்னிடம் தந்தார். பிரபஞ்சன் தக்கைக்கான மக்கள் தொலைக்காட்சி அறிமுகத்தில் சி. மணி படைப்புகள் அதில் வந்திருப்பதைக் குறிப்பிட்டே அறிமுகப்படுத்தினார். ஆசிரியர் பெயர்களை ஏறெடுக்கவும் இல்லை. கண்டு கொள்ளவுமில்லை. இதில் எனக்கு மிகுந்த சந்தோஷம் ஏற்பட்டது. சி. மணியை மீண்டும் ஒரு சிறுபத்திரிக்கை வழியாக தரிசிக்கச் செய்துவிட்டோம் என்ற பெருமிதம் பொங்கியது. பின்னால் தக்கை பதிப்பகமும் உருவானது. பிரகாசமான இந்த நடப்புத் தொடர் சட்டென முடிந்துபோனது. பாபு நிரந்தரமாக தனது செல்போனை அணைத்து வைத்துவிட்டான். தக்கை நான்காவது இதழ் வந்ததை நண்பர்கள் சொல்லி கேள்விப்பட்டேன். ஆசிரியர் பெயரில் எனது பெயர் இருந்தது. நேரில் சந்திக்கும்போது ஏன் பாபு என்றேன். வீட்டிற்கு வருகிறேன் பேசிக்கொள்ளலாம் என்றான். வரவே இல்லை. பாபுவைப் பற்றிய பொதுக் கருத்தே அவனுக்கான எனது கருத்தும். இயற்கையிடம் ஏமந்துபோன ஒரு நண்பனை மிக ஏக்கத்துடன் அன்று பார்த்தேன். எல்லா ஆன்மாவும் ஒன்றல்ல. இயற்கையின் நுண்மையை தன்மேல் பிரதிபலிக்கச் செய்வது அவ்வளவு எளிதும் அல்ல.

17. எழுதிய கவிதைகளுக்கும் எழுதப் போகும் கவிதைகளுக்கும் நடுவில் நீங்கள் யார்?

படைப்பாளி தன் மீது திணிக்கப்பட்ட ஒரு மனநிறைவை அல்லது அப்படிப்பட்ட சீர்கேட்டினுள் தான் சிக்கிக் கொள்ளாமலிருக்க தப்பித்துக் கொள்ளும் யாரோ ஒருவனாக இருக்கிறான். எல்லாக் கவிதைகளும் வேறு ஒரு கவிதையின் மாறிய வடிவமாகத்தான் இருக்க முடியும். குறிப்பாக எதிர்நிலையாக அல்லது நேர்நிலையாக. ஒரு வைரஸ்ஸைப்போல தனது கட்டமைப்பை மாற்றிக் கொண்டே இருக்கும் தன்மையினால் அது எப்போதும் எதிர்பொருட்களை தவிர்க்கப் பார்ப்பது அதன் உயிர்த்தன்மையின் நிலைப்பை தக்க வைத்திருப்பதற்கு ஒப்பாகும் இது.

18. மனித, இயற்கை இயல்புகளின் கனபரிமாணம் உங்கள் வரிகளில் புதிய நோக்கில் அணுகப்படுகிறது. இதில் அரசியலும் பேசப்படுகிறது. எனில் உங்கள் லட்சியம்தான் என்ன?

லட்சிய வாதம் என்ற ஒன்று எப்போதும் இல்லை. ஆழ்மனம், அமுக்கப்பட்ட உள்ளுணர்வு, பதிலீடு செய்யப்பட்ட உணர்வுகள் என தத்துவார்த்த ரீதியில் மனம் செயல்படும் உள் செயல்பாடுகளின் அபூர்வ ஒருங்கமைவாகவே இவற்றைப் புரிந்து கொள்கிறேன். மனிதன் இயற்கையின் ஓர் அதீதக் கற்பனை. படைப்பின் உச்சம் தொடும் சகலமும் தன்னுள் அந்த கனபரிமாண வெளிப்பாட்டையும் தானே அடைந்து கொள்ளும் ஒரு திறனாகவே இதைப் பார்க்கிறேன். இரகசியங்களை மொழியினூடாக மர்மங்களாக வெளிக்காட்டிக் கொள்ள இயற்கையின் தேர்வே நான்.

19. கருந்துளையை அதிகம் உங்கள் கவிதைகளில் எழுதி உள்ளீர்கள். கருந்துளை உங்களுக்கு  அவ்வளவு முக்கியமானதா?

மர்மங்களின்பால் எனக்குள்ள ஈர்ப்பே கருந்துளையையும் பெருவெடிப்பையும் முக்கியமானதாக கருதுகிறேன். பெருவெடிப்பின் கணமும் கருந்துளையின் உள் நசுக்கமும் காலம், வெளி இரண்டையும் இல்லாமலாக்குகிறது. அல்லது இருப்புக்குள் சாத்தியப்படுத்துகிறது. இரண்டுமே இருத்தல் இன்மையைப் பேசுகின்றன. இங்கேதான் பெளத்தம் நுணுக்கம் மிக்க, சிக்கலான உளவியல், தியான உத்திகள், being & knowing மூலம் அதி இயற்பியல் மேலும் போற்றத்தக்க அறவியல் நெறியையும் வெளிக்காட்டுகிறது. இது இந்த பிரபஞ்சம் எவ்வாறு தன்னியல்பை கொண்டியங்குகிறதோ அதேபோல இந்த இயற்கையின் அதி அற்புத கற்பனையான மனிதனே இதை புரிந்து கொள்ளவும் தன்வசப்படுத்தவும் தக்கவனாக இருப்பதே, சி. மணி போன்ற அதிமனிதர்களை சாத்தியப்படுத்துவதாலேதான்.

20. வேறு எந்தக் காலத்திலும் இல்லாமல் இந்தக் காலத்தில் யாரும் யாரையும் நேசிக்க, நேசிக்கப்பட கட்டாயம் இல்லை என்றான சூழ்நிலையில் கவிதையற்ற கவிதையைத் தானே எழுதுகிறோம்?

தொலைந்துபோன ஒரு மனித முழுமையை நினைக்கும் நினைவேக்கமே இது. எஞ்சியிருக்கும் ஒரு தங்கலால் யோசிக்கும் சிக்கலான கேள்வி இது. கவிதை எதையும் தொடர்ந்து வற்புறுத்துவதில்லை. அதேபோல கவிதைக்கு எந்த அறமும் இல்லை. அது மனிதனைச் சார்ந்தது. கவிதையற்ற கவிதை என்பதே இங்கு கவிதையாக இருக்கிறது. 19 ம் நூற்றாண்டு வரை புத்தரின் தன்மையில் அதாவது ஏசுவுக்கு முன்னமே இத்தகைய அதி நவீன சிந்தனையை, ஞானோதயத்தை அடைந்த புத்தர் சராசரி மனிதனாகத்தான் மாண்டுபோனார். ஆனால் அவர் மானுடத்தைத் தனது சொந்த வாழ்க்கையால் மறுபரிசீலனை செய்கிறார். போதனைகளை தனது சொந்த வாழ்விலிருந்தே தொடங்குகிறார். அவரது வீடுபேறு அடைதல் அவரது காலத்திற்கு மட்டுமல்லாமல் இந்த சிதைவுற்ற நியூக்கிளியர் மனிதன்வரை சகலருக்குமானதாகவே இருக்கிறது. தனிமனித விடுபடலையே அவர் முன்னிருத்துகிறார். தன்னுடைய வீடுபேற்றையும் தன்னை முன்னிருத்தி தனக்கான விடுதலையையே பொதுமைப்படுத்துகிறார். இவ்வுலகம் உய்ய அவர் அடுத்தடுத்த பிறவி எடுத்து புத்தராகவே இம்மானுடம் பயனுற அவதரிக்காமல் தன்னை விடுவித்துக் கொள்வதிலேயே அதன் முக்கியத்தை வலியுறுத்துகிறார். இது ஒரு விதத்தில் பிறப்பின் இரகசியம் என்பது மனித புரிதல் எல்லைகளுக்கு அப்பாற்பட்டதாக அவர் உணர்ந்துவிட்டதையே காட்டுகிறது. அறம் என்ற ஒன்று தன் உட்பொருளை மாற்றிக் கொண்டே இருக்கிறது. காலந்தோரும் மாறும் அதன் கருத்தாக்கம் ஒரு நினைவேக்கமாக இருப்பதைத் தவிர்க்கவே புத்தர் வீடுபேறடைந்தார் என்றும் கருதியும் கொள்ளலாம்.


21. சினிமா கட்டுரைகள் எழுதுவதன் ஆர்வத்தை எப்படி அடைந்தீர்கள்?

காட்சி ஊடகமான சினிமாவானது பிம்பங்களின் கட்டமைப்பின் உருவான நமது ஆழ்மன எண்ண ஓட்டத்தை எளிதில் பாதிக்கக் கூடியது. இடையீடு இல்லாத நம் நனவிலி மனத்துள் நேரடியாகச் செலுத்தப்படும் இத்தகைய காட்சிகளின் தொடர் அழுத்தமானது இடையீடு அற்ற நேரடி தொடர்பின் மிக வலுவான பாதிப்பை நம்முள் ஏற்படுத்தும் பயனை நாம் அடைவதே இல்லை. தார்க்கோஸ்கி, அகிரோகுரோசாவோ, அந்தோனின் ஆர்த்தோ போன்றவர்கள் தங்கள் படைப்புகளை இத்தகைய இடையீடற்ற தன்மைகளை மிக நேர்த்தியாகப் பயன்படுத்திக் கொண்டனர். அத்தகைய தன்மையை நம் சினிமா அடைய வேண்டும். வெறும் கதை சொல்லல் முறையை வைத்து மட்டும் எத்தகைய சாதனையையும் செய்துவிட முடியாது என்பதால் அத்தகையப் படைப்புகள் பற்றிய கட்டுரைகளை எழுதவும் மொழிபெயர்க்கவும் செய்தேன்.

22. உங்களுக்கு பழந்தமிழ் இலக்கியப் பரிச்சயம் உண்டா?

நேரடியான பரிச்சயம் எனக்கு இல்லை. ஆனால் சி. மணி தனக்குப் பிடித்த பழந்தமிழ் கவிதைகளைத் தொகுத்து குறிப்புகளுடன் எனக்குத் தந்தார். அதுவும் அடிக்கடி அவற்றைப் பற்றி உரையாடவும் செய்தார். அது ஓர் அலாதியான அனுபவம். நேரம் கிடைக்கும்போது ஒரு வேலையாக அதை எடுத்துப் படிக்கவேண்டும் எனது நெடுநாள் அவா.

∅∅∅∅∅∅∅∅∅∅∅∅∅∅∅∅∅∅∅∅∅

(கவிஞர் ஸ்ரீசங்கருக்கும், அகச்சேரனுக்கும் நன்றி.)

∅∅∅∅∅∅∅∅∅∅∅∅∅∅∅∅∅∅∅∅∅

Saturday, April 16, 2022

மேஸ்ட்ரோவின் இசை...

 


             சையைத் தவிர இளையராஜாவிற்கு எதுவும் தெரியாது என்பது இளையராஜாவைப் பற்றிய குறைந்த மதிப்பீடு. இளையராஜா, மிக நுட்பமானவர். பின்னணி இசையில் இந்திய அளவில்கூட அவரளவிற்கு உணர்வெழுச்சியையும், இசைக் கருவிகளின் புனைவுச்ச நெடுமையிலிருந்து உருக்கொள்ளும் கற்பனையையும் சாஸ்திரிய உள்ளடக்கத்துடன் கிராமிய சந்தங்களையும் ஒன்றிணைத்து அதிசயங்களை நிகழ்த்துபவர்கள் யாருமில்லை.

               அவர் இசையமைக்கும் பாடல்களுக்கான காட்சியமைப்பு தவிர்த்து, ஒட்டு மொத்த படத்தின் ஒவ்வொரு காட்சி நிலைமைக்கும் அதிகபட்ச சாத்திய பின்னணி இசையை, அந்தக் காட்சி கொடுக்க வேண்டிய உணர்வொழுங்கை, ஸ்வர கட்டமைப்பை, மிக அநாயசமாக, துரித கதியில்  இசைக் குறிப்புகளாக எழுதும் இசையமைப்பாளர் இளையராஜாவைத் தவிர வேறு யாருமில்லை என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்கப்போவதில்லை.

                அவர், தமிழில் வந்த மிக முக்கியமான, தமிழ் திரைப்பட வரலாற்றின் மைல் கற்கள் என்று சொல்லக்கூடிய பெரும்பான்மையான படங்களுக்கு இசையமைத்தவர். அத்தகைய படங்களில் குடும்பம், அரசியல், பொருளாதாரம், கம்யூனிஸம், மனப்பிறழ்வு, காதல், மசாலா என சகல கதைக் களன்களையும்,  கதை மாந்தர்களையும், அவர்களின் உணர்வு நிலைகளையும், உணர்ச்சி பதற்றங்களையும் தன்னுள் உள் வாங்கி அதற்கான, அத்தகைய காட்சிகளுக்கான இசைக் கோவைகளை மிகக் பொருத்தமாக உருவாக்கியவர்.

                 திரைப்படம் என்பது மக்கள் சமூகத்திலிருந்துதான் உருவாகின்றது. எனவே ஒரு எழுத்தாளனுக்கு இணையாக, ஒரு இயக்குநருக்கு தோன்றும் காட்சிப் புலத்திற்கான உணர்வொழுங்கை, அந்தக் காட்சியமைப்பிலிருந்து இசை வடிவத்திற்கு மடைமாற்றுவதென்பது எளிதானதில்லை. கூடவே இவை எதுவும் தெரியாமல், ஒரு சமூகத்தில் மனித வினையாற்றலை மிக எளிய, ஆனால் அழுத்தமான இசை வடிவமாக மாற்றுபவர் ஒரு துறையில் சிறந்தவர், மற்ற ஏதும் அறியாதவர் என்பதற்கு உதாரணமாக்க முடியாது.

                    இளையராஜாவிற்கு எது சரி, எது தவறு என்று நன்றாகவே தெரியும். அதாவது தனக்கு எது சரி, எது தவறு என்று நன்றாகவே தெரியும். எனவே அவர் மோடியை ஏன் அம்பேத்கருடன் ஒப்பிடுகிறார்? பா.ஜ.க ஆட்சியை நல்லாட்சி என்று ஏன் முன்னுரை வழங்குகிறார் என்றால், அவருக்கு இதுப் பிடித்திருக்கிறது. அதனால் அம்பேத்கரைப் பற்றிய பிம்பங்களின் இத்தனை நாள் நிலைப்பாடுகளை இத்தனை வருடங்களுக்குப் பிறகு மறுவுருவாக்கம் செய்கிறார். அம்பேத்கரையே இந்த ஆட்சி நல்லாட்சிதான் என்று சான்றளிக்க வற்புறுத்துகிறார். அல்லது அப்படி ஒன்றை அனுமதிக்கிறார். "தான்" என்ற அகங்காரத்தை ஒழித்தவரே ஞானி. ஆனால் ஒரு படைப்பாளி "நான்" மூலமே உருவாகிறான். ஆனால் இரண்டும் சாத்தியப்படும் இடம் ஒரு போலிதான். அது எதேச்சையாக ஒளி வீசுகிறது. அல்லது அதை மாபெரும் கருணை என்று நாம் நம்பிக் கொண்டிருக்கிறோம். அரசியல் நிலைப்பாடுகளில் தான் மாட்டிக் கொண்டேன் என்று வருத்தம் அடைவதில்லை. தன் இசையை இத்தனை நாட்களாக அதை நோக்கியே முன்னெடுத்தார் என்பது வரம்பற்ற செயல்பாடுகளால் நிரூபிக்கிறார்.  இதை நாம் மறுத்தால் அவரது இசையை முற்றாக மறுத்தாக வேண்டும். ஆனால் நமக்கு வேறு நாதியில்லை. வாய்த்ததே நல்வாய்ப்பாக வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். இது தமிழ்நாட்டின் நிலை மட்டுமல்ல. இது இந்தியாவின் நிலை மட்டுமில்லை. இது உலகம் முழுக்க நிலவும் சனாதன நிலை.

           நீதி தேவதையின் தர்க்கம் பாரபட்சமற்றது. அதுவே சாக்ரட்டீஸை விஷம் நிரம்பிய கோப்பையை காற்றில் ஏந்தி சமத்துவம் காண முடிந்தது. தான் பெரிய சிந்தனையாளன் என்பதால் நீதியின்பால் விதிவிலக்கை அவர் அனுமதிக்கவில்லை. சட்டம் எல்லோருக்கும் சமம் என்பது மக்களாலேயே வலுவான உரையாடல்களின் மூலம் மறுதலிக்கப்படுகிறது. இங்கே, அம்பேத்கர் எவ்வாறு ஓர் இனக்குழுவின் விடுதலைக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் போராடினாரோ அதையே ஒரு பேரினத்தின் விடுதலை போன்ற பாசிசத்திற்கு ஒப்பு வைக்கப்படுகிறது. எல்லோரும் சந்தர்ப்பவாதிகளாக மாற்றமடைந்துவிட்டதை நம்ப மறுக்கிறார்கள். ஒரு பெண் குழந்தையை வளர்த்தெடுக்கும் உரிமை தனக்கு இருப்பதாலேயே அக்குழந்தையின் பால் பாலியல் செயல்பாடு உரிமையுடையது என ஒரு தகப்பனின் நம்பிக்கைக்கு ஒப்பான கொடுமை இது.

                  எனவே, இனிமேல் அறிவு தளம் என்ற "ஒன்றை" நிலைத்த ஒரு வரையறைக்குள்ளே வைத்திருப்பது மொழியின் பெலஹீனம். அல்லது சமூகத்தின் பெலஹீனம். அல்லது கருத்தியல் பெலஹீனம். இது புதிய மனோபாவம். புதிய மனப் பழக்கங்களைக் தேர்ந்து கொண்டவர்கள் சுய சாதிப் பிரச்சனைகளுக்கு அந்த நிலைக்காகப் போராடியவரையே விட்டுக் கொடுக்கும் கருத்துவரைக் கொண்டு செல்வது, அல்லது அதற்கான காரணங்களைக் கொண்டிருப்பது வியப்பானதில்லை என்ற அறமற்ற நிலைக்கு வந்துவிட வேண்டும். தர்க்கம் கருத்தைக் கடந்ததாக இருக்கிறது. அது ஒரு கொலையாளியின் கையை மட்டுமே தண்டிக்க வகை செய்கிறது.

           ஊறுகாய் வேண்டுமா, சோறு வேண்டுமா என்பதற்கு நாம் முதலாவதையே தேர்ந்தெடுக்க வேண்டும்.

            நொடிக்கு ஆயிரம் வாகனங்கள் கடக்க, விபத்து நடந்த அந்த ஒரு வாகனத்தைப் பற்றியே கவனம் திரும்புவதே ஆரோக்கியமான மனநிலை. மீந்த தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்பது வாகனங்களை கவனம் கொள்ளாதது இயல்பு. ஆனால் அந்த ஒரு வாகனத்தை பொருட்படுத்தாமல் கடப்பது மானுட வர்க்கத்திற்கே துரோகிப்பது போல. ஆனால் கருத்தை முதன்மைப்படுத்தாமல் கருதுகிறவர்களை பொருத்திப் பார்ப்பதை தர்க்கம் எளிதாக்குகிறது. இனி தங்க ஊசிகளைக் கண்களில் குத்திக் கொண்டு அம்மனுக்கு குலவை சொல்ல வேண்டியதுதான் மிச்சம்.


Friday, April 15, 2022

மரபுசாராப் போர்முறையும், உளவியற் போர்முறையும்

இன்று அம்பேத்கர் ஜெயந்தி. 
(14-02-2022)

பா. ஜ.க வினர் தென் அழகாபுரம் பகுதி காவாத்துத் திடலில் அம்பேத்கரின் பேனருக்கு மாலையிட்டு மரியாதை செய்து கொண்டிருந்தனர். எனக்குக் கொஞ்சம் புரியாமல் இருந்தது. அம்பேத்கருக்கும் பா.ஜ.க விற்கும் என்ன சம்பந்தம் என்று புரியவில்லை. 

ஏனென்றால் சேலம் தென் அழகாபுரம் என்பது தலித்துகள் பகுதி. அதை ஒட்டித்தான் காவல்துறையின் காவாத்துத் திடல் இருக்கும். வலைக்கட்டி எப்போதும் குழுக்களாக விளையாடிக் கொண்டு இருப்பார்கள்.வாரத்திற்கு ஒன்றோ இரண்டோ இரங்கல் பேனர்கள் தொங்கும். 

தீண்டாமை மிக்க இந்து மதமே வேண்டாம் என்று பெளத்தத்திற்கு மாறிய, நூறாண்டுகள் ஆன அம்பேத்கரை மீண்டும் இந்துத்துவா சக்திகள் தங்களில் ஒருவராக அவரைக் காட்டிக் கொள்வதில்தான் பா.ஜ.க வின் அரசியல் வியூகத்தின் நுட்பம் அடங்கியிருக்கிறது. 

அரசியல் தலைவர்கள் தவிர்த்து பெரிதாக தலித்துகள் இல்லாத எந்த இனக் குழுவும் அம்பேத்கரின் பிறந்த நாளை பொது வெளியில் கொண்டாடுவதில்லை. இந்த விஷயம்தான் பா.ஜ.க வின் ஆயுதமாக மாறுகிறது. அவர்கள் பல்வேறுபட்ட தங்கள் எல்லைக்கு அப்பால் இருக்கும், அதாவது இஸ்லாமிய, கிருத்துவ விஷயங்களைத் தவிர்த்து, ஏன் வருங்காலங்களில் அதையும் தங்கள் இனமாகக் காட்டுவதன் மூலமாக பொது புத்தியின் நுண்மையை மழுங்கடிப்பார்கள். இதுவே அவர்களின் அரசியல் பலம். இது மற்ற கட்சிகள் செய்யாத எல்லை. 

இந்த செயல்பாட்டை, காங்கிரஸோ, திமுகவோ கையிலெடுத்திருக்க வேண்டும், தமிழ் நாட்டைப் பொறுத்து.
இதுபோன்ற விஷயங்களில் தவறவிடும் அரசியல் கட்சிகள், காங்கிரஸைப்போல பொது கவனத்திலிருந்து துடைத்தெடுக்கப்படும். 

பதிவிட்டிருக்கும் படத்தில் பா.ஜ.வின் பேனருக்குப் பின்னால் அந்தப் பகுதி தலித்துகளின் சிறிய அளவிலான பேனர் மையப் பார்வையிலிருந்து மறைக்கப்பட்டிருப்பது மிகப் பெரிய ஆபத்து. பூர்வர்களையும் அதாவது உரிமை கோருபவர்களையும் இனி இல்லாமல் செய்துவிடக்கூடிய ஓர் உத்திதான் இந்த பிறந்த நாள் கொண்டாட்ட நாடகம். 

இதன் உப விளைவாக எங்களின் தலைவன் என்ற போர்வையில் அரசியலமைப்புச் சட்டத்தை முற்றிலும் மாற்றியமைக்க, அல்லது பெரும்பான்மை அடைந்துவிட்டு, அதன் பிறகு தேர்தலையே புறக்கணிக்கக் கூடிய ஒரு நிலைமையும் வரக்கூடும். 

எந்த நிலை நாட்டிற்கு வரக் கூடாது என்று போராடினார்களே, அவர்கள் உயிரோடிருந்தால் காந்தியைப் போல இல்லாமல் செய்தும், அவர்கள் இல்லாமல் இருந்தால், அவர்களை தம்முடையவர்களாக மாற்றும் இந்த வஞ்சக நாடகம் தொடர்ந்து வெற்றியடைந்து கொண்டே வருகிறது. மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான ஓர் அரசியல் கட்டம் இது. 

ஜெய் பீம்.

Wednesday, April 13, 2022

ழ ....

 


            டிப்படை கருத்தாக்கங்களின் அடியாழங்களில் நிகழும் மீயழுத்த வெடிப்புகள் காலத்தின் அடுத்த தலைமுறைக்கான, புதிய வெளிகளுக்கான உந்து சக்தியாக இருக்கிறது என்பதைவிட,  அது இயற்கையின் ஒரு கால இடைவெளியின் சடுதி மாற்றமாக இருந்துவிடுவதையும், அதற்கான திட்டங்களையும் யாரும் கணித்துவிடுவது எளிதல்ல.


     எனக்கு இளையராஜாவின் இசை எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் ஏ. ஆர். ரஹ்மானின் இசையும்.
ஏ. ஆர். ரஹ்மான் இளையராஜாவிற்கு அடுத்ததாக தமிழ் திரை இசையில் ஒரு Trend Setter என்பதில் எந்த எதிர் கருத்தும் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் இளையராஜாவின் கற்பனை வறண்டபோது அல்லது ஒரு படைப்பாளியின் தரிசன எல்லை ஒரு கால வரையறைக்குள் அடங்குவதுதான அவகாசம் முடியும்போது அடுத்த இசை தரிசன சாத்தியம் ஒன்று உருவாகிறது. அதுதான் ஏ. ஆர். ரஹ்மானின் இசை. இங்கே இவரைப் பொருத்தவரை, இசை மட்டுமல்லாமல், அது அவரது தனிப்பட்ட ஆளுமையையும் சார்ந்ததாக மாறுகிறது. எப்படி என்றால் இளையராஜா இசையில் தனது சாதனை உச்சத்தை அடைந்தார் என்றால், ஏ. ஆர். ரஹ்மான் அதைத் தாண்டி தன்னை நிறுவிக் கொள்வதற்கான தேர்ந்த வழிகளை கையாண்டார் என்பதை கூர்ந்து பார்த்தால் புரிந்து கொள்ளலாம். வழக்கமாக ஏ. ஆர். ரஹ்மான் தனது அபூர்வமான நேர்காணல்களில் ஆங்கிலத்தில்தான் பேசுவார். தமிழுக்குப் பிறகு அவரது இலக்கு ஹிந்தி. ஆனால் ஹிந்தி என்பது அவருக்கு ஒரு இடைவெட்டுத்தான். அது அவர் ஹாலிவுட்டிற்கு நுழைவதற்கான ஒரு படி.
கிட்டத்தட்ட "கருத்தம்மா"விற்கு கிராமத்துக்கான இசையே அவரது எதிர்காலமும் இளையராஜாவிற்கான அசலான ஒரு மாற்றும் என்ற கருத்து அப்போது நிலவியது. ஆனால் எதிர்ப்பார்ப்பை ஏ. ஆர். ரஹ்மான் சமாளித்துவிட்டார் என்றே சொல்ல வேண்டும். ஆனால் இந்த இசை எந்த அளவிற்குத் தாக்குப் பிடிக்கும் என்று யோசிக்கும்போதே, ஹிந்தியில் ஹிட்களைக் கொடுக்க ஆரம்பித்தார். அவரது "வந்தே மாதரம்" ஆல்பம் மிக பெரிய எழுச்சியை அடைந்தது. ஆனால் அதற்குப் பின்னால் இருந்த ட்ரம்ஸ் மணி, ரஞ்சித் பரோட் போன்றவர்களின் மாபெரும் உழைப்பு என்பதை இளையராஜா போல ஏ. ஆர். ரஹ்மான் மறைக்கவில்லை. குறிப்பாக "வந்தே மாதரம்" இரண்டாவது ஆல்பம் "ரஞ்சித் பரோடின்" இசையமைப்பில் மிகச் சிறப்பாக வந்திருந்தது. ஏ. ஆர். ரஹ்மானின் "வந்தே மாதரம்" அவரது ஒரு சில திரைப் பாடல்களின் சாயலில் அமைந்ததுதான். இவ்வளவு ஏன்? "ஜெய்ஹோ"வே மற்றொரு அவரது பாடலின் தன்னகல்தான். அப்போதே அவருக்கு வறட்சி வர ஆரம்பித்துவிட்டது. ஆனால் "ரஞ்சித் பரோட்டின்" பாடல்கள் வேறு தரத்தில் பாரம்பரிய இசையின் Fusionனில் கலக்கியிருந்தார். அதை சி. மணிக்குப் போட்டுக் காட்டியபோது சாஸ்திரிய இசையின் கட்டட்ற தன்மையை நினைவு படுத்தினார். ஆனால் எனக்கு Fusion இசைதான் ஆகச் சிறந்த சாதனையாகப்பட்டது. நிறைய படங்களுக்கு ஏ. ஆர். ரஹ்மானின் இசைப் பணியை ரஞ்சித் பரோட்தான் பார்த்திருக்கிறார்.

    ஏ. ஆர். ரஹ்மானின் அடுத்த இலக்கான ஹாலிவுட் கனவு என்பது வெறும் இசையமைப்பு என்பதைத் தாண்டி, விருதுகளின் பக்கமே சாய்ந்தது. ஒரு திரைப்படம் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட வேண்டுமானால், அது குறைந்தது 40 நிமிடங்கள் ஓடக்கூடியதாக இருக்க வேண்டும். ஆஸ்கர் விருது வழங்கப்படும் ஆண்டுக்கு முந்தைய ஆண்டில் வெளியானதாக இருக்க வேண்டும். லாஸ் ஏஞ்சல்ஸ் மாவட்டத்தில் உள்ள ஏதாவது ஒரு திரையரங்கில் கட்டணம் செலுத்திப் பார்க்கும் வகையில் 7 நாள்களுக்கு ஓடியிருக்க வேண்டும். வெளிநாட்டு மொழித் திரைப்படம் உள்ளிட்ட சில பிரிவுகளுக்கு மட்டும் இதில் விதிவிலக்கு உண்டு. ஆவணப் படம் என்றால், லாஸ் ஏஞ்சல்ஸ் மட்டுமல்லாமல் நியூயார்க்கிலும் ஓடியிருக்க வேண்டும் என்ற கூடுதல் விதி இருக்கிறது. வெளிநாட்டு மொழித் திரைப்படத்துக்கான பிரிவில் ஒவ்வொரு நாடும் ஒரேயொரு படத்தை மட்டும் பரிந்துரை செய்ய முடியும். இந்த விருதை சிறப்பு நிபுணர்கள் குழுவினர் அறிவிக்கிறார்கள். எனவே ஆஸ்காருக்காக ஹாலிவுட் பட வாய்ப்புக்கு வழி வகுத்துக் கொண்டார். இரண்டு ஆஸ்கர் விருதுகளைத் தட்டிக் கொண்டு வந்தார். இந்தியாவே வியந்தது. இதில் பன்னாட்டு நிறுவனங்களின் சதி இருப்பது மறை பொருள். 1994 லில் "ஐஸ்வர்யா ராயி"க்கு உலக அழகிப் பட்டம் வழங்கப்பட்டது, வெறுமனே ஒரு போட்டி நிகழ்வு இல்லை அது. அதற்கு பிறகுதான் இந்தியாவில் அழகுக் கலை குறித்த பெண்களின் அக்கரையும் வீதிக்கு வீதி அழகு நிலையங்களும் அழகு சாதன பொருட்களின் சந்தையும் சூடுபிடிக்கத் துவங்கியது எனலாம். அதே போலத்தான் ஏ. ஆர். ரஹ்மானுக்கான ஆஸ்கர் விருதும். இதை 2011ல் ஹிந்தி இசையமைப்பாளர் இஸ்மாயில் டார்பர், இது "வாங்கப்பட்ட" விருது, ஏ. ஆர். ரஹ்மானின் "ரோஜா"வுக்கோ, "பம்பாயி"க்கோக் கிடைத்திருந்தால் சந்தேகிக்கத் தேவையில்லை. இது ஆஸ்கருக்கான தகுதி இசையே இல்லை என்றார். ஆனால் "வாங்கப்பட்டது" என்பதற்கான விளக்கமளிக்க மறுத்துவிட்டார். இதன் உள் நிகழ்வு என்ன என்று கணிப்பது உலகலாவிய ஒரு சந்தைப் பொருளாதாரத்தின் திட்டம்தான்.

      இது இப்படியிருக்க, ஆஸ்கார் விழா மேடையில் எல்லோரும் போற்றும் வகையில் "எல்லாப் புகழும் இறைவனுக்கே" என்ற வசனத்தோடு நிறுத்திக் கொண்டார். நாமும் ஆஸ்கார் மேடையில் தமிழ் என்று மயிர்க்கூச்செரிந்தோம். அது உலகமே ஒற்றைக் கண் கொண்டு பார்த்த ஒரு நிகழ்வு. அங்கே அவர் இப்போது பேசுவதுபோல தமிழுக்காக, தமிழில் இல்லை, தமிழுக்காக ஆங்கிலத்தில் ஒரு சில வரிகளைப் பேசியிருக்கலாம். அதாவது 45 நொடிகள். அது இலங்கைத் தமிழர்களுக்கான ஓரிரு வார்த்தைகள். ஏனென்றால் "ஸ்லம்டாக் மில்லியனர்"(2008) படம் 2009 பிப்ரவரி மாதம்தான் ஆஸ்கார் அறிவிக்கப்பட்டு விழா நடக்கிறது. அதே காலக் கட்டத்தில்தான் "முள்ளி வாய்க்கால்" இன அழிப்பு 2009 மே மாதம் முடிவுக்கு வருகிறது. போர் உச்சத்தில் இருந்த காலக்கட்டம். இலங்கை இனப் போரின் முழு வடிவமும் உலக நாடுகள் எல்லாவற்றிற்கும் முழுமையாகத் தெரியாது. அது ஒரு அற்புதமான சந்தர்ப்பம். மீண்டும் நிகழ முடியாத அறிய வாய்ப்பு. அங்கே, விழா மேடையில் ஏ. ஆர். ரஹ்மான் இலங்கைப் பிரச்சனையை கோடிக்காட்டி, இன அழிப்பை அடையாளங்காட்டி இருக்கலாம். அது சர்வதேச நிலையில் இலங்கைக்கு ஒரு அழுத்தத்தைக் கொடுக்க வாய்ப்பிருந்தது. ஆனால் அவர் "எல்லாப் புகழும் இறைவனுக்கே" என்று பிடில் வாசித்துவிட்டார்.

       வறண்டு போன தமிழ் அல்லது இந்திய திரையிசை வெளியில், ஏ. ஆர். ரஹ்மானுக்கான வடநாட்டு ஆதரவும் பாகுபாடும் பார்த்துக் குறைய ஆரம்பிக்கவும், தமிழ், தமிழ் நாடு என்று இப்போது அவருக்கு அக்கரை வந்திருக்கிறது. ஆனால் இந்த எதிர்ப்புக் குரலாவது அவரின் உண்மையான மொழி உணர்வின் வெளிப்பாடாக இருக்கட்டும்.

      அதே போல மலையாள திரை இசையமைப்பாளரான சேகரின் மகன் திலீப், தனது தந்தையை இழந்து நடுத்தெருவுக்கு வந்தார் என்றால், ஆதரவற்ற அந்த மூளை தன்னியல்பாக இப்படித்தான் சிந்திக்கும். அல்லது அந்தத் தலைமுறையின் சாங்கித்யம் அதுதான்.

        இங்கே இளையராஜா தான் இசையமைத்த சிம்பொனியே என்ன ஆனது என்று இன்று வரை சொல்லாமல் இருக்கிறார். அல்லது இது போன்ற விஷயங்கள் பொது வெளிக்கு அப்பால் ரகசியங்களுடையதாக இருந்தாலும் இளையராஜாவும் ஏ. ஆர். ரஹ்மானும் ஜாம்பவான்கள்தான்.

       இப்போது இந்திய திரை இசையில் ஒரு தேக்க நிலை நிலவுகிறது. குறிப்பிட்ட ஒரு ஆளுமை அல்லது Trend Setterக்கான phenomena ஏதும் உருவாகவில்லை. அல்லது இதுதான் அடுத்த ஒரு நிலையோ என்றும் தோன்றுகிறது. ஒரு மையமற்ற நிலை. இந்த நிலை என்பது லட்சிய வாதம் என்பது மறைந்துபோய், Entertaining என்றாகிவிட்டது. அதுவும் உலகத் தகவல் தொடர்பின் சலுகையால் அசல் இசை என்ற ஒன்றுக்கான தேவையே அற்றுப் போய்விட்டது. கற்பனை வற்றிப்போன வெற்று கூச்சலாக இருக்கும் திரையிசை என்பது தன்னுள் தொழில் நுட்பத்தையும் அடக்கிக் கொள்கிறது. இது ஒரு படைப்பாளியை வர்த்தகனாக உற்பத்தியில் கொண்டுபோய் நிறுத்துகிறது.

     எனக்கு இளையராஜா, ஏ. ஆர். ரஹ்மான் இசைப்பிடிக்கும். ஆனால் இளையராஜா, ஏ. ஆர். ரஹ்மான் ஆகியோரைப் பிடிக்கும் என்று சொல்ல முடியாது.

பொருளாதார உலகில் பொருளே பிரதானம்.

(நன்றி : "தமிழணங்கு" சந்தோஷ் நாராயணனுக்கு)

Wednesday, April 6, 2022

மேற்கத்திய இரு பெரும் தத்துவத்தைக் கவிதையில் கடந்த சி. மணி



சி. மணியின் 12 வது நினைவு தினம், 06-04-2022 இன்று.


அவருடனான ஒரு மாலையில் மொழியின் செயல்பாட்டைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். அது ஒரு ஞாயிறு. அன்று சர்வராஜ் இல்லை. அவர் திங்கள், வெள்ளி மட்டும்தான் மணியைப் பார்க்க வருவார்.

சிந்தனையே மொழியின் ஒரு உப செயல்பாடுதான். அது எத்தகைய மொழியாக இருந்தாலும். அதாவது சைகை மொழியாக இருந்த போதும். மெளனம் என்பது மற்றுமொரு மொழியாகவே செயல்படுகிறது. எல்லா மொழிக்கும் அது பொதுவான ஒரு கூறாக இருக்கிறது என்று எனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டிருந்தபோது, அந்த பொதுவான மொழியைக் கையாண்டு கொண்டிருந்தார்.

கடைசியாக, விட்கெண்ஸ்டைன் பற்றி ஒரு குறிப்பைப் பற்றிச் சொன்னேன்.

"இதுவரைத் தொகுப்பின் சிந்தித்தல் கவிதையைப் படித்தீர்களா? என்றார்.

" அதை முன்பே வாசித்துவிட்டேன்"

அப்போதுதான் எனக்குப் பொறி தட்டியது.

தத்துவ சிக்கல்கள் மொழிச் சிக்கலால் உருவானவை. மொழியைச் சரியாகப் பயன்படுத்தினால் இந்த சிக்கல்களைக் கடந்துவிடலாம் என்ற சிந்தனையைக் கொண்டவர் விட்கெண்ஸ்டைன்.

தற்போது கிரியாவினால் அவரைப் பற்றிய புத்தகம் வந்திருக்கிறது. வாசிக்க வேண்டும்.

நிச்சயமாக மணி விட்கெண்ஸ்டைனை வாசித்திருப்பார் என்ற முடிவுக்கு வந்தேன். ஆனால் ஒரு நாளும் அது பற்றி பேசியதில்லை. எனக்குத்தான் எல்லாம் புதிதாகவும் சுவாரஸ்யமானதாகவும் இருந்தன.

சி மணியின் கவிதையைப் பார்ப்போம்.

சிந்தித்தல்
@@@@@@@

சிந்திப்பதற்கு

மிகச்சிறந்த முறைஎது என்றால்

சிந்திக்காமல்

இருந்து விடுவதுதான்.

சந்தேகமா?

சரி,ஒரு தொடக்கமாக, நீசிந்திக்க முயன்று பார்க்கலாம். மொழியைப் பயன்படுத்தாமல்.

மேலும், மொழியைப் பயன்படுத்த வேண்டுமானால் உனக்குத் தெரியாத மொழியை

உபயோகி.

கணையாழி ஜூன் 94
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

மணி விட்கெண்ஸ்டைனை தாண்டி ஓடிவிட்டதாகவே எனக்குப்பட்டது. சிந்தனையின் எல்லையே மொழியின் எல்லைதான் என்று விட்கெண்ஸ்டைன் சொல்லும்போது, மணி அதை பயன்படுத்தாமல் சிந்திக்கச் சொல்வது ஏதோ ஒரு தப்பித்தல் போல முதலில் தோன்றியது.

ஆனால் மணி விட்கெண்ஸ்டைனைக் கடந்து அடுத்தக் கட்டத்திற்கு வந்துவிட்டதை உணர்ந்தேன். அதுவும் நமக்குத் தெரியாத ஒரு மொழியை எப்படி பயன்படுத்துவது?

இங்கே விட்கெண்ஸ்டைன் சொல்வதுபோல மொழிச் சிக்கலாலேயே தத்துவச் சிக்கல் வருகிறது என்பதை மணி Bypass செய்வது புரிந்தது.

மொழியில்லாமல் அல்லது தெரியாத மொழியில் சிந்திப்பது என்பது மனித மூளையின் சவால். அப்போது மொழியில்லாமலும், சிந்தனை என்ற அடிப்படை phenomena தன்னியல்பாக நடக்கக் கூடியதான ஒன்றுதான் என்று புரிந்தது. மொழிக்கு எல்லை என்ற ஒன்று இல்லை என்றும் புரிந்தது. அப்படியென்றால் சிந்தனைக்கும் எல்லை இல்லை என்றே தோன்றியது. அதற்கு ஸ்டீபன் ஹாக்கின்ஸை எடுத்துக் கொள்ளலாம்.

மணி, மூளையில் நடக்கும் வேறு ஒரு நிகழ்வை அர்த்தப்படுத்துகிறார் என்ற முடிவுக்கு வந்தேன். அது மொழிகளுக்கு அப்பாற்பட்ட ஒரு Enlightenment என்பதாகவேத் தோன்றியது.

அது ஓர் உணர்வு நிலை. இதை கீழைத்தேய மூளையால் மட்டுமே உணர முடியும் என்று புரிந்தது. ஹைடேக்கரின் phenomenon தத்துவத்திற்கும் விட்கெண்ஸ்டைனின் philosophy of language க்கும் சி. மணி விடை கண்டு விட்டார் என்றே அன்று உணர்ந்தேன். அது கவிதையாக மிக்கக் கச்சிதமாக வந்திருப்பதை வியக்காத நாளில்லை. இப்படி தத்துவத்தை கவிதையில் சாதித்தவர்களில் சி. மணி மிக முக்கியமான தத்துவவாதி என்றே இன்றும் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

இது பற்றி நிறைய பேச வேண்டும்.

சி. மணியின் புகழ் ஓங்கட்டும்

விட்டல்ராவ் கதைகளின் எளிமையின் அடியாழங்கள்.

ஒரு படைப்பாளியின் அறமும் அனுபவங்களும் படைப்பாகும் கணம் என்பது ஒருவகையில் அந்தப் படைப்பாளியின் சிந்தனைகளும்  அதன் உள்ளடுக்குகளும் ஒரு மொழி வழ...