Thursday, September 14, 2023

சிறந்த சினிமா...

 




சமூக, பண்பாட்டு, தனிமனித கூறுகளை வேறு எப்படியும் பெரும்பாலும் சொல்ல முடியாத ஒரு கோணத்தில் திரைப்படத்தின் சாத்தியத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதுவே நவீன திரைப்படக் கலை.


பாலுமகேந்திராவின் 'வீடு' படத்தில் ஒரு காட்சி வரும். படத்தின் முக்கிய பாத்திரமான சொக்கலிங்க பாகவதர், ஒரு மழை வரும் மாலை வேளையில் இன்னும் கட்டி முடிக்கப்படாத தனது வாரிசின் வீட்டைப் பார்க்கப் போகிறார்.


இறுதி வேலைகள் முடிக்கப்படாத கட்டியும் கட்டாத செங்கல் அடுக்காக இருக்கும் அவ்வீட்டை அடைந்துவிடுகிறார். சிமெண்ட் பூசப்படாத புழுதி நிறைந்த நடையுடன் கூடிய அந்த வீட்டிற்குள் நுழையும் அவர், தனது செருப்புகளை வீட்டிற்கு வெளியிலேயே கழற்றி விட்டு உள்ளே செல்வார். இது போகிற போக்கில் இளைய ராஜாவின் 'How to Name it' இசைத்தொகுப்பின் ஓர் இசைக்கு மறைந்துபோகக் கூடிய ஒரு காட்சிதான். 


ஆனால், தமிழ்ச் சமூகத்தின் ஆழ்மனத்தில் 'ஒரு வீடு' பற்றிய பண்பாட்டு ஒழுங்குமுறை காட்சியாக, வேறு எதுமாதிரியும் சொல்லிவிட முடியாத தனிமனித ஒழுங்கை, பாலுமகேந்திரா வெகு அநாயசமாகச் சொல்லியிருப்பார். ஒரு நெடும் இசைக்கு இடையில் சட்டென தோன்றும் கணநேர அமைதிபோல இது பாலுமகேந்திராவின் எந்த குறுக்கீடுமற்ற தன்னியல்பான ஒரு காட்சியை அந்தத் திரைப்படத்தின் ஆன்மாவாக மாற்றும் மிகச் சிலரில் முக்கியமானவராக எனக்கு காட்டியது. 


அந்தப்படத்திற்கு தேசிய விருது கொடுக்கப்பட்டது. ஆனால் இந்த ஒரு காட்சிக்கான விருது மட்டும்தானா அது? இல்லைதான்.


இந்திய 69 வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது.


சிறந்த பிராந்திய மொழி படமாக 'கடைசி விவசாயி' தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது பெரு மகிழ்ச்சி.


சொக்கலிங்க பாகவதருக்குப் பின் யாராவது இருப்பார்களா என்று ஏங்கிய எனக்கு, நல்லாண்டி பெரிய ஆற்றுதலை அளித்தார்.


வீடு படத்தின் மையச் சரடாக வரும் அது போன்ற காட்சியே படம் முழுக்க வந்தால் எப்படி இருக்குமோ அதுவே 'கடைசி விவசாயி'. 


ஒரு கலைப்படம் தனக்கான உச்சங்களைக் கொண்டிருக்க வேண்டும். அப்படி ஒரு காட்சிதான் விஜய் சேதுபதிக்கு உணவு பரிமாறும்போது இல்லாத ஒருவருக்கான மூன்றாவது தட்டு உணவு. பண்பட்ட முதிய ஆன்மாக்கள் இயற்கையின் சகல சாத்தியங்களையும் அவதானிக்கும் ஒரு பக்குவத்தை அடைவதுதான், 'மயிலை யாராவது கொல்லுவாங்களா?' என்ற கேள்வி.


நீதி மன்றத்தின் தேவையையே கேள்விக்குள்ளாக்கும் இந்தக் காட்சி.


சிறந்த திரைப்படத்திற்கான விருது 'ராக்கெட்ரி; தி நம்பி எஃபெக்ட்' (ஆர். மாதவன்) கிரிஸ்டோபர் நோலனின் 'ஆபன்ஹைமர்' வரிசையில் ஒரு முக்கியமான படத்திற்குக் கிடைத்திருப்பது எவ்வளவு மகிழ்ச்சியோ அதே அளவு மகிழ்ச்சி வடிந்துபோனது

தேசிய ஒருமைப்பாடு குறித்த சிறந்த திரைப்படத்திற்கான நர்கிஸ் தத் விருது

தி காஷ்மீர் பைல்ஸுக்குக் கொடுத்திருப்பது.


சிறந்த படைப்புகளுக்கான விருது வழங்குவதன் மூலம் மக்களை பண்படுத்துவது அரசின் கடமைகளுள் ஒன்று. இந்திய அரசு எப்போதும் தனது பெலஹீனத்தை அல்லது வாய்ப்பை வெளிப்படுத்தாமல் இருந்ததில்லை.

Saturday, September 2, 2023

நெருக்கமான இடைவெளியைத் தாண்டும் கலை


 Netflixல் The Hunt for Veerappan டாக்குமெண்டரி பார்த்தேன். மிக நுட்பமாக எழுதப்பட்ட Script. முத்துலட்சுமியின் அங்க அசைவிலும் பேச்சிலும் வீரப்பனைப் பார்க்க முடிந்தது. தான் கொண்ட பாவனையை இயல்பாக்கிய வீரப்பனின் முடிவு சிவசுப்ரமணி எடுத்த புகைப்படங்களிலும் காணொளிகளிலும் நிகழ்ந்துவிட்டது தற்செயலானதில்லை. ஆனால் ராஜ்குமாருக்கான பிணையில் கைது செய்யப்பட்ட அப்பாவிகளை விடுக்க அரசு உடன்பட்டதைக் கேள்விப்பட்டதும், வீரப்பன் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, சர்க்கரைக் கலந்து அதனுடன் ஏதோ ஒரு காட்டிலையைக் கசக்கி, சாரை அதில் விட்டதும் அந்தத் தண்ணீர் கட்டியாகிவிட்டது என்று சொல்லக் கேட்கும்போது, ஓர் அபூர்வ அனுபவ மூளையை சிதறடித்தது ஏற்றுக் கொள்ள முடியாமல்தான் இருக்கிறது. படத்தின் மற்றொரு முகத்தை இப்படிக் கோடிட்டுக் காட்டுவதன் மூலம் மற்றொரு பரிமாணத்திற்கான இடத்தைக் கொடுத்து, மாற்றான ஒரு புள்ளியை போகிறபோக்கில் சொல்லிச் செல்வதே கலையின் முன்மாதிரியாக்குகிறது, படம்.


இங்கே ஓர் ஒப்பீடு தானாக உருவாகிறது. மாமன்னன் படம் விக்ரம், KGF போன்ற படங்களின் பாவனையை கலைப் படைப்பாக்க முயன்ற ஒரு போலி முற்போக்குப் படமாகத்தான் இருக்கிறது. குறியீடுகளை படமாக்குதலில் உண்டான பெலஹீனம்தான், மாமன்னன். அரசியல் ரீதியிலான வெற்றுக் கற்பனைக்கூட இல்லை. 


மாரி செல்வராஜே நினைத்தாலும் மற்றொரு பரியேறும் பெருமாளை எடுத்துவிட முடியாது என்பது மாமன்னனிலிருந்து புரிந்து கொள்ளலாம். அகிராகுருவோவாவின் Dreams படத்தின் பனிமலையேறும் கனவின் ஓர் உத்தியை நாயைக் கொண்டு அற்புதமாக தனது படத்தில் பயன்படுத்தியிருப்பார். எந்த படத்தின் சாயலும் இல்லாமல் தன்னியல்பாக ஒரு படம் எடுக்கும்போதுதான், அந்த இயக்குநரின் ஆகிருதி வெளிப்பட்டுவிடுகிறது. மையமான ஒரு சிந்தனையிலிருந்து அந்தப் படைப்பை உருவாக்குவதற்கும், ஒரு Discussionல் உருவான செயற்கைக்கும் இருக்கும் விபத்தே இதுபோன்ற ஆக்கங்கள்.


The Predator படத்தில் கடைசியாக ஒரு யுத்தம் நிகழும். அது தனது அதி நவீன ஆயுதங்களை துறந்துவிட்டு ஒற்றைக்கு ஒற்றையாக, நிராயுத பாணியான கதாநாயகனுடன் சமரிடும் அந்த predator. அது, தான் வெற்றி பெற்றுவிடும் என்ற நிலையிலிருந்து தவறும்போது, தன்னைத்தானே அழித்துக் கொள்ளும். இந்த மனித வீர கற்பனையே உயிரினங்களின் விடாத Servival of the fitness தன்மையின் வெளிப்பாடு. அதுவே யுத்தம். 


ஆனால் மனித அறிவு வித்தியாசமானது. அது இயற்கையை ஏதோவொரு விதத்தில் மறுத்து, தன்னியல்பை பெற்றுவிடுவதிலேயே இந்த பிரமாண்ட பிரபஞ்சத்தின் இயக்கத்திற்கு கட்டுப்படாததது போல தன்னை நிறுவிக் கொள்கிறது. ஆனால் தனது நிலையின்மையின்மேல் அவ்வளவு அசட்டையானது வேறு ஒன்று இல்லவே இல்லை, இந்த பிரபஞ்சத்தில்.


எனவே, கலை என்பது, தன்னை முன் எப்போதும் இல்லாத வகையில் வெளிப்படுத்திக் கொள்வதிலேயே, அது எப்போதைக்குமானதாக தன்மை ஒன்றைக் கொண்டதாக இருக்க வேண்டுமாகிறது.

Monday, February 27, 2023

அசகவதாளம் என்னும் மகத்தான விடுபடல்

அசகவதாளம் என்னும் மகத்தான விடுபடல்

- சாகிப்கிரான்


 "அனுபவ சுவாரஸ்யம், ஓசையின் ஒழுங்கற்ற தன்மையில் இடையறாது நிகழும் முடிவில்லாத இசையின் சாத்தியப்பாடுகளின் வழியே நிகழ்த்திக் கொள்ளும் துல்லிய விடுபடலே கவிதையாக உணரப்படுகிறது."


தொகுப்பில் உள்ள ஒரு சில கவிதைகளை மட்டும் விரிவாக வாசிப்பதன் மூலமாக இத்தொகுப்பிற்கான முழுமையான ஒரு பார்வையை அடைய முடியும் என்று நம்புகிறேன். மேலும் எல்லாக் கவிதைகளையும் எடுத்தாள்வது என்பது பொழிப்புரைபோல அமைந்துவிடும். வாசகன் தனக்கான ஒரு நோக்கில் கவிதைகளை விடுவித்துக் கொள்ளச் செய்வதே முழுமையான ஒரு வாசிப்பனுபவமாக அமையும். ஆனால் இக்கட்டுரை ரசனை சார்ந்தில்லாமல், பகுப்பாய்வு நோக்கியதாக இருப்பதால், இது எனது தனிப்பட்ட கருத்தாகக் கருதிக் கொள்ள தொகுப்பு இடம் தந்ததை வியக்காமல் இருக்க முடியாது.


கவிதையை முதலில் வாசிப்போம்.


எடிசன் புன்னகைக்கிறார்

********************************


நள்ளென் யாமத்தில் உறக்கம் கலைந்து தட்டுத்தடுமாறி சுவரில் கைவைத்துத் தடவியபடி அறையின் விளக்கை எரியவைக்க முயல்பவனிடம்


அந்தரத்தில் தொங்கும் ஒளிக்கூடையானது 

அந்த நேரத்தில் போய்


சரி தவறு என்றெல்லாம் கணக்குப் பார்ப்பதில்லை இதுபோலான இக்கட்டான சூழ்நிலையிலெல்லாம்

போனால் போகட்டுமென

தவறான சுவிட்ச்சுக்கும் ஒளிர்ந்துவிடும்

அதுதான்

தாட்சண்யம் மிக்கதோர் விளக்கு.

*


பெரு. விஷ்ணுகுமாரின் கவிதைகள் என்றில்லை, நவீன கவிதை சுவாரஸ்யத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்டவைகளாகவே பெரும்பாலும் இருப்பதான ஒரு பார்வையைத் தருவதும், திடுக்கிடச் செய்யும் அதன் உத்தி, அல்லது அதன் சாத்தியப்பாடு மிகப் புதியதாக இருக்கிறது. தற்காலக் கவிதையின் போக்கு தத்துவங்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டதாக அறிவித்துக் கொள்கின்றது. அதைத் தாண்டி, மறுக்கும் கவிதையின் கச்சிதத் தன்மை, கட்டமைக்கப்பட்ட அறத்திற்கான நையாண்டி, எளிமையாக இருந்தாலும் அதன் தெரிவுகளும் செயல்பாடுகளும் ஒரு மையமற்ற பிரக்ஞையைப் பிரதானப்படுத்தும்  தன்மை, பிடி கொடுக்காத அல்லது எளிதில் புரிந்து கொள்ள முடியாத மதிப்பீடுகள், இயல்பிலிருந்து தன்னை முற்றிலுமாக பீய்த்துக் கொள்ளும் தன்மை என நவீன கவிதை தன்னை இப்படியாகவே நிறுவ முயலுகிறது.


நவீன கவிதையின் பிரதான நோக்கமே, தத்துவத்திலிருந்து விடுவித்துக் கொள்வதுதான் என்றாலும் உண்மையில் எந்த ஒரு படைப்பும் தத்துவத்திலிருந்து தன்னை முற்றிலும் விடுவித்துக் கொள்ளும் இயல்புத் தன்மையைக் கொண்டிருக்கிறதா என்றால் இல்லை என்றே சொல்லலாம். தத்துவத்தின் தர்க்கத்தின் மூலமாகவே நவீன கவிதையை முழுமையாக, தனிப்பட்ட கவிதை என்றாலும் ஒட்டு மொத்தத் தொகுப்பானாலும் அதன் Core Thoughtயை, அல்லது அதன் மையத்தை இத்தகைய உத்தியைக் கொண்டே ஒருங்கிணைத்துப் புரிந்து கொள்ள முடிகிறது. கவிதை தர்க்கத்திற்கு அப்பாற்பட்டது என்பதை, தத்துவத்தின் அறிவு சார்ந்த உபாயத்துடன் அனுபவத்தில் உள்ள வெவ்வேறு வகையான உள் பார்வையால் பூடகமான தர்க்கத்தை முன்னெடுப்பதன் மூலமே, ஒன்று உடன்பட்டோ, அல்லது எதிர்வினைப்பட்டோ தன்னுள் செயல்படும் ஞானத்தை,  அது புறக்கணிக்கத்தக்கதாக இருந்தாலும், அதுவே அந்தப் படைப்பின் அடிப்படையாகிறது. தத்துவத்திலிருந்து வெளியேறுவதும் வகைப்படுத்தப்படாத ஒரு தத்துவமே.


கருத்து முதல்வாதத்தின் தந்தை என்று சொல்லப்படும் பிளேட்டோவின் காலம், கிருஸ்து பிறப்பதற்கு சுமார் 400 வருடங்களுக்கு முன்னால். இவர் தனது குருவான சாக்ரடீஸிடமிருந்து "மனிதனின் அறிவுதான் நற்பண்பு" என்ற மையச் சரடிலிருந்து "அறிவு" என்பதை புரிந்து கொள்ள முயல்கிறார். எது "அறிவு" என்ற கேள்விக்கு ஒருவன் வருகிறான் என்றால் அவன் முதலில் எதுவெல்லாம் "அறிவு" இல்லை என்ற நிலைக்கு வர வேண்டும். "காணக்கூடிய" அல்லது "உணரக்கூடிய" எதுவும் அறிவு இல்லை என்கிறார்.  "அபிப்பிராயம்" எப்போதும் அறிவாகக் கொள்ள முடிவதில்லை என்கிறார். அப்படி என்றால் அறிவு என்பதை எதைக் கொண்டு புரிந்து கொள்வது? இங்கே அறிவு என்பதை மனித அடிப்படை பண்பாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஓரறிவு உயிரி, ஈரறிவு உயிரி போல நாம் ஐந்தறிவு உயிரி. மனிதன் தன்னையும் தன்னைச் சுற்றியுள்ள சகலத்தையும் இதன் வழியாகவே அர்த்தப்படுத்திக் கொள்கிறான். இதன் அடுத்தக் கட்டமே மெய்யறிவு.


"கருத்துருக்களின் அறிவு வழியாக அடையப்படும் அறிவே, உண்மையான அறிவு" என்கிறார் பிளேட்டோ. இங்கே கருத்துருக்கள் என்பவை Concepts என வரையறுக்கிறார். அவை நிரந்தரமானவை, பிரபஞ்சத்தின் ஒட்டு மொத்த அறிவின் தனிப்பட்ட கூறு. எடுத்துக்காட்டாக, பூ என்ற (concept) கருத்துருவை எடுத்துக் கொண்டால், அது முல்லை, மல்லிகை, ரோஜா, தாமரை என தன்மைகளினாலும், வடிவ அமைப்புகளாலும் வேறுபட்டாலும் "பூ" என்ற பொதுத் தன்மையை நாம் அவைகளைப் பூ என்ற தன்னியல்பு நிலையின் புத்தியிலேயே உணர்ந்தறிந்து கொள்கிறோம். பூ என்ற கருத்துருவில் அர்த்தப்படுத்தும் தன்மையே உண்மையான அறிவு என்கிறார்.  இது பிரபஞ்சத்தில் உள்ள அத்தனைக்கும் பொருந்தும். இது நமது மனித மனத்தின் அடியாழங்களில் புரிதலின் அடிப்படைக் கூறாக இருக்கிறது. இதுவே புரிதல் என்ற செயல்பாட்டின் தோற்றப்பாடு. இந்தத் தோற்றப்பாட்டிலிருந்துதான் இலக்கியம் மனோரஞ்சிதத்தை பூ என்று குறியீடாக மாற்றுகிறது. மிகக் குறைந்த பொருத்தப்பாட்டில் அது அவ்வாறு புரிந்து கொள்ளப்படுவதே நம்முடைய நிலைப்பாடுகள் கருத்துருக்களின் சாயல்களே. அல்லது பிரதிபலிப்புகளே. ஏனொன்றால் மனித அறிவு என்பது உண்மையைத் தேடும் ஒன்று. அது அவ்வாறு கண்டடைவது 

மொழியை என்றில்லாமல் நம் நினைப்பே இத்தகைய தோற்றப்பாட்டின் உள் நிகழ்வால்தான் ஒன்றை புரிந்து கொள்கிறது. இதை மொழியியலார் தங்கள் வழியாகக் கட்டமைப்புக்குள் வகைப்படுத்துகின்றனர். ஆனால் இத்தகைய தத்துவத்திற்கு பின்னால்தான் பிரக்ஞை என்ற ஒன்று தன்னை உணர்ந்து கொள்கிறது. இதில் ஏதாவது சிக்கல் என்றால் மனித புரிதல் அபத்தமாக, ஒரு பைத்திய நிலையாக மாறிவிடுகிறது.


பெரு. விஷ்ணுகுமாரின், "அசகவதாளம்" கவிதைத் தொகுப்பிலிருக்கும் பெரும்பாலான கவிதைகள் இத்தகைய கருத்துருக்களை உடைப்பதன் விளைவாக புரிதலின் புதிய சாத்தியங்களுக்குக் கவிதைகளைக் கொண்டு செல்கின்றது. இவ்வாறே இந்தத் தொகுப்பினைத் திறந்து கொள்ள முடியும் என்று நினைக்கிறேன்.


"எடிசன் புன்னகைக்கிறார்" கவிதையில், "தாட்சண்யம் மிக்கதோர் விளக்கு", பற்றி வருகிறது.


இக்கவிதையில் மின் விளக்கின் கருத்துருவை கவிதைச் சிதைக்கிறது. அதாவது மின் விளக்கு என்பது அதற்குரிய பொத்தானை அழுத்தினால்தான் எரியும் என்பது கருத்துரு. ஆனால் இக்கவிதையில் வரும் விளக்கானது தாட்சண்யம் மிக்க ஒன்றாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் எப்போதைக்குமான இப்பிரபஞ்சத்தின் கருத்துருவின் வினைத் திறனை உடைப்பதன் வழியாக புதிய உள் அர்த்தத் திறப்புகளுக்கு வகை செய்கிறது.


நவீன கவிதை என்பது வழக்கமான கவிதைக்கான கூறுகளிலிருந்து முற்றிலும் தன்னை விடுவித்துக் கொண்டுவிட்டது என்பதை பொதுவான புதுக் கவிதை புரிதலாகக் கொள்வதற்கான நவீன வரையறையாகக் கொண்டோமானால், அதன் தர்க்கப் பூர்வமான சிந்தனைக்கும் ஓரிடம் உண்டு என்பது இக்கவிதை மறுக்கிறது.


இயற்பியலின்படி ஒரு செயலுக்கான பின் விளைவானது இந்த பிரபஞ்சத்தில் மாறாத தன்மை கொண்டதாக இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட சுட்சைத் தட்டினால்தான் அந்தக் குறிப்பிட்ட கருவி இயங்கும், அதாவது செயல்பாட்டின் பிரக்ஞையானது மனித அனுபவங்களின் செயல்களுடைய பின் விளைவுகளின் விழிப்புணர்வு மனோபாவத்தைத் தேவையாக்குகிறது. ஆனால் கவிதையில் கவிஞர், தவறான சுட்சுக்கு எரிந்துவிடும் ஓர் அற்புதத்தை முன் வைக்கிறார். அப்படி ஓர் அவசியத் தூண்டலின் நியதி என்ன என்ற புதிய மனோபாவத்திற்கு வாசகனைக் கொண்டு செல்வது ஏதோ எதேச்சையாகவோ, அதிசயத்திற்கோ அமைந்துவிட்ட ஒன்று இல்லை. இதன் வழியாகவே தொகுப்பை நாம் திறந்து கொள்ள வேண்டும்.


அதாவது இங்கே நிகழ்தகவின் அசாத்தியம் மூலமாக அறிவியலின் ஆன்மமற்ற தன்மையை, அறமுடைய ஒரு நிகழ்வாக மாற்றுவதன் மூலம், ஓர் அணுகுண்டை பிறந்த நாள் "பாப்பர்ஸாக", வெடிக்க வைக்கும் குதூகலமாக்குகிறது. இயந்தர மயமாக்கப்பட்ட உலகில், நிச்சயமாக்கப்பட அழிவை, ஆக்கமாக மாற்றுகிறது. மனிதனுக்கான இயற்கையின் அசலான கனிவன்பாக மாற்றுகிறது. இங்கே மனித பிறவிக்கு மட்டுமே அறமென்ற ஒன்று சதா வாழ்வை அர்த்தப்படுத்திக் கொண்டிருக்கும் சூழலில், கனிவன்பை மாறாத கருத்துருவை உடைப்பதன் வாயிலாக, பிரபஞ்சத்தின் விதியை மறுபரிசீலனை செய்கிறது. அதை அதன் பாரபட்சமற்ற தன்மையிலிருந்து கனிவன்பின் சாத்தியத்திற்கு கற்பனை செய்கிறது. அல்லது வற்புறுத்துகிறது. இவ்வாறே ஒரு படைப்பாளி தனக்கான அல்லது இந்த உயிர்த் தொகுப்புக்கான உலகைப் படைக்கிறான். 


இந்தக் கவிதையில் வேறு சில சாத்தியங்களும் இருக்கக்கூடும். அது ஒரு "ஸ்மார்ட் பல்ப்பாக" இருக்கும் பட்சத்தில், அசைவறிதல் (Motion Detection) என்ற தொழில்நுட்பத்தின் மூலமாகத் தானாகவே மனித நடமாட்டத்தை வைத்து அந்த பல்ப்பு எரியக்கூடும். ஆனால் தூக்கத்தின் விளிம்பில் பழைய ஞாபகத்தில் சுட்ச் போர்ட்டைத் தடவியிருக்கலாம்.


அல்லது அந்த மனிதன் சுட்சைப் போடும் நிகழ்வுதகவானது முதல் தேர்வே சரியான சுட்சைக்கூட அது அழுத்தியிருக்கலாம்.

 

ஆனால் கவிதையின் பிரதான கதையாடலானது கருத்துருவை சிதைப்பதே அதை மேன்மையான ஒரு புரிதல் நிலைக்குக் கொண்டு செல்கிறது. அதற்குத் தக்கவாறு அந்தப் படைப்பின் சாராம்ச பூர்வமாக அமைத்துக் கொள்கிறது. இதுவே அதன் ஆகச் சிறந்த நற்பண்பாகக் கருத இடமளிக்கிறது.


தொகுப்பின் மற்றொரு கவிதையான, 


புகழ்பெற்ற வாள்

********************

வயது முதிர்ந்த வாளொன்று


நடை திணறிச் சுவரோடு சாய்ந்து நிற்கிறது முன்பெல்லாம் வேண்டாமென்றாலும் கைப்பிடித்துக்

கூட்டிப்போக

அரசனே காத்திருப்பான்


ஆசைதீரப் போர்க்களம் கண்டு சலித்துப்போன இந்நாள்வரை அதன் கூர் நுனியோடு மோதுவதற்கு யாருக்கும் துணிவில்லை இவ்வுலகில் தெரியும் யாவும் தனித்தனித் துண்டுகளால்

ஆனதெனக்

கண்டறிந்த வாள் அது


அப்பேர்பட்ட அதன் முன்னே "எங்கே தைரியமிருந்தால் என்னை

இரண்டாக்கு" என்கிறது ஒரு செங்குளவி கைப்பிடிச் சுருங்கிப்போன வாளிற்கோ சிரிப்பு தாங்கவில்லை எல்லாம் தன் நேரமென ஒதுங்கி நின்றாலும் விடாமல் மோதி உசுப்பேற்றும் குளவி அதன் காலைத் தடுக்கி நிலைகுலையச்

செய்கிறது


தொடர்ந்து அதன் தாக்குதலைச் சமாளிக்க முடியாத அப்புகழ் பெற்ற வாள்


ஒருகட்டத்தில் கீழே சாய்ந்தபோது கேட்க வேண்டிய இரும்பொலிக்குப் பதிலாக வேறேதோ சத்தம் கேட்டது


இப்போது இதில் உண்டான அதிர்ச்சியைவிட இத்தனை நாட்களாக அந்த அட்டையால் தலை துண்டான வீரர்களெல்லாம்

இன்று வசமாய் மாட்டிக்கொண்டனர்.

*************************


இக்கவிதையிலும் வாள் என்ற தன்மையின் கருத்துரு சிதைக்கப்பட்டு, கவிதை திறந்து கொள்ளும் வெளியானது வீரத்தின் கருத்துருவையும் கேள்விக்குள்ளாக்குகிறது. 


பல போர்க் களங்களைக் கண்ட புகழ் மிக்க வாளானது தனது முதுமைக் காலத்தில் வெறுமனே மூலையில் சாய்த்து வைக்கப்பட்டு, ஒரு குளவியின் சவாலுக்கு அழைக்கப்படுகிறது. அது குளவியின் அறியாமையைக் கண்டு சிரிக்கிறது. ஆனால் தீரம் மிக்க குளவி அந்த வாளை தன் இடையறாத முயற்சியினால் சாய்த்து விடுகிறது. அப்போது ஓர் அதிசயம் நிகழ்கிறது. அது அட்டைக் கத்தியென்பது அதன் சத்தத்தில் வெளிப்படுகிறது. இவ்வாறு வாளின் தன்மையின் கருத்துருவை உடைப்பதால் நிகழும் மறுபரிசீலனையாக இக்கவிதை இருக்கிறது. அதிகாரத்திற்கான உண்மையான இயல்பென்பதை சாதகமான திறன்களைப் புறக்கணித்து, அதன் முகமூடி ஒரு கணத்தில் கழற்றப்படுகிறது. அதே சமயம் பலியான வீரத்தின் ஏமாற்றம் அடைந்த தோற்றுவாயைக் கேள்விக்கு உள்ளாக்குகிறது. இது வரலாற்றை மறுபரிசீலனை செய்கிறது. வரலாற்றின் வெற்றி தோல்விகளை கிளரும் பேருரைகளை முன்னெடுக்கிறது. இதற்கான இலக்கிய உருவம் மிகச் சிக்கலானதலிருந்து கவனமிக்க சிந்தனைகளை உருவாக்க வைக்கிறது. இதுவே ஒரு படைப்பின் ஆகச் சிக்கலான கூரிய உள் பார்வையையும் அரசியல் தெளிவையும் நோக்கித் திருப்புகிறது. நகைச்சுவை வழியாக ஒரு கட்டியங்காரன் கூத்தின் தன்மையை பிரக்ஞையின் இடையீட்டில் மெய்ம்மைப்படுத்தும் செயலே இப்படைப்பின் இயல்பூக்கமாகிறது. இவ்வாறே பல்வேறு வழிகளில் கவிதை தன்னை அர்த்தப்படுத்திக் கொள்வது, அந்தக் கருத்துரு உடைப்பின் வழியாகவே நிகழ்கிறது.


அதே போல மற்றொரு கவிதை...


சரீரா

******


அவ்வளவு எளிதாய்ச் சொல்லிமாளாது


பசியாற்றிக்கொண்டிருக்கும் இந்த மக்காச்சோளத்தை வேகவைக்கப்பட்ட சிரமங்களை


அச்சமயம் இதைத் தூரத்திலிருந்து கண்டபோது அச்சு அசலாக ஒரு பிணமெரிக்கும் காட்சிபோல் இருந்ததாக நகைச்சுவைக்கின்றான் நண்பன்


மேலே தென்பட்ட வெளிச்சங்களைத் திருப்தியாகத் தற்சமயம் எரியும் சிதையில் எறியவிருக்கும்

தின்ற பின்பாக

சோளமற்ற உடலே,


உண்மையாகவே இனி நீ ஒன்றுக்கும் ஆகமாட்டாயா மனம் ஒப்பவில்லையே . . .


இப்போதும் ஒன்றும் தாமதமில்லை


யாருக்கும் தெரியாமல் ஒரே ஒருமுறை எனக்கு உன் பெருவிரலை அசைத்துக்காட்டு போதும் இதிலிருந்து உன்னை நான் காப்பாற்றுகிறேன்

******


இது மற்ற இரண்டு கவிதைகளைப் போலல்லாமல் அந்தக் கருத்துருவை மிக நுட்பமாகத் தன்னுள் விகசித்து, பின்னர் நொறுக்குவதன் மூலம், கவிதையை திடுக்கிட வைக்கும் அபூர்வ புறமியாக (Subject) மாற்றமடைய வைக்கிறார் கவிஞர்.


மால்களில் அமெரிகன் கார்ன் என்றும், மலை பிரதேசங்களிலும் மக்காச் சோளக் கருதை அனலில் வாட்டி விற்பதைப் பார்த்திருக்கலாம். கவிதை இப்படி ஒரு காட்சியைத்தான் பேசுகிறது. 


ஆனால் வெறும் மக்காச் சோளக் கருது என்ற கருத்துரு இங்கே நொறுக்கப்பட்டு கம்யூனிசத்திற்கு குறியீடாக மாற்றப்படுகிறது. கம்யூனிஸ்ட் கட்சியின் சின்னம் அரிவாள் - சுத்தியல்தான். அதே போல இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு சின்னம் அரிவாள் - சோளக் கதிர். இதை முற்றிலுமாக மக்கா சோளக் கருதாக மாற்றியமைக்கிறது கவிதையின் கருத்துரு. பிளேட்டோ சொல்வதைப்போல கருத்துருக்கள் இந்த பிரபஞ்சத்தின் மாறாத தன்மையுடையவை. அவற்றின் பிரதிபலிப்புதான் நாம் உணர்வது அல்லது பார்ப்பது. நிழல் ஒன்று எவ்வாறு பறக்கும் ஒரு பறவையாகக் காட்சிப்படுகிறதோ, அதைப்போல சோளக் கதிர், மக்காச் சோளக் கருதாக சிதைக்கப்படுகிறது. அதாவது சிதைவு என்பது ஒன்றிலிருந்து மற்றொன்றாகக் காணக்கிடைப்பது. 


முன்னாள் சோவியத் தலைவர் மிகையில் கோர்பச்சோவ், 1991 ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியம் "துரோகத்தால்" சின்னாபின்னமாகியது என்று 2016 ல் ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார். இந்த இடம்தான் கவிதை தன்னை உருமாற்றிக் கொள்ள தோதாக்குகிறது. 


அமெரிக்கன் கார்ன் என்று குறியீடாக்கப்படும் சோஸலிசம் பிணம் எரிவதைப் போலத்தான் கவிஞருக்குத் தெரிகிறது. கருதின் கட்டமைப்பில் அமைந்துள்ள அத்தனை சோளப் பற்களும் சுட்டு, துரோகத்தால் அல்லது பன்னாட்டு நுகர்வு கலாச்சார சூழ்ச்சியால் கபளீஸ்வரம் செய்யப்பட்டு, சோஸலிசம் என்ற வெறும் கருத்துக் கட்டமைப்பு மட்டுமே எஞ்சியிருக்கிறது. அது கவிஞருக்கு பெரும் வேதனையையும் ஏக்கத்தையும் தருகிறது. உடனே அவர், அந்த வெற்றுக் கட்டமைப்பைப் பார்த்துக் கேட்கிறார். 


//மேலே தென்பட்ட வெளிச்சங்களைத் திருப்தியாகத் தற்சமயம் எரியும் சிதையில் எறியவிருக்கும்

தின்ற பின்பாக

சோளமற்ற உடலே,


உண்மையாகவே இனி நீ ஒன்றுக்கும் ஆகமாட்டாயா மனம் ஒப்பவில்லையே . . .//


என்று அந்த சித்தாந்தத்தைப் பார்த்து ஏங்குகிறார். உன்னால் இன்னும் உயிருடன் இருப்பதற்கான தன்மை இருக்குமானால், உன் ஒரு கட்டை விரலை அசைத்துக் காட்டு, போதும் என்கிறார். மிகச் சிலிர்ப்பான இடம் இது.


படைப்பாளி ஒரு சித்தாந்தத்தின் மீது கொண்டுள்ள பற்றையும் அதை மீட்டுருவாக்கம் செய்ய, தான் ஒரு மீட்பராக மாறுவதற்கு ஆயத்தமாகிறார். மிகையில் கோர்பச்சோவ் அதை இவ்வாறு தனது பேட்டியில் சொல்கிறார்.


"எங்கள் முதுகுக்குப் பின்னால் துரோகம் இழைக்கப்பட்டிருந்தது. ஒரு சிகரெட்டை பற்ற வைக்க அவர்கள் வீட்டையே கொளுத்தி கொண்டிருந்தனர். அந்த முயற்சி அதிகாரத்தை பெறுவதற்காக மட்டுமே. ஜனநாயக வழிமுறைகள் மூலம் அவர்களால் அதனை பெற முடியவில்லை. எனவே அவர்கள் ஒரு குற்றமிழைத்தனர். அதுவொரு ஆட்சி கவிழ்ப்பு" என்று  கூறுகிறார்."


ஒரு சித்தாந்தத்தின் வீழ்ச்சியை, துரோகத்தின் மூலம் நடந்த நாடகத்தை அல்லது மேற்கொண்டு நிலைபெற முடியாத அளவிற்கு சிதைந்துவிட்ட ஒரு சித்தாந்தம், அதன் மூல எண்ணத்திலிருக்கும் நற்பண்புகளால் மீள உருவாக்கம் கொள்ளுமா என்பது கவிதையின் உள் வெட்டு. வெளிப்படுத்தப்படாத நோக்கங்கள் என்பவற்றிற்கும் ஒரு விளைவு வெளிப்புறமாக இல்லாவிட்டாலும், உட்புறமாக அதன் ஒழுங்கு செயல்பட்டுக் கொண்டேதான் இருக்கும் என்பதற்கான நெகிழ்வானக் கவிதை இது.


இங்கே கவிதையின் தலைப்பன, "சரீரா", என்பதும் மற்றொரு கருத்துரு சிதைப்பின் சுவாரஸ்யம்தான். இதை கண்டடைவதே படைப்பனுபவத்தின் மற்றொரு சாத்தியம்.


ஒரு தொகுப்பின் கவிதைகளின் வகைமை பற்றிய புரிதலை அடையும் வாசக மனமானது, தன்னையும் அறியாமல் கருத்து முறையிலும், கலை முறையிலும் கவிதைகளின் குணாதிசயங்களை தொடர்ந்து அந்தத் தொகுப்பு முழுமைக்குமான ஒரு சரடை பின்ன முனையும். அதன் தொடர்ச்சியில் உண்டாகும் நெருடலை முடிந்த வரையிலும் அறநெறிகளின் பால் புரிந்து கொள்ளவும், அதன் புதிய சிந்தனைப் பழக்கத்தை அடையாளம் கண்டு கொள்ளவும் முயல்வதே தீவிர வாசிப்பாகிறது.


தொகுப்பின் மற்றுமொறு கவிதை...


புரைபோகும் கதவு

***********************

வெறிபிடித்தாற்போல் தட்டிக்கொண்டே இருக்கின்றான் 

கதவிற்கோ பயங்கரமாய்ப் புரைபோகிறது 

துணைவியோடு நான் துகில் மறந்து தூங்கும் இந்நேரம் ஏறக்குறைய இருபதுமுறையாவது தட்டியிருப்பான்


திறக்கவேயில்லை என்பதால்


கதவின்மேல் நெருப்பு நெருப்பென்று எழுதிவைக்கத் துவங்கினான்


எரியும் வீட்டிலிருந்து பாதி இறந்துபோய் வெளியேவந்த நான் அவனையும் கைப்பிடித்து உள்ளே இழுத்தேன் அவனோ 'அப்படியெனில் இந்நேரம் உன் மனைவியும் அறையில்

நிர்வாணமாகத்தானே கிடப்பாள்' என்று துள்ளிக் குதித்தபடி உள்ளே போனான் அதற்குள் நல்லவேளையாக அவள் முழுவதும் எரிந்துவிட்டாள்.

*************************************


இக்கவிதையில் கதவு என்ற கருத்துருவுடன் நின்றுவிடாமல் பல கருத்துருக்கள் உடைக்கப்படுகின்றன. ஆனால் அதன் மையக் கருத்தானது தொகுப்பின் சுவாரஸ்யத் தன்மையைத் தக்க வைத்தாலும் பிற்போக்கு கருத்தியல் ரீதியிலான அம்சங்களை நீக்க முடியாத சிக்கல் எழுகிறது. 


இந்தக் கவிதையைப் படித்தவுடன் எனக்கு ஹேராமின் அபர்ணாதான் ஞாபகத்திற்கு வருகிறாள். ராமின் மனைவி அபர்ணா. பகலில், கரிந்துபோன உணவைப் பொருட்படுத்தாது, கலவியில் கலைத்துப்போய் கிடக்கும் அவர்களை ஒரு தீவிரவாத கும்பல் கதவு, ஜன்னல் வழியாக உள் நுழைந்து, ராமை கட்டிப்போட்டுவிட்டு, அபர்ணாவை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து பிறகு கழுத்தை அறுத்துவிட்டு ஓடி விடுகின்றது. இது திரைப்படத்தின் காட்சி. 


ஜடப்பொருளான கதவுக்கு, விடாமல் தட்டுவதால் புரை ஏறுகிறது என்பதால் தட்டுபவன் Zomotoவோ, Swiggyயோதான் என்று தோன்றுகிறது. மனைவியோடு துகில் மறந்து தூங்குவதென்பது ஹேராமில் வரும் காட்சியை ஒத்த மனப்பான்மையையே நமக்கு ஏற்படுத்துகிறது. கவிதையில் டெலிவரி பாய், தட்டி தட்டி கோபமுற்று, இந்தக் கோபம் அந்த நியூக்ளியர் குடும்பம் நுகர்வு கலாச்சாரத்திற்கு எதிராகத் திரும்பிவிட்டதோ என்று அக்கலாச்சாரத்தின் தூதுவனாகக் கோபம் அடைந்து புரையேறியக் கதவின் மேல் நெருப்பு நெருப்பு என்று எழுதி ஒட்டிவிடுகிறான். வீடே பற்றி எறிகிறது. கவனிக்க, இந்த அமைப்பு, நெருப்பு என்று எழுதினாலே அது உண்மையான நெருப்பாகி வீட்டை எரிக்கத் துவங்குகிறது. அதன் வலிமை அபரிதமானதாக இருக்கிறது. எரியும் வீடு என்பது வாசகனின் மனதில் ஏற்படுத்தும் தாக்கமானது மிக வலுவானது. அது தார்க்கோவ்ஸ்கியின் பற்றி எரியும் வீடு காட்சியமைப்பின் எண்ண வலுவை ஞாபகப்படுத்தாமலில்லை. அப்போது பாதி எரிந்த நிலையில் கதவைத் திறந்து, டெலிவரி பாயையும் எரியும் வீட்டினுள் இழுக்கிறான். அவனது நிர்வாண கோலம் கண்டவன், நிலைமையை ஊகிக்கிறான். சந்தர்ப்பவாதியான நுகர்வு கலாச்சாரத்தின் பிரதிநிதி ஒரு கணம் சலனமுற்று, 'அப்படியெனில் இந்நேரம் உன் மனைவியும் அறையில்

நிர்வாணமாகத்தானே கிடப்பாள்' என்று துள்ளிக் குதித்தபடி உள்ளே போகிறான். அதற்குள் நல்ல வேளையாக அவள் முழுவதும் எரிந்துவிட்டாள் என்று எரியும் கவிஞன் சமாதானமடைகிறான். இதுவரை கருத்துரு உடைப்பின் சாதகத்தில் மேன்மையடைந்த கவிதையானது வாசகனை மேற்கொண்டு இதே மனப்போக்கில் முன்னேற முடியாமல் தடுமாற வைக்கிறது. இங்கு கற்பு என்ற சாயல் எடுத்தாளப்படுகிறது. சதி போல கவிஞன் அவன் மனைவியை முற்றிலுமாக எரித்துவிடுகிறான். சதியில் கணவன் இறந்து பிறகே அவன் சிதையில் மனைவியைத் தள்ளி எரிப்பார்கள். ஆனால், கவிதையில் இன்னும் சாகாத கணவனே, மனைவி முழுவதுமாக எரிந்துபோயிருப்பாள் என்று நிம்மதிப் பெருமூச்சு விடுவது, கருத்துரு உடைப்பைப் புறந்தள்ளி ஒரு கொடூரனாக, மனநோயாளியாகக் காட்சியளிக்கிறான். இங்கே கவிதையின் கருத்தியல் என்பது சுவாரஸ்யத்தைத் தந்தாலும் பிற்போக்குத் தனத்தின் பிரதியாகத் தோற்றம் அளிக்கவே செய்கிறது. ஆனால் ஒரு நம்பிக்கையில் முற்போக்கு சிந்தனையின்பால் இந்தக் கவிதையை நகர்த்த முயன்றால், அது தற்கால ஒரு கணவனின் சமூக மன அமைப்பைப் பிரதிபளிப்பதாகக் கொள்வதென்றாலும் அதுவும் கவிதை, அதற்கு எதிர்ப்புறமாகச் செயல்படும் தன்மையைத் தரவேண்டிய சிக்கலை ஏற்படுகிறது. 


படைப்பின் வீர்யம், முற்றிலும் நற்பண்பைக் கொண்டிருக்காவிடினும் நிகழ்காலத்து வாழ்க்கையின் மெய்மையைப் பிரதிபளிப்பதாக மட்டுமல்லாமல் அத்தகைய நோய்க்கூறுகளின் அபத்தத்தையும் அது எவ்வாறு இந்த மனித இன தொடர்ச்சிக்கு இடையூறாக இயற்கையின் சமநிலையைக் குலைத்து அதிகாரத்தின், ஆணாதிக்கத்தின் ஆணவக் குரலாக வென்று வருகிறது என்பதை மறந்துவிடக் கூடாது.


பெரு. விஷ்ணுகுமாரின் அசகவதாளம் கவிதைத் தொகுப்பு கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்டதுபோல ஒரு விடுபடல் என்பதைக் கட்டுரையின் இறுதிப் பகுதியில் முற்றாக விளங்கிக் கொள்ள முடியும் என்றே நம்புகிறேன். 


ஒரு படைப்பாளியை முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டுமானால் அந்தப் படைப்பாளியின் சின்னஞ்சிறு லட்சியங்களை மதிப்பிடுவதில் அவர்களது உயர்ந்த படிநிலை அல்லது தத்துவ கருத்தாக்கம் முன்னிலை பெறுகிறது.


தொகுப்பில் "சாகாவரம்" கவிதை ஜென் தத்துவத்தின் சாயலைப் பேசுகிறது. "பதற்றத்திலிருந்து வெளியேறியக் காட்சிகள்" கவிதை மரபார்ந்த மதிப்பீட்டின் புனிதத்தை உடைக்கிறது. "கும்பகர்ணனின் தலையணை", "இரை", என்று கவிதைகளை நாம் திறந்து கொள்ளும் கருத்தாக்கம், வழக்கமான சொல்லாடல்களால் வழக்கத்திற்கு மாற்றான ஒவ்வொரு வாசகனுக்குமான தனிப்பட்ட விடுபாடாக அமைவது மிக சுவாரஸ்யமானதுதான்.


கடைசியாக ஒரு கவிதையை எடுத்தாள்வதன் மூலம் இந்தக் கட்டுரையை, இந்தக் கவிதைத் தொகுப்பை இறுதியான சிருஷ்டி நிலை குறித்த கருத்தாக்கத்தினால் மனித மெய்ம்மையை கவிஞர் எப்படிப் பார்க்கிறார் என்ற நிலைக்கு வந்துவிடலாம்.


அந்தக் கவிதை,


சிறுகோட்டுப் பெரும்பாடல்

********************************

சுவரில் உண்டானால் விரிசல் 

பாறையில் என்றால் பிளவு 

வானத்தில் என்றால் வேர் 

அகன்று நின்றால் தூண் 

காகிதத்தில் கோடு 

வரைபடத்தில் பாதை 

பூவில் காம்பு 

விளக்கில் திரி 

நெளிந்தால் புழு 

மீட்டினால் தந்தி 

தேகத்திலோ நரம்பு ·.· 

அதென்ன அநியாயம்? 

எவ்வளவு நேரமானாலும் 

தீப்பந்தத்தின் நுனியைவிட்டு நகராத நெருப்பு தீக்குச்சியில் மட்டும் அத்துமீறுகிறது 

வேறுவழியின்றி இதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும் நண்பா 


ஒருபோதும் நம்மால்

ஒரு நேர்கோட்டைத் தலைகீழாய் வரையமுடியாது.

********


//ஒருபோதும் நம்மால் ஒரு நேர்கோட்டைத் தலைகீழாய் வரையமுடியாது.// என்பதுதான் அந்த மகத்தான விடுபடலாக இருக்கிறது. 


ஆனால் மனிதனின், தன்னுடைய புரிதல் எல்லைக்குள் எல்லாவற்றையும் வரையறுத்து, அதன் கருத்தாக்கங்களின் பயன்பாட்டு சாத்தியங்களின் இசைவை நோக்கியதொரு தன்மையானது அந்தக் கோட்டிற்கு A, B என்ற புள்ளிகளாக வரையறையை பாவிக்கிறது. இது மனிதனுக்கு மட்டுமே சாத்தியப்பட்ட ஒரு நுண்ணறிவு. இதன் செயல்பாட்டுத் தன்மை என்பது அதீத இயற்கையின் தன்மையைத் தன்னுடைய ஆக்கக்கூறுகளுக்குத் தேவையானதாக 

மடைமாற்றும் தேவை என்பதுகூட இயற்கையின் ஓர் அம்சமாகத்தான் இருக்கிறது.


இது அந்தத் தலைகீழற்ற கோட்டை தனது தேவைக்கேற்பத் திருப்ப முடிகிறது. அதன் மூலம் இந்த வாழ்க்கையை எவ்வாறு தனக்குச் சாதமாக மாற்றுவது என்பதன் மூலம் வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ இந்த அதி இயற்கைக்கு எதிரான தனது பயணத்தைத் திருப்புவதால் நடக்கும் எதிர்விளைவுகளையும் அதற்கான அதிகபட்ச சிதைவின் வரம்பெல்லையை வரையறுப்பது என்பதை தப்பித்துக் கொள்ளுதல் என்று எவ்வாறு நம்பமுடிகிறது?


தொகுப்பு இந்த இடத்தில்தான் தன்னை நிரந்தரமான பிரபஞ்சத்தின் கருத்துருக்களிலிருந்து முற்றிலுமாக விடுவித்துக் கொள்வதாகக் கொள்ளலாம். எப்படி முடிவற்ற கோடாயிருக்கும் ஒரு புள்ளியை, பல புள்ளிகளின் மூலம் குறிப்பிட்ட எல்லைகளுக்கு நிகழ்த்திக் காட்ட முடிகிறதோ அதேபோலத்தான், அந்தக் கருத்துருக்களின் ஒருவகையான பிரதிபலிப்புக்கு ஆட்பட்டு, அதுவே சாஸ்வதம் என்று மொழியை, கருத்தாக்கங்களை மெய்மை என்று நின்றுவிட்ட ஓரிடத்தில்தான் கவிஞர் அவற்றை அதிர்ச்சிகரமான உத்திகளாக அன்றாடங்களின் வழியாக புதிய கருத்தாக்கங்களின் தன்மையிலிருந்து விளங்கிக் கொள்ள முடியாத மதிப்பீடுகளாக முன்வைக்கிறார். இந்த உத்தி தமிழுக்கு புதியது. இதை விளங்கிக் கொள்ள வாசகன், அதன் சுவாரஸ்யத் தன்மையிலிருந்து முதலில் விடுபட வேண்டும். இந்த விடுபடலே கவிதையைத் தர்க்கங்களை நோக்கித் திருப்புவதன் மூலம் தனிமனிதன் சாராத செயல் தன்மையுடைய தத்துவத்தைக் காட்டுவதாக அமைகின்றன.


நிச்சயமாக இத்தொகுப்பு மிக சுவாரஸ்யம் மிக்கதாகவே இருக்கிறது.


"சாகாவரம்" கவிதை இப்படி முடிவதே அதன் சாதகம்தான்.


***************************************

நீரில் எறியப்படும் 'தவளைக்கற்கள்' அணைக்கட்டின் மார்பை அமிழ்த்தி அமிழ்த்திச் சோதனையிடுகின்றன. மூழ்கவேண்டிய நேரம் வந்தால் உடனே மூழ்கிவிடும் எத்தனையோ கற்களுக்கு மத்தியில்


இந்த வயதிலும் திராவகத்தில் நடந்துபழகும் சாக்கில் தன் சாவையே ஒத்திப்போடும் லாவகம் இங்கே எத்தனை பேருக்கு வாய்த்திடும்


ஆனால் இன்னமும் நாம்


நீருக்குள் நுழையும் வழிமறந்த கற்கள்தான் சலனத்தின் மேற்பரப்பை முட்டிமுட்டித் திறக்கின்றோம். மூழ்கினாலும் நனையாமலிருப்பதற்கு

*******************************************


எளிமையான கவிதைகளை கடினமான ஒரு மொழியில் விளங்கிக் கொள்வதென்பதும் ஒரு கருத்துரு தகர்ப்புதான்.

                                      - சாகிப்கிரான்

******************************************
கல்குதிரை இதழில் வெளியான கட்டுரை

Sunday, August 21, 2022

நகுலனின் முழுமையடைந்த தன்னலம்

 

நகுலனின் முழுமையடைந்த தன்னலம்

-           சாகிப்கிரான்


”வாழ்க்கை பற்றிய ஆய்வறிவின் விளைவு, யதார்த்தம் பற்றிய அந்த படைப்பளியினுடைய கலாபூர்வமான பிடிப்பேயாகும்”

-           கான்ஸ்டாண்டின் ஃபெடின்

நகுலனின் கவிதைகளை வாசிக்கும்போது திரட்சியாகத் தோன்றும் எண்ணமும் இதுதான்.

நகுலனின் கவிதைகளை, எட்டு பகுதிகளாகப் பிரித்துக் கொள்ளலாம்.

1.         எழுத்து காலக் கவிதைகள்

2.         இரு நீண்ட கவிதைகள்

3.         மூன்று கவிதைகள்

4.         ஐந்து கவிதைகள்

5.         கோட் ஸ்டாண்ட் கவிதைகள்

6.         சுருதி கவிதைகள்

7.         இறுதி பத்தாண்டு கவிதைகள்

8.         மஞ்சள் நிறப் பூனைக்குட்டி

 

1          எழுத்துக் காலக் கவிதைகள்

வெறுமையான பாதுகாப்புணர்வைத் தவிர ஒரு மனிதனுக்கு அவன் உணரக்கூடிய வகையில், அடியாழங்களில் எதுவுமே இல்லாத சூன்ய நிலையே அவனுக்கான நம்பிக்கையாக இருந்துவிடுகிறது. இது ஒரு வகையில் படைப்பாளியின் மனநிலையாக இருக்கலாம் என்பதைவிட, படைப்பாளி என்பவன் தன்னை திணித்துக் கொள்ளும் ஒரு பொந்தாக நாம் கற்பனை செய்து கொள்ளலாம். பொந்தின் இரு முனை சாத்தியம் என்பது ஒரு பக்கம் இயல்பு வாழ்வு எனும் இயற்பியலும் மறுபக்கம், சூன்யமான பொந்திருட்டும் அவனுக்கான சுய தரிசனமாக மாறிப்போன அதீதமும் அவனைத் தவிர யாரும் அடைந்துவிட முடியாத ஆழ்ந்த உள்ளடக்கமானது எப்போதும் அதன் தீவிரத்தைப் புரிந்து கொள்ள முடியாத தடுமாற்றத்தை அல்லது நமக்கு தோதான வகையில் அதை மாற்றிக் கொள்ளும் எளிய வழி முறைகளையையே பின்பற்ற வைப்பதை விட்டு யாரும் விலகிவிட முடியாத ஒரு பொந்துதான் எல்லோருக்குமானது.

அது

காதலுக்குப் பின்

தொழிலின் இறுதியில்

உலகைவிட்டுப் பிரிகையில்

சாவுக்கு அப்பால்

முதலுக்கும் முடிவுக்கும்

முன்னும் பின்னும்

முழுவதுமாகப்

பின்னிப் பிணைந்து

நில்லாமல் நிற்பது

இல்லாமல் இருப்பது

தெரியாமல் தெரிவது

சொல்லாமல் சொல்லிக் கொள்வது

எல்லோரும் நினைப்பது

யாவரையும் கடந்தது

புலனுக்குப் புரியாதது

பொருளுக்குச் சிக்காதது

என்றுமே கேள்வியாக

எஞ்சி நிற்பது

அது அதுவே.

 

ஜீவராசிகள் என்றுமே காலத்துக்கானவை. மனிதனும் அதிலிருந்து தப்ப முடியாது. நகுலனின் எழுத்து காலகட்ட கவிதைகள் யாவும் “எஞ்சி நிற்கும் அது அதுவே” என்பதைத் தேடியே நிற்கின்றன. இது அந்த இரண்டாம் உலகப்போரும் அதைத் தொடர்ந்து மனிதன் தனது சுயத்தைத் தேடும் இத்தகைய சிதைவுக்குத் திரும்பும் செயலும் இயல்பான காற்றைப்போல பொருந்திக் கொண்டது, தமிழ் இலக்கியத்தில் மிகச் சிலரே. அதில் நகுலன் மிக முக்கியமானவராக இருக்கிறார். சி. மணி இதை வேறு தளத்திற்கு கொண்டு சென்றார். அந்த வித்தியாசமே நகுலனின் உள்ளிணைந்த சாத்தியம்.

இந்த மனோநிலையின் பின் விளைவுகளே, நகுலனின் பிற்பாடு நிகழ்ந்த அனைத்து படைப்பு செயல்களிலும் லயிப்பு நிலைக்கு அப்பால் அவரைக் கொண்டு சென்று, அதன் தன்மையாக அவரை பதிலீடு செய்கின்றது. எல்லா படைப்பாளியும் எல்லைக்கு உட்படாத பிரக்ஞையிலேதான் தனது வாழ் களம் அமைந்திருப்பதாக நம்புகிறான். ஆனால் அது ஒரு பாவனையே. ஒருவன் படைப்பாளியாகும்போதே அவன் அந்த எல்லையை பிரக்ஞையின் பூரண வடிவமாக கருதிக் கொள்கிறான். அத்தகைய பூரணத்துவம் என்பதை அந்த விழிப்புணர்வின் எல்லையில், தான் இல்லை என்பதை மீட்டெடுக்கும் மற்றொரு மையமே அது.

 

2. இரு நீண்ட கவிதைகள்

மழை: மரம்: காற்று கவிதையில்

எப்போது நான் அவைகளைப் பார்க்க விரும்புகிறேனோ

அப்போது இந்தச் செய்தி என்னைச் சாகடிக்கும்.

எனவே, எனக்கு ரஷை, நான் நினைக்கிறேன்

எனது இயல்பான நிலைக்கேற்ப

ஜன்னலின் கண்ணாடிச் சாளரத்தில்

என் கண்களால் பார்க்கப் பார்ப்பது

எங்கே மற்ற ஜீவன்கள்

தங்கள் கண்களை வைக்கின்றனவோ

அங்கே கதிரவனின் ஒளிக்குக் கூசாமல்.

 

இரு நீண்ட கவிதைகளின் சாராம்சம் இதுவே. நகுலன் தன்னை, பறவையே தன்னைப் பார்க்கிறதுபோல, ஒரு மனிதனே தன்னை வெளியிலிருந்து பார்ப்பதைப் போல, ஒரு பிரக்ஞையே அந்த பிரக்ஞையை தரிசிக்கும் ஒரு அதிநிலையைக் காண்கிறார். ஆனால் அந்த நிலை தன்னைக் கொன்றுவிடும் என்ற அறிவு, அறியப்படுவதிலிருந்து வேறானது. கிட்டத்தட்ட முழு முற்றான எளிமையாக்கலாகும். எழுத்து கால கவிதைகளிலிருந்து நகுலன், புற காரணிகளின் மாயையிலிருந்து விடுபட்டு மாயையிலிருக்கும் புறக் காரணிகளை அடையாளம் காண்கிறார். இத்தகைய உள்பார்வையே தனது உந்தித் தள்ளும் அறிவார்வம் முழுவதையும் இத்தகைய தரிசனத்தை நோக்கி திருப்பினார் என்பதைக் காட்டுகிறது.

 

 

 

3. மூன்று கவிதைகள்

நகுலனே சொல்வதைப்போல வெறும் கெட்டிக்காரத் தன்மையால் ஒரு வகையான புரியாத் தன்மையை சிருஷ்டிப்பது என்பதை படைப்பில் ஒரு போலியாகவே இருக்கிறது. ஆனால் படைப்பின் உச்சகட்டம் என்பது ஒரு அபூர்வ எளிமையே என்கிறார்.

மூன்று கவிதையில் இராவண சோகம் என்ற நெடுங்கவிதையில் தன்னுடைய பார்வையில் ஒரு ராவண காதையைப் படைக்கும் நகுலன், அதற்கு அடுத்ததாக வரும் கவிதையை வெறும் நன்கு வரிகளில் முடிக்கிறார்.

நான்

எனக்கு

யாருமில்லை

நான்

கூட . . .

இதை ஒரு வறண்ட நிலை என்பதை விட, ஒரு நெருக்கடியிலிருந்து வெளியேறுதல், தன்னிலிருந்து ஒரு விளிம்பு நிலைக்கு சட்டென மனம் சென்றுவிட்ட ஒரு அவசம்தான் இது. நிஜ வாழ்க்கையும் பிரச்சனைகளும் தனக்கே உரியதாக ஆகிவிட்டாலும் மன உள்ளமைப்பில் மாறாத ஒரு தரிசன வட்டத்தை அவனுக்கு வழக்கியபடியேதான் இந்த பிரபஞ்சம் இருக்கிறது.

 

4. ஐந்து கவிதைகள்

குகன், வீடணன் போன்ற இதிகாச கதாபாத்திரங்களில் வாழும் நகுலன் தொகுதியின் முடிவில் வைக்கும் ஒரு கவிதை, பூ, ஒற்றை எழுத்து,

 

தெரிந்ததுதான்

இப்போது இன்னும்

தெளிவாகவே தெரிகிறது.

காசியபன் சொல்லவில்லையா?

அல்லது சொல்கிறாரா?

”சொல் ஓர் அடையாளம்

அடையாளத்துக்கு

அடிமைப் படாதே

ஏமாந்து போவாய்”

சொல்லுதல் என்பதுகூட

ஓர் ஏமாற்றம் என்பதுதான் போலும்

உதாரணமாக

“கூடவே சுமந்து வரும்

என் கடவுளுக்கு.”

காசியபன் சொல்வது போல்

சொற்கள் நம்மை ஏமாற்றுகின்றனவா?

அல்லது கவிஞன் செற்களைத்

துகிலுரித்துக் கொண்டே இருக்கிறானா?

ஏதோ ஒரு வெறி

எங்கிருந்தோ ஒரு வேகம்;

’’பூ’’ என்று உதறிச் சென்று

நான் என் பயணத்தைத் தொடர்கையில் கூடா

அந்த சாஷாத் சந்தர்ப்பத்தில் கூடப்

பூ என்னைக் கண்டு

சிரிக்கிறது – தோன்றுகிறது

”சாரலின் கடுஞ்சினத்தில்” கூடப்

“பூ மோகம்” உன்னை விடுவதில்லை

அர்த்தமற்ற பெரு வெளியில்

இதழ் இதழாக

ஒரு பூ விரிவதைக் கண்டு

பூ என்று உதறி எழுந்து

போக விரைந்தவன்

பூ என்று சொல்லி

வாயடைத்து நின்றேன்.

புதுக் கவிதை வரலாற்றில் ஒவ்வொரு கவிஞனும் நெடுங்கவிதைகள் எழுத முயற்சித்துக் கொண்டுதான் இருக்கிறான். நகுலனின் காலத்தில் எலியட்டின் பாழ்நிலம் கவிதை இதுபோன்ற ஒரு உத்வேகத்திற்கு காரணமாக அமைந்தது. எலியட்டின் மாதிரியை சி. மணி முயன்று பார்த்தார். ”அதுவே தமிழின் ஆகச் சிறந்த நெடுங்கவிதையாக” சி.சு.செல்லப்பாவால் எழுத்தில் இந்த அடைமொழியோடு வந்தது. ஆனால் நகுலன் அத்தகைய நேரடி முயற்சியைச் செய்யவில்லை. அவர் அசலான தன்னியல்பான நெடுங்கவிதைகளை எழுதினார். பிரமிளும் அப்படியே. ஒரு சந்தர்ப்பத்தில், சி. மணியிடம் கேட்டபோது, “செல்லப்பா சொல்றாருங்க” என்றார். அது தொக்கிய ஒரு கேள்வியாகவே நின்றுவிட்டது.

ஆனால் நகுலன் கவிதைகள் முற்றிலும் வேறானவை. ஒரு கவிதைக்கான மூல எண்ணத்தை வந்தடைவது என்பது அது தனது சொந்த அகவயமான உணர்ச்சிகளையும் மனோபாவங்களையும் புறவயமாகப் பாவிக்கவும், படைப்பாற்றலில் அதன் அழிக்கமுடியாத இடத்தை அடைவது தன்னியக்கமான, பிரக்ஞையினுள் அதை அறிவுபூர்வமாக புரிந்து கொள்வதிலிருந்து விடுபட்டு, சமகால நிலைமைகளால் மேலும் நுணுக்கமடையும் எல்லையில் திடீரென தன்னை செலுத்திக் கொள்வதென்பதை அடிப்படையாகக் கொண்டவையாக இருக்கிறது. இது ஒருவகையில் வழக்கமான உத்திகளிலிருந்து தன்னை முற்றிலுமாக உரித்தெடுத்துக் கொண்டிருக்கும் ஒன்று.

 

5. கோட் ஸ்டாண்ட் கவிதைகள்

கேள்வி பதிலாக, அல்லது வெறும் கேள்விகளாக கவிதைகளை உருவாக்குவதென்பது, இந்த மனோபாவம் அவரது தீவிர தர்க்க தூண்டலின் ஒரு வெளிப்பாடாகவே இருக்கிறது. அசாரதணமான இணை முரண்கள் மோதிக் கொள்ளும் தருணத்தின் குறுக்கே உருவாகும் கண நேர செயலின்மையே உள்ளடக்கமாக முடிவற்ற எல்லைகளாகக் கவிதைகளை மாற்றுகின்றன.

தாடி, என்றொரு கவிதையில்,

 

தன்னையே

ஒருவன் தாண்டிச் செல்லும்

நிலை எய்துகையில் இடுப்பிற்கு

மேல் தலைக்குக் கீழ் ஒரு தாடி

காற்றில் அசைகிறது உடல் –

விருஷத்தில் இந்தப் பொந்தில்

ஒரு பறவை வந்தமரும்

விந்தை. தாடியில் அவன்

மறைந்துவிடுகிறான்.

கோட் ஸ்டாண்ட் கவிதைகள் நகுலனின் அடுத்த பரிமாணம். இது ஒரு வகையில் பல கவிதைகளை அல்லது அப்படிப்பட்ட அனுபவ வெளிகளை ஒரு கருந்துளைக்குள் சிதறடிக்கப்பட்டதாகத் தோன்றுகிறது இங்கே மையத்திணிவு ஒன்றைத் தவிர, ஏன் தர்க்க ரீதியாகக் கூட ஒரு வடிவ செறிவு அதன் எளிமையான மொழியாக்கத்தால் வெறும் உள்ளீடற்ற சட்டகங்களின் தொகுப்பால் விளைந்த ஒரு நிலையில்லாத மாயத் தோற்றமாக மாற்ற முடிவது மிக வியப்பானதே. இந்த பிரபஞ்சத்தில் யாவும் மெய்யான இருத்தல் என்ற நிலையிலிருந்து இன்மையாகவே இருக்கின்றன. கோடான கோடி ஓளியாண்டுகள் தள்ளி நாம் பார்க்கும் இக்கணம் இல்லாமலிருக்கலாம். ஆனால் காலம் மற்றும் வெளி என்ற நீட்சி அந்த இருத்தலைச் சாத்தியப்படுத்துகிறது. நகுலனும் இந்த நிலையில்தான் தனது கவிதையில் வந்தடைகிறார். ஒவ்வொரு தர்க்கமும் ஒன்றை மற்றொன்று இல்லாமலாக்கி, கடைசியில் அங்கே புதிர் தன்மை வாய்ந்த ஒரு தரிசனத்திடம் நம்மை கொண்டு செல்கிறார். ஒரு நிலை மற்றொரு நிலையை பிரதிபலிப்பதும், அத்தகைய சாதரண நிலையிலிருந்து பிரதிபலிப்பு நிலைக்குச் செல்லும் தன்மை, கவிதைகளை தர்க்கத்தின் பெலஹீன தன்மைகளிலிருந்து தப்புவித்து வாசகனுக்கு புதிய திறவுகளைத் தருவதாக மாற்றுகிறது.

 

கவிதை 76

இப்போதும் ஞாபகத்தில் இருக்கிறது

நவீனன் இருந்தபோது

(இப்பொழுது அவன் இல்லை)

நான் ஒருமுறை அவனிடம்

கேட்டதும் அவன் பதில்

கூறியதும்

“ஒரு எழுத்தாளன் என்ற வகையில்

உன் கோட்பாடு என்ன?”

அவன் சிரித்துக் கொண்டே

உத்தர வேதத்திலிருந்து இரு

வரிகளைத் தீர்க்கமாக உச்சரித்தான்:”தவம் செய்வார் தம் கருமம் செய்வார்

மற்றல்லார் அவஞ் செய்வார் ஆசையுட்பட்டு”

 

6. சுருதி கவிதைகள்

படைப்பாளியின் குலைந்துபோய்விட்ட தன்னிலையை ஒரு எல்லை வரை நம்மால் பின்பற்ற முடியும். அது மனித சிந்திக்கும் திறனின் உள்ளியல்பின் ஒரு பக்கவாட்டு சாத்தியம். நகுலன் தொடர்ந்து எழுதியது எதற்காக என்ற கேள்விக்கான விடையாக இக்கவிதைகள் நிற்கின்றன. தான் என்னவாக ஆகவேண்டும் என்று அவர் கவிதைகள் நினைத்தனவோ, அதுவே இக்கவிதைகள்.

 

குரூரம்

 

ஒருவர்

சாவதும்

ஒருவர் இருப்பதும்

வெறும் சாவு

என்பதைவிட

இது

மிகவும் குரூரம்

இதைச் சொன்னதும்

சுசீலாதான்.

தமிழ் இலக்கிய உலகில், குறிப்பாக, புதுக்கவிதையில் தனது இறுதிக் காலங்களில் எழுதிய படைப்புகள் உச்சம்பெறுவது நகுலனிடம் மட்டுமே. அவர் தன்னை புதுப்பித்துக் கொண்டே இருந்தார் என்பதைவிடவும் தான் அடைய வேண்டிய எல்லையை எந்த சந்தர்ப்பத்திலும் மாற்றிக் கொள்ளவில்லை. அல்லது அப்படிப்பட்ட சந்தர்ப்பத்தைத் தவிர்த்தார் என்றோ, அத்தகைய ஆன்ம உணர்வின் சுயம் செயல்வடிவம் கொண்ட மொழியைக் கற்பித்துக் கொண்டது என்றோ கருதிக் கொள்ளலாம்.

ஒரு படைப்பாளி, தனது மத்திய காலத்தில்தான் உச்சம் பெறுகிறான். அத்தகைய பயிற்சியானது, அதாவது தொடர்ந்த செயல்பாடு என்பது இறுதிக் கட்டத்தில் வீரியம் இழந்துவிடுகிறது. இங்கே ஒரு குறிப்பிட்ட முடிவற்ற தேடு பொருள் என்று எதுவும் சாத்தியமில்லை. இவை அத்தகைய அனுபவ திரட்சி என்று உள் மனம் கண்டு கொள்வதுதான் தன்னுள் தொடர்ந்த மாறுபாடுகளை உண்டாக்கும் நிலையை அவன் அடைகிறான். இது பொதுவாக சாத்தியமில்லை. ஏனென்றால் உள்ளுக்குள் செயல்படும் ’செயல்படும் தன்மையானது’ முடிவில் செயலற்றுப் போகிறது. ஆனால் நகுலன் பரந்த நோக்கம் பெரும் மனோபாவங்களைக் கொண்டிருக்க வேண்டும். அதுவே அவரை தொடர்ந்து அத்தகைய தேடலை அது உடல் சார்ந்து ஏற்படும் ஒரு தினவுபோலல்லாமல், உள்ளம் சார்ந்த எதிர் வினையிலிருந்து முற்றிலும் வேறுபட்ட ஒரு மனோநிலையின் தேர்வு என்று ஆழ்ந்து யோசிக்கும்போது புரிந்து கொள்ளமுடிகிறது.

 

7. கடைசி பத்தாண்டு கவிதைகள்

ஒரு பூ

ரோஜா

என்றுதான்

வைத்துக்கொள்

 

அதன்

இதழ்கள் மணம்

பச்சையில்

சிவந்த முட்கள்

அதைச் சுற்றி

ஒரு வண்டு

அதன்மீது காணும்

மகரந்தப் பொடி

 

காலை மலர்ந்து

மாலை மறையும்

அதன் சாகரம்.

 

சி. மணி கடைசி காலங்களில் எழுதியக் கவிதைகளை க்ரியா ராமகிருஷ்ணன், “இவற்றை கவிதைகள் என்று எவ்வாறு எடுத்துக் கொள்வது?” என்று ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். மணி என்னிடம் வெடித்துச் சிரித்தார். இருவருமே இல்லை. ஆனால் இந்த நிகழ்வு இருக்கிறது. தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. நமக்கானவையாக, நமக்கு மிக நெருக்கமாகத் தோன்றுபவையே, ஒரு நேரத்தில் கண நேரத்துக்கானது. அதன் ஊசலாட்டம் அதை எதிர் கொள்ளும் நமது அப்போதைய மனோபாவத்தை சார்ந்தே உள் வாங்கப்படுகிறது. ஒரு மனிதனின் அகச்சாரமென்பது மற்றொரு மனிதன் எளிதில் கண்டு கொள்ளப்படும் விதத்தில் இருந்துவிடுவதில்லை. பிரக்ஞையின் தனித்தன்மையில் செயல்படும் தேடல் உணர்வென்பது கணத்துக்குக் கணம் தன்னை இட்டு நிரப்பிக் கொள்கிற ஒரு தன்மையின் அடித்தளமாக உள்ள வியப்பான தூண்டல். இது பெரும்பாலும் நிரம்பிவிடுகிற தன்மையைக் கொண்டிருந்தாலுமே, ஒரு சில ஆளுமைகள் அல்லது மனிதர்கள் அப்பாத்திரத்தில் ஒரு கசிகிற ஓட்டையை உடையவர்களாக இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் நகுலன். எப்போதும் நிரம்பிவிடாத தொடர்ந்த சமநிலையிலேயே பேணப்படும் அத்தகை தன்மையை, நிறைந்து பொங்கும் ஆத்மாக்களால் புரிந்து கொள்ள முடியாதுதான்.

இரண்டு விஷயங்கள் நடக்கின்றன. ஒன்று செயல்திறன் மிக்க வழியில் செயல்படும் மனம். இரண்டு உள் ஒடுங்கிய பித்துநிலை. இதில் முதலாவது அதிமனித அம்சங்கள் உள்ள ஒரு இறுதி நிலை. அல்லது இன்னும் விரல்கள் தொடாத ஆனால் வாசிப்பிலிருக்கும் ஒரு இசைக் கருவியின் தந்திகள். இது கோடான கோடி சாத்தியங்களை உள்ளடக்கியது. இரண்டாவது நிலை என்பது முதல் நிலையின் செயல்படு நிலை. இது வெறும் பார்வைக்கு அர்த்தமற்ற அசைவுகள். ஆனால் அதன் உபவிளைவான இசையில் எழும் கானம் அற்புததிலும் அற்புதம்.

நகுலனின் இறுதி பத்தாண்டு கவிதைகள், சி. மணியுடையதைப் போல கண்டு கொள்ளப்படாமல் போகவில்லை. அந்த விஷயத்தில் நகுலனின் ”நான்” ஒரு முழுமையடைந்த தன்னலம்தான். அவரது தனித்தன்மையானது திடுக்கிடச் செய்யும் பெரிய ஓசைக்குள் நிகழும் கண நேர மெளனம். அத்தகைய மெளனத்திலிருந்து படைப்பு ஒரு அணுவின் காளானாக முகிழ்ந்தபடியே இருக்கிறது.

 

8.        அந்த மஞ்சள் நிறப் பூனைக்குட்டி

 

இருத்தலுக்கான வேட்கையில் மறுதலிப்பின் ஒரு பூரண வெளிப்பாடே, இத்தொகுப்பு. இது நகுலனின் அகமியின் படைப்பு வடிவம்.

 

சில பொறிகள்

என்னுடன் புத்தகங்கள் இருக்கின்றன

அடிக்கடி என்னிடமிருந்து நான் போய் விடுவதுண்டு.

பேயாய் உழலும் என் மனமே

நீ

பேசாமல் இரு

ஏன் இந்தச் சிந்தனைகள்?

நான் சொல்வதைவிட நீயே கண்டு பிடித்துக் கொள்வதுதான்

உனக்கு உபயோகமாக இருக்கும்.

எது நாவல்?

என்னளவில் அது

!

?

.

இதையும் கவனி

;

எழுதிக் கொண்டே போகையில்

ஒரே ரீதியில் எழுதிச் சென்றாலும், சீராகச் சென்றாலும் பல

எழுதப்படாமலேயும், சில கீழ் அமிழ்ந்து கிடப்பதில்தான் விஷேசம் இருக்கிறது.

அப்படியென்றால்

’அது’ செயல்படுகிறது.

 

நகுலனின் இரண்டாக பிளவுபட்ட இந்த நிலையை, அறிவார்ந்த, மனவெழுச்சி கொண்ட, சீலம் சார்ந்த படைப்பாளியின் மறு வடிவமைப்பு என்று சொல்லலாம். இங்கே இயற்கை மனிதனிடமிருந்து பின்வாங்குகிறது. மனிதனின் அத்தனை செயல்பாடுகளும் உள்ளார்ந்து இயற்கைக்கு எதிரானதுதான். ”நவீனன்” என்பவன் வரம்பிற்குட்பட்ட செயல்திறனிலிருந்து திசை திருப்பப்பட்டு, அதி நிலையின் சாத்தியப்பாடுகளை நோக்கித் செயல்படுபவனாக இருக்கிறான். இது ஒருவகையில் பிளவு மனநிலையின் செயற்கூறுதான் இது.

கடைசியாக, அவர் கூறுவதையே, இந்த இயற்கைக்கும் மனிதனுக்குமான இடை அம்சமாகக் கொள்ளலாம்.

 

அதெல்லாம் அப்படித்தான். நீயும் பல எழுத்தாளர்களைப் போல கனவு நிலையில்தான் இயங்குகிறாய். கனவு பேய்க் கனவாகும். கனவுகள் சிறாமீனின் பிளந்த வாய்களாகும்

 

அடிக்கடி அந்த மஞ்சள் நிறப் பூனையைக் காணாவிட்டால் ஒரு மாதிரி இருக்கிறது.

ஏன்?

தெரியவில்லை. என்னுடன் பூர்ண சுதந்திரத்துடன்  பழகினாலும் என்னிடம் அதற்கு ஆசையோ,அன்போ, மரியாதையோ கிடையாது. தின்ன வேண்டியதைத் தின்றுவிட்டு போய்விடும். சில வேளைகளில் கொடுத்தாலும் நிராகரித்துவிடும். சில வேளைகளில் நான் உள்ள இடத்தில் என் கண் காணப் படுத்துக் கொண்டிருக்கும். என்றாலும் அதன் உருவம் என்னை வசீகரிக்கின்றது. (ஒரு முறை என் எதிர் அறையில் கட்டிலுக்கு அடியில் ஒரு அணிற்பிள்ளையைக் கவ்விக் கொண்டு பதுங்கியிருந்தது. என்னைக் கண்டதும் அந்த அணில் பிள்ளையைக் கவ்விக் கொண்டே ஓடிவிட்டது. இதுவும் ஞாபகம் வருகிறது. பின்னாடி தெரிந்தது. இது என் கண் மறைவில் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது என்பது) என் அதிகாரம் அதனிடம் செல்லாது. இதுபோல் நாம் மனிதர்களிடம் இருக்க முடியுமென்றால்?

ஏன் முடியாது? ஒரு லஷ்ய-அலஷ்ய பாவம். ஒன்றையும் பொருட்படுத்தாது தன்னிடமிருந்தே போய் விடுதல்.

அந்த மஞ்சள் நிறப் பூனை உன்னை விட்டுப் போனாலும் எங்கேயோ ஒரு இடத்தில் இருக்கத்தான் இருக்கிறது. இந்த நிச்சயம் இருந்தால் போதும் ஓம் என்று சொல்லவும் கற்றுக் கொள்ள வேண்டும். (ஆம் என்பதை அந்த நண்பன் ஓம் என்று உச்சரித்ததும் ஞாபகம் வருகிறது.)

இதைச் சொல்லிவிட்டுச் சச்சிதானந்தம் பிள்ளை சென்றுவிட்டார்.

 

அந்த மஞ்சள் நிறப்பூனை வேறு யார்? அந்த கணத்தில் அது தன்னலமான ஒரு நகுலனின் பிரதிதான். அல்லது இந்த இயற்கை, தன்னை செழுமைபடுத்திக் கொள்ளும் ஞானம் அது.

 

(வாசிப்புக்கு காவ்யா வெளியிட்ட நகுலன் கவிதைகள், நகுலன் 100 சிறப்பு வெளியீடும், சுருதி தனித்தொகுப்பும் காவிரியின் அந்த மஞ்சள் நிறப் பூனைக்குட்டி PDF பிரதியும் பயன்பட்டது. காவ்யாவின் வெளியீடு ஒரு தண்டனையாக இருந்தது. நகுலனுக்காக அந்த மஞ்சள் நிறப் பூனையாக அதை ஏற்றுக் கொண்டேன்.)


("கனலி" இணைய இதழில் "நகுலன் நூற்றாண்டு சிறப்பிதழில்" வந்த கட்டுரை. )

Thursday, May 19, 2022

சிதைவை நோக்கி . . . (சி. மணியுடன் சில வருடங்கள்)

   


1.பெருவெடிப்பு

ஒரு மழைக்காலம். இரவு மழைக் கொட்டித்தீர்த்திருந்தது. நகரம் சுத்தமாகி, மிகக் கண்ணியமான ஒரு கதியில் நகர்ந்து கொண்டிருந்தது. அன்று ஞாயிற்றுக்கிழமை. வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைக்கே உரிய நிதானம் வந்து ஒட்டிக்கொண்டது. இயல்பானதோ அல்லது ஒரு புரிந்துணர்தலாகவோ, பகுக்க முடியாத ஒரு மனநிலையாகவோ உணர்ந்தேன். வழக்கம்போல எல்லா ஞாயிறும் தூங்கிக் கழிக்கும் ஒன்றாகவோ, இலக்கிய நண்பர்களைச் சென்று பார்பதாகவோ, இலக்கிய கூட்டமொன்றிற்குச் செல்லும் குதூகலமாகவோ, ஏதாவது பிற மொழிப் படம் பார்ப்பதாகவோ இருந்து கொண்டிருந்தது. இத்தகைய இலக்கிய செயல்பாடானது விளக்க முடியாத ஒரு மகிழ்ச்சியைத் தருவதாக இருந்தது. அது எத்தகைய ஒரு பயன்பாடும் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. சமயத்தில் எல்லா அன்றாடச் செயல்களையும் ஒருவித கவனிப்புடன் ஈடற்ற கருணையோ, கரிசனமோ பொங்கும் ஒருத்தப் பார்வைக் கொண்டதாக மாற்றுவதாக அமைந்துவிடுகிறது. இது புற நோக்காளிக்கு போக்கற்ற செயலாக, வெட்டி வேலையாக, அல்லது இதுதான் அவன் இயல்பு என்று வகைப்படுத்திவிடும் ஒரு எளிய செயலாகத் தோற்றம் கொண்டுவிடுகிறது.


சொன்னபடி சீனிவாசன் நண்பகல் பதினொன்றிற்கு வீட்டிற்கு வந்துவிட்டார். யாரைப் பார்க்க என்றதற்கு, ‘அது ரகசியம் அல்லது பூடகமான ஒன்று’ என்றார். இரு சக்கர வாகனத்தில் அம்மாபேட்டை செளண்டம்மன் கோவில் தெரு, முப்பத்தி நாலாம் கதவிலக்கம் கொண்ட வீட்டைத் தட்டினோம். 


சார் இருக்கிறாரா? கேட்டது சீனி. 

தூங்குகிறார். பன்னிரண்டு மணிக்கு மேல் வாங்க . . .


யாரு, சீனி?

சி. மணி.


அதிர்ந்துபோனேன். பதற்றம் தொற்றிக்கொண்டது. ஒரு கட்டத்திற்கு மேல், நான் வரவில்லை என்றேன். அவரைப் பார்க்க இது சரியான தருணமாகத் தோன்றவில்லை. தேர்வுக்குப் போவதைப்போல எந்த ஏற்பாடும் இல்லாமல், எதையும் படிக்காமல், மிக தட்டையான ஒரு நிலையுடன் வந்துவிட்டதாகத் தோன்றியது. 


சீனி ஆசுவாசப்படுத்தினார். அருகிலிருந்த ஒரு தேனீர் விடுதியில் தேனீர் குடித்தோம். மிக ஆழமாகப் புகைப்பிடித்துக் கொண்டிருக்கும் சீனி, நல்லத் தயாரிப்புடன் வந்த ஒரு மாணவனைப்போல தோன்றினார். மணி பன்னிரெண்டைத் தொட்டது. எனக்கு சில நினைவுகள் மின்னலிட்டன. மீட்பு கவிதையே சி. மணியை எனக்கு இணக்கமான ஒரு கவியாக இனம் காண வைத்தது. அந்தக் கவிதை வெறும் மூன்று வரிதான்.


கம்பிகள் கூறு போட்ட

கீழ்வான ஆரஞ்சை

சன்னல் நெருங்கி மீட்டேன்.


இந்தப் படிமமும் அது கொண்டிருக்கும் பொருட்திணிவும் என்னைப் பாடாய்ப் படுத்தியிருக்கின்றன. நிறைய நாட்கள் இந்தக் கவிதைக் குறித்த எண்ணங்களிலேயே என்னை முற்றாக இழந்ததுண்டு. ஆனால் மிகக் குறைந்த வாசிப்பே கொண்டிருந்த எனக்கு சி. மணி சேலம்தான் என்பதோ, அவரைப் பார்ப்பதற்கான சாத்தியமோ தெரியாமல் இருந்தது. இதை பின்னாளில் ஒரு குறைபாடாககூட மனம் கசந்ததுண்டு. இந்தக் கவிதையைக் குறிப்பிட்டுத்தான் சுஜாதா சி. மணியை ஏதோ ஒரு வார ஏட்டில் எழுதியிருந்தார். 


மீண்டும் வீட்டிற்கு வந்து கதவைத் தட்டினோம். மிகப் பதட்டமாக இருந்தது.


அவரை, ஏற்கனவே ஒருமுறை சீனி பார்த்திருப்பார் போல. தாழ்வாரத்தில் அவரது வருகைக்காகக் காத்திருந்தோம். மிகத் தேய்ப்பான ஒரு செருப்பணிந்தக் காலடி ஓசை உள்ளறையிலிருந்து வெளிப்பட்டது. எனது இதயம் வேகமாக இயங்கத் துவங்கியது. மெலிந்த தேகமாக, முகம் ஒட்டிப்போய், மிக உயரமானதால் கூன் விழுந்த கழுத்துடன் அறுபது வயதில் ஒருவர், சி. மணி எங்களை வரவேற்றார். உள்ளறைக்குச் சென்று உட்கார்ந்தோம்.


என்ன சாப்பிடரிங்க, காபி? 


நான் அமைதியாகவே இருந்தேன். அல்லது எனக்கு பேசுவதற்கு ஒன்றுமில்லாமலிருந்து. மிக நிதானமான உரையாடல். அடுத்து என்முறை. மிகத் தயக்கத்துடன் பதிலளித்தேன். அவரது கேள்விகள் பெயரில் ஆரம்பித்து, பல கிளைகளாக கிளைத்து வளர்ந்தன. ஒரு கட்டத்தில் என்னைப் பற்றியே என்னால் தெளிவாகச் சொல்ல முடியாமல் இருந்தது. நிலம் சார்ந்து, தொழில் சார்ந்து, குடும்பம் சார்ந்து, கல்வி சார்ந்து விரிந்தது. என்னைப் பற்றிய ஒவ்வொரு விஷயத்திற்கும் எனக்குத் தெரியாத ஒரு அல்லது பல கேள்விகளை அவர் வைத்திருந்தார். மிகக் கவனமாக எனது வார்த்தைகளைக் கவனித்தார். நான் பேசும்போது அமைதியாகக் கேட்டுக்கொண்டார். ஆனால் நிறைய சமயங்களில் அவர் கேள்விகளை முடிப்பதற்கு முன்பாகவே அதற்கான பதிலாக நான் அனுமானித்ததை உளரிக் கொண்டிருந்தேன். அவர் ஒரு கணம் சற்றே கோபப்பட்டதைப் போல, நிதானித்து கேள்வியை முடித்தபோது, எனது பதில் சற்றும் தொடர்பற்ற ஒன்றாக இருந்தது. தடுமாறினேன். சீனி எந்தத் தடுமாற்றமுமில்லாமல் சி. மணியின் கவிதைத் தொகுப்பைப் புரட்டிக்கொண்டிருந்தார்.


காபி வந்தது. தனது மனைவியையும் பேரன்களையும் மகன்களையும் மருமகள்களையும் எங்களுக்கு அறிமுகப்படுத்தினார். எனக்கு மிகக் கூச்சமாக இருந்தது. இவ்வளவு மதிக்கத் தக்கவன்தானா நான் என்று சங்கடப்பட்டேன். 


பிறகு தனது கவிதைகளை வாசித்ததுண்டா என்ற தொனியில் கேள்விகள் சென்றன. நான் மீட்பு கவிதையைப் பற்றி சொன்னேன். மறுமொழியில்லாமல் மெளனமாக இருந்தார். கவிதை பற்றிய எனது பார்வை பண்படாத ஒன்றோ என்ற சந்தேகம் அடைந்தேன். அதற்கு மாற்றாக எனது தேடலின் தன்மையை அவருக்கு இணங்காட்ட முயன்றேன். வாழ்வின் அபத்தம் பற்றியும், பிரபஞ்சம் குறித்தும், கவிதையில் அழகியல், மேற்கத்திய அல்லது கீழத்திய கவிதைத் தன்மைகளை பேச ஆரம்பித்தேன். நேரம் மதிய உணவு நேரத்தைத் தாண்டிக்கொண்டிருந்து. சீனிவாசன் கிளம்பலாம் என்றார்.


கிளம்பினோம்.


நேரமிருந்தால் இந்தப் பக்கம் வாருங்கள் சாகிப்கிரான் என்றார். சரி என்றேன். அவர் எனது பெயரை முன் எப்போதும் யாரும் அழைத்துவிட்டிருக்காத ஒரு தெளிந்த உச்சரிப்புடனும் அழுத்தமாகவும் அழகாகவும் அழைத்தார். ஆனால் எனது பெயரை அவரிடம் ஒருமுறை மட்டுமே சொல்லியிருந்தேன். அது தாஜ்மகாலின் ஷாஜகானின் விருப்பப் பெயர் என்றும் குறிப்பிட்டிருந்தேன். 


வானம் மீண்டும் இருண்டு மின்னலடித்துக் கொண்டிருந்தது.


அன்று முழுதும் நான் மிகத் தீவிரத்தன்மையடைந்த ஒரு இலக்கியவாதியைப் போல நடந்து கொண்டேன். வாழ்வில் மிகப் பெரிய சிகரத்தை அடைந்துவிட்டதாக உணரத் தொடங்கினேன். என் தேடலுக்கான முழு விடையும் அவரிடம் இருப்பதாக கற்பித்துக் கொண்டேன். கவிதை மட்டுமில்லாது, வாழ்வின் அபத்தம் அல்லது அத்தகைய ஒரு சாத்தியமானது ஏன் புரிபடாத ஒன்றாக இருக்கிறது? 


படைப்பாளிகள் தேடிக்கொண்டிருப்பது இதைத்தானா? ஏன் நான் இதுவரை பார்த்த, சந்தித்த எல்லா படைப்பாளிகளும் இயல்பில் எனது பக்கத்து வீட்டுக்காரனைப் போல, ஒரு பங்காளியைப் போல, அல்லது அன்றாட வாழ்வின் வெகு சராசரியாகவே இருக்கிறார்கள்? இதுதான் உண்மை என்று நம்பிக் கொண்டிருந்த எனக்கு, ஒரு பெரிய அதிர்ச்சியாக இந்த சந்திப்பு அமைந்தது. 


இலக்கியத்தை தனது இயல்பு வாழ்வாகக் கொண்டிருக்கும் சி. மணியை, கவிதை எழுதும் அல்லது படைப்பாளியாக இருக்கும் ஒரு மனிதனாக என்னால் கருத முடியவில்லை. அதிசயமாகவே எனக்குப்பட்டது. மிக நேர்த்தியான ஒரு கவிதையைப்போல வாசிப்பனுபவத்தின் நுட்பத்தை தேர்ந்த மொழி நடையானது கைக்கொண்டிருப்பதாகத்தான் எனக்குத் தோன்றியது. அந்நிய பிரதேசத்தில், அல்லது குட்டி இளவரசனின் ஏதோவொரு கிரகத்தில் இறங்கியதாக கிறக்கம் தோன்றியது. இந்தக் கிறக்கமே அல்லது யாருக்கும் கிடைக்காத ஒரு வாய்ப்பே என்னை மீண்டும் அவரைப் பார்க்கத் தூண்டியது.


2.இரண்டாம் நாள்



இரண்டு வாரம் கழித்து, ஞாயிற்றுக் கிழமையில் அவரைச் சந்திக்கச் சென்றேன். இந்தமுறை நான் தனியாகச் சென்றது ஒரு நடுக்கத்தை மனதில் உருவாக்கியிருந்தது. அப்படி ஒன்று தேவையில்லை என்றாலும் அவரது புதுமையான அணூகுமுறையானது எனது ரகசியங்கள், பலகீனங்கள் பலவற்றை வெளிக்கொண்டு வருவதாக இருந்தது.


அநேகமாக நான் அவரை சந்திக்கச் சென்றது, அவரது லண்டன் பயணத்திற்குப் பிறகுதான். இரண்டாவது சந்திப்பிலேயே மிக நெருக்கமான ஒரு நட்பை உருவாக்கும் விதத்தில் எனது நடைமுறைகளை மாற்றியமைத்துக் கொண்டேன். ஏனென்றால் இரண்டாவது சந்திப்பானது எனது தனிப்பட்ட ஆளுமையையே மாற்றுவதாக அமைந்துவிட்டது.


அழைப்புமணியை அழுத்தி சிறிது நேரத்தில் தேய்ந்தக் காலடி ஓசைகளுடன் வந்த அவர், முன்னால் இருந்த வராண்டாவில் என்னை அமர வைத்தார். பிறகு உள்ளே சென்ற அவர் அரைமணி நேரம் கழித்தே வந்தார். பாத்ரூம் சென்றதாக மன்னிப்புக் கேட்டார். அந்த அரைமணி நேரம் என்பது மிகப்பெரிய யுகமாகக் கழிந்தது. எனது காத்திருப்பானது நேரம் ஆக ஆக, வலுவானதாக மாறியது. அது மிகப்பெரிய ஆக்கச் சக்தியைத் தக்கவைக்கக் கூடிய ஒரு நீண்ட குச்சியாக மாறத் தொடங்கியது. அந்த காத்திருப்பின் மூலமாக நான் எனது இருப்பை மறுபரிசீலனைச் செய்ய வாழ்நாளில் முதல்முறையாக தருணம் வாய்த்ததாகக் கருதினேன். ஆனால் ஒவ்வொருமுறையும் அவ்வாறே காத்திருக்க வேண்டும் என்று அப்போது எனக்குத் தெரியாது.


வழக்கம்போல காபி வந்தது. 


வினைச்சொல் அகராதி ஒன்றை உருவாக்கும் வகையில் அவரது லண்டன் பயணம் அமைந்திருந்தது. இயல்பிலேயே மெலிந்த தேகமும், அசைவ உணவை மறுப்பவருமான சி. மணிக்கு அந்த கடுங்குளிர் பிரதேச பயணமானது மிகச் சிக்கலான ஒன்றாகவே இருந்திருக்கிறது. வெறும் சாக்லேட்டையும் காபியையுமே எடுத்துக்கொண்டு, மிக பெலஹீனமாக உணர்ந்திருக்கிறார். அது அவரை மாயத்தோற்றங்களை உருவாக்கும் அளவிற்கு மூளையை மழுங்கடித்திருக்கிறது. தனது மனைவி அங்கே வரவேற்பரையில் காத்திருப்பதாக யாரோ கூறியதாகக் கூட சொன்னார். 


ஆனால் வினைச்சொல் அகராதிக்கான பணியை முடிக்கும்போதுதான் அவரை யாரோ ஒரு நண்பர் தமிழ் உணவு விடுதி ஒன்றிற்கு அழைத்துச்சென்று சாதம் வாங்கித் தந்திருக்கிறார். மிகக் குறைந்த, மிக அந்நியமான சூழலிலும் மிகத் தீவிரமாக இயங்கிய அவர், லண்டனில் இறங்கியதும் ‘சார்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறார். அது மிகக் கடைநிலையான ஒரு மரியாதைச் சொல்போல. அல்லது நாம் இந்தியாவில் பயன்படுத்துவதுபோல இல்லை என்றார். அங்கே இருக்கும் கட்டுப்பாடுகளும், இந்தியர்களுக்கான மரியாதையையும் அவரை அங்கே தொடர்ந்து இயங்க விடவில்லை. சென்ற வேலையை முழுவதுமாக முடிக்காமலேயே இந்தியா திரும்பினார்.


இங்கே இந்தியாவில், தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் அம்மாபேட்டை திரெளபதை அம்மன் கோவில் தெருவின் 34 எண் வீட்டில் வாழும் சி. மணியை சார் என்று அழைக்காமல் வேறு என்னவென்று அழைப்பது என்று புரியவில்லை. அவர் சிரித்தார். சார் என்றே அழைக்குமாறும் கூறினார்.


இந்த இரண்டாம் சந்திப்பு எனக்கு வேறு ஒரு முக்கியமான விஷயத்தையும் கற்றுத் தந்தது. எனக்குத் தெரிந்த ஒரு விஷயத்தைப் பற்றி அவர் பேசும்போது இடையில் அடிக்கடி நான் குறிக்கிட்டு, அவரது கவனத்தைச் சிதறடிதேன். அது அவரை எரிச்சலடைய வைத்திருக்கக் கூடும். In Search of The Miraculous புத்தகத்தைப் பற்றி தெரிந்து கொள்ளச் சொன்னார். அது G. I. Gurdjieff உருவாக்கிய இயங்குமுறையைப் பற்றி உஸ்பென்ஸ்கி தொகுத்தெழுதிய ஓர் அபூர்வமான புத்தகம். அது மனிதனின் விழிப்பு நிலையைப் பற்றி பேசுகிறது. மனிதனின் பூரண விழிப்புணர்வை மீட்டெடுக்கும் ஒரு கருவியாக, செயல்முறையாக அது அமைந்திருந்தது. மனிதன் விழிப்பற்ற நிலையிலேயே தனது வாழ்நாளை முடித்துக்கொள்கிறான். அதாவது, அவன் காபியை அருந்தும்போது அந்தக் காபியை அருந்தும் உணர்வை தக்கவைத்துக் கொள்வதில்லை, மாறாக தனது அலுவலக அல்லது வீட்டு நினைப்புடனே அந்தச் செயலை ஒரு அனிச்சைச் செயலைப்போல செய்துமுடிக்கிறான். இது தூக்கத்தில் நடக்கும் ஒரு செயலுக்கு ஒப்பானதுதான். 


அன்றிலிருந்து நான் காபியை காபியாகப் பருகத்துவங்கினேன். செவியையும் கூர்மைபடுத்திக்கொண்டேன். சமயங்களில் நான் பேசுவதை நானே செவியுற ஆரம்பித்தேன். அத்தகைய விழிப்புநிலைக்கு இதுவே முதல்படியாக நான் உணர்ந்தேன். சரி இதுபோன்ற விழிப்புநிலையின் பயன் என்ன என்ற கேள்வி என்னுள் ஒலிக்கத் துவங்கியது. அது தொடர்ந்து என்னைத் துரத்தியபடியே இருந்தது. அது வாழ்க்கைக்கான மூல ஆதாரக்கேள்வியாக இருக்கக் கூடுமென எனக்குத் தோன்றியது. சி. மணி எனது பிரஞ்ஞையின் உதற முடியாத ஒரு உறுப்பாக ஒட்டிக்கொண்டார். எனது அன்றாட அத்தனை நடவடிக்கைகளிலும் அவரது இயல்பு நீங்கா இடம் பிடிக்கத் துவங்கியது. நான் என்னை சி. மணியாகவே கற்பனை செய்து கொள்ள ஆரம்பித்தேன். சமயங்களில் அது எவ்வளவு அபத்தமானது என்று சிரித்துக் கொள்வேன். அவரது இயல்பானது தன்னை மாற்றிக்கொள்ளாத, எவராலும் கைக்கொள்ள இயலாததும் அரிதானதுமான ஒரு தன்மையைக் கொண்டிருந்ததைக் கண்டு கொண்டேன். அது எத்தகைய முன்மாதிரியும் கொண்டிருக்காத, தாந்தோன்றியானது என்பதை நாள்பட உணர்ந்து கொண்டேன்


. இனிமேல் வருவதற்கு முன்னால் ஒரு போன் செய்துவிட்டு வரச்சொன்னார். 



2. சி. மணி கவிதைகள்



முதல்வேளையாக சி. மணியின் இதுவரை கவிதைத் தொகுப்பையும், க்ரியாவின் தற்கால தமிழகராதியையும் வாங்கினேன். அவரது கவிதைகளை தொடர்ந்து வாசிக்கத் தொடங்கினேன். கவிதை தனக்கான விளக்கத்தைக் கொண்டிருந்தால் அது கவிதையிலிருந்து உரைநடையாக மாற்றமடைந்துவிடுகிறது. அப்படியென்றால் நவீனக் கவிதையானது எப்படி தனது சூக்குமங்களை விரித்துக்கொள்ள இயலும் என்ற கேள்வியும் தொடங்கிவிடுகிறது. சி. மணியின் கவிதைகள் தனது செவ்வியல் தன்மையிலிருந்து இந்தியத் தன்மையில் மிக விசித்திரமான மேற்கத்திய சிந்தனை மரபுகளின் வேர்களை பாய்ச்ச ஆரம்பித்தன. ஒவ்வொரு கவிதையும் அந்தக் கவிதைக்கான ஒரு நுழைவைக் கொண்டிருக்கும். அதுவே அந்தக் கவிதையை நம்முள் கொண்டு செலுத்தும் சாத்தியத்தைக் கொண்டிருக்கிறது.


தொழில் மயக்கம் என்ற அவரது கவிதையானது, கிட்டத்தட்ட ஒரு வார்த்தை அல்லது சொல் பற்றாக்குறையால் பத்து வருடங்கள் முடிவுறாமல், முடிக்க முடியாமல் இருந்திருக்கிறது. அந்தப் பதமானது ஒலிப்பதிவு. Recording என்ற தொழில் நுட்பம் கண்டுபிடிக்கப்படும்முன் அதற்கான தேவையை முன்னிறுத்தி இருந்திருக்கிறது. நவீன கவியானவன், எவ்வாறு வெறும் மொழியறிவை, கற்பனையை, கவிப்புனைவைத் தாண்டி, அறிவியல், வரலாறு, விண்ணியல், மனோத்தத்துவம், மருத்துவம், உடற்கூறியல், இசை, ஓவியம், விளையாட்டு, தொன்மங்கள், வேதாந்தங்கள், சித்தாந்தங்கள், தத்துவ ஞானங்கள், அதற்கு அப்பால் இயங்கிக் கொண்டிருக்கும் சகலத்தையும் தெரிந்திருக்க வேண்டியவனாகிறான். அத்தனையும் சாத்தியம்தானா என்பது சி. மணியைப் பார்த்ததும் எனக்கு ஆமாம் என்று தோன்றியது.


அவர் வழக்கமான கற்பித்தல் முறையை முற்றிலும் மறுத்திருக்கிறார். எல்லோரும் நினைப்பதுபோல அவர் Teacher’s Training College லிருந்து விருப்ப ஓய்வோ, ஓய்வோ பெறவில்லை. வழக்கமான அந்தக் கற்பித்தலுக்கு மாற்றான ஒரு முறையைக் கண்டடைந்திருக்கிறார். அதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டதும் தனது பணியைத் துறந்திருக்கிறார். பிறகே நடைக்கான அவரது தேடல் தொடங்கியிருக்கிறது. 


அவர் ஒருபோதும் எந்த விஷயத்தையும் நேரடியாக விளக்கியது கிடையாது. அது அவருக்கு இணக்கமான ஒன்றாகவும் இருந்ததில்லை. அவரது கேள்விகள் அடிமடியில் கை வைப்பவை. நம்மால் அல்லது யாராலும் அத்தகைய ஒரு கண்ணோட்டத்தில் எதையும் அணுகியிருக்க முடியாது. அவரது அணுகுமுறையானது எந்த ஒன்றை நாம் தெரிந்து கொண்டால் மற்ற எல்லாம் தெரிந்துவிடுமோ அதை உணர்த்துவதாகவே இருந்தது. ஒரு முறை இதை அவருக்குச் சொல்ல வேண்டும் என்ற உந்துதல் எனக்கு ஏற்பட்டது. நேரடியாகச் சொல்ல இயலாமல், ஒரு போஸ்ட் கார்டில் எழுதி அனுப்பினேன்.


‘யார் வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம். ஆனால் திருத்தி மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை எடுத்துரைத்து தனது விமர்சனத்தை நியாயப்படுத்தும் செயலை சாதாரண ஆட்கள் செய்ய முடியாது’ என்று எழுதியிருந்தேன். 


இது தனது ஆசான் யாமாஸான் பற்றி அகிரா குரோசாவா தனது Something Like an Autobiography என்ற நூலில் குறிப்பிடும் கருத்து. இது சி. மணிக்கு முற்றிலும் பொருந்தும். அவர் எந்த சந்தேகங்களுக்கும் எனக்கு இதுவரை விளக்கமளித்ததில்லை. எந்தக் கருத்தையும் வெளிப்படையாக விளக்கியதுமில்லை. மிக உன்னிப்பான கவனிப்பின் மூலம் அவரது பேச்சில் நாம் கொண்ட சந்தேகங்களுக்கான விடை எப்போதாவது கிடைக்கலாம். 


அடுத்தமுறை நான் அவரைப்பார்க்கப் போனபோது, அவர் அந்தப் போஸ்ட் கார்டைப் பற்றி ஏதாவது குறிப்பிடுவார் என்று எதிர்ப்பார்த்தேன். அமைதியாகவே இருந்தார். தொடர்ந்து ஒவ்வொரு ஞாயிறும் அவரைப்போய்ப் பார்ப்பதை வழக்கமாக்கிக் கொண்டேன். அப்போது எனக்கு அடிக்கடி வயிற்றுத் தொல்லை வந்துவிடும். வயிற்றுப் புண்ணும் தலைவலியும் என்னைப் பாடாய்ப்படுத்திய காலம் அது. அவர் மருந்துகள் பற்றிய மிக ஆழமான தெரிதல் கொண்டிருந்தார். அப்போது நான் சாப்பிட்டு வந்த மருந்துகள் dye based தன்னை கொண்டவை என்று குறிப்பிட்டார். அவை எத்தகைய உடல் வினையாற்றும் என்பதையும் சொன்னார். இதற்கு ஹோமியோபதி மருந்துகள் நல்ல பலன் தரும் என்றார். நான் பதில் ஏதும் சொல்லவில்லை. 


கிளம்பும்போது காபி அருந்திய பாத்திரத்தை சமயலறையில் வைக்கப்போனேன். அவர்களது வீடு எனக்கு மிக நெருக்கமானதாகிவிட்டது. அப்போதுதான் பார்த்தேன், இருட்டாக இருந்த நடையில் ஹோமியோபதி மெம்பர்ஷிப் சர்டிபிகட் சட்டகமிடப்பட்டு தொங்கிக் கொண்டிருந்தது. அதில் எஸ். பழனிசாமி என்ற பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. அதுதான் அவரது இயற்பெயர். எனக்கு எந்த மருந்து சாப்பிடலாம் என்று கேட்டேன். ‘அடுத்தமுறை சொல்கிறேன்’ என்றார். உடனே நான் ‘கார்டு வந்து சேர்ந்ததா சார்’ என்றேன். ‘ஆமாம்’ என்றார். பிறகு வாசல் வரை வந்து வழியனுப்பினார். இன்று மட்டுமல்ல, ஒவ்வொருமுறையும் அவர் அவ்வாறே வழியனுப்புவார். 


அவர் கார்டுக்கு பதில் சொல்லாதது எனக்கு ஆச்சர்யம் எதையும் உண்டாக்கிடவில்லை. செல்போன் புழக்கத்திற்கு வந்திராத அந்த சமயங்களில் அஞ்சல் அட்டைகளில் அடிக்கடி எனக்கு கடிதங்கள் எழுதுவார். அந்த வாரம் என்னால் போகமுடியாத அளவிற்கு அலுவலக வேலை ஏதேனும் இருந்திருக்கும். பிறகு வாரத்திற்கு இரண்டு நாள் செல்ல ஆரம்பித்தேன். என்னோடே நாமக்கல் நண்பர் சர்வராஜும் வருவார். அவர் வெகுகாலமாக அவரைப்பார்க்க வந்து கொண்டிருக்கிறார். நாங்கள் மட்டுமில்லாமல் இன்னும் சிலரும் அவரைப் பார்க்கத் தொடர்ந்து வந்து கொண்டிருந்தனர்.


ஒவ்வொருமுறை நான் போகும்போதும் யார் யார் வந்தார்கள், அவர்களுடன் நடந்த உரையாடலின் சுருக்கத்தை எனக்குச் சொல்லிவிடுவார். ஆனால் விஷயங்களை வெறும் தகவல்களாகவே சொல்லுவார். அதில் அவர் எந்தக் கருத்தையும் முன்னிருத்தாமல் மிக அந்நியமான ஒன்றாகவே வெளிப்படுத்துவார். ஒவ்வொரு பெளர்ணமியும் மிக விஷேசமானது. பெரும்பாலும் நானும் சர்வராஜுவும் அங்கே இருப்போம். எங்களிருவரையும் வீட்டின் மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றுவிடுவார். அங்கே முழுமதி கந்தகிரி மலையைத் தாண்டி ஒளிர்ந்தபடி இருக்கும். அவர் குழந்தைகளை உட்கார வைக்கும் புட்டிக்கூடை இருக்கையில் அமர்ந்திருப்பார். முதல்நாள் பார்க்கும்போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அந்த மிகச் சிறிய கூடைச்சேரில் அவ்வளவு எளிதில் யாரும் அமர்ந்துவிட முடியாது. அவரைத் தவிர அதில் யாரும் அமர்வதும் இல்லை. அவருக்கு அருகிலேயே அந்த மதுப்புட்டியும் நிலா காய்ந்தபடி இருக்கும். அவர் மதுவை நேரடியாக எந்த கலப்புமில்லாமலும் துணை உணவுகள் இல்லாமலும் அருந்துவார். நாங்கள் அவருக்கு எதிரில் மிக உயரமான இருக்கைகளில் அமர்ந்திருப்போம். கீழே அமர்ந்தாலும் விடமாட்டார். 


இரவு வெகுநேரம் பேசியபடி இருப்போம். அவரை எந்த அளவு மதுவும் நிலைகுலைய வைத்ததில்லை. அப்போது நிறைய கவிதைகளை வாசித்திருக்கிறோம். இசையைப் பற்றி பேசியிருக்கிறோம். நாவல் பற்றி, பிரபஞ்சம் பற்றி, மரணம் பற்றி, ஒருமுறை ‘உஸ்பென்ஸ்கி ஏன் தனது இறுதி நாட்களில் அளவுக்கதிகமாக மதுவை குடித்து, தனியனாக அவனது அறையில் செத்துக் கிடக்க வேண்டும்’ என்ற ஒரு கேள்வியைக் கேட்டார். அது மிக முக்கியமான ஒரு கேள்வியாக இருந்தது.  P. D. உஸ்பென்ஸ்கி அடிப்படையில் ஒரு கணித அறிஞன். தத்துவ தேடலில் தன்னைக் கரைத்துக் கொண்ட தத்துவ ஞானி. 


In Search of The Miraculous யை எழுதியவன் அவன். அக்கினியைப் போல மது ஒருவகையில் மனிதனை கிளர்ச்சியடையச் செய்வதுமட்டுமல்லாது, அவனை அபத்தத்தின் இறுதிக்கு இட்டுச் செல்கிறது. மிக வலுவான உடல் மனதின் உள்முக தியானங்களுக்கு பெரிய தடையாக இருந்துவிடுகிறது. மிகச் சோர்வுற்ற, பெலகீனமான காய்ச்சல் கண்ட உடலானது மிக அதிக கற்பனைத் திறனையும் மாயத்தோற்றங்களையும் உருவாக்கிக் கொள்வது இத்தகைய ஒரு அமைப்பால்தான். மதுப்புட்டியுடன் தொடர்ந்து சிகரட் புகை கனிந்த வண்ணம் இருக்கும். நிலவு தனது உணர்ச்சி ஒளிகற்றையால் அந்த மொட்டைமாடியை நிறைத்தப்படி சென்று கொண்டிருக்கும். அவரது அசாத்தியமான பார்வை நோக்கும், அபூர்வமான விஷய ஞானமும் எங்களை அன்றிரவு உறங்க விடாமல் செய்தபடி இருக்கும். சகலத்தையும் அறிந்தவர்களாக மாற்றமடைவதாக அல்லது அதற்காகத் தயாராவதாக உணர்ந்தபடி இருப்பேன்.


சி. மணி என்மேல் மிக அன்பு கொண்டிருந்தார். அல்லது நான் அவ்வாறு நினைத்தபடி இருப்பேன். அது எனக்கு மிகப்பெரிய ஊக்கத்தைத் தந்த வண்ணமிருந்தது. என் மனைவி, மக்கள் அனைவரின் மேலும் அன்பு செலுத்துபவராக அவர் இருந்தார். ஒவ்வொரு சந்திப்பிலும் அவர்களை நலம் விசாரித்தபடி இருப்பார். தனிப்பட்ட பெண்களைவிட ஒட்டுமொத்தமாக பெண்களின்மேல் அவருக்கு அளப்பரிய மரியாதை இருந்தது. குழந்தைகளை மிக விரும்பி, அவர்களது தன்மையை வியப்பார். அவர்களுக்கான மிக அதிகப்பட்ச மரியாதையை அல்லது அவர்களுக்கான கவனத்தைத் செலுத்துவார். பெண் குழந்தைகளின்மேல் அவருக்கு அதிக அன்பிருந்தது. 


அப்போது தாவோ தே ஜிங் மொழிபெயர்ப்பு நடந்து கொண்டிருந்தது. மொத்தம் பத்து ஆங்கில மொழிபெயர்ப்புகளை பயன்படுத்தி, ஒரு பிரதியை மையமாகவும் மற்றவற்றை துணைப் பிரதியாகவும் கொண்டு தமிழாக்கம் செய்து கொண்டிருந்தார். வழக்கமாக அவர் மொழிபெயர்ப்பு பிரதி புத்தகத்தை ஏடேடாகப் பிரித்து விடுவார். பிறகு ஒவ்வொரு ஏட்டிற்கும் மொழிபெயர்ப்பு மேற்கொள்வார். முதலில் எனக்கு அதில் உவப்பில்லாமலிருந்தது. என்னுடைய உவப்பிற்கு அர்த்தமில்லைதான் என்றாலும் ஒரு எதிர்ப்புணர்வு மிதந்து கொண்டிருந்தது. ஒரு கட்டமைப்பை சிதைப்பதான உறுத்தல் நிரடிய வண்ணம் இருந்தது. அதுவும் ஒரு மழைக்காலம். எங்களுடன் வேறு ஒரு கவிஞரும் வந்திருந்தார். அவர் சி. மணியிடம் பல கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தார். அவற்றிற்கான பதிலையை எதிர்ப்பார்த்தார். நானும் சர்வராஜும் விபரீதத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தோம். பிறகு அந்த நண்பரை சி. மணியின் வீட்டில் நான் பார்த்ததே இல்லை. சி. மணியிடம் இலக்கிய அரசியல் தோற்றுப்போயிருந்தது. எத்தகைய கவர்ச்சிகளையும் அவர் அனுமதித்ததில்லை. மிக இயல்பான, என்றும் நினைத்து அதிசயக்கக் கூடிய தன்மையுடன் அவர் இருந்தார்.


நடை இதழ்களும், மிக முக்கியம் என்று நான் கருதிய ஒரு மலை போன்ற புத்தகங்களும் அவரது படிக்கட்டு அறைக்கருகில் குவித்து வைக்கப்பட்டிருந்தன. வீட்டில் அவற்றை பத்திரப்படுத்த ஏராளமான இடம் இருந்தும் அவை அங்கேயே கிடந்தன. ஆரம்ப நாட்களில் அவற்றை ஒழுங்குபடுத்திவிட வேண்டும் என்ற முனைப்பு எனக்கு இருந்தது. மொழிபெயர்ப்பு புத்தகங்களை அவர் தனித்தனி ஏடுகளாகச் சிதைத்ததை புரிந்து கொண்டதும் அந்த எண்ணம் படிப்படியாக விலக ஆரம்பித்தது. ஒவ்வொரு முறை வீட்டை சுத்தம் செய்யும்போதும் அல்லது கரையான்களின் தாக்கம் மிகுந்துவிடும்போதும் அந்தப் புத்தகங்களில் ஒரு பகுதி கழித்து எரியூட்டப்படும். அல்லது குப்பையில் வீசப்படும். எல்லாம் கரையான் அரித்துவிட்டது. இனி பயன்படாது என்பார். நான் ஆமாம் என்பேன்.


ஒருமுறை எனக்காக The Hindu - வின் Sunday Magazine - ல் வந்த புதியதொரு கேலக்ஸி கண்டுபிடிப்பு பற்றிய ஒரு கட்டுரையையும், பிறகு கருந்துளை இருப்புக்கான புதிய சாத்தியம் பற்றிய குறிப்பொன்றையும் எடுத்து வைத்திருந்தார். நானும் அவரும் இதுபற்றி நிறைய பேசியிருந்தாலும் அவர் அல்லது நான் எதிரான ஒரு கருத்து நிலையிலேயே இருப்பதாக இருந்தது. ஒரு லட்சம் ஒளியாண்டு, இதை எவ்வாறு மனதில் கற்பித்துக் கொள்வது என்பார். மனதின் சிக்கலான அமைப்பைப் பற்றி விரிவாகத் தெரிந்து வைத்திருந்த அவர், அதனால் நிகழும் விபத்துக்கள் பற்றிய தெளிந்த புரிதலுடன் செயல்பட்டார். ஐன்ஸ்டைனைவிட நியூட்டனை அவருக்கான ஆதர்சமாகக் கொண்டிருந்தார். ஃபிராய்டைவிட யூங்கையே அவர் உயர்வாகக் கருதினார். அதற்கான காரணங்களை நான் அவருடனான நீண்ட கால புரிதலினாலே கண்டடைந்தேன். நியூட்டனின் அஸ்திவாரத்தில் கட்டப்பட்டதே ஐன்ஸ்டைனின் அதிசயக் கட்டிடம். பிரபஞ்ச ரகசியம், மனிதனின் தேடல், நிரந்தரத் தன்மையின் சுவடுகள், எல்லாவற்றையும் கடந்து சென்று கொண்டிருக்கும் காலம். அதை பரிமாணமாகக் கொண்டிருக்கும் வெளி. நிரந்தரமின்மையின் வலு இவையெல்லாம் நாம் சிக்கலாக்கிக் கொண்டிருக்கும் இந்த இருத்தலின் ஒரு பகுதியாகையால், அது பூரண விடுதலையைச் சாத்தியப்படுத்துவதில்லை. அதாவது அப்படி ஏதுமில்லை என்பதுதான் அதற்கான விடையாக இருக்கிறது. சி. மணி ஒரு பேராற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் ஒரு தக்கையைப் போல, தன்னளவில் நிதானமாக, ஆனால் அந்த ஆற்றின் வழியே பயணப்பட்டுக் கொண்டிருந்தார். 


சில சமயங்களில் அவர் திடீரென எனது அலுவலகத்திற்கு போன் செய்வார். அப்போது மிகச் சுருக்கமாகவே பேசுவார். எனக்கு சில ஹிந்தி அல்லது உருது வார்த்தைகளுக்கு பொருள் தெரியவேண்டும். உங்களால் ஞாபகப்படுத்த முடிகிறதா? என சில வார்த்தைகளைக் கேட்பார். எனக்குத் தூக்கிவாரிப்போடும். ஏனென்றால் எனக்கு உருது தெரியாது. அது அவருக்கும் தெரியும். சரி, நேரில் வாருங்கள் பார்த்துக் கொள்ளலாம் என்பார். நான் முஸ்லீமாக இருந்தாலும் எனக்கு உருது தெரியாது. எனது வீட்டிலிருப்பவர்கள் எல்லோருக்கும் தெரியும். ஆனால் ஆரம்பத்திலிருந்தே தமிழின் மீது உள்ள பற்றோ என்னவோ, நான் உருதில் பேசுவதை ஊக்கப்படுத்திக் கொள்ளவில்லை. இது எனக்கு நிறைய இடங்களில் பெரிய பின்னடைவை உண்டாக்கியிருந்தாலும் விடாப்பிடியாக அவ்வாறே இருந்தேன். சி. மணி நிறைய ஹிந்தி பாடல்களைக் கேட்பார். ரஃபியினுடைய பாடல்கள், ஷெனாய், சிதார், வாய்ப்பாட்டு அவருக்கு மிகவும் பிடிக்கும். அதேபோல அவரது தாய்மொழியாகிய கன்னடம் தனக்கு தெரியாது என்பார். நான் அவர் குறிப்பிட்ட ஹிந்தி வார்த்தைகளுக்கு பொருள் விசாரித்துச் சொல்கிறேன் என்றால், ஓ! உங்களுக்கும் தாய்மொழி தெரியாது, இல்லை? என்பார். என்னால் எனது உறவுகளுடன் எத்தகைய உரையாடலையும் அல்லது ஒரு தகவல் தொடர்பையும் வைத்துக்கொள்ள இயலாமலிருந்தது. அவர்கள் அல்லது அவர்களிடமிருந்து நான் பிரிந்து ஒரு தீவைப்போல உணருவேன். சி. மணி பெரும்பாலும் அவரது உறவினர்களுடன் மிகக் குறைந்த உரையடலையே மேற்கொள்வார். அல்லது பேசத் தலைப்படமாட்டார். ஏனென்றால் கன்னடத்தில் உரையாடுவதை அவர்கள் விருப்பவில்லைபோல. எனவே அவர் தமிழிலேயேதான் பேசுவார். அவர் மணிக்கணக்காகப் பேசுவது எங்களைப் போன்ற இலக்கியவாதிகளிடம்தான். அது அவரது ஒருவகை எதிர்ப்புணர்வைக் காட்டுவதாக இருந்தது. பூரண விழிப்புநிலைக்கான ஆதார மூலங்களில் இதுவும் ஒன்றாக அவர் இவற்றைக் கருதியிருக்க வேண்டும். அல்லது இவை அத்தகைய முயற்சிகளுக்குத் தடையாக இருக்கக் கூடாது என்று கருதியிருக்கலாம். தன்னை இந்த சமூகத்திலிருந்து தொடர்பறுத்துக் கொள்வதன் மூலம், சீரழிந்த சமுகத்திற்கு ஒரு எதிர்ப்பைக் காட்டியிருந்தார் என்றே நான் கருதினேன். 


ஒருமுறை எனது கவிதை வெளியிடப்பட்ட இலக்கியச் சிற்றிதழை அவரிடம் காட்டினேன். அமைதியாக ஒருகணம் பார்த்துவிட்டு உள்ளே சென்றவர், அரை மணி நேரம் கழித்தே திரும்பி வந்தார். வழக்கம்போலவே அவரிடமிருந்து எதையும் நான் எதிர்ப்பார்க்கவில்லை. அவரது முகத்தைப் பார்த்தேன். ‘நீங்கள் ஏன் உங்கள் பெயரை மறுபரிசீலனைக்கு உட்படுத்தக்கூடாது?’ என்றார். அடுத்தகணம் எனது பெயரின் முதல்பாதி, எனக்கு மிக உறுத்தலாக மாறியது. சாகிப்கிரான் என்பதில் சாகிப் என்பது ஒரு வெள்ளைத்தாளில் மைப்புள்ளிபோல இருப்பதாக அவர் உணர்ந்திருக்க வேண்டும். நான் அமைதியாக இருந்தேன். அவர் மேற்கொண்டு இதுபற்றி விவாதிக்கவில்லை. மதம், இனம், சாதி, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், மிகக் கேவலமான தனித்த அடையாளங்கள் யாவற்றிற்கும் அவர் எதிராகவே இருந்தார். மொழி என்பது மனிதனைப் பண்படுத்தும் ஒன்றாகவே இருக்கிறது. மொழியின் தீவிர அமைப்பு மற்ற மொழிகளை நேசிக்கவே வைக்கின்றது. அது தவிர மற்ற எல்லாமே மனித ஆன்மாவைச் சிதைப்பதாகவே அவர் உணர்ந்திருந்தார். அதனாலேயே அவர் தனது இயற்பெயரான எஸ். பழனிசாமி என்பதைப் நேரடியாக இலக்கியத்தில் எங்கும் பயன்படுத்தியதில்லை. சி. மணி என்பதையே அவர் பயன்படுத்திவந்தார். அது அவரது செல்லப்பெயராகும். அதில்லாமல் அது ஒரு பெயர்ச்சொல்லாக, அஃறிணைக்குறிய பெயர்ச் சொல்லாக இருந்தது. அதை மணி ஓசை என்றோ, விலையுயர்ந்த ஆபரண மணி என்றோகூட எடுத்துக்கொள்ளலாம். அத்தகைய ஒரு வாய்ப்பை மட்டுமே அவர் வாசகர்களுக்கு விட்டிருந்தார்.


In Search of The Miraculous மொழிப்பெயர்ப்பு முடிந்து, தாவோ தே ஜிங் நடந்து கொண்டிருந்தது. அவர் மிகத் தீவிரமாக மொழிபெயர்ப்பில் ஈடுபட்டிருந்தார். நான்கு ஆங்கில அகரமுதலிகளை பயன்படுத்திக் கொண்டிருந்தார். இது யாராலும் நாம்பமுடியாமலும், இயலாததுமான ஒன்று. அகர முதலிகளை மிகச் சரியாக எவ்வாறு பயன்படுத்துவது என்பதை நான் அவரிடமிருந்தே தெரிந்து கொண்டேன். அவர் சரியான ஒரு மொழிபெயர்ப்புப் பதத்திற்காக வாரக்கணக்கில் காத்திருந்திருக்கிறார். அந்த தவமானது எனது கண்முன்னால் இன்னும் தகித்துக் கொண்டிருக்கிறது. அவரது கருத்துகளுடன் சில முரண்பாடுகள் எனக்கிருந்தாலும் அவரது ஆளுமை அனைத்தையும் உறிஞ்சிக் கொள்வதாக இருந்தது. 


தொடர்ந்த கடினமான உழைப்பு அவரை மிக மோசமான உடல் சிதைவிற்குக் கொண்டு சென்றது. தாவோ தே ஜி முடித்ததும் அவரது உடல் மீண்டும் தேற இயலாத வண்ணம் நோயுற்றது. தொடர்ந்த புகைப்பழக்கம் அவரது நுரையீரல்களை முற்றிலும் பொசுக்கிச் சிதைத்துவிட்டது. ஒரு கட்டத்தில் இயங்க மறுத்த அவை, சப்பையாக ஒட்டிக் கொண்டுவிட்டன. மிக மோசமான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த அவரை, நீண்ட மருத்துவ சிகிச்சைக்கு பிறகே வீட்டிற்கு போக அனுமதித்தது. அவரது நுரையீரகள் வெறும் பதினைந்து சதவிகிதம் மட்டும் இயங்குபவையாக இருந்தன. அவரால் சிறிது தூரம்கூட நடக்க இயலாமல்போய்விட்டது. 


இந்த காலக்கட்டம்தான் அவர் மிகத் தீவிரமாகத் தன்னை மொழிபெயர்ப்பில் ஈடுபடுத்திக்கொண்ட காலம். தொடர்ந்து அவர், சுருக்கமான அறிமுக வரிசையில் புத்தர், பெளத்தம், ஃபிராய்டு, A Contemporary Tamil Prose Reader, மைதிலி மொழி கவிதைகளான முன்னிலை ஒருமை, சூஃபியிசம், பள்ளி வாசலில் பெண்கள், Six Characters in search of an Author முதலியவற்றை மொழிபெயர்த்தார் என்பதை விட மொழியாக்கம் செய்தார் எனலாம். அவரது வீடானது சாலையின் ஓரத்திலேயே அமைந்திருந்தது. வீட்டிற்கு எதிரில்தான் குப்பைத்தொட்டி. அங்கே மிகப் பெரிய அளவிலான பன்றிகள் அலைந்தபடியே இருக்கும். அவர் உட்கார்ந்து மொழிபெயர்ப்பு செய்யும் வராண்டாவிற்கு மிக அருகிலேதான் அந்த வீதியின் பிரதான சாக்கடை மலங்கள் மிதந்தபடி, எப்போதும் ஓடியபடி இருக்கும். ஒரு சில சமயங்களில் எனது இருசக்கர வாகனத்தை பன்றிகள் உரசிப்போன சுவடுகள் இருக்கும். அது மிகத் தொந்தரவு தரக்கூடிய ஒரு இடமாக எல்லோருக்கும்படும். தினமும் ஒரு பிணமாவது அவ்வழியாகச் செல்லும். அவர் பேசுவது வாகன சத்தத்தில் நிறைய சமயங்களில் தெளிவாக எனக்குப் புரியாமலும் இருந்திருக்கிறது. ஆனால், நாளாக நாளாக அது எனக்குப் பழகிப்போனது. அவர் அத்தகைய ஒரு தொந்தரவு நிறைந்த இடத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டது ஒரு யுக்தியாக எனக்குப்பட்டது. இத்தகைய இடர்பாடுகளை அவர் தனக்கான ஒரு உந்து சக்தியாக, நெருக்கடியில் கிளர்ந்தெழும் சாத்தியமாக மாற்றுவதாகத் தோன்றியது. இது அவரின் ஒரு மனவீழ்ச்சியைக் கண்ணுற்ற நான், மறுநாள் அதிலிருந்து அவர் எவ்வாறு மீண்டார் என்பதற்கான ஒரு பதிலாகவும் இருந்தது.


நடை இலக்கிய ஏட்டையும், சாரல் பதிப்பகத்தையும் அவர் தனது மிகப்பரந்த நிலமொன்றை விற்று அதிலேயே நிறுவினார். ஆனால் சாரலானது காப்பி ரைட் பிரச்சனை வழக்கில் நின்றுபோனது. நடை தொடர்ந்து மிகத் தரமான, அவர் எதிர்பார்த்தபடி உலகத் தரத்திலான படைப்புகள் கிடைக்காததால், அல்லது அத்தகைய படைப்புகளை யாரும் தரத் தயாராக இல்லாதததால் எட்டு இதழ்களுடன் நின்றுபோனது. இவை எதைப்பற்றியும் அவர் எப்போதும் வருத்தப்பட்டது இல்லை. அவர் அவரைப் பற்றிய விமர்சனத்தைக்கூட மிக மூன்றாம் நிலையிலிருந்தே வைத்தார். ஒரு கட்டத்தில் அவர் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராக இருந்தார். எல்லாவற்றையும் சார்பற்ற ஒரு தன்மையிலேயே அணுகினார். அது அவரை ஜென், சூஃபி, தாவோ என எல்லாவற்றையும் கடப்பதற்கான ஒரு திறவைத் தந்தது.


ஒருமுறை அவர் எனக்கு ஒரு கடிதத்தின் பிரதியை அனுப்பியிருந்தார். அது அவரது மொழிபெயர்ப்பு பற்றியது. அவர் உட்கார்ந்து எழுதிக்கொண்டிருக்கும் தாழ்வாரத்தின் மேற்கூரையில் அவரது ஜட்டிகள் காய்வதற்காகத் தொங்கும். அதில் அவர் சாக்லேட்டுகளை வைத்திருந்து எனக்கொன்றை எடுத்துத் தந்துவிட்டு, தானும் ஒன்றை சாப்பிடுவார். முதலில் எனக்கு தயக்கமாக இருந்தது. இப்போது அப்படியில்லை. அவர் தற்போதெல்லாம் சாக்லேட்டை சாப்பிடுவதே இல்லை. வாங்குவதும் இல்லை. அவரது மொழிபெயர்ப்பில் அறிய, வரலாற்றை போன்ற பதங்கள் பதிப்பாசிரியரால் அறிந்திட, வரலாற்றினை என்று மாற்றப்பட்டிருந்ததைக் கண்டு மிக வேதனையடைந்தார். அவர் வார்த்தையின் மிகச் சிறிய வடிவத்தை அல்லது அத்தகைய சாத்தியத்தை நோக்கியே தனது கவனிப்பை குவிப்பார். அதுவே மொழியின் சாதனையாகக் கொள்ளப்படும். Seduce என்ற பதத்திற்கான புதிய தமிழ்ச் சொல்லாக, மென்னாத்காரம் என்பதை பலாத்காரம் என்ற அடிச்சொல்லிலிருந்து உருவாக்கியிருந்தார். அப்படி உருவாக்கிய அனைத்துச் சொற்களையும் மாற்றிவிட்டனர். அவற்றிற்கு பதிலாக மனப்பிறழ்வு என்ற மொன்னையான ஒற்றை வார்த்தையை எல்லா இடங்களிலும் கையாண்டிருந்தது மிக அநியாயமான ஒன்றாகக் கருதினார். பதிப்பாளரும், பதிப்பாசிரியரும் சந்திப்பிழைகள், எழுத்துப்பிழைகளை ஒழுங்குபடுத்துவதையே கண்டிருந்த அவர், இத்தகைய திருத்தங்களுக்கு எதிராக நடந்து கொண்டார். தனக்கு அனுப்பப்பட்ட பிரதிகளைத் திருப்பி அனுப்பிவைத்தார். சி. மணி பன்மொழிப் புலமையும் ஆங்கில, தமிழ் இலக்கியங்களை முழுமையாகக் கற்றவரும், மொழிவல்லுனராகவும் இருக்கும் அவருக்கு பதிப்பாசிரியரின் தேவை இல்லை என்பதே எனது அபிப்பிராயமாக இருந்தது. ஒரு சீரிய, தீவிரத் தன்மையுடைய படைப்பாளியால் தொடர்ந்து இயங்காமலிருப்பதற்கான காரணங்களை நாம் மேலோட்டமான சில கருத்துக்களால் நிறுவி விடமுடியாது. 


அவர் எப்போதும் தன்னுடன் வாசன் பஞ்சாங்கத்தை வைத்திருப்பார். அது எப்படி பயன்படுகிறது என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அதை உபயோகிக்கும் முறையை, அவரது செய்கைகளை வைத்து ஓரளவிற்கு உணர்ந்து கொண்டேன். அவர் அதை முழுதாக நம்புவதாகத் தோன்றும் அந்தத் தோற்றப் பிழையிலிருந்து வெகு எளிதில் நான் விடுபட்டுவிடேன். அது ஒரு நிலையாற்றலின் அசைவு என்று கருதினேன். அவர் அந்தந்தக் கிழமைகளுக்கான அதிபதிகளுக்கு அதாவது கடவுள்களுக்கு தான் சாப்பிடும் அனைத்தையும் அர்ப்பணம் செய்துவிட்டு பிறகே அவற்றைச் சாப்பிடுவார். 


அக்டோபர் மூன்று மிக விஷேசமான ஒன்று. அன்று அவரது பிறந்தநாள். நிச்சயமாக நானும் சர்வராஜும் அன்று அவரைப் பார்க்கச் சென்றுவிடுவோம். அவர் எங்களுக்கான இனிப்புகளை தனியாக எடுத்து வைத்திருப்பார். வழக்கமான சந்திப்பாக அது இருந்தாலும் அன்று ஏதோ நிகழ்ந்துவிடும் எதிர்ப்பார்ப்புடன் செல்வேன். அன்று அவரது ஏதாவது ஒரு கவிதையை வாசிப்போம். மிகக் குறைந்த வெளிச்சத்தில் மிகச் சிரமப்பட்டு நான் வாசிக்கும் அந்தக் கவிதை, அன்றைய சகல நிலைமைகளுக்கும் பொருந்துவதாக அமைந்திருக்கும். பிறகு மிகக் குளிர்ந்த தனது கைகளால் எங்களுக்குப் பிரியா விடை கொடுப்பார். அவரது இயல்பானது வெகு அப்பட்டமான ஒன்று. அவரது இறுதி நாட்களில் யாரும் அவரை வந்துப் பார்க்காமலிருந்தனர். இந்த நிலையில்தான் அவருக்கு தென்னிந்திய புத்தகப் பதிப்பாளர்களின் வாழ்நாள் சாதனையாளருக்கான கலைஞர் விருது கவிதைக்காக அவருக்குக் கிடைத்தது. ரூபாய் ஒரு லட்சம்.


அதை சென்னையில் நடந்த புத்தகத் திருவிழாவில் பெற்றுக்கொள்வதற்காக நானும் அவரும் சென்னை செல்வதாக இருந்தது. விருதுகள் வாங்குவதில் அவருக்கு மிகப் பெரிய மறுப்பு எப்போதும் உண்டு. அவர் அதை அதாவது அத்தகையத் தடையை இன்று மீறி இருந்ததாக தோன்றியது. இது அவரது இயல்பல்ல என்றே நான் எண்ணினேன். ஆனாலும் வெகு உற்சாகமாக கிளம்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தேன். விடியற் காலமாகக் கிளம்புவதாக இருந்தது. வாடகைக் கார் பேசி இரவு தூங்கச் சென்றுவிட்டேன். நள்ளிரவு இரண்டு மணியளவில் எனக்கு ஒரு செல்போன் அழைப்பு வந்தது. 


அப்பா, இரவு பாத்ரூமில் விழுந்துவிட்டார். இடுப்பெலும்பில் விரிசல் ஏற்பட்டுவிட்டது. கோகுலம் மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றோம்.


 நான் மிக நிதான கதிக்கு வந்துவிட்டேன். பயண ஏற்பாடுகளை கலைத்து முறைப்படுத்திவிட்டு, அவரைப் பார்க்கச் சென்றேன். மிகத் தளர்ந்திருந்தார். வெகு நேரமாக வரவேற்பறையில் காத்திருந்தேன். அறுவை சிகிச்சை நடந்து கொண்டிருந்தது. அவர் ஏன் விழவேண்டும் என்பதற்கான விடை கிடைத்திருந்தது. தன்னைச் சிதைவுக்குள்ளாக்கிக் கொண்ட அவர், இத்தகைய ஒரு அப்பட்டமான அரசியல் நிகழ்விற்கு தன்னை ஒப்புக்கொடுத்தது அவரை, அந்த தனிமை இரவில் அலைக்கழித்திருக்க வேண்டும். அதற்கான மிகப் பெரிய போராட்டத்தில் அவர் வெற்றி கண்டிருக்கிறார். மிகவும் கலைத்திருந்த அவர், என்னை அன்புடன் அருகழைத்து பேசினார். சீக்கிரம் தான் தேறிவிடுவதாகக் கூறினார். அவரிடம் எனக்கு பகிர்ந்து கொள்ள ஏதுமில்லாதிருந்தது. அமைதியாக அவரருகில் அமர்ந்திருதேன். அவரது சுதந்திரம் பறிபோன நிலையில் சூழ்நிலைக் கைதியாக அவரைப் பார்க்க எனக்கு துக்கமாக இருந்தது. சர்வராஜும் நானும் நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தோம். விழாக் குழுவிலிருந்தும் பேசியிருக்கிறார்கள். விருதை க்ரியா ராமகிருஷ்ணன் வாங்கி அனுப்புவதற்கான ஏற்பாட்டைச் செய்திருந்தார். எனக்கு சி. மணியின் தீர்வு கவிதை ஞாபகத்திற்கு வந்தது. என்ன செய்வதிந்தக் கையை?


கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக அவர் படுத்தப் படுக்கையாக இருந்தார். எழ முடியாமலும், குளிக்க முடியாமலும் வீழ்ந்து கிடந்தார். நான் தினமும் அவரைப் பார்க்கச் செல்லத் தொடங்கினேன். தனிமையில் இருந்த அவருக்கு ஒரு மிடறு மதுதான் ஆறுதல் அளித்த வண்ணமிருந்தது. அவரிடம் நிறைய பேச வேண்டியிருந்தது எனக்கு. அவர் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார். கவிதை பற்றி நிறைய பேசினேன். அவரது கவிதைகள் பற்றி முதல் முறையாக எனது அபிப்பிராயங்களைச் சொல்லத் தொடங்கினேன். அந்தக் காலக்கட்டத்தில் ஒரு சில கவிதைத் தொகுப்புகளுக்கு விமர்சனம் எழுதியிருந்தேன். அவற்றைத் தொடர்ந்து அவருக்கு வாசித்துக் காட்டுவேன். அவர் மிக உற்சாகமாக அவற்றைக் கேட்டுக் கொண்டிருப்பார். 


ஒருமுறை அவரிடம் பேசிக் கொண்டிருக்கும்போது லீனா மணிமேகலையின் அழைப்பு வந்தது. சி. மணியிடம் பேச விருப்பமா எனக் கேட்டேன். ஆனால் அப்போது அத்தகைய மனநிலையில் இல்லாத லீனா மற்றொரு நாள் பேசுவதாகக் கூறினார். ஆனால் அதற்குப் பிறகு லீனாவால் அவரிடம் பேசவே முடியாமல் போய்விட்டது. இது மிக வருத்தமான ஒன்றாக பின்னாளில் லீனா குறிப்பிட்டார்.


சி. மணி லீனாவை விசாரித்தார். லீனாவின் தேவதைகள் படம் குறித்து அவர் அறிந்திருந்தது எனக்கு வியப்பாக இருந்தது. அவர் தனது கவிதைகள் குறித்த ஒரு விமர்சனத்தை நான் எழுத வேண்டும் என்றார். சீக்கிரமாக எழுதிவிடுங்கள் என்றார். அதை அவர் பார்க்க விரும்பினார். கூடவே அவர் மொழி பெயர்த்திருந்த சீன, ஜப்பான் ஜென் கவிதைகளைத் தொகுப்பாகக் கொண்டுவர வேண்டுமென்ற விருப்பமும் கொண்டிருந்தார். அந்த மொழிபெயர்ப்புகளை தக்கை காலாண்டிதழில் நான் தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டேன். அது தக்கை இதழுக்கு மிகப் பெரிய கவனிப்பைப் பெற்றுத் தருவதாக இருந்தது.


ஒரு மனிதனுக்கு இயக்கம் மிக முக்கியமான ஒன்று என்று சி. மணி குறிப்பிடுவார். Mobility என்பது தற்சார்புத் தன்மையைச் உறுதிப்படுத்தும் ஒன்று. தற்சார்பற்றவன் தனது குடும்பத்தினால் மிக அனாவசியமாக நடத்தப்படுவது சாதாரண ஒன்று. தண்ணீர் குடிக்க, தேவையான ஒன்றை கையெட்டும் தூரத்திலிருந்து எடுப்பதற்கு, குறிப்பாக சிறுநீர், மலம் கழிப்பதற்கு மற்றொருவருடைய உதவியை நாடுவது மிகுந்த வேதனையளிக்கக் கூடிய ஒன்று. சாதாரண ஒரு மனிதனே இத்தகைய விஷயங்களுக்கு தடுமாறிப்போகும்போது, சி. மணி போன்ற ஈடு இணையற்ற ஆளுமைகள் எவ்வாறு இதை சமன்செய்துகொள்ளக் கூடும்?


ஒருநாள் ஹோட்டல் சாதம் அவருக்கு வயிற்றுப்போக்கை ஏற்படுத்திவிட்டது. அவர் மிகக் குறைந்த அளவு உணவையே எடுத்துக் கொள்ளும் தன்மையால், இத்தகைய சக்தி இழப்பை சமாளிக்க இயலவில்லை. உடல் தளர்ந்து மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அன்று மதியமாக நான் அவருக்குப் பிடித்தமான, சிவப்பு உடை அணிந்து சென்றேன். Intermediate Care Unit – ல் இருந்தார். என்னைக் கண்டதும் அருகில் அமரச் சொன்னார். அவரது கை மிகக் குளிர்ந்த நிலையில் இருந்தது. கண்களிலிருந்து ஒரு கணம் நீர் வழிந்தோடியது. நான் இமைக்காமல் பார்த்தேன். ‘நான் அழவில்லை. கண்களில் ஏதோ தூசு விழுந்துவிட்டது’ என்றார். பிளாஸ்கிலிருந்த காபியை அருந்தச் சொன்னார். சரி என்றேன்.


அன்று அவர் எழுந்து நடப்பதற்கான பிஸியோதெரபி அப்பியாசங்கள் சொல்லித்தரப்பட்டதாகக் கூறினார். தன்னால் எழமுடியாத நிலைமையில் எவ்வாறு அதைச் செய்வது என்று மருத்துவரைக் கடிந்து கொண்டதாகச் சொன்னார். நிர்பந்தங்களை என்றுமே எதிர்கொள்ளாத, சாமானிய மனிதனால் மிகக் கடுமையாக ஆட்டுவிக்கப்படும் இது போன்ற கணங்கள் சி. மணி போன்ற ஆளுமைகளால் தாங்கமுடியாத ஆற்றாமைக்குக் இட்டுச் செல்வதாக இருந்தன. இதுதான் வாழ்வின் மிகக் கொடூர கணங்களாக நான் கண்டு அதிர்ந்துபோனேன். மறுநாள் வருவதாகச் சொல்லிவிட்டு அந்த இரவு அவரிடமிருந்து விடைபெற்றேன். கிளம்பும்போது அவரது கவிதைக்கான எனது விமர்சனத்தை உடனே எழுதிவிடுமாறு சொன்னார். 


அவர் எந்த நிர்பந்தத்தையும் ஒப்புக் கொண்டதில்லை. அவருக்கு வழங்கப்பட்ட அத்தனை சலுகைகளையும் அது தானாக வந்ததோ அல்லது நண்பர்களின் மூலம் உண்டானதோ அத்தனையையும் அவர் சிதைத்தார். அதன் பிரதியாக தனது சுயத்தை நிறுவினார். அவரிடம் எடுக்கப்பட்ட பல நேர்காணல்களை மிக லாவகமாக தன்னை ஒரு வெகு சாதாரண நிலைக்குக் காட்டிக் கொள்வதன் மூலம் ஒரு விளையாட்டை உருவாக்கியிருந்தார். அது மிகப் பூடகமான ஒன்றாக, அவரை நன்கு அறிந்தவனாலேயே உணரமுடியும். இது ஒரு பார்வைக்கு அபத்தமான ஒன்றாகப்பட்டாலும் ஒரு வண்ணத்துப் பூச்சியானது எவ்வாறு ஒழுங்கற்ற அல்லது தாந்தோன்றியான தனது பாதையை கொண்டிருப்பதற்கான கருத்துருவாக மாறுவதைப் போன்றது. அது அவரது அயராத உழைப்பின் பின்னால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அவர் தனது சகல அசைவுகளையும் தன் பூரண விழிப்புநிலையால் அளந்தபடியே இருப்பார். எனவேதான் அவர் தான் இருக்கும்வரை தனது நேர்காணல் ஏதும் வெளிவராதபடி நடந்து கொண்டார். அன்று அவர் மிகத் தெளிவாக இருந்தார். அவரது கண்கள் பஞ்சடைத்த குழிகளைப்போல உருண்டபடி இருந்தன. 


சொன்னபடி என்னால் மறுநாள் மருத்துவமனைக்கு போக முடியவில்லை. அதாவது ஏப்ரல் 2009 ஐந்தாம் தேதி. அது ஞாயிற்றுக்கிழமை.


அன்று இரவு அதாவது ஆறாம் தேதி. எனக்கு அந்த போன் வந்தது.


எனது கண்கள் குளமாகத் திரண்டு நின்றன. என் மனைவி ஓவென்று அழுது புலம்பினாள். காலையில் அவரது வீட்டின் ஒழுங்குக் கலைக்கப்பட்டு, ஆட்கள் நிரம்பியிருந்தனர். மெளனமாக நின்று பார்த்தேன். இன்னும் நான் அவரது கவிதைகளுக்கான விமர்சனத்தை எழுதவில்லை. சடங்குகள் ஆரம்பித்திருந்தன. நான் சுருண்டு ஒரு படிக்கட்டு முனையில் ஓய்ந்துவிட்டேன். புது எழுத்து மனோன்மணியும் வே. பாபுவும் என்னை ஆறுதல்படுத்தினர். லீனா போனில் என்னை தைரியப்படுத்தினார். சிபிச்செல்வன் நான் தகவல் சொல்லவில்லை என்று வருத்தப்பட்டதாகக் காட்டினார். ஆனால் சி. மணி வீடு சிபிக்குத்தான் பக்கம். நான் எந்த பதிலையும் உரக்கச் சொல்லும் திரணியற்று நின்றிருந்தேன். இத்தனை நாட்களாக கட்டிலோடு கிடந்த அவரை எட்டிக்கூடப் பார்க்காத எல்லோரும் இன்று வந்திருந்தனர். கிரியா ராமகிருஷ்ணன், சர்வராஜ், மல்லூர் பாலமுருகன், பா. ராஜா, அடையாளம் சாதிக்பாஷா, வெங்கடேசன், நா.பெரியசாமி என்று ஒரு பத்து இலக்கியவாதிகளும், பதினைந்து உறவுகளுமாக அந்த மேதையின் இறுதி ஊர்வலம் முடிவடைந்தது.


அவரது வீட்டில் சில மனக்குறைகள் தகித்திருந்ததை அப்போது என்னால் கண்டு கொள்ள முடிந்தது. அவரது நிரந்தரத்தன்மைக்கு நேர்ந்த சில பெலஹீனக் குறைபாடுகள் குறித்து அது எழுந்தது. சி. மணியைப் போன்ற ஆளுமையொன்று வெற்று நிரந்தரத்தை என்றுமே ஏந்துவதில்லை. அவர் வானவில்லிலிருந்து தனக்கான ஜீவ சக்தியைப் பெற்றுக்கொண்டார். அவருக்குப் பிடித்த ஒரு கீர்த்தனையிலிருந்து ஒரு நாளுக்கான உணவை எடுத்துக் கொண்டார். தான் ரசித்த ஒரு கவிதையிலிருந்து ஒருநாள் காலை விழித்தெழுந்தார். தனக்கான ஒரு மிடறு மதுவிலிருந்து இந்த பிரபஞ்ச ரகசியத்தைப் பிழிந்தெடுத்துக் கொண்டார். சிகரெட்டின் வெம்மையான புகையிலிருந்து இந்த உலகின் ஆன்மாவை தன்னுள் நிறைத்துக் கொண்டார். அவர் உணவை மறுத்தார். அது நிரந்தரத்தை கொண்டுவந்து சேர்த்தது. சிதைவைத் தடுத்தது. எனவே அவர் இல்லாததிலிருந்து இருப்பதை எடுத்துக் கொண்டார். 


எல்லாம் முடிந்துவிட்டது. கடைசி சுவடும் அழித்தொழிந்துவிட்டது. அதோ அந்த வைக்கோல் போர் எரிந்துபோய் இப்போது நிலவு தடையற்று தெரிகிறது. அந்த நிலவின் ஒளி அருகிருக்கும் குளத்தில் பிரதிபலித்தபடி இருக்கிறது. ஆனால் அந்த நிலவோ அல்லது அந்த குளமோ எங்கேயும் தங்களுக்குள் தொட்டுக் கொண்டிருக்கவில்லை.



வாழ்வு இருப்பது, அதை நாம்

கண்டறிவது  போலத்தான்.


சாவும் அவ்வாறே.

பிரிவுக் கவிதை ஒன்றா?

எதற்கு இந்த


வற்புறுத்தல்?


மரணம்: டெயே - சேகு

(தமிழில் சி. மணி)


---------------------------------------------------------------------------------------

புது எழுத்து - 18, 2010 பத்தாம் ஆண்டு சி. மணி நினைவு மலரில் வெளி வந்த கட்டுரை

(பின் குறிப்பு: 19-04-2009 அன்று சென்னையில் லீனா மணிமேகலை மற்றும் தமிழ்க்கவிஞர்கள் இயக்கம் ஏற்பாடு செய்திருந்த சி. மணி, அப்பாஸ் நினைவரங்கில் சி. மணியின் இதுவரை. . . கவிதைத் தொகுப்பு பற்றிய கட்டுரையை மிகுந்த மனவலியோடு வாசித்தேன்.)

அகிராவின் கொள்ளையர்கள்

                               சில சமயங்களில், அபூர்வமாக பாபுவுடன் திரைப்படம் பார்க்கும் வாய்ப்பு அமையும். பெரும்பாலும் பாபு படத்தின் வெளியீ...